
அழிவின் பிடியில் காசா
யாகீன் ஹம்மத் (Yaqeen Hammad) என்ற 12 வயது பலஸ்தீனச் சிறுமி, தனது வீட்டின் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டார். யாகீன், காசாவின் அன்னே ஃபிராங்க் என்று அழைக்கப்படுகிறார். (1940களில் பாசிச ஹிட்லரின்) நாஜி ஆக்கிரமிப்புப் பகுதியில், பேரழிவால் பாதிக்கப்பட்ட ஓர் அறையில் ஒரு நாட்குறிப்பை வைத்திருந்த அன்னே ஃப்ராங்க் (Anne Frank) யைப் போலவே, பலஸ்தீனத்தின் யாகீனும் தன்னைச் சுற்றியுள்ள பயங்கரங்களை ஆவணப்படுத்தி இருக்கிறார். தற்போது அவரது நாட்குறிப்புகள் – டிஜிட்டலில் – அவரது மக்கள் எதிர் கொள்ளும் கொடூரங்களின் பதிவாக மாறியிருக்கிறது. இதேபோன்றுதான் அந்தக்காலத்தில் அடக்கு முறை அட்டூழியங்களை எதிர்கொண்டோம் என்று கூறும் இன்றைய இஸ்ரேலிய யூத இனவெறியர்கள் அந்தக்காலத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைப் போலவே இப்போது அவர்கள் பலஸ்தீனர்கள் மீது ஏவுவது கொடூரமான நகைமுரண் ஆகும்.
அந்த சின்னஞ்சிறுமி யாகீன், ஒரு அகதி முகாமிலிருந்து இன்னொரு அகதி முகாமுக்குச் சென்று, வீடியோக்களை எடுத்து, அவற்றை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார். அதன்மூலம் அவர் காசாவில் நடைபெற்றுவரும் கொடூரங்களை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஓர் ஊடக ஆர்வலரைக்காட்டிலும், அவர் மனிதாபிமான உதவிகளிலும் ஈடுபட்டார். போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு உதவினார். வேரூன்றிய யூத இன வெறி “நேரடியாக ஒளிபரப்பப்படும் இனப்படுகொலை” (“live-streamed genocide”) என்ற சொற்றொடர்,
யாகீன் போன்ற துணிச்சலான சமூக ஊடக செயற்பாட்டாளர்களால் – சர்வதேச பொதுமன்னிப்பு (Amnesty International) அமைப்பால் உருவாக்கப்பட்டு, உலக மக்களிடையே அந்தக் கொடுமையை வெளிச்சமிட்டுள்ளது. காசாவில் குழந்தைகள் குறிவைக்கப்படுவது தற்செயலானது அல்ல. அப்பாவி குழந்தைகளைக் கூட ‘ஹமாஸின் ஒத்துழைப் பாளர்கள்’ என்று முத்திரை குத்தும் கொடிய மதவெறி சித்தாந்தத்தின் விளைவு இது. இந்தக் கருத்து யூத இனவெறி அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட வெறித்தனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
நேதன்யாகு அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளியான மோஷே ஃபீக்லின் (Moshe Feiglin), “காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஓர் எதிரி” என்று கூட மிகவும் குரூரமான முறையில் கூறினார். இதுபோன்ற கொடிய அறிக்கைகள் முன்னெப்போதும் இல்லாதவைகளாகும். சில தீவிரவாதிகள், குழந்தைகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ளனர்.
