Site icon சக்கரம்

காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், சேக் அப்துல்லாவும்!

-ச.அருணாசலம்

காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு – பாகம் 2

ணை பிரியா நண்பர்களாக இருந்த நேருவையும், சேக் அப்துல்லாவையும்  காஷ்மீர் விவகாரம் எதிரெதிர் துருவத்தில் நிறுத்தியது. அதன் பின்னணி என்ன? சேக் அப்துல்லா ஏன் நேரு அரசால் கைது செய்யப்பட்டார்? பிறகு அவரை விடுவித்து பழைய நட்பை புதுப்பித்த நேருவிடம் ஏற்பட்ட மனமாற்றம் என்ன..?

இணைப்பிற்காக அவசரப்பட்டுவிட்டோமோ என்ற நினைப்பில் சேக் அப்துல்லா தேசீய மாநாட்டு கட்சியின் செயற்குழுவை மே 1953 இல் கூட்டினார். அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய எட்டு பேர் அடங்கிய குழுவை உருவாக்கினார் .

அந்த குழு ஜூன் 9, 1953 அன்று காஷ்மீர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க கீழ் வரும் யோசனைகளை முன்வைத்தது.

  1. தனி நாடு என்ற வாய்ப்பையும் (choice) உள்ளடக்கிய வாக்கெடுப்பை நடத்துதல்

    2. அனைத்து காஷ்மீரையும் கூட்டு அதிகாரத் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தல்

    3. தனி நாடாக உருவெடுத்தல்

    4.  நா கமிஷனர் முன்வைத்த யோசனைபடி ,வாக்கெடுப்பு நடத்தப்பட்ட  பிரதேசத்தை தனி நாடாக ஏற்றுக்கொள்ளுதல்

    என்ற நான்கு யோசனைகள்தான் அவை..!

    இந்த யோசனைகளை பற்றி விவாதிக்க சேக் அப்துல்லா கட்சியின் பொதுக் குழவை கூட்ட அழைப்பு விடுத்தார். .

    இந்த நிலையில் மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்த ஜவகர்லால் நேரு மற்றும் சேக் அப்துல்லா ஆகிய இரு தலைவர்கள் இடையில் பரஸ்பர நம்பிக்கையின்மையும் , கண்ணோட்டத்தில் மாறுபாடுகளும் ஏற்பட்டிருப்பதை,  ஜூன் 28  அன்று  சேக்  அப்துல்லாவிற்கு நேரு அனுப்பிய கடிதம் மூலம் நாடு அறிந்தது. இதன் நகலை பக்‌ஷி குலாம் முகமதுவிற்கும் நேரு அனுப்பினார் என்பது ஆச்சரியமூட்டும் செய்தியாகும்.

    அந்த கடிதத்தில் நேரு,  “சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளன ஒன்று நீங்கள் உங்களது நிலைபாட்டை மாற்றி உள்ளீர்கள் அல்லது உங்களது  சிந்தனையில் தெளிவில்லை… நாம் சோனாமாரக், ஶ்ரீநகரில் சந்தித்த போதே  இதை – இந்த மாறுபாடு குறிப்பிடத்தகுந்தது என்பதை – உணர்ந்தேன்.  அப்பொழுது  நீங்கள் காஷ்மீர் முன் இருப்பது இரண்டு வழிகள் தான் என்று கூறினீர்கள்.

