Site icon சக்கரம்

போர் களத்தில் கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்!

அ. குமரேசன்

ஸ்ரேல் – பலஸ்தீன போர்களத்தில் உண்மைகளை உலகிற்கு வெளிக் கொணரும் பத்திரிகையாளர்களை கொல்வதை ஒரு போர் வீயூகமாகவே செய்கிறது இஸ்ரேல். போர்க் களங்களில் செய்தியாளர்களை தாக்கக் கூடாது என்ற ஜெனீவா தீர்மானத்தை துச்சமாக கருதி கொல்லப்படுகிறார்கள் ஊடகவியாளர்கள்:

பலஸ்தீனத்தில், குறிப்பாக அதன் காஸா பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு நடத்தி வரும் தாக்குதல்களில் இது வரையில்  கொல்லப்பட்டவர்கள், காஸா சுகாதார அமைச்சக அறிக்கை, ஐ.நா. மனித உரிமை அமைப்புகளிள் தரும் தகவல்களின்படி, ஏறக்குறைய 54,000 பேர். அவர்களில் குழந்தைகள் கிட்டத்தட்ட 18,000 பேர். இவர்கள் குண்டு வீச்சுகளால் மட்டுமே கொல்லப்பட்டவர்கள்.

இடிபாடுகளில் சிக்கியும், சரியான சிகிச்சை கிடைக்காததாலும் இறந்தவர்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேர் மருந்துகள் தடுக்கப்படுவதன் காரணமாக சாவு எண்ணிக்கையைப் பெருக்கச் செய்யப்போகிறார்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை. உலக நாடுகள் அனுப்பும் உணவுப் பொருள்கள் போய்ச் சேராததால் மரண விளிம்பில் இருக்கும் குழந்தைகள் பற்றிய தகவல் மனதை உறைய வைக்கிறது.

இந்தச் செய்திகளை நமக்குத் தெரிவிப்பவர்கள் ஊடகவியலாளர்கள். களத்திலேயே இருந்து தாக்குதல்களையும், கோரங்களையும் நேரடியாகப் பார்த்து எழுத்தாகவும், ஒளிப்பதிவுகளாகவும், ஒலிப்பதிவுகளாகவும் செய்தியாக்குகிறவர்கள். அவர்களுடைய நோக்கம் “பிரேக்கிங் நியூஸ்” கொடுப்பதல்ல. அபாயகரமான நிலைமைகளில் அங்கே செய்திகளை சேகரிக்கிற அவர்கள் உண்மையில் அறிவிக்க விரும்புகிற ‘பிரேக்கிங் நியூஸ்’, பலஸ்தீன, இஸ்ரேல் குடிமக்கள் எதிர்பார்க்கிற, நிலையான சண்டை நிறுத்தம் தான்.

ஆனால், அங்கே கொல்லப்பட்டவர்கள் பற்றிய செய்தியில் செய்தியாளர்களும் இடம் பெறுகிறார்கள்.  ஊடகவியலாளர்களுக்கு உலகில் மிக ஆபத்தான இடமாக காசா மாறியுள்ளது என்று ‘எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்’ (ஆர்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவில் தற்போதைய மோதல் தொடங்கிய கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 220 பலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 43 பேர், செய்தி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே தாக்கப்பட்டவர்கள். இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் மிகப் பெரிய எண்ணிக்கை இது. “அவர்கள் பத்திரிகையாளர்கள், படைவீரர்கள் அல்ல,” என்கிறது ஆர்.எஸ்.எஃப் (RSF).

அந்த 43 பேரும் கைகளில் குறிப்பேடுகளை, பேனாக்களை, காமராக்களை, மைக்குகளை வைத்திருந்தவர்கள். அந்த அடையாளங்களை இராணுவத்தினர் கவனிக்காமல் போகக்கூடும் என்று, இன்னும் தெளிவாகத் தாங்கள் யார் என்று காட்டும் வகையில் “பிரஸ்” என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்ட மேலுறைச் சட்டை அணிந்திருந்தவர்கள்.