இஸ்ரேலின் சமீபத்திய திட்டம், காசாவின் 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றி அப்பிரதேசத்தில் பெரும் அழித்தொழிப்பை அரங்கேற்றிட, ஏராளமான ஆயுதங்களுடன் இராணுவப் பிரிவுகளை நிறுத்துவது எனக் கூறப்படுகிறது. இதில் 70 சதவீதம் ஏற்கனவே பலஸ்தீனர்களுக்கு “தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக” மாற்றப்பட்டுள்ளன. காசாவின் பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதி நகரமான ரஃபாவிற்குத் தள்ளப்படலாம். அதுவே கூட கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. கான் யூனிஸ் (Khan Younis) மற்றும் டெய்ர் அல்-பலாஹ் (Deir al-Balah) போன்ற நகரங்கள் இப்போது தினசரி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
‘கிதியோன் ரதங்கள்’ இஸ்ரேலிய திட்டத்தின் மிகவும் மோசமான அம்சம், பலஸ்தீனர்களை இஸ்ரேலிய கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்வது என்பதாகும். இதற்கு அவர்கள் விசித்திரமான முறையில் வைத்திருக்கும் பெயர், “மனிதாபிமான மண்டலங்கள்” (“humanitarian zones”) என்பதாகும். அங்கு, இஸ்ரேலியரால் சரிபார்க்கப் பட்ட உதவி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் ரேஷன் பொட்டலங்களை விநியோகிப்பார்கள். இவ்வாறு பலஸ்தீனர்களுக்கு உதவுவது என்பதும் அரசியல்மயமாக்கப்பட்டு இராணுவமயமாக்கப் பட்டுள்ளது. இப்படியாக பலஸ்தீனர்கள் பெருமளவில் மிகச் சிறிய பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு டொனால்டு டிரம்ப் தனிப்பட்டமுறையில் ஈடுபாடு காட்டியதாகக் கூறப்படுகிறது.
நேதன்யாகுவின் அமைச்சரவை இராணுவப் பணிக்கு “கிதியோன் ரதங்கள்” (“Gideon’s Chariots”) என்று குறியீட்டுப் பெயரை வைத்துள்ளது. இது உண்மையிலேயே ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கா அல்லது கூட்டாகத் தண்டிப்பதற்கா என்பது அதன் அழிவின் அளவிலிருந்து தெளிவாகும். மேலைநாடுகளும் கூட சகிக்க முடியாத நிலை எனினும், இராணுவ நடவடிக்கையின் தீவிரம் மேற்கத்திய தலைமையின் தொனியில் சில மாற்றங்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில், மனிதாபிமான நெருக்கடியைக் கண்டித்து, அதை “சகிக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளன. உணவு உதவித் திட்டத்தின் போதாமை குறித்து அவை கேள்வி எழுப்பியுள்ளன. மேலும் “சமீபத்தில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்திய அருவருப்பான சொற்களை நாங்கள் கண்டிக்கிறோம். நிரந்தரமாக, கட்டாயமாக இடம்பெயரச் செய்வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்” என்றும் கூறியுள்ளன.
ஹமாஸின் ஒக்ரோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை துவக்கத்தில் ஆதரித்தாலும், இப்போது காசாவில் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் விரிவுபடுத்துவதை மேற்கத்திய நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “மனிதாபிமான உதவியை ஒருபோதும் அரசியலாக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார். ஒரே சாத்தியமான தீர்வு இரு-நாடுகள் தீர்வுதான் (two-state solution) என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனாலும், அமெரிக்க அழுத்தம் இல்லாத நிலையில், குறிப்பாக டொனால்டு டிரம்ப் மவுனமாக இருக்கக்கூடிய சூழலில், நேதன்யாகு இந்த ஆலோசனையைக் கேட்பாரா என்பது நிச்சயமற்ற தாகும்.
இழிவான நாடாக மாறும் இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் திருமதி பிரான்செஸ்கா அல்பானீஸ், “பெரும்பாலான உறுப்பு நாடுகள் செயலற்ற நிலையில் உள்ளன அல்லது இஸ்ரேலின் குற்றவியல் நடத்தைக்கு தீவிரமாக உதவுகின்றன,” என்று வெளிப்படையாகவேக் கூறி இருக்கிறார். குறிப்பாக அவர் மேற்கத்திய மற்றும் சில வளைகுடா நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறார். பலஸ்தீனர்கள் மீது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலைத் தொடுத்து வருவதைக் கருத்தில் கொண்டு, அது ஓர் இழிவான நாடாக (a pariah state) மாறும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேலை உருவாக்கும் ஐ.நா. திட்டத்திற்கு ஆதரவாக இருந்த நாடுகள், இந்தத் துயர நிலைக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ உடந்தையாக இருந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் டிரம்ப் இன அழிப்பு பற்றிய யூத இனவெறி சித்தாந்தம் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்ததேயாகும். யூத வரலாற்றாசிரியர் இலன் பாப்பேயின் குடும்பம் அப்போதைய வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டது. 1948 நக்பாவுடன் (இஸ்ரேல் நடத்திய பெரும் அழிப்பு படுகொலைகள்) தொடங்கி, ‘பலஸ்தீன இனத்தை முற்றாக அழித்தொழித்தல்’ (The Ethnic Cleansing of Palestine) என்ற தனது புத்தகத்தில் இந்த நோக்கங்களை அவர் விவரித்திருக்கிறார். இந்த நிலைமை இப்போது விரிவடைந்துள்ளது.
