–வீ. பா. கணேசன்
ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் கீழ் சிதலமடைந்து கொண்டிருந்த சமூகத்தைச் சித்தரிப்பதில், ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்களாக இருந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் புஷ்கின், லெவ் டால்ஸ்டாய், பியோடர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்ற பலரும் தங்களுக்கேயுரிய வகையில் தனித்துவம் பெற்றிருந்தனர். இதற்கு மாறாக, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, வளரும் சிறுவயதிலேயே உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட மாக்சிம் கார்க்கி, தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கத் தொடங்கியபோது, அந்த எழுத்து லெனின் போன்ற மெத்தப் படித்தவரையும் உலுக்குவதாக அமைந்து போனது இயற்கையான ஒன்றுதான்.
இழப்பதற்கு ஏதுமின்றி வாழும் உழைப்பவரை நசுக்கும் சமூக நிலையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை ஊட்டும்படியான அவரது எழுத்துகள் இன்றளவும் நமக்கு ஆதர்சமாகத் திகழ்கின்றன. மகத்தான எழுத்தாளரான கார்க்கி, ஆண்டாண்டு காலமாக துயரத்தில் உழன்று வரும் உலகத்து உழைக்கும் மக்களின் மீதான தனது அன்பையும் கருணையையும் வார்த்தைகளில் வடித்து வைத்தார். இதற்காகவே அவரது தாய்நாட்டின் தொழிலாளர்களாலும், உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டார். அவரது நூல்கள் பல லட்சக்கணக்கில் வெளியாகி, அவருக்குப் பேரையும் புகழையும் தந்ததைப் போலவே, உலகின் பல பகுதிகளிலும் அகன்ற சாலைகளும், சதுக்கங்களும், பூங்காக்களும், கலை வளாகங்களும் அவரது பெயரைத் தாங்கி நிற்கின்றன.
கார்க்கியின் வாழ்வையும் பணியையும் விவரிக்கையில் மகத்தான எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், சோவியத் யூனியனின் முதல் கல்வி அமைச்சருமான அனடோலி லூனாசார்ஸ்கி இவ்வாறு கூறினார்: “விவசாயியின் கிழிந்து போன காலணியையும், சட்டையையும் அணிந்தபடி, உள்ளிருந்தே உருக்கும் எலும்புருக்கி நோயுடன் ரஷ்ய இலக்கிய உலகிற்குள் நுழைந்த கார்க்கி, அந்த விவசாயியைப் போலவே துயரத்தை அருந்தியபடி தன் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக ஏங்கினார்; அவரது வீட்டுப் பரணை ஒப்பிடுகையில், மிகுந்த ஆடம்பரத்தோடு விளங்கிய பத்திரிக்கை அலுவலகங்களுக்குள் நுழைந்த அவர், குருட்டாம்போக்கான, கசடுகள் நிரம்பிய, கொடூரமான தங்களின் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை முழுமையாக அவர்களிடம் எடுத்துக் கூறினார்; அதுதான் கார்க்கியின் மகத்தான இலக்காகவும் இருந்தது; தான் வாழ்ந்த சமூகத்தைக் குற்றம் சாட்டுவதாகவும் அது இருந்தது; அதுதான் எவ்வித இரக்கமும் அற்ற, கிண்டல்கள் நிரம்பிய உண்மை வாழ்க்கையை எடுத்துரைக்கும் உறுதியையும் அவருக்குத் தந்தது.
“ மனிதர்கள் கொடூரமானவர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பார்கள் என்பதை கார்க்கி நன்றாகவே அறிந்திருந்தார். அத்தகையோரை அவர் வெறுக்கவும் செய்தார். அதே நேரத்தில் அத்தகையோர் அறிவற்றவர்களாக, விசித்திரமானவர்களாக, மனித வாழ்க்கை என்ற அழகான மரத்தின் வெறும் கணுக்களாகவே இருப்பவர்கள் என்பதையும் அவர் நன்கறிந்திருந்தார்.
“மேலும், உண்மையிலேயே மகத்தான, கருணையுள்ளம் மிக்க, துணிவுமிக்க, நியாய உணர்வு மிக்க மகத்தான மனிதர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் என்பதையும், முற்றிலும் அற்புதமான மனிதர்கள் என எவரும் இல்லை என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.
“அவ்வாறிருந்தபோதிலும், தன் சக மனிதனை உண்மையான அன்புடனும், உண்மையான நம்பிக்கையுடனும் நேசிப்பதை அவர் நிறுத்திவிடவில்லை; இந்த நம்பிக்கை என்பது அவரது சொந்த அனுபவத்திலிருந்தே பெற்றதாகும்.”
கீழடுக்குகள், தாய், எனது குழந்தைப் பருவம், உலகின் மடியில், எனது பல்கலைக்கழகங்கள், பயனற்ற மனிதனின் வாழ்க்கை, வாக்குமூலம், அர்த்தமனோவின் வேலை, க்ளிம் சாம்கின் வாழ்க்கை (நான்கு தொகுதிகள்) ஆகிய நாவல்கள் அவர் வாழ்ந்த சமூகத்தின் பிரச்சனைகளை சற்றும் முகச்சுளிப்பின்றி முன்வைத்தன. அதைப் போன்றே குறுநாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் என பல்வேறு இலக்கிய வடிவங்களையும் கையாண்ட கார்க்கி, அக்டோபர் புரட்சிக்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் எழுத முன்வந்த எழுத்தாளர்களின் பாதுகாவலனாகவும் விளங்கினார்.
1930களில் சோவியத் அதிபர் ஸ்டாலினின் மனம் கவர்ந்த எழுத்தாளராக கார்க்கி இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு ஐந்து முறை மறுதலிக்கப்பட்டது என்பதும் இங்கே எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும்.
சோவியத் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலக எழுத்தாளர்களின் கடமையையும் மிகத் தெளிவாக வரையறுத்த ஒரு முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். சோஷலிச எதார்த்தவாதம் என்ற அவரது இலக்கியப் பாணி, வளரும் எழுத்தாளர்களுக்குப் புதிய பாதையை எடுத்துக் காட்டியது. அவரது எழுத்துக்களை பின்பற்றிய வகையில் உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களை நேசிக்கும் எழுத்தாளர்கள் அணியணியாகத் திரண்டெழத் தொடங்கினர் என்பதும், அவரது அறைகூவலை செவிமடுத்தே இந்தியாவில் 1936 ஆம் ஆண்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது என்பதும் இங்கு நினைவு கூரத் தக்கதாகும்.
1936 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது பூதவுடலை சோவியத் அதிபரான ஜோசப் ஸ்டாலினும் மக்கள் கமிசார் கவுன்சிலின் தலைவரான மாலடோவும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் என்பது சோவியத் யூனியனின் மக்களும் அதன் தலைவர்களும் மாக்சிம் கார்க்கியை எந்த அளவிற்கு நேசித்தனர் என்பதை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்தது

