
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் அலாஸ்காவில் நடத்திய சந்திப்பு, அமெரிக்காவின் நெருக்கடியின் வெளிப்பாடே. மூன்று ஆண்டுகளாக உக்ரைனில் நடத்திய போரில் தோல்வியடைந்த அமெரிக்கா, இப்போது வேறு வழியில்லாமல் ரஷ்யாவுடன் பேசுவதற்கு வந்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி, புட்டின் அரசாங்கத்தை வீழ்த்தும் அமெரிக்க திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. நேட்டோ நாடுகள் பல இலட்சம் டொலர்கள் செலவிட்டும், ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அனுப்பியும் ரஷ்யாவை தோற்கடிக்க முடியவில்லை.
போக்ரோவ்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கின்றன. உக்ரைன் இராணுவம் கடுமையான படைவீரர் பற்றாக்குறையால் சிதைந்து வருகிறது. மேற்கத்திய உளவுத்துறை அறிக்கைகளே உக்ரைனின் இராணுவ பேரழிவு குறித்து எச்சரிக்கின்றன. இந்த கடுமையான நிலையில் ட்ரம்ப் “அமைதியின் தேவை” பற்றி பேசுவது அவரது நாட்டின் அவசியத்தின் விளைவே.
அமெரிக்கா இப்போது சீனாவை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த விரும்புகிறது. ரஷ்யாவுடனான மோதலில் இருந்து விலகி, பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக தனது படைகளை குவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் வார்த்தைகள் இதை தெளிவாக்குகின்றன.
அமெரிக்கா தனது வளங்களை இரண்டு முனைப் போருக்கு செலவிட முடியாது என்பதை உணர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், அதன் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டமும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு நேரடி சவாலாக உள்ளன.
இந்தப் பின்னணியில்தான் ட்ரம்ப் புட்டினுடன் பேசினார். ஆனாலும், எந்த உறுதியான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. 12 நிமிட செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் “இரண்டு பெரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை” என்று ஒப்புக்கொண்டார். புட்டின் “மோதலின் முதன்மையான வேர்களை அகற்ற வேண்டும், ரஷ்யாவின் நியாயமான கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை இயல்பு – உலகை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தும் வேட்கை – மாறாத வரை, எந்த ஒப்பந்தமும் நிரந்தரமாக இருக்காது. அமெரிக்கா தனக்கு வசதியான நேரத்தில் எந்த ஒப்பந்தத்தையும் மீறும் வரலாறு கொண்டது.
ட்ரம்ப் இந்த சந்திப்பை “நல்ல நண்பர்கள்” என்று சித்தரித்தாலும், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கடுமையான எதிர்ப்பு உள்நாட்டு அரசியல் நெருக்கடியை காட்டுகிறது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் ஒரு பிரிவு ரஷ்யாவுடன் தொடர்ந்து போரிட விரும்புகிறது, மற்றொரு பிரிவு சீனாவை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் சமரசம் செய்ய விரும்புகிறது. இதுதான், அலாஸ்கா சந்திப்பின் பின்னணி.

