Site icon சக்கரம்

அமைதி அழுகிறது 

GAZA CITY, GAZA - OCTOBER 24: A Palestinian man mourns as civil defense teams and residents conduct a search and rescue operation for Palestinians stuck under the debris of a demolished building following Israeli airstrikes hit Al-Shati refugee camp in Gaza City, Gaza on October 24, 2023. (Photo by Ali Jadallah/Anadolu via Getty Images)

ரக்கமற்ற இனவெறி இஸ்ரேல் அரசின் அத்துமீறலும், அடாவடியும் முற்றுப்புள்ளியின்றி தொடர்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒக்ரோபர் 10 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடை முறைக்கு வந்துள்ளதாக அறிவித்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இதை ஆமோதித்தார். ஹமாஸ் தரப்பும் இதை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் 28.10.2025 அன்று காஸா பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதி மக்கள் மீது 153 தொன் குண்டுகளை வீசி குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேல் அரசு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல போர் நிறுத்தம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறுகிறது. இது அப்பட்டமான அயோக்கியத்தனம். 

மறுபுறத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதை மீறியதற்காக இஸ்ரேல் அரசை கண்டிக்கவில்லை. மாறாக, ‘ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரை கொலை செய்ததாக தெரிகிறது. அது உண்மையென்றால் இஸ்ரேல் தாக்கத்தான் செய்யும்’ என்று இனவெறி இஸ்ரேல் அரசின் இரத்தவெறியை நியாயப்படுத்துகிறார் அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அதீதமாக ஆசைப்பட்ட டொனால்டு ட்ரம்ப். 

இஸ்ரேல் இராணுவ வீரர் கொல்லப்பட்டதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது. ஆனால் ஏதாவது ஒரு  சாக்கைச் சொல்லி காஸா பகுதியை முற்றாக அழித்து அந்தக் கொலைக்களத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இஸ்ரேல் முயல்கிறது. ஒருவேளை இஸ்ரேல் கூறுவது உண்மையாக இருந்தாலும் ஏதும் அறியாத 46 குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பெண்கள் உட்பட 104 அப்பாவி பொதுமக்கள் செய்த பிழை என்ன? போர் நிறுத்தம் என்று அறிவித்த ட்ரம்ப் தன்னுடைய முகத்தைக் கொண்டுபோய் பாலைவன புழுதிக்குள் மறைத்துக் கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அழுத்தத்தை உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு தர வேண்டும். ஆக்கிரமித்து பலஸ்தீனத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் தொடர்ந்து அடாவடி செய்து வருகிறது. குறிப்பாக ஹமாஸ் மீது பழிபோட்டு அமெரிக்க வல்லாதிக்கத்தின் துணையோடு இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் படுகொலைத் தாக்குதல் மனித நாகரிகத்திற்கு எதிரானதாகும். 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நான்தான் நிறுத்தினேன் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறுகிறார். அதை மறுக்கும் தைரியம் இந்தியப் பிரதமர் மோடிக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க தான் அறிவித்த போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மீக வலிமை கூட ட்ரம்ப்க்கு இல்லை என்பதுதான் உண்மை.

-தீக்கதிர்
2025.10.30

Exit mobile version