ஜெனீவா தீர்மானம்

போர்க் களங்களில் செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்களைத் தாக்கக் கூடாதுஎன்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.  இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1949ஆம் ஆண்டில், உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவோடு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் இதற்கான தீர்மானம் (ஆவணம் 79) நிறைவேற்றப்பட்டது  போரிடும் ஏதாவது ஒரு தரப்பின் ஆட்களாக அல்லாமல், செய்தியாளர்களாகக் கடமையாற்றுவோர் தாக்கப்படாமல் இருப்பதை அந்தத் தீர்மானம் உறுதிப்படுத்தியது. 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றி 2,222 ஆவது தீர்மானம், இதை மறுபடியும் வலியுறுத்தியது.  போரில் ஈடுபட்டுள்ள தரப்புகள் இதை மதிக்க வேண்டும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

ஆனால், போர்க்களச்  செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது காஸாவில் நடக்கிறது. களத்திலேயே தாக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், தங்களுடைய வீடுகளில் இருந்தபோது குண்டுவீச்சுகளால் கட்டட இடிபாட்டில் நசுங்கியவர்கள் நிறையப்பேர். அண்மையில் அப்படி இறந்தவர் செய்தி முகமை அமைப்பான ‘பார்க் காஸா’ நிறுவனத்தின் இயக்குநர் ஹசன் மஜ்தி அபு வார்தா. அவர் காஸா நகரின் ஜபாலியா அல்–நஜ்லா பகுதியில் தன் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தபோது இஸ்ரேல் குண்டு விழுந்து வெடித்தது. ‘அல்–குயேட்ஸ் டுடே’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரும் காணொளித் தொகுப்பாளருமான  மூட்டாஸ் ரஜாப் இதே போன்ற மரணத்தைச் சந்தித்தார்.

தாக்குதல்களின்போது தற்செயலாக சிக்கிக்கொண்ட நிகழ்வுகளாக இவற்றைப் பார்க்க முடியாது. காஸாவில் தனது இராணுவம் என்ன செய்கிறது என உலக மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுக்க இஸ்ரேல் அரசு விரும்புகிறது. அங்கே நடப்பதற்கு இவர்கள் தான் நேரடி சாட்சிகள். ஆகவே, உலகத்தின் கண்களை மறைக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே களச் செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள். பன்னாட்டுச் செய்தியாளர்கள் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி உள்ளே வருவதை இராணுவம் தடுக்கிறது. பல்வேறு ஊடக நிறுவனங்கள்  காஸாவில் பணியாற்றும் செய்தியாளர் குழுக்களுக்குப் பல்வேறு தகவல் தொடர்புக் கருவிகளை அனுப்புகின்றன. அவற்றை இஸ்ரேல் இராணுவம் வழிமறித்துக் கைப்பற்றுகிறது. இதன் மூலம், நிகழ்வுகளைப் பதிவு செய்வது கடினமான பணியாக்கப்படுகிறது.

யூத இளைஞர்களால் தாக்கப்படும் பத்திரிக்கையாளர்.

வரலாற்றுக்குள் சிறு பயணம்

இந்த அளவுக்குச் செய்தியாளர்களின் பணி சவால் மிக்கதாக மாற்றப்படுவது ஏன்? இதைப் புரிந்துகொள்ள, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலுக்கு ஏன் பழிவெறி, இஸ்ரேல் மீது பலஸ்தீன மக்களுக்கு என்ன ஆதங்கம் என்ற பின்னணியைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

