-ச.அருணாசலம்
காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு: பாகம்-3
குலாம் பக்ஷிக்கு பதிலாக ஜி.எம். சாதிக்கை காஷ்மீர் பிரதமராக்கி, புது அரசை கொண்டு வருவதற்கு டெல்லி நினைத்த சூழலில், 1963 டிசம்பர் மாதம் 27 அன்று ஹஸரத்பால் மசூதியிருந்த நபிகள் நாயகத்தின் புனித எச்சம் (புனித நினைவு சின்னம் – holy relic) காணாமல் போனது!
இந்த செய்தி காட்டுத்தீ போல் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் தாண்டி இஸ்லாமியர் வாழும் உலகெங்கும் பரவுயது.
கண்டன ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள் காஷ்மீரில் நடந்தன, சில பேரணிகள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் 25 மைல் நீளத்திற்கு நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இது வரை காஷ்மீர் இயக்கம் மதச்சார்பில்லாத கட்சிகளான காஷ்மீர் அரசியல் மாநாடு (Kashmir Political Conference) மற்றும் ஜம்மு காஷ்மீர் வாக்கெடுப்பு முன்னணி (Jammu Kashmir Plebiscite Front )ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்பொழுது முல்லாக்கள் மற்றும் மத போதகர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
ஜமாத் -இ-இஸ்லாமி அமைப்பு புத்துயிர் பெற்றதும், மிர்வாயஸ் மௌல்வி ஃபரூக் தலைமையிலான ‘அவாமி ஆக்ஷன் கமிட்டியும்‘ சுய நிர்ணய போராட்டத்தின் தலைமை ஸ்தானத்திற்கு வந்ததும் இந்த திருட்டு சம்பவத்தினால் தான் என்றால் மிகையில்லை. ஏமாற்றமடைந்த , நம்பிக்கை இழந்த ஒரு புதிய தலைமுறை உருவாகியது.
புது டெல்லியின், அரசியல் சமூக கோட்பாட்டின் கொள்கைகள் Socio Political Policies எப்படி காஷ்மீர் மண்ணில் தலைகீழாக வேலை செய்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்த இளந்தலைமுறையினர் புதிய போராட்டங்களுக்கு தயாராயினர்.
1964 பெப்ரவரியில் சம்சுதீன் பதவி பறிக்கப்பட்டு நேருவின் எண்ணப்படி ஜி. எம். சாதிக் பிரதமராக பதவியேற்றார்.
ஏப்ரல் 8, 1964 அன்று சேக் அப்துல்லா மீதான புகார்கள் வாபஸ் வாங்கப்பட்டு (!) அன்றே அவர் விடுதலை செய்யப்பட்டார். காஷ்மீர் வந்த அப்துல்லாவிற்கு மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர். காஷ்மீர் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்ட அப்துல்லாவிற்கு மக்கள் திரண்டு வரவேற்றது அனுதாபமா? அல்லது ஆதரவா? என்று அவர் ஆய்ந்து அறியுமுன்னர் அவருக்கு பிரதமர் நேருவிடமிருந்து அழைப்பு வந்தது.
சிறைபட்டவர் , தன்னை சிறையிலடைத்தவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்ற செய்தியறிந்ததும் டெல்லி விரைந்தார். ஒரு வாரம் அங்கு ‘தீன் மூர்த்தி பவனில்‘ நேருவின் விருந்தினராக தங்கியிருந்தார், காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர சேக் அப்துல்லாவின் ஆலோசனைகளை பிரதமர் நேரு கேட்டதாக தெரிகிறது. கடந்து போன நிகழ்வுகளையும், கசப்பான உண்மைகளையும் மறந்து, சேக் அப்துல்லா தனது எண்ணங்களை விவரித்தார் என கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீர் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒரு கூட்டமைப்பாக (Confederation of India,Pakistan and Kashmir) ஏற்படுத்தலாம். இதில் பாதுகாப்பு, வெளியுறவு, பண பரிமாற்றம் ( foreign affairs, currency and defence) ஆகியவற்றை இந்தியா பாக் ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆகிய மூன்று நாடுகளும் தத்மது நாட்டை அவரவர் அரசியல் முறை மூலம் சுயமாக ஆட்சி செய்து கொள்ளுவது எனறும் ஒரு ஆலோசனையை முன் வைத்ததாக கூறப்படுகிறது.
