Site icon சக்கரம்

‘காஸா இனப்படுகொலைகளை நிறுத்துக!’ – இஸ்ரேலுக்கு உலகளாவிய 32 ஊனமுற்றோர் அமைப்புகள் கோரிக்கை

காஸாவில் இனப்படுகொலைகள் செய்வதை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு, உலகம் முழுதும் உள்ள 32 ஊனமுற்றோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பலஸ்தீன மக்களுக்கு தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் டி.முரளிதரன் வெளியிட்டுள்ள அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கீழே கையொப்பமிடப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்களான நாங்கள், இனப்படுகொலைகளுக்கு ஆளாகியிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்துக் கொள்கிறோம். காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்ட கிரேட்டா தன்பர்க்  (Greta Thunberg), ரிமா ஹாசன் (Rima Hassan), லியாம் கன்னிங்ஹாம் (Liam Cunningham), ஆன் ரைட் (Ann Wright) உட்பட உலகெங்கிலும் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையுடன் செயல்படும் அனைவருடனும் எங்கள் தெளிவான ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடற்கொள்ளையர்கள் போல மாறிய இஸ்ரேல்

2025 ஜூன் 1 அன்று, பன்னிரண்டு சர்வதேச ஆர்வலர்கள், ‘ப்ரீடம் ப்ளோட்டிலா’ கூட்டணியால் (Freedom Flotilla Coalition – FFC) ஏற்பாடு செய்யப்பட்ட பிரிட்டிஷ் கொடியுடன் கூடிய பாய்மரப் படகான மேட்லீனில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இதில் காஸாவில் முற்றுகையிடப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியா வசிய உதவிகளான குழந்தை பால்மா, மா, மருத்துவப் பொருட்கள் மற்றும் உப்புநீக்கும் உபகரணங்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், ஜூன் 8 அன்று சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டு, உதவிப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆர்வலர்கள் கடத்தப்பட்டனர்.

கடற்கொள்ளையர்களைப் போன்று நடந்து கொண்ட இந்த அப்பட்டமான செயலானது, முற்றுகை மற்றும் அழிவு மூலம் பலஸ்தீன மக்களை பட்டினிப்போட்டுக் கொல்ல வேண்டும் என்ற உத்தியின் ஒரு பகுதியாகும்.

மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

காஸாவில் நடப்பது ஒரு போர் அல்ல – அது ஒரு இனப்படுகொலை. மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், இஸ்ரேல் இடைவிடாத குண்டுவீச்சு, முற்றுகை, பற்றாக்குறை மற்றும் பட்டினி மூலம் ஓர் இனத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த மக்களையும் திட்டமிட்டு கொன்று குவித்துவருகிறது. காசாவில் நடைபெற்று வரும் இனப்படு கொலைகள் காரணமாக மாற்றுத் திறனாளி பலஸ்தீனர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தற்போதைய இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு முன்பு காஸாவின் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக இருந்தனர். இஸ்ரேலின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள், இரசாயன ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்பை அழிப்பதன் காரணமாக அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

உணவு, மருத்துவத்தை தடுத்து உளவியல் தாக்குதல் உணவு அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மீது குண்டுவீசி அவை தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுத்தமான நீர் மற்றும் மருந்துகள் கிடைப்பது, துண்டிக்கப்பட்டுள்ளன. நோய்கள் பரவலாக உள்ளன. போக்குவரத்து உதவிகள் அழிக்கப்படுகின்றன. மருத்துவப் பராமரிப்பு மறுக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் பாதிப்பு அளவிட முடியாதது. மேலும் ஊனமுற்ற பலஸ்தீனர்கள் இதை அதிகம் அனுபவிக்கின்றனர்.

இதற்கிடையில், ஓட்டிசம் மற்றும் நரம்பியல் ஆர்வலரான (autistic and neuro divergent activist) கிரேட்டா தன்பெர்க் போன்று ஒற்றுமைக்காக நிற்பவர்கள் கைது செய்யப்பட்டு அடக்குமுறையை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான தடுப்புக்காவல் ஒரு அச்சுறுத்தலாகும். அந்த அச்சுறுத்தலை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
ஊனமுற்றோருக்கு நீதி வழங்குவதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கத்தவர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட முழக்கங்களை பிரகடனம் செய்கிறோம்:

எனவே நாங்கள் கோருகிறோம்:

கிரேட்டா தன்பெர்க்

பலஸ்தீன மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம்

நிறவெறி, இனப்படுகொலை மற்றும் குடியேறிகள் – காலனித்துவ வன்முறை ஆகியவற்றின் முழுமையான முடிவைத் தவிர வேறு எதையும் மாற்றுத் திறனாளிகளுக்கு நீதி கோரும் அமைப்புகள் கோருவதில்லை. 75 ஆண்டுகளுக்கும் மேலாக, பலஸ்தீனர்கள் அசைக்க முடியாத துணிச்சலுடன் எதிர்த்து வருகின்றனர். அவர்களது விடுதலையை அவர்களிடமிருந்து பிரிக்க முடியாது. மரணம் மற்றும் ஒடுக்குமுறையின் கட்டமைப்புகளுக்குள் “மேம்படுத்த” அல்லது “சேர்க்க” என்கிற அனைத்து வகையான சீர்திருத்தவாத அழைப்புகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஏகாதிபத்தியம், காலனித்துவம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் பலஸ்தீன மக்களுடனும் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். நதி முதல் கடல் வரை, பலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்.

இவ்வாறு அந்த அமைப்புகள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கூட்டு அறிக்கையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உட்பட 32 அமைப்புகளும் தனிநபர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Exit mobile version