விவிலியத்திலும், யூதர்களின் மத நூலிலும் வரும் ஆபிரகாம், ஈசாக், யாகோபு ஆகியோர் யூதர்களின் மூதாதையர் என்று சொல்லப்படுகிறது. தொல்லியல் உள்ளிட்ட ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்களும் இந்த வட்டாரத்தின் குறிப்பிட்ட பகுதி யூதர்களின் பூர்வீகமாக இருந்ததைக் காட்டுகின்றன என்கிறார்கள். கி.மு. 10ஆம் நூற்றாண்டில் தாவீது, சாலமன் ஆகிய அரசர்களின் கீழ் யூதப் பகுதியாக நிறுவப்பட்டிருந்ததாம். 900 ஆண்டுகள் கழித்து, கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்த வட்டாரத்தை ரோமானிய மன்னர்கள் ஆக்கிரமித்து வளைத்தனர். பல இடங்களில் யூதர்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்ததோடு, அடையாளங்களை மறைக்கும் நோக்கத்துடன் ‘பலஸ்தினா’ என்று பெயர் சூட்டினர் (பிளிஸ்தியா என்ற கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களின் நாடு என்ற பொருளில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாம். அத்துடன், அந்த வட்டாரத்தில் வாழ்ந்த யூதர்களைக் கொல்வது, அகதிகளாக வெளியேற்றுவது என்ற அந்தக் கால அரச (அ)நீதிகளும் நிறைவேற்றப்பட்டன.

படிப்படியாக யூத மக்களில் மிகப் பெரும்பாலோர் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் அடைக்கலம் புகுந்து, பல தலைமுறைகளில் அவற்றின் குடிமக்களாகவே வாழ்ந்து வந்தனர். எஞ்சிய சிறு சமூகத்தினர் பலஸ்தீனத்தின் ஜெருசலேம், ஹேப்ரான், சபத், திபேரியாஸ் உள்ளிட்ட சில இடங்களில் தொடர்ந்து வசித்தார்கள்.

சியோனியத்தின் தோற்றுவாய்

வெளிநாடுகளில் குடியேறியவர்கள் பூர்வீகத்துக்குத் திரும்பி வரும் கனவை வளர்த்து வந்தார்கள். அதுவே சியோனிய இயக்கமாக உருவெடுத்தது. பலஸ்தீனத்தைத் தங்களது மூதாதையர் பூமி என்று அவர்கள் சொல்வதும், பலஸ்தீனர்கள் அதை மறுப்பதுமாகக் காலண்டர் தாள்கள் கிழிபட்டுக்கொண்டிருந்தன.

பலஸ்தீனம் 1500 முதல் நான்கு நூற்றாண்டு காலம் ஓட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போர் (1914–18) முடிந்த பிறகு அந்தப் பகுதியை பிரிட்டிஷ் அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் நாடுகளில் பரவியிருந்த யூத மக்களுக்கென சொந்த நாடு கோரும் சியோனிய இயக்கம் வலுப்பெறலானது. யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கிச் செல்வது அதிகரித்தது. அவர்களுக்கென பலஸ்தீனத்தில் ஒரு ‘தேசிய தாயகம்’ அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவைத் தெரிவித்தது. இது பலஸ்தீனத்தில் நெடுங்காலமாக வாழும் அரபு மக்களைப் பொருட்படுத்தாமல், அவர்களுடன் பேசாமல், அவர்களுடைய ஒப்புதலையும், ஒத்துப்பையும் பெறாமல்  யூதர்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த வாக்குறுதி.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலி சர்வாதிகாரி முசோலினி கொடுங்கோலாட்சிகளில் யூதர்கள் எதிர்கொண்ட இன அழிப்புத் துயரத்தைத் தொடர்ந்து, அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு நாடு தேவை என்றும் உலக நாடுகள் உணர்ந்தன.

1947 இல் ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை அரபு மக்களின் பலஸ்தீனமாகவும், இன்னொரு பகுதியை யூதர்களின் இஸ்ரேலாகவும் அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தது. அதை யூதர் தலைவர்கள் ஏற்றனர், பலஸ்தீனர்கள் ஏற்கவில்லை. அண்டை அரபு நாடுகளும் நிராகரித்தன. பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்ததும், 1948 மே 14 அன்று, இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

போரின் முன்னுரை

அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும், அண்டை அரபு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போரில் ஐ.நா. வரையறுத்ததை விட அதிகமான நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றியது. லட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் தங்களின் பாரம்பரிய நிலங்களை விட்டு வெளியேற நேர்ந்தது. இது பலஸ்தீன வரலாற்றில் ‘நாக்ஃபா’ (பேரழிவு) என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு பலஸ்தீன நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேல் துண்டு போடப்பட்டதே இன்று வரையில் தொடரும் மோதல்களுக்கு மூல காரணம்.

