Site icon சக்கரம்

பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இத்தகைய பின்னடைவு ஏன்?

ச.அருணாசலம்

பொருளாதார முன்னேற்றமில்லை, வேலை வாய்ப்பில்லை ஆயினும் இருபதாண்டு நிதீஸ்குமார் ஆட்சிக்கு மீண்டும் நீட்டிப்பு! தேஜஸ்விக்கு பேராதரவு இருந்தது. ஒரு மாற்றத்திற்கு மக்கள் விரும்பினார்கள்! ஆயினும் வெற்றி விலகிச் சென்றுள்ளது. காரணம் என்ன..? இவ்வளவு அவமானகரமான தோல்வி எப்படி இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டது..?

பீகார் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்றல்ல.

வாக்காளர் பட்டியலே தான்தோன்றிதனமாக வெட்டி ஒட்டபட்ட வேளையில், அதனடிப் படையில் நடக்கும் பீகார் மாநில தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்காது என்றே சில நாட்களுக்கு முன்னர் நாம் கூறியிருந்தோம்.

இன்று வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் நமது அச்சத்தை , நமது அறஞ்சார்ந்த அடிப்படைக் கேள்விகளை அரசியல் கட்சிகள் இனிமேலும் புறந்தள்ள முடியாது என்பதையே காட்டுகிறது.

வாக்கு திருட்டு நடக்கிறது என மக்களிடம் விளக்கி, வாக்காளர் அதிகார யாத்திரையை பீகார் மாநிலம் முழுவதும் நடத்திய கட்சிகளும் அதன் தலைவர்களும் இன்றைய முடிவுகளைப் பற்றி என்ன கூறப் போகின்றனர்?

மக்களின் அடிப்படை உணர்வுகளை, மக்களின் உரிமைகளை பிரதிபலிக்காத ஒரு “பந்தயத்தில்” போட்டியிட எதிர்கட்சிகளால் எப்படி முடிகிறது. வாக்குகள் திருடப்படுகிறது. தேர்தல்களை நடுநிலையாக நின்று, பாரபட்சமின்றி நேர்மையாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே ஆட்சியாளர்களின் தில்லுமுல்லுகளுக்கு உடந்தையாய் இருக்கிறது. தேர்தல்கள் திருடப்படுவதை ஹரியானா, மகாராஷ்டிரா , புது டெல்லி என வரிசையாக வந்த மாநிலத் தேர்தல்களில் நாம் கண்ணுற்றோம்.

ஆகப் பெரும்பான்மையான இந்திய மக்கள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அதன் வழிமுறைகளில் நம்பிக்கை இழந்த நிலையில், ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை நோக்கி கேட்ட ஆணித்தரமான கேள்விகளுக்கு உரிய பதிலோ, விளக்கமோ தர முடியாமல் தவிக்கின்ற தேர்தல் ஆணையத்தை பற்றி எழுதாத பத்திரிகை இல்லை இந்தியாவில்.

நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக பதவியிலமர்ந்த தேர்தல் ஆணையம் கூச்சநாச்சம் ஏதுமின்றி, சிறப்பு தீவிர திருத்த முறையை பீகார் மாநிலத்தில் தடாலடியாக புகுத்தியது கண்டு எதிர்கட்சிகள் மட்டுமின்றி அறிவார்ந்த சிவில் சமூகமும் கொதித்து எழுந்தன.

ஏற்கனவே மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடிகள் நடைபெறுகின்ற சமயத்தில், விவிபாட் சீட்டுக்களை எண்ணுவதை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிய வேளையில், வாக்காளர் அளித்த வாக்கு அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளரை சென்றடைந்ததா? என்று தெரியாமலே நடக்கும் மர்மமான ஒரு செயலாக இந்திய தேர்தல் நடைமுறை மாறிவிட்டது.

மின்னணு வாக்கு எந்திரத்தில் “சிப் லோடிங்” என்பதும் தேர்தல் ஆணையர்களுக்கே தெரியாத ஒரு வித்தையாக, மோடி நியமிக்கும் இரண்டு மூன்று நபர்களுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாக மாறிவிட்டது.

இவற்றை எல்லாம் படித்த சிவில் சமூகமும், தொழில் நுட்ப வல்லுனர்களும், முன்னாள் அரசு உயரதிகாரிகளும், சுட்டிக்காட்டிய பிறகும் உச்சநீதிமன்றம் கண்டும் காணமல் நடந்து கொண்டது. இப்படியாக சுயாதீனமான அமைப்புகளும், நீதிமன்றங்களும் தங்களது கடமைகளை மறப்பது இந்திய மக்களுக்கு பழகிவிட்ட காலமிது.

இந்தச் சூழலில் பீகாரிலும் ஆட்சியை தக்க வைத்த மோடியின் முயற்சியை எளிதாக யாரும் எண்ணவேண்டியதில்லை. அதன் வெளிப்பாடே SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் என்ற தமக்கு வேண்டாத வாக்காளர்களை நீக்கும் முயற்சி தேர்தல் ஆணையத்தால் தான் தோன்றிதனமாக, சட்டபுறம்பாக முன்னெடுக்கப்பட்டது. இதை சரியாக புரிந்து கொண்ட எதிர்கட்சிகள் இதற்கு எதிராக ஒரு இயக்கமே கண்டன. வாக்கு அதிகாரம் என்ற அந்த இயக்கத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததை கோடி மீடியாக்களும் மறைக்க முடியவில்லை. ஆனால், அந்த இயக்கம் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகளை எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பெற்றனவா? என்றால், இல்லை என்றே கூற வேண்டும்.