    ஒன்று முற்றிலுமாக ஒருங்கிணைதல் அல்லது முற்றான சுயாட்சி என்று  கூறினீர்கள். அந்த சுயாட்சியின்  பொருள்  என்னவாயினும்  எனக்கு  அதில்  உடன்பாடில்லை .அது குறித்து இப்பொழுதும் உங்களுடன் எனக்கு உடன்பாடில்ல,  எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. நாம்  பலமுறை  விவாதித்துவிட்டோம். நமது முடிவுகள் வேறுபாடானது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த என்ன  செய்ய  வேண்டும்  என்பது  பற்றி ஆலோசிப்போம், அத்தகைய ஆலோசனை நமக்கு வேறுபாடான பாதைகளை கொடுக்குமென்றால், அதன் அனைத்து  தாக்கங்களையும்  ஏற்றுக்கொண்டு  அந்த  பாதைகளில்  நமது பயணத்தை தொடருவோம். இக்கடித நகலை  நான்  பக்‌ஷி  குலாம்  முகமதுவுக்கும்  அனுப்பியுள்ளேன்.  காரணம்,  காஷ்மீரை  எதிர்நோக்கியுள்ள  பிரச்சினைகள்  குறித்தும்  அதன்  தீர்வுகள்  குறித்தும்  அவருக்கும்  அக்கறை உள்ளது“.

    இதிலிருந்து, காஷ்மீரின் நலன்களும், காஷ்மீரின் அரசியல் உரிமைகளும் இந்திய அரசின் ஆளுமைக்கும் அதன் “நலன்களுக்கும்” அடிபணிந்தே செயல்பட வேண்டும்’ என்ற நேருவின் அதிகாரப் பார்வை வெளியாயிற்று.

    காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக, வாழக்கை மேம்பாட்டிற்காக 1930 முதலே போராடி வரும் சேக் அப்துல்லா – வெள்ளையனே வெளியேறு என்று காந்தியும், காங்கிரசும் போராடிய காலத்திலே தன்னிச்சையாக மன்னர் ஹரிசிங்கின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து காஷ்மீரை விட்டு வெளியேறு Quit Kashmir என்று போராடிய சேக் அப்துல்லா – இந்தியத் தலைவர்களின் மீது உள்ள அபிமானத்தால் இணைப்பிற்கு ஆதரவு அளித்த சேக் அப்துல்லா – இன்று நேருவின் பார்வையில் இழக்கத்தக்க ஒரு சக்தியாக “கருவேப்பிலையாக” காட்சி அளித்தார்.

    இதன் நீட்சியாக சேக் அப்துல்லாவின் கட்சியான தேசீய மாநாட்டு கட்சியிலேயே அவரை தனிமைபடுத்த நேரு முயற்சிகள் மேற்கொண்டார்.

    தலைசிறந்த ஜனநாயகவாதி என்றும் சிறந்த கொள்கை வீரன்  சமரசமற்ற போராளி என்றும் போற்றப்பட்ட நேரு, சேக் அப்துல்லாவை ஓரங்கட்ட அவரின் சகாக்களான பக்‌ஷி குலாம் முகமது, டி.பி தார் , ஜி.எம். சாதிக் போன்றோரை உபயோகித்தார். மன்னர் ஹரி சிங்கின் இளவல் கரண் சிங்கோ சேக் அப்துல்லாவை பழி வாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

    நேரு, கரண்சிங், பக்‌ஷி குலாம் முகமது

    அப்பொழுது ஶ்ரீநகருக்கு வருகை தந்திருந்த அமெரிக்க தூதர் அடலாய் ஸ்டீவன்சனை சேக் அப்துல்லா சந்தித்ததை ஒரு சாக்காக வைத்து அப்துல்லா பிரிவினை கேட்க போகிறார் என்ற புரளியை கிளப்பி, அமெரிக்காவிற்கும் சேக் அப்துல்லாவிற்கும் தொடர்பு உள்ளது என்ற எண்ணத்தை டி.பி.தார் பரப்பினார். பிரதமர் நேரு, சேக் அப்துல்லாவை பதவியிலிருந்து அகற்ற இது தான் சமயம் எனக் கருதி தனது முடிவை ஓகஸ்ட் 8 1953 அன்று சாதர்-இ-ரியாசத் ஆக இருந்த கரண்சிங்கிடம் தெரிவித்தார்.

    சேக் அப்துல்லா மந்திரி சபையின் (cabinet) நம்பிக்கையை இழந்து விட்டார், எனவே, அவரை பதவிநீக்கம் செய்கிறேன் என கரண்சிங் உத்தரவிட்டார்.

