Site icon சக்கரம்

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறது!

-பீட்டர் துரைராஜ்

முகநூல், யூ டியூப்  போன்றவற்றுக்கு  மாற்றாக மையமில்லா  சேவைகள் வரத்தொடங்கியுள்ளன!  அதிக இணையத் தடைகளை விதிக்கும் நாடு இந்தியா. கூகுள், அமேசான், முகநூல், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களின் ஆதிக்கம், ஊடகக் கல்வியின் அவசியம் போன்ற பலவற்றைக் குறித்த சைபர் சிம்மன் பீட்டர் துரைராஜுக்கு அளித்த நேர்காணல்:

கணணி, இணையம், செயற்கை நுண்ணறிவு என நவீன தொழில்நுட்பம் குறித்து, நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன், தமிழில், நீண்ட காலமாக எழுதி வருகிறார்.   ‘இணைய பெண்கள்’ என்ற  அவருடைய நூல் தற்போது வெளி வந்துள்ளது. சொந்த இணையதளம் தவிர, ‘இணையமலர்’ என்ற செய்தி மடலில் தொடர்ந்து  எழுதி வருகிறார்.  இணையம் பற்றிய தற்கால போக்குகளை இந்த நேர்காணல் வழியே நாம் தெரிந்துகொள்ள முடியும்.

உங்களுடைய புத்தகங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது ?

இணையம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் குறித்து ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வருகின்றன.  இவற்றை தமிழிலும் பதிவு செய்யும் வகையில் எனது நூல்கள் அமைவதாக நம்புகிறேன். இது ஒரு வரலாற்றுத் தேவை. பத்திரிகைகள், இணைய ஊடகங்களிலும் தொடர்ந்து  எழுதி வருகிறோம். எனது அண்மைய நூலான ’இணைய பெண்கள்’, அதற்கு முன் ’கம்ப்யூட்டர் பெண்கள்’, ’ஏஐ ஒரு எளிய அறிமுகம்’, ’சாட்ஜிபிடி சரிதம்’ ஆகிய நூல்களை ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எழுதி முடித்தவுடன், அடுத்த புத்தக வேலைக்கு போய்விடுவேன்.

தொழில்நுட்பத்தின் சாத்தியம் என்ன, தாக்கம் என்ன, தேவை என்ன என்பதை எல்லாம், அந்தந்தக் காலக்கட்டங்களில் பதிவு செய்வது அவசியம். நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ‘இணையத்தால் இணைவோம்’ என்ற நூலைப் படித்துவிட்டு, கன்னியாகுமரியில் இருந்து ஒரு வாசகர், அந்த நூலில் உள்ள இணையதளங்கள் மூலமாக பலவற்றை தெரிந்து கொண்டேன் என்று போன் செய்து சொன்னார். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் சொல்வது போல ‘எங்கோ இருக்கும் ஒரு முகம் தெரியாத வாசகனுக்காக நான் எழுதிவருகிறேன்’.

இணையம் தொடர்பாக எழுதுவதை எப்படி தேர்வு செய்தீர்கள் !

கவிதை, நாவல், நாடகம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. எனவே எழுத்தாளனாக வேண்டும்  என்ற  வேட்கை இயல்பாக பத்திரிகை  துறைக்கு கொண்டு வந்தது.  ‘மாலைச்சுடர்’ நாளிதழில் 1999 இல் தொழில்நுட்பம் பற்றி, தினமும் ஒரு பத்தி எழுத வாய்ப்பு கிடைத்தது. இணையம், கணணி போன்றவை மக்கள் மத்தியில் புழங்க ஆரம்பித்த சமயம் அது . பத்தாண்டு காலம்,  நவீன தொழில் நுட்பம் பற்றி நாள்தோறும்  உற்சாகமாக எழுதினேன். இது இணைய எழுத்தாளராக உருவாக்கியது. இப்போதும் சுயாதீன பத்திரிகையாளராக, தமிழ் இந்து, யுவர்ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறேன்.   ‘இணையமலர்‘ என்கிற  மின் செய்தி மடலிலில், இணையதளங்கள், செயலிகள், இணைய சேவைகள் பற்றி எழுதி வருகிறேன்.  அனைத்து பிரிவுகளிலும் பயனுள்ள, முக்கிய, சிறந்த இணையதளங்களின் தொகுப்பான இணைய களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்பது விருப்பம். இதுவரை என்னுடைய ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. பத்தாவது நூல் ”சமூக ஊடக வரலாறு” வெளிவர உள்ளது.

தொழில்நுட்பம், இணையம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை தட்டையாக தொழில்நுட்பமாக மட்டும் அணுகாமல், அவற்றின் சமூக தாக்கம், வரலாற்று பார்வை, கலாச்சார அம்சம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறேன். மாற்று சேவைகளை முன்னிறுத்துவதிலும் ஆர்வம் அதிகம்.