தேர்தல் ஆணையத்தை  ஆட்சியாளர்களை நிர்பந்திக்காமல் நேர்மையான வெளிப்படையான தேர்தல் என்பது வெறுங் கனவு தான். வாக்காளர்களால் ஒரு அரசு தேர்ந்து எடுக்கபடுவதே ஜனநாயக முறை, ஆனால் இங்கு ஆளுபவர்களால் வாக்காளர்கள் தேர்வு செய்யப்படுகின்ற கேலிகூத்து நடைபெறுகிறது.

ஆனால், இதை உணராதவர்கள் உச்சநீதிமன்றத்தில் SIRக்கு எதிராக முறையிட்டனர். காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்கட்சிகளும் உச்சநீதிமன்றம் செல்லவில்லை என்றாலும், உச்சநீதிமன்றம் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு தடை போடாமல், தேர்தல் ஆணையத்தை தட்டிக் கொடுத்து நகர்ந்த போது, நாம் ஒரு பாடத்தை கற்றிருக்க வேண்டும். இந்திய ஜனநாயக முறைகளின்பால் மாறா பற்றுக் கொண்ட எதிர்கட்சிகள் ஒன்றுகூடி ஒரு அரசியல் முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அதைவிடுத்து குறை நிறைந்த தேர்தல் நடைமுறையில், ஆளுங்கட்சியினரின் வாக்கு திருட்டை அங்கீகரிக்கும் வழிமுறையில் பங்கு கொள்வது தற்கொலைக்கு சமானமானது என்பது விளங்கவில்லையா? அல்லது அதன் தீவிரம்- ஜனநாக தேர்தல்முறைகள் கொல்லப்படுகின்றன என்பதன் தீவிரம்- புரியவில்லையா? அல்லது எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசை உங்களுக்கு – எதிர்கட்சிகளுக்கு- வந்துவிட்டதா?

அவ்வாறு நீங்கள் கனவு கண்டிருந்தால் வாக்கு அதிகார யாத்திரையை ஏன் நடத்தினீர்கள்? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலம் பறிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு உண்மையானால் ராகுல் காந்தி வாக்கு அதிகாரத்தை உறுதிபடுத்தாமல் பீகார் தேர்தல்களில் பங்கெடுத்திருக்க கூடாது !

அதுவும் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் எப்படித்தான் நடக்கின்றனவோ? தேர்தல் நெருங்கும் போது, நிதீஷ்குமார் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 10,000 என அறிவித்தது அப்பட்டமான அதிகாரபூர்வமாக ஓட்டுக்கு தரப்பட்ட இலஞ்சமே. இத்தனைக்கு பிறகும் பீகார் தேர்தலை எதிர்கொள்வதில் எதிர்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையும், தொகுதி பங்கீட்டில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாமல் போனதும் துர் அதிர்ஷ்டமே.

தேர்தல் ஆணையத்தை ஆட்சியாளர் பிடியிலிருந்து விடுவித்து, நடந்த தில்லுமுல்லுகளை தோலுரித்து அவற்றை நிராகரிக்காமல், நடுநிலையான , நேர்மையான தேர்தல் என்பது நடக்காது. அத்தகைய தேர்தல் இன்றுள்ள சோரம்போன தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில், திருட்டுதனமாக ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி கும்பலின் அவதானிப்பில் நடக்க முடியாது என்பதை எதிர்கட்சிகள் இந்திய மக்களிடம் எடுத்துரைத்திருக்க வேண்டாமா?

தொடர் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரும் வரை- மோடி கும்பலும், தேர்தல் ஆணையமும் பதவி விலகும் வரை- நாங்கள் தேர்தலில் பங்குபெறப்போவதில்லை என்ற நிலையை எதிர்கட்சிகள் எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

தேர்தல்களை புறக்கணிப்பது என்பது காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் போன்ற கத்தி மேல் நடக்கும் கடினமான பணிதான். ஆனால் அத்தகைய கடினமான பணிக்கு எதிர்கட்சிகள் தங்களை தயார்படுத்தியுள்ளனரா என்பது கேள்விக்குறி.

இத்தகைய சூழல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிற கட்சிகளை காட்டிலும் மேலான ஒரு பொறுப்பு இருக்கிறது.

ஆயிரம் தவறுகள் இழைத்த பின்பும் காங்கிரஸ் இயக்கம் ஒன்று தான் இன்றும் அனைத்து இந்திய மக்களையும் பேதமின்றி பிரதிபலிக்கும் இயக்கமாக, தன்னை நிலைநிறுத்தும் கொள்கைகளைக் கொண்ட கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தின் இன்றைய தலைவர்களில் தீவிர அர்ப்பணிப்பு குணங்கொண்ட ஒரு இளந்தலைவராக, மக்களைச் சார்ந்த கொள்கைகளில் உறுதியான ஒரு ஆளுமையாக இன்று இருப்பது ஒரு ராகுல் காந்தி தான்.

எனவே, இழப்பதற்கு ஏதுமில்லாத ஒரு தலைவனால் தான் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் . நேர்மையை, வாக்குரிமையை குழிதோண்டி புதைக்கும் போலி தேர்தல்களில் இருந்து ஒதுங்கி நின்று ஆட்சியாளர்களை கேள்வி கேட்க அவரால் தான் முடியும் . இன்னல்களும் ஏராளமான சோதனைகளும் நிரம்பியுள்ள அந்த பாதையில் அடியெடுத்து வைக்காமல் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க முடியாது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும் இயலாது.

அத்தகைய சவால்களை ஏற்றுக்கொள்ள எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் இயக்கம் அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி தயாரா? என்பதே கேள்வி!

ஏற்கனவே செய்ய மறந்ததை, இனியாவது செய்யத் துணிவாரா?

Exit mobile version