    ஓகஸ்ட் 8, அன்று சேக் அப்துல்லா, குல்மார்க் நகருக்கு ஓய்வெடுக்க சென்றிருந்தார். டி.பி.தார், பக்‌ஷி குலாம் முகமது மற்றும் பிரிகேடியர் பி.எம். கவுல் ஆகியோர் கரண் சிங்கை சந்தித்து கைது நாடகத்தை எவ்வாறு நடத்துவது என திட்டமிட்டனர்.

    அதன்படி ஓகஸ்ட் 9, 1953ல் அதிகாலை உறங்கி கொண்டிருந்த சேக் அப்துல்லாவின் வீட்டுக் கதவுகள், பி.எஸ். பஜ்வா , எஸ். பி., தலைமையிலான காவலர் குழுவினால் தட்டப்பட்டது.

    கதவை திறந்த சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு உதம்பூரில் உள்ள தாரா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்த ‘நற் செய்தியை’ கேட்பதற்காக தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்திருந்த சத்ரி ரியாசத் கரண்சிங், தனது தந்தையான மன்னர் ஹரி சிங்கை விரட்டிய சேக் அப்துல்லாவின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    ஆனால், சேக் அப்துல்லா கைதான செய்தி காட்டுத் தீயாக காஷ்மீரில் பரவியது,  ஊரெங்கும் ஆர்ப்பாட்டங்கள் கண்டனங்கள் எழுந்தன, கலவரங்கள் வெடித்தன.  இதில் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மக்களோ தங்களது “நயா காஷ்மீர்” என்ற கனவு தகர்க்கப்பட்டதாக  உணர்ந்தனர். டோக்ரா வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக எழுந்த  கோபமும், ஆத்திரமும் இப்பொழுது இந்தியாவிற்கெதிரான வித்துக்களாக  காஷ்மீர் மண்ணில் விழுந்தன என்றால், அது மிகையில்லை.

    காஷ்மீர் மக்களின் நெடிய போராட்டத்தில் இந்த கைது மாறாத காயத்தை ஏற்படுத்தி, மக்களின் மனதில் நீங்காத வடுவாக இன்றுவரை நிலைத்துள்ளது.

    பக்ஷி குலாம் முகமது ஆட்சி 1953-1964

    காஷ்மீரின் புதிய பிரதமராக பக்‌ஷி குலாம் பதவியேற்றார் . பதவியேற்றவுடன் சேக் அப்துல்லா அமெரிக்க அரசுடன் இணைந்து தனி நாடு அமைக்க விரும்பினார், காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டாட துணை போனார் என்ற குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால், காஷ்மீர் மக்களோ பக்‌ஷி அரசை துரோகத்தின் வடிவமாக பார்த்தனர்.

    மக்களின் கோபத்திலிருந்து தப்பவும் அவர்களது ஆதரவை மீண்டும் பெறவும் பக்‌ஷி அரசு பல முயற்சிகளை எடுத்தன, புதிய திட்டங்களை அறிவித்தன. உணவுப் பொருள் வினியோக முறை (ரேஷன்) கொண்டுவரப்பட்டது,அனைவருக்கும் இலவச கல்வி, விவசாய விளை பொருளுக்கு குறிப்பிட்ட விலை போன்றவை அறிவிக்கப்பட்டன.

    காஷ்மீர் கலாச்சார விழா ஆண்டு தோறும் தடபுடலாக நடத்தப்பட்டதுஇத்துடன் இந்தியாவிலிருந்து எழுத்தாளர்கள், நாடக சினிமா கலைஞர்கள் வெகுவாக வரவேற்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் காஷ்மீரெங்கும் நடத்தப்பட்டன.

