Site icon சக்கரம்

அமெரிக்க மக்கள் ட்ரம்பை விரைவில் தூக்கி எறிவார்கள்!

-பர்னீ சாண்டர்ஸ் (Bernie Sanders)

க்கள் உரிமைகளை மதிக்காதவர், மன்னர் மனோபாவம் கொண்டவர், ஜனநாயத்தை துச்சமாக கருதுகிறவர், ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்காக ஆட்சி செய்கிறவர், அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுபவர் என்ற குற்றச்சாட்டுகளுடன் ட்ரம்ப்பிற்கு எதிராக 70 இலட்சம் மக்கள் 2,700 இடங்களில்  பேரணி நடத்தினர். அதில் பேசிய பர்னீ சாண்டர்ஸின் அனல் கக்கும்  உரை:

”இங்கு யாரும் மன்னர்கள் இல்லை” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை எச்சரித்து வாஷிங்டன் நகரில் ‘No Kings Day’,  நாளையொட்டி (18.10.2025) நடந்த பேரணியில், அமெரிக்காவின்  எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் (செனட்டர்) பர்னீ சாண்டர்ஸ் ஆற்றிய புகழ் பெற்ற உரை இங்கு தரப்படுகிறது;

வாஷிங்டன்னுக்கு நன்றி. சிறு நகரங்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை, எல்லா மாநிலங்களில் இருந்தும்  அமெரிக்க மக்களாகிய நீங்கள், இலட்சக் கணக்கில், திரண்டு வந்திருக்கிறீர்கள்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, மக்களவை தலைவரான மைக் ஜோன்சன், இவை “அமெரிக்காவை வெறுக்கும்” பேரணிகள் என்று கூறியிருக்கிறார். ஆனால் இங்கு கூடியுள்ள மக்கள் அமெரிக்காவை வெறுப்பதால் அல்ல –  விரும்புவதால் வந்துள்ளனர்.

250 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆண்களும், பெண்களும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், விடுதலைக்காகவும்  தங்கள் உயிரையும் பலி கொடுத்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு தான் இங்கு கூடியுள்ளோம்.

1776 இல், நமது முன்னோர்கள், ”இனிமேல் நாங்கள் இங்கிலாந்து மன்னரின் கீழ் இருக்க மாட்டோம்” என்று துணிச்சலாக அறிவித்தனர்; விடுதலை கோரினர். இங்கிலாந்து பேரரசையும், ஆற்றல் வாய்ந்த இராணுவத்தையும் எதிர்த்துப் போராடினர். எட்டு ஆண்டுகள் நடந்த போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்தனர்; வெற்றி பெற்றனர்.

போரில் வெற்றி பெற்றபின்பு, 1789 இல், உலகிலேயே  முதன்முதலாக, ஜனநாயக அரசை நிறுவினார்கள். ”இனி மன்னர்களே வேண்டாம்” என்று, உரத்த குரலில் கூறினார்கள். ”மக்களே இனி அமெரிக்காவை ஆட்சி செய்வார்கள்” என்று,  உலகிற்கு கூறினார்கள். நவீன வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும்.

இன்றைக்கு, 2025 இல், அமெரிக்க வரலாற்றில், இந்த அபாயமானக் காலக்கட்டத்தில், நாம் அதே செய்தியைத் தான் இப்போதும் சொல்லுகிறோம். அமெரிக்காவின் தலைவர், ட்ரம்ப் அவர்களே, நீங்களோ அல்லது வேறு எந்த மன்னரோ எங்களை ஆட்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில், எங்கள் சமூகத்தை பராமரித்துக் கொள்வோம். யதேச்சதிகாரத்தை நோக்கி, நாங்கள் செல்ல மாட்டோம். இங்கு மக்களே ஆட்சி செய்வர்.