இத்திட்டத்திற்கு பாகிஸ்தானின் ஒப்புதலை பெற்று வாருங்கள் என சேக் அப்துல்லாவிடம் நேரு கூறியதால், சேக் அப்துல்லா 1964 மே மாதம் 24 அன்று பாகிஸ்தானுக்கு சென்றார். அவருடன் மிர்சா அப்சல் பெய்கும் இருந்தார். சேக் அப்துல்லாவை ஜுல்பிக்கர் அலி புட்டோ தடபுடலாக வரவேற்றார். அடுத்த நாள் அவர், பாக். அதிபர் அயூப்கானை சந்தித்தார்.
சேக் அப்துல்லாவின் கூட்டமைப்பு யோசனையை எடுத்த எடுப்பிலேயே அயூப்கான் நிராகரித்தார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத்தால் பாக் வசமுள்ள காஷ்மீரில் உள்ள நகரான முசபராபாத்திற்கு மே 27அன்று சேக் பயணப்பட்டார் . அங்கு ஒரு பொதுகூட்டத்தில் பேசி கொண்டிருக்கையில் நேருவின் மரணச் செய்தி அறிந்து பதறினார், துடிதுடித்தார், கண் கலங்கினார். அத்துடன் காஷ்மீருக்கான தனது திட்டமும் மடிந்தது என்பதை உணர்ந்தாரா? நமக்கு தெரியவில்லை!
நேருவின் ஆரம்ப கால பேச்சுக்களும் இணைப்பின் போது காஷ்மீரின் பால் இருந்த அவரது அணுகுமுறையும் காலப்போக்கில் 1947-1948 போருக்கு பின்னர் மாறத் தொடங்கியது.
காஷ்மீர் மக்களின் உரிமைகள், உணர்வுகளை நேரு மதித்த போது, ஜனசங்கத்தினரும், இந்து மகாசபையினரும் நேருவை எதிர்த்தனர், நேரு இமாலய தவறு செய்து விட்டார் என அரற்றினர்.
ஆனால், இணைப்பிற்கு பின்னர் அவர், அப்பிரச்சினையை இந்தியாவின் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தார் . இந்திய அரசின் நலன்கள் என்று எதை அவர் நினைத்தாரோ, அதற்கெதிராக காஷ்மீரின் தனியாட்சி உரிமையும் எண்ணங்களும் இருப்பதாக நினைத்து அவற்றை புறந்தள்ளி ஒடுக்குவதிலேயே நேருவின் காலம் முடிந்தது என்பதே உண்மை. தனது இறுதி நாட்களில் இதில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினாரா? அதற்கு வடிவம் கொடுக்கு முன் நேரு மறைந்துவிட்டாரா? என்பது விவாதப் பொருளாகவே உள்ளது.
காஷ்மீரின் மீதான இந்தியாவின் அணுகுமுறை நேருவின் காலத்தில் இந்திய மேலாதிக்கத்தையே வெளிப்படுத்தியது, அத்தகைய போக்கை இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, ஜனநாயக நாடு, மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் தூக்கி பிடிக்கும் நாடு என்ற அடையாளத்தால் மூடிமறைத்துவிட்டு ஆதிக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவது ஆதிக்க மனப்போக்கே ஒழிய காஷ்மீர் மக்களின் தேவைகளுக்காக அல்ல.