    இந்த காலகட்டத்தில் தான் பிரபல இந்தி படங்களும்  தமிழ் படங்களும்  (தேன் நிலவு,  அன்பே வா) காஷ்மீரில் படமாக்க பட்டு காஷ்மீரம் இந்தியாவின் சுவிட்சர்லாந்தாக விளம்பரப்படுத்தபட்டது. ஏனைய இந்தியாவில் காஷ்மீரை பற்றிய ஆர்வம் மேல்தட்டு மக்களிடையே எழுந்தது, சுற்றுலா இலக்காகவும் காஷ்மீர் மாறியது. இதனுடன் இந்து மத புனித யாத்திரைக்கு அதிக வெளிச்சம் கொடுப்பதன் மூலம் காஷ்மீரை இந்துக்களின் புனித பூமியாக சித்தரிப்பதும் வளர்ந்தது.

    ஆனால் அவை யாவும் காஷ்மீர் மக்கள் மனதை மாற்றியதா? என்றால் இல்லை என்றே கூறுவர் . ஊழலும் முறைகேடும் மலிந்தன.

    சேக் அப்துல்லா காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட வரைவுக் குழுக்கள் அனைத்தும் நேருவின் உந்துதலால் மாற்றி அமைக்கப்பட்டன.

    இந்திய யூனியனுடன் காஷ்மீர் இணைப்பை காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. இதை தொடர்ந்து நேரு வாக்கெடுப்பு (Plebiscite) என்ற கருத்தை முற்றிலும் நிராகரித்தார், பாக்கித்தான் அமெரிக்காவுடன் ராணுவ கூட்டில் உள்ளதால் வாக்கெடுப்பை கோர பாக்கிற்கு உரிமை இல்லை என கூறினார்.

    ஏறத்தாழ பத்து ஆண்டுகள் (1953-1964) பக்‌ஷி குலாம் முகமது ‘ஐம்மு காஷ்மீரின் பிரதமராக’ இருந்தார் .

    ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியை பக்‌ஷி குலாம் கை பற்றியதால் சேக் அப்துல்லாவின் தீவிர ஆதரவாளர்கள் மிர்சா அப்சல் பெக் தலைமையின் கீழ் திரண்டு 1955-ல், வாக்கெடுப்பு முன்னணி -Plebiscite Front- என்ற அமைப்பை தொடங்கினர். வாக்கெடுப்பின் தேவையை  வலியுறுத்தி, சேக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களும், இயக்கங்களும் நடத்தினர்.

    நவம்பர் 17, 1956ல் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை பக்‌ஷியின் தலைமையில் கூடி காஷ்மீர் அரசமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது. அந்த சட்டம் , காஷ்மீர் மாநிலத்தை இந்திய யூனியனின் ஓர் அங்கம் என்று அறிவித்தது.

    ஆனால்,  நா சபை ஜனவரி24, 1957  அன்று  தீர்மானம்  122ஐ  இயற்றி  இதை  மறுதலித்தது, காஷ்மீர் சட்டமன்றம் காஷ்மீரின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிய சாதனமல்ல என்று அதில் கூறியது.

    1957 இல், காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு, புதிய சட்டமன்ற “தேர்தல்” நடந்தது.

    பக்‌ஷி தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி 69 இடங்களில் வென்று – அதில் 49 இடங்கள் போட்டியின்றி வென்று – மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல்கள் சுதந்திரமாக நடக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்!

    காஷ்மீரில் இத்தனை களேபரங்கள் அரங்கேறுகையில் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டு கட்சியோ, காஷ்மீரில் உள்ள கம்யூனிஸ்டுகளோ காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி வாய் திறக்கவில்லை. அவ்வாறு கேட்டால், பாகிஸ்தான் கைக்கூலி என கூறுவார்களே என அஞ்சினரா அல்லது சுய நிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோரிக்கை என கருதினார்களா? தெரியவில்லை. அவர்கள் ஆதரித்தது எல்லாம் நேரு அரசின் அதிகார ஆளுமையை மட்டுமே, காஷ்மீர் மக்களின் வாழ்வும், தாழ்வும் நேரு அரசுடன் பின்னி பிணைந்துள்ளதாகவே அவர்கள் எண்ணினர்.

    சோசலிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்ட கட்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரு அரசை குறை கூற காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்தார்களே ஒழிய, அவர்களுக்கும் காஷ்மீர் பிரச்சினையை எவ்வாறு நியாயமாக கையாள வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வை இல்லை.

    ‘இந்து மகா சபை’ போன்ற மதவாதிகளும், ஜனசங்கம் போன்ற வலது சாரி இந்து அரசியல் கட்சியினரும் தங்களின் குறுகிய மதஞ்சார்ந்த பார்வையை முன் வைத்து, நேரு அரசு காஷ்மீர் மக்களை – முஸ்லீம் தலைமையிலான காஷ்மீர் அரசை- தாஜா செய்கிறது, இந்துக்களை புறந்தள்ளுகிறது எனப் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர்.

    நேரு அரசு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசியல் சட்ட கூறுகளை ஒவ்வொன்றாக நுழைத்து, அரசியல் பிரிவு 370 உயிர்ப்புடன் இருக்கும் பொழுதே 92 மசோதாக்கள் மூலம் இந்திய அரசியல் சட்டங்களை காஷ்மீரில் திணித்து, மத்திய அரசின் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய போதும், ஜன சங்கம் தனது பொய் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை!

    நேரு இத்தகைய சக்திகளை எதிர்க்காமல் , காஷ்மீர் மாநில சட்டத்தை  மழுங்கடிப்பதன் மூலமும் , இந்திய சட்டக்கூறுகளை காஷ்மீரில் புகுத்துவதன்  மூலமும் நடைமுறையில் ஜனசங்கம் போன்ற மதச்சார்பு சக்திகள் விரும்பிய “ஒருங்கிணைப்பை தான்” நிறைவேற்றினார் .

    காஷ்மீர் மக்களுக்கு பக்‌ஷி அரசு மீது நல்லெண்ணம் இல்லை, நேரு அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை முற்றிலும் முறிந்து போனது.

    இந்தியாவின் சீன யுத்தம், இந்திய துணை கண்டத்தின் அரசியல் பொருளாதார சூழல்களை புரட்டி போட்டது. பழைய அரசியல் மற்றும் ராஜாங்க கணக்குகளை மாற்றி அமைத்தது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளை இந்தியா பக்கம் இழுத்து வந்தன. சீனாவை வீழ்த்த இந்தியாவிற்கு உதவுதல் (ஆயுத உதவிகள் ) என்ற கோதாவில் அவை நேரு அரசுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தன. இதனால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தானோ சீனாவை நெருங்க தொடங்கியது.

    தன் கூடவே மேலை நாடுகளின் பார்வையும் காஷ்மீர் பிரச்சினை மீது விழுந்தது. காஷ்மீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு எழுந்தது. “சீனத்திற்கெதிராக ஆயுத உதவிக்காக அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளை சார்ந்திருக்கும் இந்தியா, காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க முடியவில்லை “என்று நேருவின் சரிதம் என்ற புத்தக ஆசிரியரும், வரலாற்றாசிரியரும், முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷணனின் புதல்வருமான ஆர். கோபால் கூறுகிறார்.

    டிசம்பர்- 1962 முதல் மே 1963 வரை ஆறு முறை இந்தியா – பாகிஸ்தான்  பேச்சுவார்த்தைகள், ராவல் பிண்டி, டெல்லி, கராச்சி மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்தன..! ஆனால் இவை யாவும் பதட்டத்தை தணிக்கவோ, பிரச்சினைகளை தீர்க்கவோ உதவவில்லை மாறாக அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.