அமெரிக்காவின் முதல் தலைவராக பொறுப்பேற்றபோது, “அமெரிக்க மக்களின் கைகளில் இந்த சோதனை கொடுக்கப்பட்டுள்ளது” என்று சுய ஆட்சி முயற்சி பற்றி ஜோர்ஜ் வாஷிங்டன் கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த சோதனையானது தற்போது ஆபத்தில் இருக்கிறது. அமெரிக்கத் தலைவர் மென்மேலும் அதிகாரங்களை விரும்புகிறார்; தன்னுடைய சக வளம்கொழித்த குழுவினருக்கும் (oligarchs) அதிகாரங்களை விரும்புகிறார்.

போர்ட்லேந்து, சிகாகோ, ஓரிகன், இல்லினாய்ஸ் போன்ற மாநிலங்களில் அமைதியாகப் போராட்டம் நடைபெறுகிற போதெல்லாம், கலகம் நடைபெறுகிறது என்று கூறி, இராணுவத்தை, அமெரிக்கத் தலைவர் அழைக்கிறார். இதனை எதிர்க்கும் மேயர்கள், ஆளுநர்களை மிரட்டுகிறார்.  கதவை உடைத்து, உரிய விதிமுறையின்றி, மக்களை வாகனத்தில் தூக்கிப் போட்டு் –  எங்கு இழுத்துச் செல்கிறார்கள் என்றே தெரியாமல் குடியேற்ற அலுவலர்களால் இழுத்துச் செல்லப்படுகின்றனர். இது போன்ற சமயங்களில் அமெரிக்கா ஆபத்தில் இருக்கிறது.

அமெரிக்கத் தலைவர் தன்னைப் பற்றியோ, தமது கொள்கைகள் பற்றியோ எந்த விமர்சனத்தையும் விரும்புவதில்லை.

நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள, அடிப்படையான உரிமைகளை, குறைத்துப் பேசுகிறார். விமர்சனம் செய்து எழுதும் ஊடகத்தினரை மிரட்டுகிறார்; அவர்கள் மீது வழக்குத் தொடுக்கிறார். தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளை கைது செய்வதாக மிரட்டுகிறார். நியூயார்க் நகரின் தலைமை வழக்கறிஞர், பாராளுமன்ற உறுப்பினர், கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் ஆகியோர் கூட மிரட்டப்படுகின்றனர். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கருத்துரிமை வேண்டுவோரையும்,  மாற்றுக் கருத்து கொண்டுள்ளோரையும் அமெரிக்கத் தலைவர் அச்சுறுத்துகிறார். தனக்கு எதிராக தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யப் போவதாக மிரட்டுகிறார். தனக்கு விரோதமாக வாக்களித்த மாநிலங்களுக்கு, அமெரிக்க பேராயம் அனுமதியளித்த போதும் அமெரிக்கத் தலைவர் நிதியை தர மறுக்கிறார்.

தனக்கு வேண்டிய வேட்பாளர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறும் வகையில், மாநிலங்களின் தொகுதி வரைபடத்தை திருத்த வேண்டும் என்று சொல்லுகிறார். ஒன்றிய அரசில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை, வாஷிங்டன்னிலும், மற்ற பகுதிகளிலும், சட்ட விரோதமாக  வேலையில் இருந்து அமெரிக்கத் தலைவர் நீக்கியுள்ளார். தொழிற்சங்கங்களோடு போட்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிகிறார். வெளிநாட்டு தலைவர்களிடமிருந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பரிசுகளைப் பெறுகிறார்; கத்தார் நாட்டின் அரச குடும்பத்திடம் இருந்து 400 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள விமானத்தை பெற்றுள்ளார். இது போன்ற சமயங்களில் அமெரிக்கா ஆபத்தில் இருக்கிறது.

இது ஏதோ ஒரு நபரின் பேராசையோ, ஒரு நபரின் ஊழலோ அல்ல. தணியாத பேராசை கொண்ட ஒரு சில பணக்காரர்கள்,  நமது பொருளாதாரத்தையும், அரசியல் அமைப்பையும் தங்களை வளப்படுத்திக் கொள்ள கடத்தி விட்டார்கள். எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற கோடீசுவரர்கள் டிரம்ப் பதவியேற்ற போது அவருடன் இருந்தவர்கள் தான் – ட்ரம்புக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்தவர்கள்- தேர்தலுக்கு செலவழித்தவர்கள் – அமெரிக்காவை ஆபத்தில் வைத்துள்ளனர்.