தமிழில் தொழில்நுட்பம் தொடர்பாக எளிமையாக, ஆழமாக எழுதக்கூடியவர்களில் ஒருவராக கருதப்படுவதை நிறைவாக உணர்கிறேன். இடைப்பட்ட காலத்தில், டிஜிட்டல் இதழியலுக்கான கௌரவ விரிவுரையாளராகவும் ஏழாண்டுகளுக்கு மேல் பணி புரிந்திருக்கிறேன்.

பாடசாலை மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கிவரும் மடிக்கணினி திட்டத்தை  எப்படிப் பார்க்கிறீர்கள் ?

மதிய உணவுத் திட்டம் மாணவர்களின் இடைநிற்றலை நிறுத்தியது. அது போல ஏழை மாணவர்களுக்கு இணையத்தை கொண்டு சேர்ப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுக்கு  காணொளிகளைக் காட்டி, தாய்மார்கள் பாலூட்டுகிறார்கள். எனவே, இது ஒரு நல்ல திட்டம் தான். இன்னும் வளர்த்தெடுக்கலாம்.

ஜி.பே மூலம் பணப்பறிமாற்றம்/ வியாபாரம் நடப்பது பற்றி என்ன  நினைக்கிறீர்கள் ?

யுபிஐ என்ற தொழில்நுட்ப மேடை சார்ந்து இது இயங்குகிறது. பொதுவாக,  டிஜிடல் பணம் அல்லது மொபைல் பணம் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை சாத்தியமாக்க கூடியது. அனைவருக்குமான வங்கிச் சேவை என்று ஏற்கெனவே நாம் சொல்லி வந்ததை இந்த தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. அதே சமயம் இதில் நடைபெறும் மோசடி, ஏமாற்றுக்குத் தேவையான காப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். கீரை வியாபாரம், ஓட்டோ ஓட்டுநர் போன்றவர்கள் இப்பொழுது இயல்பாக இதன் மூலம் பணம் பெறுகின்றனர். அவர்களுக்கு ஒரு வகையில் பணச் சேமிப்பை இந்த பரிமாற்றங்கள் உருவாக்குகின்றன. இத்தகைய செயலியை வைத்திருப்பவர்களுக்கு ஒருசில காப்பீடுகள் குறைந்த பிரிமியத்தில் கிடைக்க வழி செய்வது போன்ற சேவைகளை உருவாக்கலாம். எனவே இவை நல்லதுதான்.  எல்லா தொழில்நுட்பங்களிலும் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. ரொக்க விநியோகம் பயனாளிகளுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இன்றி உடனடியாக நடந்துவிடும்.

தற்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் போடுகிறார்களே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

சுய வெளிப்பாடு, தொடர்பு கொள்ளல், இணைய அடையாளம் என்ற பயன்பாடுகள் சமூக ஊடகங்களுக்கு உள்ளன. பொழுதுபோக்கும் இதில் அடங்கும். இது அந்தந்த தனிநபர்களின் விருப்பம். இதற்கு சரி, தவறு என ஒருவரியில் பதில் சொல்ல முடியாது. ஒரு மையத்தில் இருந்து பலருக்கும் செய்தி அளிப்பவை வெகுமக்கள் ஊடகங்கள். ஆனால், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பலரிடமிருந்து பலருக்கு செய்தி அளிப்பவை.

13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் அனுமதியில்லை என்ற சட்டம் அவுஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளில் உள்ளது. குழந்தைகளுக்கு கைபேசி போன்றவைகளைக் கொடுக்கும் போது பெற்றோர் கண்காணிப்பு அவசியம். இதற்கு பெற்றோர்களை மட்டும் பொறுப்பாளி ஆக்க முடியாது. இதற்கு ஊடகக் கல்வி அவசியம். இது குறித்து ஊடகங்கள் எழுத வேண்டும். பொதுவெளியில் விவாதம் நடக்க வேண்டும். துறைசார்ந்த வல்லுநர்கள், ஊடகங்கள், அரசு என சகல தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனர்  மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சாப்பாட்டு மேசையில் கைபேசிக்கு அனுமதியில்லை.

முகநூலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே ?

முக நூலுக்கான காலம் முடிந்துவிட்டது.  இளைஞர்கள் Snapchat ஐ  அதிகம் பயன்படுத்துகின்றனர். முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்க பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள்.  ஆதிக்கம் கொண்டவை. எனவே, இவைகளுக்கு மாற்று தேவை.  ‘காலாவதியாகி விட்டது’ என்று எல்லோரும் சொல்லுகிற மார்க்சிய நோக்கில் தொழில்நுட்பத்தை அணுகுவதும் அவசியம். மேலும், சமூக ஊடக பரப்பில் மையம் இல்லாத சேவைகள் உருவாகி வருகின்றன. கூட்டு பெருவெளி என இவை குறிப்பிடப்படுகின்றன.

