Site icon சக்கரம்

இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதா?

-அ.அன்வர் உசேன்

ந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்தி விட்டது என நிதி ஆயோக் முதன்மை அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் சர்வதேச நாணய நிதி அமைப்பின் (IMF) அறிக்கை கூறுவதாக பெருமிதமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க அரசாங்கத்தின் பல்வேறு கருத்தாக்கங்கள் கட்டமைப்பு போல இதனையும் இமாலய சாதனையாக ஊடகங்களும் சங் பரிவார அமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையோ வேறு மாதிரியாக உள்ளது. பொய்கள் எவ்வளவுதான் ஜெட் வேகத்தில் பரப்பப்பட்டாலும் உண்மையை அது மறைக்க முடிவது இல்லை. 

ஐ.எம்.எப் கூறுவது என்ன?

இப்பொழுதே இந்திய பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதாக ஐ.எம்.எப் கூறவில்லை. அதன் அறிக்கையை நிதி ஆயோக் முழுமையாக உள்வாங்கவில்லை அல்லது திட்டமிட்டே செய்தியை திரித்து கூறுகின்றனர். நிதி ஆண்டை கணக்கீடு செய்யும் முறை இந்தியாவிற்கும் ஐ.எம்.எப்க்கும் வேறுபாடு உள்ளது. இந்திய கணக்குப்படி நிதியாண்டு ஏப்ரலில் தொடங்கி அடுத்த ஆண்டு  மார்ச்சில் முடிவடைகிறது. ஐ.எம்.எப் நிதியாண்டு என்பது மே தொடங்கி ஏப்ரலில் முடிவடைகிறது. இந்திய கணக்கு படி நிதியாண்டு 2025 எனில் 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் ஆகும். ஆனால் ஐ.எம்.எப் இதனை காலண்டர் ஆண்டு 2024 என்றே அழைக்கிறது. அதன்படி 2025 மார்ச் வரை ஜப்பான் பொருளாதாரம் 4.03 டிரில்லியன் டொலராகவும் இந்திய பொருளாதாரம் 3.91 டிரில்லியன் டொலராகவும் இருக்கும். காலண்டர் ஆண்டு 2025 இல்தான் ஜப்பான் பொருளாதாரம் 4.186 டிரில்லியன் டொலராகவும் இந்திய பொருளாதாரம் 4.187 டிரில்லியன் டொலராகவும் இருக்கும். இதன் பொருள் என்னவெனில் 2025ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு அல்லது 2026 மார்ச்சுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் ஜப்பானை முந்த வாய்ப்பில்லை. எனினும் மோடியின் பா.ஜ.க ஆட்சியில் இந்தியா ஜப்பானை முந்திவிட்டது என கருத்தாக்கம் கட்டமைக்க இப்பொழுதே அந்த சாதனை நிகழ்ந்துவிட்டது என முன்வைக்கப்படுகிறது. இந்திய மக்களிடம் பொய் பெருமிதம் உருவாக்கும் செயல் இது எனில் மிகை அல்ல.

இந்தியா-ஜப்பான் ஒப்பீடு

ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை அளவிடுவதற்கு பல அளவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜி.டி.பி. மதிப்பு. ஆனால் அது மட்டுமே முழுமையான அளவுகோல் அல்ல. ஒட்டு மொத்த அளவு கோலுடன் தனி நபர் சராசரி ஜி.டி.பி என்பதும் முக்கியம். ஒட்டு மொத்த ஜி.டி.பி.யில் இந்தியா இந்த ஆண்டு இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு ஜப்பானை முந்திவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே போல இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உண்டு.

எனினும் தனிநபர் சராசரி ஜி.டி.பி.யை ஒப்பிடும் பொழுது ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஜப்பானின் தனிநபர் சராசரி ஜி.டி.பி. 33,900 டொலர்கள். ஆனால் இந்தியாவின் தனிநபர் சராசரியோ 2,880 டொலர்கள். ஜப்பானின் மக்கள் தொகை 12.45 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஜி.டி.பி. என்பது அனைத்து மக்களின் உழைப்பால் விளையும் உற்பத்தியின் மதிப்பு. 140 கோடி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும் 12 கோடி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும் இயற்கையிலேயே வேறுபாடுகள் இருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகமாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு ஏ,  பி என இரு குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஏ குடும்பத்தில் உள்ள 10 பேர் 10 இலட்சம் ஈட்டுகின்றனர். பி குடும்பத்தில் உள்ள 4 பேர் 8 இலட்சம் ஈட்டுகின்றனர். ஒட்டு மொத்த வருமானத்தை கணக்கிட்டால் ஏ தான் பணக்காரக் குடும்பம். ஆனால் தனி நபர் சராசரி கணக்கிட்டால் ஏ குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு இலட்சம் கிடைக்கும். ஆனால் பி குடும்பத்தில் ஒருவருக்கு 2 இலட்சம் கிடைக்கும். எனவே வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்புக் குறைவாக வருமானம் ஈட்டிய குடும்பத்துக்குதான் இருக்கும். எனவே இந்திய ஜி.டி.பி. ஜப்பானை முந்தும் என்பது பெருமைக்குரிய ஒன்று என்றாலும் அதனால் இந்திய மக்கள் பெறும் நன்மைகள் என்ன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

வேறுபாடுகளின் சில அம்சங்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன: இந்த ஒப்பீடுகளை கணக்கில் கொண்டால்ஒட்டு மொத்த ஜி.டி.பி.யை தவிர இந்தியா வேறு எந்த விதத்திலும் ஜப்பானை முந்திவிட்டதாக பெருமை கொள்ள முடியாது. 