எலான் மஸ்க் என்ற ஒற்றை மனிதரின் செல்வம், அடிமட்டத்தில் இருக்கும் 52% அமெரிக்கர்களின் சொத்துக்கு ஈடானது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் 60% மக்கள் சம்பளத்தை நம்பி, அதன் மூலம் வாடகை, தவணை, கல்வி, குழந்தை பராமரிப்புக்கு என செலவழிக்கிறார்கள்.

உலக வரலாற்றில் அமெரிக்கா பணக்கார நாடு. இந்த நாட்டில் தான் 85 பில்லியன் அமெரிக்கர்களுக்கு காப்பீடு இன்றி, அல்லது குறைவான காப்பீடுடன் இருக்கிறார்கள். எட்டு இலட்சம் மக்களுக்கு வீடு இல்லை. ஆனால், மஸ்க் மேலும் பணக்காரராகி வருகிறார். இவர்கள் இலட்சக்கணக்கான டொலர்களை செயற்கை தொழில் நுட்பத்திலும், ரோபாட்டிலும் கொட்டுகிறார்கள். இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இனிவரும் ஆண்டுகளில் வேலையிழப்பர்.

’அமெரிக்காவில் பாசிஸ்டுகளுக்கு இடமில்லை’ என கோஷமிடும் மக்கள்

இந்தப் பணக்காரர்கள், தாங்கள் ஆள்வதற்கு தெய்வீக உரிமை இருக்கிறது என்று நம்புகிறார்கள். தங்களுக்கு வரிவிலக்கு வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள் யாருக்கும் பதில் சொல்ல விரும்புவதில்லை. தங்கள் அதிகாரத்தின் மீது எந்த தடையையும் விரும்பவில்லை. நாம் 1,700 களிலேயே மன்னர்களின் தெய்வீக உரிமையை நிராகரித்து விட்டோம். இந்த ஒரு சிலராட்சியின் (oliharchs) தெய்வீக உரிமையையும் அமெரிக்கர்களாகிய நாம் ஏற்க மாட்டோம்.

அரசாங்க நிறுத்தத்தின் (Govt Shut down) 18 ஆம் நாளான இன்று (18.10.2025) இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் வேலையிழந்து உள்ளனர். “அற்புதமான மசோதா” என்று அழைக்கப்படும் ட்ரம்பின் சட்டத்தால் (Medicaid and the Affordable Care Act)  15 மில்லியன் தொழிலாளர்கள்  மருத்துவ வசதியை இழப்பார்கள். இதனால் 50,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இறப்பார்கள். இதே சட்டத்தால் 20 மில்லியன் அமெரிக்கர்கள், செலுத்த வேண்டிய காப்பீட்டுத்  தொகையை (premium) இருமடங்காக செலுத்த நேரிடும். உலகிலேயே இங்கு தான் மருத்துவத்திற்கு அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏன் இவ்வாறு மருத்துவ வசதிகளை சிதைக்கிறார்கள் தெரியுமா? ஏனெனில், அவர்கள்  எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற ஒரு சதமுள்ள  கோடீசுவரர்களுக்கு டிரில்லியன் டொலர் வரி்ச் சலுகைகளை தர விரும்புகின்றனர். அரசாங்க நிறுத்தம் (shut down)  என்பது இது தான். ஓர் ஆண்டுக்கு 50,000 இறப்புகளை தருகிற வரவு செலவு அறிக்கைக்கு நான் வாக்களிக்க மாட்டேன். மருத்துவ காப்பீட்டு பிரிமியத் தொகையை இரண்டு மடங்காக்கும்.  வரவு செலவு திட்டத்திற்கு நான் வாக்களிக்க மாட்டேன். மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகளை நாடு முழுவதும் மூடுகின்ற வரவு செலவு திட்டத்திற்கு நான் வாக்களிக்க மாட்டேன்.