நேரு மரணத்திற்கு பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியான அரசியல் பிரிவு 370 ஐ இரத்து செய்யும் கோரிக்கை காங்கிரஸ் கட்சியிலு ம் எழுந்தது. குறிப்பாக
குஜாரிலால் நந்தா போன்றோரும் இக்குரலை எழுப்பினர். 1964 நவம்பர் 21-24 இல் மத்திய அரசு இந்திய அரசியல் பிரிவு 356 மற்றும் 357 பிரிவுகளை காஷ்மீருக்கும் பொருந்தும் என அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு மாநில (காஷ்மீர்) அரசின் அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொள்ளலாம் மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரங்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் குறித்து அரசியல் சட்ட நிபுணரான சுமந்த்ரா போஸ் கருத்து கூறுகையில்,
“இம்மாற்றங்கள் அரசமைப்பு வழங்கிய சுயாட்சிக்கும், அதை உறுதி செய்யும் அரசியல் பிரிவு 370 க்கும் அடிக்கப்படும் சாவுமணி“ என்று குறிப்பிட்டார்.
தேசீய மாநாட்டு கட்சி 1965 ஜனவரியில், ஜி. எம். சாதிக் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.
தனித்து விடப்பட்ட சேக் அப்துல்லா ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். அதை தொடர்ந்து எகிப்து மற்றும் அல்ஜீரியா சென்றார். அல்ஜீரியாவில், ஆபிரிக்க ஆசிய நாடுகள் மாநாட்டிற்காக வந்திருந்த சீனப்பிரதமர் சூ என் லாய் அவர்களை மார்ச் 1965 இல் சேக் அப்துல்லா சந்தித்தார்.
சீனப் பிரதமரை சேக் அப்துல்லா சந்தித்தது இந்திய அரசை ஆத்திரமூட்டியது. அதன் விளைவு சேக் அப்துல்லாவின் கடவுச்சீட்டு (passport) இரத்து செய்யப்பட்டது. சேக் அப்துல்லாவை, ஆசாத் காஷ்மீருக்கு வரும்படியும், அங்கிருந்து காஷ்மீர் விடுதலை போரை நடத்தும்படியும், பாக்., அதிபர் அயூப்கான் அழைப்பு விடுத்தார்.
ஆனால், அதை நிராகரித்துவிட்டு துணிச்சலுடன் இந்தியா வந்திறங்கினார் சேக் அப்துல்லா.
புது டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சேக் அப்துல்லாவை அங்கேயே 1965 மே 8ந்திகதி இந்திய அரசு கைது செய்து இம்முறை உதகமண்டலத்தில் சிறை வைத்தது. மீண்டும் காஷ்மீரில் பதட்டமும் அங்கலாய்ப்பும் மேலோங்கியது.
ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் காஷ்மீரில் பரவின, நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருந்த இந்த சூழல் பாகிஸ்தானுக்கு சாதகமாயிற்று.
பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது ஐ.நா சபை நடவடிக்கை மூலமோ இந்திய அரசின் மீது எந்த அழுத்தமும் ஏற்படுத்த இயலாத நிலையில் “ஒபரேஷன் ஜிப்ரால்டர்” மூலம் தனது கை வரிசையை காட்டியது பாகிஸ்தான். சுமார் 2000-3000 ஆயுதந் தாங்கிய நபர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்து கிளர்ச்சியை மூட்டினர் . இரு நாடுகளுக்குமிடையில் மீண்டும் போர் வெடித்தது. காஷ்மீரில் நிலைமை கட்டுக்கடங்காத்தால் இந்தியா, பஞ்சாப் எல்லையில் புதிய தாக்குதலை மேற் கொண்டது .
இறுதியில் சோவியத் யூனியனின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. 1966 ஜனவரியில் தாஷ்கண்ட் பிரகடனத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. 1965 இல் இருந்த நிலைகளுக்கு இரு படைகளும் பின் வாங்கின.
எதிர்பாராவிதமாக லால்பகதூர் சாஸ்திரி திடீர் மாரடைப்பால் தாஷ்கண்டிலேயே இறந்தார்.
இந்திரா காந்தி இந்திய பிரதமராக பொறுப்பேற்று கொண்டார்.