இந்தியாவின் அசமத்துவமும்  தனி நபர் ஜி.டி.பி.யும்

இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்கள் மட்டும் 200 பில்லியன் டொலர்கள் அதாவது ரூ.17 இலட்சம் கோடி சொத்துக்களை பெற்றுள்ளனர். 1% மெகா பணக்காரர்கள் கைகளில் இந்தியாவின் 40% சொத்துக்கள் உள்ளன. 10% பணக்காரர்கள் கைகளில் 72% சொத்துக்கள் உள்ளன. அதே சமயம் கீழ்மட்ட 50%  மக்களிடம் வெரும் 3% சொத்துதான் உள்ளது. இது ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் மதிப்பீடு.

இந்தியாவின் மேல்மட்ட 5% பணக்காரர்களின் வருமானத்தை அகற்றிவிட்டால் மீதமுள்ள 95% பேரின் சராசரி ஜி.டி.பி. 2800 டொலரிலிருந்து 1130 டொலராக வீழ்ச்சி அடைந்து விடும் என பொருளாதார நிபுணர் ரகு நந்தன் கணக்கிடுகிறார். இது கொங்கோ/ மொசாம்பிக்/ மத்திய ஆபிரிக்க நாடுகளைவிட குறைவானது எனில் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர் என்பதை அறியலாம்.

வருமான கணக்கீடுபடி 3 வித இந்தியாக்கள் உள்ளன என புளூம் அறிக்கை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

முதல் இந்தியா: மெக்சிகோ வருமானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ளவர்கள்; 14 கோடி பேர்; தனி நபர் ஆண்டு வருமானம் 15,000 அமெரிக்க டொலர்கள். இந்திய ஆடம்பரப் பொருட்களின் பெரும்பாலான நுகர்வாளர்கள் இவர்கள்தான்!  

இரண்டாவது இந்தியா: இந்தோனேஷியா மக்களின் வருமானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ளவர்கள் ; 30 கோடி பேர்; தனிநபர் ஆண்டு வருமானம்-3,000 அமெரிக்க டொலர்கள். இவர்கள் ஓரளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏனைய நுகர்வு பொருட்களை பயன்படுத்துபவர்கள். ஓ.டி.டி. ஊடக தளங்கள்/ டிஜிட்டல் பண வர்த்தனை ஆகியவை பெரும்பாலும் இவர்களை சார்ந்து உள்ளது.

மூன்றாவது இந்தியா – 100 கோடி பேர் : அங்கோலா/ ருவாண்டா/ சோமாலியா/ நைஜிரியா/ கென்யா/ சூடான் ஆகிய சப்-சஹாரா எனப்படும் மிகவும் பின் தங்கிய மக்களின் வருமானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ளவர்கள்; தனிநபர் ஆண்டு வருமானம் 1000 டொலர்கள் மட்டுமே. மிக அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எதிலும் செலவிட இயலாத பகுதியினர் இவர்கள்தான்!  

மூன்றாவது இந்தியா என வரையறுக்கப்பட்டுள்ள 100 கோடி பேரின் வாழ்வாதாரம் உயராமல் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் சாத்திய மில்லை. 100 கோடி பேரின் வாழ்வு சப்-சஹாரா தேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கும் பொழுது ஜப்பானை முந்திவிட்டோம் என மார்தட்டிக் கொள்வது குரூர நகைச்சுவையாகவே அமையும்.

5 பெரிய நாடுகள் ஒப்பீடு

மக்கள் தொகை அடிப்படையில் 5 பெரிய தேசங்கள் முறையே இந்தியா/ சீனா/ அமெரிக்கா/ இந்தோனேஷியா/ பாகிஸ்தான் ஆகும். இவற்றின் ஒட்டு மொத்த ஜி.டி.பி.யும் தனி நபர் சராசரி ஜி.டி.பி.யும் கீழ்க்கண்டவாறு உள்ளன: தனி நபர் ஜி.டி.பி. வருமானத்தில் நமது சாதனை பாகிஸ்தானை முந்தியுள்ளது எனும் ஒப்பீடே பெருமைக்குரியது அல்ல. வேலையின்மை ஒழித்தல்/ பொது முதலீடுகள்/ அசமத்துவம் குறைத்தல்/ சமூக முரண்பாடுகளை களைதல்/ வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல்/ கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை மட்டுமே உண்மையான பொருளாதார முன்னேற் றத்தை உருவாக்கும். ஒன்றிய பா.ஜ.க அரசு அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. ஒரு அம்சத்தில் மட்டும் ஜப்பானை முந்திவிட்டோம் என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு எவ்வித ஆய்வும் இல்லாமல் சுயதம்பட்டம் அடிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

Exit mobile version