அமெரிக்க மருத்துவ கட்டமைப்புகளை அழிக்காதீர்! இது பற்றி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என குடியரசுக்  கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் ஒற்றை மனிதனின் ஆட்சியில் நாம் வாழ இயலாது என்பதைச் தெளிவாகச் சொல்வோம்.  குடிமக்களை ஒன்றாக்கி, பணக்காரர்களால் தேர்தலை வாங்க முடியாமல் செய்து, துடிப்பான ஜனநாயகத்தை உருவாக்குவோம்.

பேராசை கொண்ட மருந்து நிறுவனங்கள், அதிக விலைக்கு விற்பனை செய்வதை எதிர்த்து நிற்போம். வருமானம் குறைந்த மக்கள், வாங்கக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவோம். கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் இலவசக் கல்வியைத் தரட்டும். கண்ணியமாக ஓய்வுபெறும் வகையில் முதியோருக்கு சமூகப் பாதுகாப்பை  விரிவுபடுத்துவோம். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்போம்.  பெட்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக, நல்ல சம்பளம் தரும் வேலைகளை உருவாக்கி இந்த புவியை பாதுகாப்போம். தன்னுடைய உடல் மீது தனக்குள்ள உரிமையை ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வோம். அமெரிக்க மக்களின் வரிப் பணமானது காசாவிலோ, வேறு நாட்டிலோ குழந்தைகளை பட்டினிப் போடாமல்  இருக்கும், வெளிநாட்டு கொள்கையை உறுதி செய்வோம்.

இப்போது நான் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்! பெர்னி,  நீ சொல்வதெல்லாம் நல்ல ஆலோசனைகள் தான். ஆனால் இது எப்படி நடக்கும் ?

சக அமெரிக்கர்களே! இந்த அமைப்பு,  கோர்ப்பரேட் ஊடகங்கள், பேராயத்தில் (காங்கிரஸ்)  இருக்கும் என் சக உறுப்பினர்கள் ஆகியவை நீங்கள் சக்தியற்றவர்கள் என்று நம்ப வைக்கிறது. இதனை மாற்ற வியலாது என்று நம்ப வைக்கிறது. ஆனால், இது பொய்.

நமது வரலாறு முழுவதும், அமெரிக்கர்களாகிய நாம் நியாயத்திற்காக நின்றுள்ளோம்; போராடியிருக்கிறோம்; வெற்றி பெற்று இருக்கிறோம்.

ஜார்ஜ் மன்னருக்கு எதிராக நமது முன்னோர்கள் எழும்பிய போது இது நடக்காது என்றார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

அடிமை முறையை எதிர்த்த போது, தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்த போது, பெண்கள் வாக்குரிமை கோரி போராடியபோது, இனப் பாகுபாட்டை எதிர்த்து கறுப்பின மக்கள் போராடிய போது, பாலினச் சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காக போராடிய போது – இவையெல்லாம் நடக்காது என்றார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

அவர்கள் அப்போது வெற்றி பெற்றார்கள். நாமும் வெற்றி பெறுவோம்.  இது எப்படி எனக்குத் தெரியும். வாஷிங்டன்னில் இப்போது குழுமியுள்ள கூட்டத்தினரை திரும்பி பாருங்கள்.

அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று ஒக்ரோபர் 18 ஆம் நாளில் நாடு முழுவதும் அதிகக் குழுக்கள் தெருக்களுக்கு வந்துள்ளனர்.  இது முடிவல்ல; தொடக்கம் தான். நாம் இணைந்து, நாம் விரும்புகிற நாட்டை உருவாக்குவோம். சுதந்திரம், நீதி, ஜனநாயகம் – ஆகியவைகளுக்கு நமது நாடு ஒப்புக் கொடுக்கட்டும்.

தொகுப்பு, மொழியாக்கம்: பீட்டர் துரைராஜ்

Exit mobile version