சுதந்திர பலஸ்தீனத்தை நிலைபெறச் செய்யும் இலட்சியத்துடன் யாசர் அராஃபத் மக்களைத் திரட்டினார். 1950 இல் அவரும் முன்னாள் இராணுவத் தளபதிகளும் சேர்ந்து ‘பலஸ்தீன தேசிய விடுதலை இயக்கம்’ (ஃபதா) என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இஸ்ரேலுடன் இராணுவ மோதல்களை அது மேற்கொண்டது. இதனிடையே 1964 இல் அஹமத் ஷுகேரி உருவாக்கியது தான் ‘பலஸ்தீன விடுதலை அமைப்பு’ (பிஎல்ஓ). 1967 -ல் ஃபதா–இஸ்ரேல் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து பி.எல்.ஓ இயக்கத்திற்கு உள்ளேயே ஃபதா செல்வாக்கு அதிகரித்தது. அராஃபத் 1969 இல் பி.எல்.ஓ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.நா. சபை அவரை அங்கீகரித்தது. 1993 இல் அவருக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு கையெழுத்தானது.

அதன்படி ஒரு பகுதி மேற்குக் கரையும், காஸாவும் கொண்ட ‘பலஸ்தீன ஆணையம்’ (பி.ஏ.) அமைக்கப்பட்டது. 1994 இல் அராஃபத், இஸ்ரேலின் இட்ஸாக் ரேபின், ஷைமன் பெரேஸ் ஆகிய மூவருக்கும் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது. ஐ.நா.வின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அரசாக மட்டும் பி.ஏ. சேர்த்துக் கொள்ளப்பட்டது. முழுச் சுதந்திரக் கனவு நிறைவேறாமலே 2004  இல் அராஃபத் காலமானார். (இயற்கை மரணமா, நஞ்சூட்டப்பட்ட கொலையா என்ற மர்மம் புதிரவிழாமல் இருக்கிறது). இன்றைய நிலவரப்படி ஐ.நா.வின் 1473 உறுப்பு நாடுகள் (மொத்தம் 193) பலஸ்தீனத்தை உயர் தன்னாளுமைத் தனி நாடாக ஏற்றுள்ளன. அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் (பிரிட்டன்), கனடா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட இதர நாடுகள் அதை எதிர்க்கிற நிலையில் இன்னமும் பலஸ்தீனம் தனி நாடு என்ற  அங்கீதாரத்தைப் பெற முடியவில்லை.

ஹமாஸ் பிடி

இஸ்ரேல் உருவான பின் காஸா பகுதி  எகிப்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1967 இல் 6 நாட்கள் நடந்த போரில் காஸா, மேற்குக் கரை,  கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. காஸாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு  38 ஆண்டுகள் நீடித்தது. 2005  இல் இஸ்ரேல் தனது படைகளையும்,  யூதக் குடியிருப்புகளையும் அங்கிருந்து அகற்றிக் கொண்டது. இஸ்ரேல் குடியிருப்புகளில் இருந்தவர்களை விடப் பலமடங்காகப் பெருகிய பலஸ்தீனர் மக்கள்தொகை, அதிகரித்த ஹமாஸ் செல்வாக்கு, பாதகமான சூழல்களில் படைகளை நிறுத்தி வைப்பதற்கும் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்கும் ஏற்பட்ட ஏகப்பட்ட செலவு, அமைதியை ஏற்படுத்த உலக நாடுகள் அளித்த கட்டாயம், உள்நாட்டு அரசியல் சூழல் என்ற பின்னணிகளில் இஸ்ரேல் அரசு இந்த முடிவுக்கு வந்தது.