காஷ்மீரில் சிறிது கால தொய்விற்கு பிறகு வாக்கெடுப்பு கோருவோரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினரும் இளைஞர்களை திரட்டி கொண்டிருந்தனர் . ஏற்கனவே ஊடுருவி இருந்த பாக்கித்தான் ஆதரவு சக்திகளும் இவ்வேலையில் மும்முரமாக இருந்தனர்.
மிர்சா அபசல் பெய்க் துவக்கிய வாக்கெடுப்பு முன்னணியில் இணைந்த இளைஞர்களில் பலர் இந்திய ராணவத்தின் அடக்கு முறைகளிலிருந்து தப்பி ஆசாத் காஷ்மீர் சென்று, காஷ்மீர் வாக்கெடுப்பு முன்னணியை அமைத்தனர்.
தேசீய விடுதலை முன்னணி என்ற தலைமறைவு குழுவை உருவாக்கி ஜம்மு காஷ்மீரின் விடுதலைக்கு வலு சேர்த்தனர் . இவர்களில் மிக முக்கியமானவர்தான் மகபூல் பட் என்ற இளைஞர்.
இரண்டு மூன்று பேர்கள் அடங்கிய சிறு குழுக்களாக இவர்கள் இராணுவ படையினரோடும் காவலர் மற்றும் நுண்ணறிவு படையினரோடும் மோதல்களை நடத்தி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஶ்ரீநகர் அருகில் மக்பூல் பட் இந்திய இராணுவத்தால் சிறைபிடிக்க பட்டார். சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பித்த மக்பூல் பட், ஆசாத் காஷ்மீரில் உள்ள பெஷாவரை அடைந்தார். ஆச்சரியப்பட்ட அவரது சகாக்களின் மத்தியில் அவர் ஒரு வீரமிக்க தலைவராக உருவெடுத்தார் . உலகின் கவனத்திற்கு ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை கொண்டுவர விமான கடத்தலிலும் மக்பூல் பட் குழு ஈடுபட்டது.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த ஜி எம் சாதிக் மறைவிற்கு பின் 1971 இல் மீர் காசிம் என்பவர் முதல்வரானார். மீர் காசிம் பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே தேர்தலுக்கு ஆணையிட்டார்.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வாக்கெடுப்பு முன்னணி இரு கூறாக – தேர்தலில் பங்கு பெறுவது என ஒரு அணியும், தேர்தலில் கலந்து கொள்ள கூடாது என மற்றொரு அணியுமாக- பிளவு பட்டன.
பல தந்திரங்கள் பண்ணி மீர் காசிம் தலைமையில் காங்கிரஸ் கட்சி 1972 தேர்தலில் 57 இடங்களை “வென்று” ஆட்சியை பிடித்தது. ஜமாத் கட்சி 5 இடங்களிலும் ஜன சங்கம் 3 இடங்களிலும், சுயேட்சைகள் 9 இடங்களிலும் வென்றனர்.
வாக்கெடுப்பு முன்னணியின் செயல்பாட்டிலும் சேக் அப்துல்லாவின் தலைமையிலும் காஷ்மீர் மக்களுக்கு அனுதாபம் இருந்ததே ஒழிய ஆதரவு சிறப்பாக இல்லை. சேக் அப்துலாலாவும் தீவிர அரசியல் செயல்பாட்டிலிருந்து சற்றே விலகி, புனித ஹஸராத் பால் மசூதியை புனர் நிர்மாணம் செய்ய வீதியில் இறங்கி வீடு வீடாக ஏறி இறங்கி நன்கொடை வசூலித்தார் .
இதன் மூலம் மக்களுடன் இருந்த பழைய நெருக்கத்தை மீட்டெடுக்க முயன்றார் எனக் கொள்ளலாம்.
வங்க தேச விடுதலையும், வங்காளத்தில் பாக் ராணுவத்தின் படு தோல்வியும் 93,000 பாக். ராணுவ வீர்ர்கள் இந்தியாவிடம் சரணாகதி அடைந்ததும் காஷ்மீரில் இருந்த போராளிகளுக்கு ஒரு மிகப் பெரிய மனச்சோர்வை கொடுத்த காலமிது.
