Site icon சக்கரம்

போர் நிறுத்தம் நீடிக்குமா? உலகப் போராக உருமாறுமா?

-ச.அருணாசலம்

லகின் சகஜ நிலைக்கு வேட்டு வைக்கும் வண்ணம் அமெரிக்கா நிலை நிறுத்த விரும்பும் ஆதிக்க மனோ பாவத்தால், சகல நாடுகளும் பிரச்சினையை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது.  இறுதி வரை போராடும் மன வலிமையுடன் ஈரான் செயல்படுகிறது. போர் நிறுத்தம் என்னாகும்? அமெரிக்கா இன்னும் அத்து மீறுமா? அமைதியாகுமா?

ஏப்ரல் 7-ல் அறிவிக்கப்பட்ட இருவார கால போர் நிறுத்தம் இன்று (ஏப்ரல்-17) முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவில்லை.

பேச்சுவார்தைகளில் உடன்பாடு ஏற்பட்டால் தான் முற்றுகை விலக்கப்படும் என்றும், உடன்பாட்டிற்கு ஈரான் இணங்காவிடில் (deal) ஈரானில் உள்ள ஒவ்வொரு பவர் பிளாண்ட்டும், ஒவ்வொரு பாலமும் தகர்க்கப்படும் என மீண்டும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த மிரட்டலுக்கு பணியாமல் ஈரான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மறுத்து விட்டது.

பொறுத்து பார்த்த ட்ரம்ப் வேறு வழியின்றி, அமெரிக்க தாக்குதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும், ஈரான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டிற்கு வேறு வழியில்லை என புலம்பாத குறையாக அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு போரில் வெற்றி பெற்றவரின் அறிவிப்பாக தெரியவில்லை!

ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்க அமெரிக்காவினால் தொடங்கப்பட்ட இந்த போர், ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதற்காக இன்று அதே ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய இக்கட்டான  சூழலில்  உள்ளது  அமெரிக்கா.

நாற்பது நாள் போருக்கு பின்னர், ஈரான் இன்று உலகின் வர்த்தக போக்குகளை தீர்மானிக்கும் சக்தி மிக்க நாடாக உருவெடுத்துள்ளது. எனவே ஆட்சி மாற்ற போர், அழித்து ஒழிக்கும் போர் என எகிறிய அமெரிக்கா தனது கைமீறி போகின்ற எண்ணெய் வணிகத்தை மீண்டும் தன் வசம் கொண்டுவர ஈரானுடன் பேச வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், போரில் சாதிக்க முடியாததை, முற்றுகையாலோ, மிரட்டலினாலோ சாதிக்க முடியும் என்று அமெரிக்கா நம்புவது தான் பேச்சு வார்த்தைகளின் தோல்விக்கு மூல காரணமாகும்.

உலகின் மொத்த எண்ணெய் வணிகத்தில் 20% – அதாவது ஐந்தில் ஒரு பங்கு- ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது. அதில் 85% விழுக்காடு ஆசிய சந்தைக்கு செல்கிறது, சீனா மட்டுமே ஒரு நாளுக்கு 5.4 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது, இந்தியா நாளொன்றிற்கு 2மி. பீப்பாய்கள் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. ஜப்பானின் நிலையோ இதைவிட மோசம்.

ஐப்பான், தனக்கு தேவையான எண்ணெயில் 95% ம், தென் கொரியா தனக்கு தேவையான எண்ணெயில் 70% ம் மத்திய கிழக்கிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன. பாதிப்பின் – எண்ணெய் இறக்குமதி தடங்கலால்- ஒரு பக்கத்தில் இத்தனை நாடுகள் தவிக்கின்ற நேரத்தில்,மறுபுறம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா (37%), ஈராக் (23%), யு ஏ இ (13%) குவைத்(16%) மற்றும் ஈரானும் தங்களது எண்ணெய் ஏற்றுமதி வணிகத்திற்கு ஹோர்மூஸ் நிரிணையை தான் நம்பி உள்ளன. இந்த நாடுகளும் மறுபுறம் ஏற்றுமதி செய்ய முடியாமல் தடுமாறுகின்றன. இது தவிர,

இயற்கை எரி வாயு (LPG) விவசாயத்திற்கு தேவையான உரங்கள், சல்ஃப்யூரிக் ஆசிட் மற்றும் ஹீலியம் ஆகிய ரசாயன பொருட்களின் வர்த்தகமும் தடைபட்டுள்ளது.

இத்தகைய சக்தி வாய்ந்த கடல் வழிப்பாதை பெப்ரவரி 27 வரை “திறந்தே” இருந்தது. அமெரிக்கா இஸ்ரேலின் பிப்.27 கொலை வெறி தாக்குதலுக்கு பிறகே ஈரானால் இப்பாதை மூடப்படவில்லை “கட்டுப்படுத்தப்பட்டது”.

நீண்ட நெடுங் காலமாகவே உலக எண்ணெய் வணிகத்தை வல்லரசான அமெரிக்கா தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. எண்ணெய் வணிக கட்டுப்பாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, உலக நாடுகளின் பொருளாதார அடிக் கட்டுமானத்தையே சீர்குலைக்கும் வல்லமையை அமெரிக்கா கொண்டுள்ளது. இதன்மூலம் பிற நாடுகளின் எண்ணெய் வணிகத்தை – ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுவேலா நாட்டு எண்ணெய் விற்பனைக்கு தடைகள் விதிப்பதன் மூலம் – தனது கட்டுக்குள் வைத்து ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது.

