-ச.அருணாசலம்
கோடி மீடியா எவ்வளவு முயற்சி செய்தும், கேடி அதானியை காப்பாற்ற முடியவில்லை. அம்பலப்படுத்தியது, வாஷிங்டன் போஸ்ட்! அதானியை நஷ்டத்தில் இருந்து மீட்க, -LIC யின்- 33,000 கோடி ரூபாயை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார் மோடி. இதனால், ஆயுள் காப்பாட்டு நிறுவனத்தின் ஆயுளே கேள்விக் குறியாகி உள்ளது.
ஆயுள் காப்பீட்டு கழகம் (Life insurance corporation – LIC) அதானி நிறுவனங்களில் கடந்த மே மாதத்தில் ரூபாய் 33,000 கோடி பணத்தை “முதலீடு” செய்துள்ளதை அம்பலப்படுத்தியது அமெரிக்க ஊடகமான “வாஷிங்டன் போஸ்ட்” என்ற புகழ் பெற்ற நாளிதழ் தான் .
‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் நடத்திய விசாரணையில், மோடி அரசு சத்தங்காட்டாமல், கடனில் மூழ்கி கொண்டிருக்கும் அதானி குழுமத்தை காப்பாற்ற ஒரு திட்டத்தை தீட்டியதும், அத்திட்டத்தின் மதிப்பு சுமார் 3.9 பில்லியன் டொலர் (33,000 கோடி ரூபாய்கள்) என்றும் தெரிய வந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த மே (மே,2025) மாதத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் (நிர்மலா சீத்தாராமனின் துறை) ஒரு அங்கமாக விளங்கும் நிதிச்சேவைகள் துறை (Department of Financial Services), நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பும் இணைந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கணிசமான நிதியை அதானி குழும பத்திரங்களிலும் பங்குகளிலும் முதலீடு செய்வதற்கு திட்டம் வகுத்தன.
இதனடிப்படையில் அதானி துறைமுகங்கள் வெளியிட்ட ரூ 6,000 கோடி பெறுமான ($585 million) பத்திரங்களை (bonds) ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மட்டுமே வாங்கி அதானிக்கு உதவியதை அம்பலப்படுத்தியது. இந்த ஆண்டு மே மாதம் 30 அன்று அதானி குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழும்ம் வெளியிட்ட “பத்திரங்கள்” அனைத்தையும் LIC நிறுவனம் ஒற்றை முதலீட்டாளராக வாங்கியது எனக்கூறியது!
‘ஹிண்டன்பர்க்’ வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் எவ்வாறு பங்குச் சந்தையை மோசடி செய்கிறது, அதானி பங்குகளின் விலையை எவ்வாறு செயற்கையாக அதிகரித்து முதலீட்டாளர்களை, ஒழுங்கு நிறுவனங்களை , அரசாங்கத்தை ஏமாற்றுகிறது என்று அம்பலப்படுத்தியதை நாடறியும். ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் இப்பொழுது இயங்கவில்லை என்றாலும், அவை வெளிப்படுத்திய அதானி முறைகேடுகள் உலகின் முதலீட்டாளர்களை இன்றும் ஆட்டி படைக்கிறது.
அதானி குழுமத்திற்கு- 20% கடனில் உள்ள- அதானி குழுமத்திற்கு அமெரிக்க வங்கிகள் , ஐரோப்பிய நாட்டு வங்கிகள் கடன் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு அமெரிக்காவின் நீதி அமைச்சகமும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையமும் அதானி மீது லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் கூறி ஏமாற்றியதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்குகளை நீர்த்து போகச் செய்ய அதானியும் அவரது உற்ற நண்பரான நரேந்திர மோடியும் பல முயற்சிகள் செய்தவண்ணமுள்ளனர். அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் விடுத்த சம்மனை (அழைப்பாணை) இன்னும் இந்திய அரசு அதானியிடம் ஒப்படைக்கவில்லை!
ட்ரம்ப் இந்திய நலன்களுக்கு எதிராக எடுத்த (இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பி வைத்தல், 25% சதவிகித ஏற்றுமதி வரி விதித்தல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மேலும் 25% வரியை கூட்டுதல், இரு நாட்டுகளுகிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைத்தல்) போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக மோடியோ அல்லது அவரது அரசோ வாய் திறப்பதில்லை என்பது ஊரறிந்த இரகசியம் ஆகும்.