சேக் அப்துல்லா லண்டன் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் “இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததை நான் ஒரு பிரச்சினையாக கருதவில்லை, பிரச்சினையெல்லாம் காஷ்மீரத்திற்கு கொடுக்க வேண்டிய சுயாட்சி பற்றித் தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா பாக்கித்தானுடன் சிம்லாவில் பேச்சுவார்த்தை நடத்தும் வேளையில் காஷ்மீரில் சுமுகமான நிலை திரும்ப இந்திரா காந்தி விரும்பினா். மாறியுள்ள இந்தச் சூழலில் தனது தந்தை நேரு தொடங்கிய -சேக் அப்துல்லாவுடனான – சமரசத்தை மீண்டும் புதுப்பித்து அதன் மூலம் இந்தியாவுடனான காஷ்மீரின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்க விரும்பினார்.
காஷ்மீர் முதல்வர் மீர் காசிம் தற்பொழுது காங்கிரசில் இருந்தாலும் உண்மையில் அவர் சேக் அப்துல்லாவின் சீடர் என்பதில் பெருமையடைபவர், அவர் சேக் அப்துல்லாவை சந்தித்தார் . மீண்டும் சேக் அப்துல்லா, அவருக்குரிய இடத்தில் (காஷ்மீர் ஆட்சியின் தலைவராக) அமர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக தனது நூலில் குறிப்பிடுகிறார்.
வெறுப்பு கலந்த கோபத்துடன் தன்னை எதிர் கொண்ட சேக் அப்துல்லாவிடம் மீர் காசிம் தாங்கள் விரும்பும் சுயாட்சியை – 1953 க்கு முந்தைய நிலை – அடைய மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடிக்காமல் இணக்கமான போக்கை கடைபிடித்தும் சாதிக்கலாம், சாதிக்க வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக ஜம்மு காஷ்மீரின் முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என்றும் குறிப்பிட்டதாக மீர் காசிம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
இதனால் அரைகுறை மனதுடன் சேக் அப்துல்லா இந்த யோசனைக்கு உடன்பட்டு பேச்சு வார்த்தைக்கு தயாரானார். இந்திய பிரதமரின் சார்பாக டெல்லி பல்கலைகழக துணை வேந்தரும் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய நண்பருமான ஜி. பார்த்தசாரதியும் சேக் அப்துல்லாவின் சார்பில் மிர்சா அப்சல் பெய்கும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட சரத்துக்கள் என்றும், ஒத்த கருத்து ஏற்படாத அம்சங்கள் எனவும் பிளவு ஏற்பட்டு நின்ற பொழுது, சேக் அப்துல்லாவும், இந்திரா காந்தியும் கடிதங்கள் மூலம் தங்களது நிலைபாட்டினையும் அதன் காரணங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
சேக் அப்துல்லா பிரதமர் இந்திராவிற்கு எழுதிய டிசம்பர் – 29, 1974 திகதியிட்ட கடிதத்தில், ‘ஓகஸ்டு – 9, 1953 இல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தடவடிக்கையின் விளைவாக சிதைக்கப்பட்ட இந்திய காஷ்மீர் உறவுகள் மீண்டும் சீராக வேண்டுமென்றால், அதற்கு பரஸ்பர நம்பிக்கையும், நல்லெண்ணமும் வேண்டும். அதற்கு 1953 இற்கு முன்பிருந்த சூழலை மீண்டும் கொண்டு வர வேண்டும். இக்கருத்தில், நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள் என எண்ணுகிறேன்‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்திராவோ, ‘நான் ஜம்மு காஷ்மீர்- இந்தியாவிடையே உள்ள மத்திய மாநில அரசுகள் குறித்த உங்களது கருத்துக்களை முற்றிலும் புரிந்துள்ளேன். ஆனால், கடிகாரத்தின் கைகளை என்னால் பின்னுக்கு தள்ள முடியாது. நாம் தற்பொழுதுள்ள யதார்த்தங்களை உணர்ந்து செயலாற்ற விரும்புகிறேன்’ என்று பிப்ரவரி11,1975. தேதியிட்ட கடிதத்தில் பதிலளித்தார்.