    அதே வேளையில் காஷ்மீர் பிரதேசத்தில் மக்கள் ஊழல் மலிந்த, கறை படிந்த, தவறுகள் நிறைந்த பக்‌ஷியின் ஆட்சியினால் மனம் வெதும்பி கொதித்த நிலையில் இருந்தனர் என்பதை பிரேம்நாத் பஜாஜ் , நேருவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

    காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பிரேம்நாத், காஷ்மீர் சோசலிச கட்சியின் (Kashmir Socialist Party) நிறுவனர் ஆவார். இந்துவாக இருந்தாலும் டோக்ரா மன்னரின் ஆட்சிக்கெதிராக போராடியவர். “காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே சொந்தமானது“ என்ற கொள்கையை உடையவர்.

    நேருவின் நண்பரும் கூட. இவர் ஜூன் 1962 இல் நேருவிற்கு காஷ்மீரில் தான் கண்டதும் அறிந்ததும் பற்றி கடிதங்கள் எழுதினார்.

    அதில் இவ்வளவு வளர்ச்சி திட்டங்களுக்கு பிறகும், முன்னேற்றங்களுக்கு பின்பும் காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லாததன் காரணம், அவர்களுக்கு அரசியல் சுதந்திரமும் ஜனநாயக உரிமைகளும் வழங்கப்படாது தான் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு மனம் வெதும்பியுள்ள மக்களிடம் பாகிஸ்தானின் பிரச்சாரமும், ஐ.நா சபையில் நடக்கும் காஷ்மீர் குறித்த விவாதங்களும் எடுபடுகின்றன, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவை தங்களது நாடாகவே அவர்கள் உணரவில்லை.

    “இதையெல்லாம் மாற்ற வேண்டுமெனில், அது சேக் அப்துல்லாவை சிறையில் அடைத்து வைத்து கொண்டு மாற்ற முடியாது. அவரை விடுதலை செய்து அவருடன் ஏதாவது ஓர் உடன்பாடு ஏற்பட்டால் ஒழிய நிலைமைகள் சீராகாது” என்று எழுதினார்.

    இக்கடிதங்களால் நேரு மனம் மாறினாரா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் ஜூலையில் காஷ்மீர் வருகை தந்து ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த பிரதமர் நேரு , காஷ்மீர் தலைவர்களுடன் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். அப்பொழுதே அவர் பக்‌ஷியின் பதவிக்கு கெடு விதித்துவிட்டார் என கூறப்பட்டது.

    ஓகஸ்ட் மாதம் பக்‌ஷியை , நேரு டெல்லிக்கு வரவழைத்து, அவரை மத்திய அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனிடையில்  காங்கிரசை  பலப்படுத்த காமராஜ் திட்டம் அகில இந்திய அளவில் பேசப்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேரு பக்‌ஷியையும் பதவி விலக் அறிவுறுத்தினார் .

    பக்‌ஷியும் அதை ஏற்றுக்கொண்டதாக பத்திரிகைகளுக்கு அறிவித்தார்.  காமராஜர்  திட்டம் காங்கிரசை பலப்படுத்ததானே இதில் பக்‌ஷி எங்கிருந்து வந்தார்  அவருடைய பதவி விலகல் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்தும்? என்ற கேள்விகள் எழுந்தன.

    இந்த கூத்துகளுக்கிடையே பக்‌ஷிக்கு பதிலாக ஜி.எம். சாதிக்கை காஷ்மீர் பிரதமராக்கி, புது அரசை கொண்டுவந்து, சேக் அப்துல்லாவை விடுவித்து காஷ்மீரில் புதிய சூழலை உருவாக்க டெல்லி முயற்சித்தது. இதன் மூலம் ஊழல்மலிந்த, ஊதாரிதனமான, பகஷி அரசை மாற்றுவதன் மூலம் மக்களிடம நல்லெண்ணத்தை ஏற்படுத்தி, அத்துடன் இந்தியாவின் சீன போருக்கு பின் மாறியுள்ள சூழலில் சேக் அப்துல்லாவை முன்னிறுத்தி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க நேரு முயற்சித்தார் என்றே எண்ண தோன்றுகிறது.

    தொடரும்…

    காஷ்மீர் பிரச்சினை தோற்றமும், வளர்ச்சி போக்குகளும்! – பாகம்-1

    Exit mobile version