இவ்வாறு இந்திய நலன்களை அடகு வைக்கும் மோடி, காப்பாற்ற துடிப்பது அதானியை மட்டுமே என்பது ஆச்சரியமூட்டும் உண்மையாகும். உற்ற நண்பனான அதானி குழும்ம் கடனில் மூழ்கி நிதி திரட்ட திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது மோடி அரசு (அதானிக்கு) நம்பிக்கையூட்டும் விதமாக எல்.ஐ.சி பணத்தை – கோடானு கோடி இந்திய நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் காப்பீட்டு பணத்தை- அதானியிடம் வாரி வழங்கியிருப்பது இன்று அம்பலமாகி உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் அதானி பங்குகள் சரிந்த அந்த தினத்தில், எல்.ஐ.சி நிறுவனம் நான்கு 7,850 கோடி டொலர்களை ஒரே நாளில் இழந்ததை நாம் மறக்க முடியுமா?
அதானியின் மீது எழுந்த, இப்பொழுது எழுகின்ற குற்றச்சாட்டுகளை முறையாக விசாரணை செய்து, முறைகேடுகளை தவிர்க்க, முதலீட்டாளர்களையும், இந்திய மக்களையும் பாதுகாக்க மோடி அரசிற்கு துப்பு உள்ளதா?
# சி.பி.ஐ, இ.டி, டி.ஆர்.ஐ , செபி போன்ற நிறுவனங்களை சுதந்திரமான விசாரணை நடத்த விடாமல் மோடி அரசு தடுப்பது மட்டுமின்றி, இந் நிறுவனங்கள் மூலமாக (அதானிக்கு) போட்டியாளர்களை மிரட்டி சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறது.
# பொது சொத்துக்களை விற்பது என்ற தனியார்மய திட்டத்தின் மூலம் அதானிக்கு மட்டுமே அச் சொத்துக்களை அடி மாட்டு விலைக்கு அரசு விற்பனை செய்தல் என்பது அறிவிக்கபடாத கொள்கையாக உள்ளது.
# துறைமுகங்களை, விமான தளங்களை அதானிக்கே ஒதுக்குகிறது பாஜக அரசு, அதானி இறக்குமதி செய்யும் நிலக்கரியை மட்டுமே அரசு நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்க வற்புறுத்துகிறது, பா.ஜ.க அரசு. ( இதையும் அம்பலப்படுத்தி உள்ளது வாஷிங்டன் போஸ்ட்.)
# உலகெங்கும் அதானி க்கு ஒப்பந்தங்கள் பெற்றுத் தரும் மோடியின் தரகு வேலையை அம்பலப்படுத்த வேண்டும்.
அதானியின் நிலக்கரி மோசடியை நீதிமன்றங்களே அனுமதிக்க வழிசெய்யும் அட்டுழியங்களை நிறுத்த வேண்டும்.
பல்வேறு வழிகளில் மோடி இந்தியாவை வாட்டி வதைத்து அதானியை வாழ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இத்தகைய கள்ளக்கூட்டை- அதானியின் இமாலய ஊழலை-பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக
காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ஆனால், அவை செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்த அவலம் அரசை மட்டுமின்றி, இந்நாட்டின் மக்களான நம்மையும் சாரும் என்பதை மறக்கலாகாது.
நடக்கும் அவலங்களை, அட்டூழியங்களை , அநியாயங்களை கண்டு பொங்காத ஊடகமும், மக்களும் தடித்த தோலுடையவர்களாக மாறி விட்டனரா? என எண்ணத் தோன்றுகிறது.
கேள்வி கேட்பவர்கள் மீது வழக்குகளும் (பரஞ்சோய் குகா தாக்குர்தா, ரவி நாயர் மற்றும் பல ஊடகவியலாளர்கள்) அடக்குமுறைகளும் பாயும் பொழுது சிறுமதியாளன் மோடி தன்னை விஸ்வ குரு எனக் கூறி வீராப்பாக வலம் வருவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலம் தான். இந்தியாவிற்கு இந்த தண்டனை இன்னும் எத்தனை காலங்களுக்கோ…? என்று எண்ணத் தோன்றுகிறது.