ஷேக் அகமது யாசின்

இதன் பின், ஆயுதம் ஏந்திய ஹமாஸ் இயக்கத்தின் ஆதிக்கம் தொடங்கியது. 1987 ல், ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ என்ற இயக்கத்தின் பலஸ்தீனக் கிளையாக ஷேக் அஹமது யாசின் அதை உருவாக்கினார். ஆயுதம் ஏந்திய ஹமாஸ்சின் நோக்கம் ஓர் இஸ்லாமிய அரசை நிறுவுவதாகும். பலஸ்தீன விடுதலை அமைப்பு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை  ஹமாஸ் எதிர்த்தது. 2004 இல் இஸ்ரேல் தாக்குதலில் யாசின் கொல்லப்பட்டார்.

2006  இல் நடந்த பலஸ்தீன சட்டமன்றத் தேர்தல்களில், ஹமாஸ் பெரும் வெற்றி பெற்றது. ஊழல் உள்ளிட்ட காரணங்களால்  ஃபதா நிர்வாகத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், ஹமாஸ் மேற்கொண்ட பல சமூக சேவைகள் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஹமாஸ் வெற்றியை இஸ்ரேலும் மேற்கத்திய அரசுகளும் அங்கீகரிக்கவில்லை. 2007 இல் காஸாவில் ஹமாஸ்–ஃபதா அமைப்புகளுக்கிடையே ஆயுத மோதல் வெடித்தது. அதில் ஹமாஸ் வெற்றி பெற்று காஸாவை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அன்றிலிருந்து காஸா ஹமாஸ் ஆட்சியில் இருக்கிறது.

ஏற்கெனவே எகிப்து அதை மறுபடியும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளில் இருக்க, 2023 ஒக்ரோபர் 7 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியது. அதில் இராணுவத்தினர் உட்பட சுமார் 1,200  பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காஸவாவுக்குக் கடத்தப்பட்டனர்.

வியூகத்தில் பத்திரிகையாளர்களும்!

இரண்டே நாட்களில் இஸ்ரேலின் தற்போதைய முற்றுகை தொடங்கியது. “மின்சாரம் இல்லை, உணவு இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை – அனைத்தும் மூடப்படும்” என்று இஸ்ரேல் இராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் அறிவித்தார். எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பகுதியை திறந்தவெளி சித்திரவதைக் கூடமாக மாற்றியுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை தடுக்கப்படுவது காஸாவில் இறங்கியிருக்கிற இராணுவத்தினரின் தான்தோன்றித்தனமான அத்துமீறல்களால் அல்ல, இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ வியூகத்தால் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உலகத்தின் பார்வையிலிருந்து உண்மைகளை மறைப்பதும் அந்த வியூகத்தின் ஒரு பகுதி தான் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

காஸாவில் தொடரும் போர்ச் சூழல், குழந்தைகளும் சாகவிடப்படுகிற அதன் கோரமான விளைவுகள், இதையெல்லாம் செய்தியாக்குகிற பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இவற்றின் பின்னணியில் இந்த வரலாறு இருக்கிறது. செய்தியாளர்கள் மீதும் இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள போரைக் கண்டித்து கடந்த ஏப்ரல் 16 அன்று பாரிஸ் நகரில் ஆர்.எஸ்.எஃப் உள்ளிட்ட  உலகளாவிய பத்திரிகையாளர் சங்கங்கள் ஒரு இயக்கத்தை நடத்தின. அதில் உருவாக்கப்பட்ட கோரிக்கைகளுடன் மனு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பலஸ்தீனப் பத்திரிகையாளர்களைக் குறிவைப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், அவர்களைத் தாக்குகிற குற்றவாளிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது நிறுத்தப்பட வேண்டும், உள்நாட்டு–பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் காஸா பகுதிக்கு வர நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு அனுப்பப்படும் பொருள்கள் தடையின்றிக் கிடைப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அந்த மனு உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபத்தான சூழலில் பணியாற்றுவோருக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் மற்றவர்களும் அதில் கையெழுத்திட்டு வருகிறார்கள்.

நமது ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கலாம் – இந்த முகவரியில் சென்று:

https://rsf.org/en/petition-we-are-calling-immediate-end-massacre-palestinian-journalists-gaza-and-international-press

Exit mobile version