சேக் அப்துல்லாவின் 1953 இற்கு முந்தைய நிலைக்கு திரும்புவது என்ற நிபந்தனையும் இந்திராவின் கடிகாரத்தின் கைகளை பின்னால் திருப்ப முடியாது என்ற நிலைப்பாடும் பரஸ்பர நம்பிக்கை இன்மையும் நடைமுறை சிக்கலையும் நமக்கு காட்டுகிறது.
இதை இந்திராவும் சேக் அப்துல்லாவும் திரைமறைவில் பேசி, எழுத்துபூர்வமாக இல்லாமல் சரி செய்து கொண்டார்கள் என பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த மிர்சா கூறுகிறார் .
இறுதியில் மிர்சா அப்சல் பெய்க் மற்றும் பார்த்தசாரதி கையெழுத்திட்ட உடன்படிக்கை
ஏற்பட்டது. அதை இந்திரா – சேக் அப்துல்லா ஒப்பந்தம் என நாட்டோர் அழைத்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக,
# ஜம்மு காஷ்மீர் பிரதேசம் இந்திய யூனியனின் ஓர் அங்கமாகும் .
# இம் மாநிலத்தினுடைய மத்திய அரசுடனான உறவுகள் அரசமைப்பு பிரிவு 370 இன் ஆளுமையிலேயே நடக்கும்,
# மாநில அரசுக்கு மாநிலத்திற்கு தேவையான சட்டங்களை இயற்ற உரிமை உண்டு.
# தேசத்தை துண்டாடுதல், தேசக் கொடியை அவமதித்தல் பிரிவினை பேசுதல் இந்திய இறையாண்மையை கேள்வி கேட்டல் போன்ற விடயங்களில் சட்டமியற்றும் உரிமை நாடாளுமன்றத்திடம் உள்ளது.
# இந்திய சட்டங்கள் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் காஷ்மீர் மாநிலத்திற்குள் இது வரை புகுத்தப்பட்டிருந்தால் அவற்றை அரசமைப்பு பிரிவு 370 காட்டும் வழி முறையில் நீக்கவோ சரி செய்யவோ முடியும். மாற்றங்கள் இல்லாது நுழைக்கப்பட்ட சட்டங்கள் மாநிலத்திற்கு பொருந்தும்,
# ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபைக்கு உரிய அதிகாரம் கொடுக்கும் பொருட்டு, மாநிலத்தின் கலாச்சாரம், சமூகம் மற்றும் சமூக பாதுகாப்பு, தனிநபர் சட்டங்கள் மற்றும் நடைமுறை சட்டங்கள் குறித்து மாநிலத்திற்கே சட்டமியற்றும் உரிமை உள்ளது.
# 1953க்கு பிறகு ஒத்திசைவு பட்டிலில் (concurrent list) உள்ள துறைகளுக்கான சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புகுத்தப்பட்டிருந்தால் அவற்றை மறு பரிசீலனை செய்ய வழி வகுக்க படும்.
# வருங்காலங்களில் மாநில அரசை கலந்து அதன் ஒப்புதல் மூலமே இந்த பட்டியலில் உள்ள துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படும்.
இதனைத் தொடர்ந்து சேக் அப்துல்லாவின் கட்சிக்கு சட்ட சபையில் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும், சேக் அப்துல்லா (பெப்ரவரி 1975 இல்) ஜம்மு காஷ்மீரின் முதல்வரானார். காங்கிரஸ் கட்சி அவரை ஆதரித்தது.
காஷ்மீர் மக்கள் இந்த ஒப்பந்தத்தை, சேக் அப்துல்லா முதல்வரானதை ஏற்றுக் கொண்டார்களா?
( தொடரும்)

