Site icon சக்கரம்

பாரதிதாசன் காட்டிடும் உண்மையான பாரதியார்!

சாவித்திரி கண்ணன்

திராவிட இயக்கத்தார் சிலர் பாரதியாரை சாதியப் பார்வையுடன் விமர்சிக்கிறார்கள். பாரதி பிறந்த குலம், அவரது பக்திப் பாடல்கள், தேசியக் கண்ணோட்டம் ஆகியவற்றை வைத்து அவரை தமிழ்ச் சமூகத்திடம் அன்னியப்படுத்துகின்றனர்.  இதோ உண்மையான பாரதியாரை பாரதிதாசன் அன்றே துல்லியமாகப் படம் பிடித்து  காட்டியுள்ளார்;

பாரதிதாசன், கனக சுப்புரத்தினமாக இருந்த இளமைக் காலத்தில் பக்திப் பாடல்களும், சிறுசிறு தனி பக்திபாடல்களும், இலாவணி போன்ற பாடல்களும் எழுதிக் கொண்டிருந்த பள்ளிக் கூட தமிழாசிரியர் மட்டுமே. பாரதியின்  பேச்சுக்களும், பழக்கமும், சிந்தனை போக்குகளும் படிப்படியாக பாரதிதாசனை பெரிதும் ஈர்த்து, பிறகு தான் கனக சுப்புரத்தினம் ஒரு இலட்சியக் கவிஞர் பாரதிதாசனாக மாறுகிறார்.

புதுச்சேரி வந்த பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் கனக சுப்புரத்தினம் இருபது வயது இளைஞன். சிலம்பம், மற்போர் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் முரட்டுக் காளையாக இருந்துள்ளார்.

கையில் தங்கக் காப்பும், கழுத்தில் கறுப்புக் கயிறும், நெற்றியில் பட்டை நாமமும்,  மல் ஜிப்பா அணியும் பக்தி பாகவதராக தீவிரக் கடவுள் பக்திமிக்கராக பஜனை மடங்களில் பாடிக் கொண்டிருந்த  இளைஞரான கனக சுப்பு ரத்தினம் படிப்படியாக மாற்றம் கண்டு புரட்சிக் கவிதைகளை எழுதும் பாரதிதாசனாக மாற்றம் கண்டார்.

இது குறித்து பாரதிதாசனின் பேட்டியே பதிவாகி உள்ளது.( ஆதாரம்; முருகு சுந்தரம்)

”பாரதியாரின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னையறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப் போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். சுப்புரத்தினமாக இருந்த நான் பாரதிதாசனாக மாறத் தொடங்கினேன். பாரதியார் இல்லையென்றால், இந்த பாரதிதாசன் இல்லை. கனக சுப்புரத்தினமாக ஒரு சாதாரண தமிழ் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இன்று எங்கேனும் ஒரு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு செய்து கொண்டிருந்திருப்பேன்” என்கிறார்.

”பாரதியார் சாதியை உண்மையாகவே எதிர்த்தார். அப்படி அவர் சாதியை எதிர்த்து பல  கவிதைகள் பாடிய பல்லாண்டுகளுக்கு பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது..’’ என்றும் பாரதிதாசனே  குறிப்பிட்டு உள்ளார்.

பாரதிதாசன் பல சீர்திருத்த கருத்துக்களை, முற்போக்கான பார்வையில் எழுதினார். அவரை நாம் புரட்சிக் கவிஞர் என்று கொண்டாடினோம். அப்படிப்பட்ட பாரதிதாசன் 1961 ஆம் ஆண்டு வந்த குயில் இதழில் இவ்வாறு எழுதுகிறார்;

“அன்றைக்கு பாரதியார் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ, அதைத் தான் இன்று நான் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பாரதியார் இன்றைக்கு இருந்தால் என்னைப் போல், ஏன் என்னைவிட சிறப்பாக எழுதி  இருப்பார்’’ என்கிறார்.

இதையே பாரதிதாசன் கவிதையாகப் பாடியும் உள்ளார்.