ஆங்கிலத்தில் ’பெடிவெர்ஸ்’ என்கின்றனர். உதாரணமாக யூ டியூபிற்கு மாற்றாக peer tube வந்துள்ளது. டிவிட்டருக்கு மாற்றாக Mastadon வந்துள்ளது.  முகநூலுக்கு மாற்றாக பிரெண்டிகா (Friendica) உள்ளிட்ட சேவைகள் உள்ளன. ஏற்கனவே டயாஸ்போரா (Diaspora) எனும் சேவை அறிமுகமாகி உள்ளது.

இந்த சேவைகள் பயனாளிகளுக்கு அதிக முக்கியத்துவமும், அதிகாரமும் அளிப்பவை. அடிப்படையில் பெரு நிறுவனங்களின் வர்த்தக போக்கிறது எதிரானவை. எதிர்கால தன்மை கொண்டவை.

கைபேசி ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சத்திற்கு வாங்குகிறார்களே, அதனால் ஏதும்பலனுண்டா ?

இத்தனை ரூபாய் செலவழித்து வாங்குவது தனது அந்தஸ்தின் அடையாளம் என்று நினைப்பவர்கள் பற்றி ஏதும் சொல்லமுடியாது. பழைய அடிப்படையான கைபேசிதான் (நோகியா மாடல்) வெகுமக்களிடம் பரவலாக இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்தது. அதில் பருவநிலை, நெல் கொள்முதல் போன்ற விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வழிசெய்யும் செயலிகள் இருந்தன. கேரளாவில் மீன்களின் விலையைத் தெரிந்து கொள்ளும் சேவை உருவாக்கப்பட்டது. அதிக விலை கொடுத்து கைபேசி வாங்குவது தேவையற்றது. வீடியோ கிராபர், கிராபிக் டிசைனர், மென் பொருள உருவாக்குபவர்களுக்கு அவை தொழில்முறையாக தேவைப்படலாம். ரூ.20,000 க்கு, நமக்கு புழக்கத்தில் பயன்படும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய கைபேசி கிடைக்கின்றன. இந்தியா விலை பற்றிய அதிக உணர்வுள்ள ஒரு நாடு. கைப்பேசி வாங்கும் போதும், விலைக்கேற்ற மதிப்பை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இணைய சேவை எப்படி இருக்கிறது?

இந்தியாவில், கடந்த பத்து ஆண்டுகளில் பெருமளவில்  இணைய சேவைகள், பயன்பாடு, பயனாளிகள் அதிகரித்துள்ளனர். ஆனால் இணையத்தை முடக்குவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. அரசு நடவடிக்கையாலும், அரசியல் காரணங்களாலும் முடக்கப்படுகின்றன. ‘பாதுகாப்பு காரணம்’ என்ற ஒற்றை வரியில் முடக்கப்படுகிறது. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. முழுமையாக எதிர்க்கவும் முடியாது. இதுகுறித்து வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.

தமிழக அரசு இந்த துறையில் நன்றாகவே செயல்படுகிறது. நிறைய தொடக்க நிறுவனங்களை (start up)  ஊக்குவிக்கிறது. தமிழக அரசு தன்வசம் உள்ள தரவுகளை இணையம் மூலம் பொதுவெளியில் மேலும் எளிதாக அணுக வழி செய்ய வேண்டும். உதாரணமாக நெல்விளைச்சல்  மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக எவ்வளவு நடந்தது என்பது போன்ற புள்ளிவிவரங்களை எளிதான வடிவத்தில் (format) அரசுத்தளங்களில் கிட்ட வேண்டும். இந்த விவரங்களை செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், மென்பொருள் உருவாக்குபவர் (developer) பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தரவுகளை பகிரங்கப்படுத்துவதும், திறந்தவெளித்தன்மையோடு இருப்பதும் ஜனநாயகத்திற்கு நல்லது.

நவீன தொழில்நுட்பங்களை செம்மையாக கையாள்வதன் மூலம், எவ்வளோ மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இறுதிப் பயனாளிகள் மக்களாகத்தானே இருக்க முடியும். அவர்களை மனதில் கொண்டே சேவைகளும், செயல்பாடுகளும் அமைய வேண்டும்.

சைபர்சிம்மன் இணையதளம்: http://cybersimman.com/

சைபர்சிம்மன் மின் மடல்: https://cybersimman.substack.com/

Exit mobile version