Site icon சக்கரம்

போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா

Wang Yi

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வலை​தளத்​தில் 13.09.2025 அன்று வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்​கு​கிறது. இதன் மூலம் கிடைக்​கும் பணத்​தில் ரஷ்யா, உக்​ரைன் மீது தாக்குதல் நடத்​துகிறது. எனவே, கூடு​தல் வரி விதித்​தால் ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதை சீனா நிறுத்​தி​விடும்’’ என கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், ஸ்லோவே னியா சென்​றிருந்த சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யி (Wang Yi), அந்​நாட்டு துணைப் பிரதமரும் வெளி​யுறவு மற்​றும் ஐரோப்​பிய விவகாரங்கள் துறை அமைச்​சரு​மான டன்ஜா பஜோனை (Tanja Fajon) சந்​தித்​துப் பேசினார். பின்​னர் லுப்​லி​யானா (Ljubljana) நகரில் வாங் யி கூறும்​போது, “வர்த்தக போரில் பங்​கேற்க சீனா விரும்​ப​வில்​லை. அமைதி பேச்சு​வார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்​டும் என்​பது​தான் சீனா​வின் விருப்​பம். சீனா​வும் ஐரோப்​பிய நாடு​களும் போட்​டி​யாளர்​களாக இல்​லாமல், நட்பு நாடுகளாக இருக்க வேண்டும். மோதலுக்கு பதில் ஒருங்​கிணைந்​து செயல்​பட வேண்டும்​’’ என்​றார்​.

மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.

ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, 13.09.2025 அன்று லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் யி, “சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. மேலும் சீனா, அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு மோதல்களுக்கு அரசியல் தீர்வை உருவாக்கவும் முயற்சிக்கிறது.

உலகில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பலதரப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை கூட்டாகப் பாதுகாக்கவும் வேண்டும். தற்போதைய சூழலில், சர்வதேச நிலைமை பின்னிப்பிணைந்த குழப்பம் மற்றும் தொடர்ச்சியான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவும் ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இல்லாமல் நண்பர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் மோதுவதற்குப் பதிலாக ஒத்துழைக்க வேண்டும். ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு மத்தியில் சரியான தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது இரு தரப்பினருக்குமான பொறுப்பு ஆகும்” என்றார்.

முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனா மீது நேட்டோ நாடுகள் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதித்தால், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று வலியுறுத்தினார். இந்த சூழலில், சீனா வெளியுறவு அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் – நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அவர், ரஷ்யாவுடன் வலிமையான வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இவை எதுவும் போதிய பலன் தரவில்லை. உக்ரைன் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக சமீபத்தில் ரஷ்யா அறிவித்தது. தொடர்ந்து அது உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதே போர் தொடர்வதற்குக் காரணம் என கூறி அவற்றுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்த ட்ரம்ப், தற்போது தனது நட்பு நாடுகளான நேட்டோ நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளார்.

12.09.2025 அன்று ஃபாக்ஸ் (FOX) தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இது அமெரிக்காவின் பிரச்சினை என்பதைவிட ஐரோப்பாவின் பிரச்சினை என குறிப்பிட்டார்.

இந்நிலையில், நேட்டோ நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இதில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். நேட்டோ நாடுகளும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

ரஷ்யா போரை நிறுத்துவதில் நேட்டோவின் உறுதிப்பாடு 100% க்கும் குறைவு என்பது உங்களுக்கே தெரியும். நேட்டோவில் உள்ள சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியளிக்கிறது! இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது. எப்படியிருந்தாலும், நீங்கள் என்னுடன் வர தயாராக இருந்தால் நான் ரஷ்யா மீது கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறேன். எப்போது என்று சொல்லுங்கள்?” என கேட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் மூலம், போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவை இணங்கச் செய்வது ஐரோப்பாவின் பொறுப்பு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் என்றும் கூறி இருக்கிறார். இதன் மூலம், நேட்டோ நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் அமெரிக்கா, தனது முயற்சிகளை கைவிடக்கூடும் என்ற எச்சரிக்கையை அவர் அளித்துள்ளார்.

Exit mobile version