மேலும் பாரதிதாசன் கூறுகிறார்:

“பாரதியைப் போல் நானும் அன்று நெஞ்சில் பக்தி நிறைந்திருந்த ஆத்திகன். ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடியவன். அப்போது நானும், பாரதியும் ஆன்மீகவாதிகள் என்றாலும், பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக அவர் மாறி வந்ததை கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்திருப்பார்.” எனக் கூறியுள்ளார்!

பாரதியார் குறித்து கருப்பு சட்டைக்காரர்கள் ஏதேனும் சொன்னால் துடித்துப் போய்விடுவார் பாரதிதாசன். சொன்னவனை உண்டு, இல்லை என துவைத்து எடுத்து விடுவார்! அவ்வளவு ஈடு இணையற்ற குருபக்தி அவருக்கு இருந்தது. கண்கள் சிவக்க, ”அவரைக் குறை சொல்லும் தகுதி உங்களில் எவருக்கும் இல்லை…’’ என்பார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் வழியே பாரதியாரை காண்போம்:

திறம்பாட வந்த மறவன் – புதிய

அறம்பாட வந்த அறிஞன்!- நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!

பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

என்கிறார், பாரதிதாசன்.

மேலும் அவர், ‘’பாரதியார் எதைப் பேசினாரோ, எதை எழுதினாரோ அதன்படியே வாழ்ந்தவர். சொல்லொன்றும், செயலொன்றுமாக வாழத் தெரியாதவர். இதற்கொரு சம்பவம் சொல்கிறேன். பாரதியார் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஒரு இஸ்லாமியரின் தேனீர் கடையில் தேனீர் வாங்கித் தருவார். நாங்கள் வீதியின் நின்றபடி தேனீர் குடித்து பேசிக் களிப்போம்.

அப்போது பாரதியாரும் நானும் பேசியதை அப்படியே சொல்கிறேன்.

”சுப்புரத்தினம் எனக்கொரு ஆசை?”

”என்ன ஆசை என்று சொல்லும் ஐயரே”

”என மகள் பறைசாதி இளைஞனை காதலிக்க வேண்டும்”

”அப்படியா..?”

”ஆம், காதலித்து கரம்பிடித்து கண்காணா தேசம் சென்றுவிட வேண்டும்”

”இதென்ன சொல்கிறீர்?”

”இங்கே இருந்தால் வாழ விடுவார்களா? அதனால் பீஜி தீவு போன்ற ஒன்றுக்கு சென்று அங்கிருந்து, அப்பா நான் இன்னாரை காதலித்து மணந்து கொண்டேன். தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என அங்கிருந்து எனக்கு கடுதாசி போட வேண்டும். அதைப் படித்து நான் ஆனந்தக் கூத்தாட வேண்டும்”என்றார்.

நானும் நண்பர்களும் ஐயர் பேசியதைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டோம். இது தான் உண்மையான பாரதி. எப்போதும் புரட்சிகரமாகவே சிந்தித்தும், செயல்பட்டுக் கொண்டும் இருந்தார். இதை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த பாரதி விழாவில் பேசியுள்ளார் பாரதிதாசன்! (ஆதாரம்;  யாமறிந்த புலவன்; கடற்கரை மத்த விலாச அங்கதம்)

மேலும் பாரதிதாசன் சொல்கிறார். பாரதியார் சாதிக் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பார். சாதி ஒழிப்பதும், தமிழ் வளர்ப்பதுமே அவரது தலையாய கொள்கைகளாக இருந்தன.

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்-மற்றப்
பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி- நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்!
சாதிப் பிணிப்பற்ற தோளே.நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார் என்னிடத்தில்” என்று பாரதி என்ற புரட்சிக்காரனை புடம் போட்டு நம் கண் முன் நிறுத்துகிறார் புரட்சிக் கவிஞர். பாரதியோடு ரத்தமும், சதையுமாக நெருங்கி சுமார் பத்தாண்டுகள் பழகிய பாரதிதாசன் தன் அனுபவத்தில் கண்டு சொன்ன பாரதியாரை விட  உண்மையான பாரதியாரை வேறு யார் சொல்ல முடியும்?

Exit mobile version