டொனால்டு டிரம்ப், காசாவை ஒரு சுற்றுலா மையமாக மாற்றப்போகிறோம் என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. அக்டோபர் 7-க்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் ஏன் இந்த வெறித்தனமான பிரச்சாரத்தைத் தொடர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹமாஸின் இராணுவத் திறன் எதுவாக இருந்தபோதிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு வெல்ல முடியாத தன்மை என்ற கட்டுக்கதையை, நடைபெற்றுள்ள நடவடிக்கைகள் தவிடுபொடியாக்கியுள்ளன. இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளின் தீவிர ஒத்துழைப்பு இல்லாமல்போனால், குறிப்பாக அமெரிக்கா அதற்கு ஆதரவு அளிக்காவிட்டால், அதனால் இந்த அளவிற்கு ஹமாசை எதிர்த்து நிற்க முடியாது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையே நாகரிகமான முறையில் உறவு இல்லாமல், இராணுவ வலிமையை மட்டுமே இஸ்ரேல் நம்பிக் கொண்டிருந்தால், ஒருபோதும் இவ்விரு நாடுகளிடையே நீடித்த அமைதி ஏற்பட முடியாது. மதவெறி அடிப்படையிலான இந்துத்துவா, யூத இனவாதம் இந்தியாவிலும் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும். வரலாற்று ரீதியாக, காந்தி முதல் நேரு வரை இந்திய அரசு பலஸ்தீனக் கொள்கையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்து வந்தது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தேசம் முழுவதும் ஒருமித்த கருத்தொற்றுமை இருந்து வந்தது. இருப்பினும், இந்துத்துவா சக்திகளின் எழுச்சி இதை முற்றிலுமாக மாற்றிவிட்டது.
இந்துத்துவாவும் சியோனிசம் எனப்படும் யூதஇனவாதமும் ஒரு பொதுவான கருத்தியலைப் பகிர்ந்து கொள்கின்றன. மதவெறியை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவா, ஒன்றிய அரசின் இயல்பையே மாற்றியமைத்திருக்கிறது. அவர்கள் இருவரும் சித்தாந்த ரீதியாக நெருக்கமான பிணைப்பு ஆவார்கள். ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆரம்ப நாட்களிலிருந்தே, அதன் தலைவர்கள் யூத இனவாத சித்தாந்தத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டுள்ள இன்றைய இந்துத்துவா ஆதரவு ஒன்றிய அரசானது, இஸ்ரேலின் இப்போதைய அழிவுப் பிரச்சாரத்தை ஆதரித்து வருகிறது. இந்தக் கூட்டணியானது, நடைபெற்றுவரும் மோதலை, யூதர்களுக்கும், முஸ்லிம் பலஸ்தீனர்களுக்கும் இடையேயான மதப்போராக சித்தரிக்க செய்ய முயற்சிக்கிறது. மோடியின் இந்தியாவிற்கும் நேதன் யாகுவின் இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளால் இது மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
நம்முன் உள்ள பணி மிகவும் தெளிவானதாகும். பலஸ்தீனத்துடனான சர்வதேச ஒற்றுமை வளர்ந்து வருகிறது. இஸ்ரேலின் சகிக்க முடியாத செயல்களைக் கண்டிக்க இந்திய மக்கள் அணிதிரண்டு மோடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது.
தமிழில்: ச.வீரமணி
மே 28, 2025