இது மட்டுமின்றி உலக வர்த்தகத்தை – சுங்க வரிகளை – தாறுமாறாக விதித்து சீர்குலைப்பதும், மிரட்டலின் மூலம் சலுகைகளை பெறுவதும் அமெரிக்க அரசின் – ட்ரம்ப் நிருவாகத்தின்- தற்போதைய கொள்கையாக இருந்தாலும், காலங்காலமாக அமெரிக்கா தனது ஆதிக்கத்தை – அரிய தாதுவான தங்கத்தின் இருப்பை கைப்பற்றி கட்டுக்குள் வைத்திருப்பதோடன்றி, ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஐ. நா சபை, போன்ற சர்வதேச அமைப்புகளின் மூலம் பணக்கார மேலை நாடுகளின் நலன் காக்கும் விதிகளை நடைமுறை படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நிதி ஆதாரத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தான் ஏற்படுத்திய வர்த்தக விதிகளை, பிற நாடுகள் பின்பற்ற வற்புறுத்துவதும், எப்பொழுது அந்த விதிகள் அமெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கிறதோ அப்பொழுதே அவ்விதிகளை மாற்றியமைப்பது என இருவழிகளிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.

ஆதிக்கத்தை நிலை நாட்டவே உலகெங்கும் 750 இடங்களில் இராணுவ தளங்களை அமைத்து, தனது படைகளை நிறுத்தி ஆட்சி செய்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப பட்ட ஈரான் பிரதமர் முகம்மது மஸாடே (Mohammed Mossadegh) வை, 1953-ல் ஈரான் நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவதற்காகவே, ஆட்சியிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பிரிட்டனின் உளவு நிறுவனமான M16 உதவியுடன் தூக்கியெறிந்தது.

தனது கைப் பாவையான ஷாவை ஆட்சியில் அமர்த்தி எண்ணெய் வளத்தையும்,ஈரானின் எண்ணெய் வர்த்கத்தையும் தன் பிடிக்குள் அமெரிக்கா கொண்டு வந்தது. ஆனால், 1979ல் ஷாவின் கொடுங்கோலாட்சி இஸ்லாமிய புரட்சியால் தூக்கியெறியப்பட்டு இஸ்லாமியக் குடியரசு ஈரானில் நிறுவப்பட்டதுடன், அமெரிக்க ஆதிக்கம் இங்கு முடிவிற்கு வந்தது. அன்று முதலே அமெரிக்கா ஈரான் நாட்டை முடக்க பல்வேறு பொருளாதார தடைகளை அமுல்படுத்தி அந்நாட்டை சீர்குலைத்தது.

1970 தொடங்கி எண்ணெய் வர்த்தகத்தை டொலரில் நடத்துவதன் மூலம் , எண்ணெய் ஏற்றுமதி நாடுகளை (OPEC) , தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா, இந்நாடுகளில் இராணுவ தளங்களை அமைத்து அமெரிக்க ஆதிக்கத்தின் அவுட் போஸ்டாக இந்நாடுகளை மாற்றியுள்ளது.

அரபு மக்களின் நலன்களை புறந்தள்ளி அடிமை சேவகம் செய்வதற்காக , ஷேக்குகளை “நாட்டின் அதிபர்களாக “ மாற்றியது. காலப்போக்கில் இந்த முடியரசுகளை ஆபிரஹாம் ஒப்பந்தங்கள் மூலம் இஸ்ரேல் நாட்டுடன் இணைத்து மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கியது. இதனை எதிர்க்க துணியும் நாடுகளை – ஈராக், லிபியா, சிரியா- என ஒவ்வொன்றாக நொறுக்கிவிட்டு ஈரானையும் விழுங்குவதே அமெரிக்க அரசின் நீண்ட நாள் திட்டம்.

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைத்த அமெரிக்கா, வெனிசுவேலா எண்ணெய் ஏற்றுமதிக்கும் நீண்டநாட்களாக தடைகளை விதித்து இருந்தது. இவ்வளவிற்கு பிறகும் அமெரிக்காவால் முன்னை போல் தனிக்காட்டு ராஜாவாக உலக அரங்கில் வலம் வர முடியவில்லை.

சீனாவின் வளர்ச்சியால் உலக தொழிலுற்பத்தி கூடமாக சீனம் மாறியதும், அமெரிக்க நாட்டின் தொழிலுற்பத்தி சுருங்கியதும், தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவின் இணையான முன்னேற்றமும் அமெரிக்க ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்தது.

ட்ரம்ப் 2025-ல் பதவி ஏற்றவுடன், அமெரிக்காவின் பலத்தை காட்ட “லிபரேஷன் டே” வரிச் சுமைகளை விதித்து உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். வர்த்தக வரிகள் மூலம் அமெரிக்க செல்வாக்கை உயர்த்துவதும், எண்ணெய் வளங்களை, இயற்கை தாது வளங்களை கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்காவின் வல்லமையை கூட்டி சீனாவை ஓரங்கட்ட ட்ரம்ப் முயற்சித்தார்.

வெனிசுவேவா நாட்டின் அதிபரை கடத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை அபகரித்த ட்ரம்ப், மத்திய கிழக்கை

நோக்கி தனது பார்வையை செலுத்தினார். அங்கு அடங்க மறுத்து, தனி வழி காணும் ஈரானை வழிக்கு கொண்டு வர, அங்குள்ள ஆட்சியை அகற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நெத்தன்யாகுவும், ட்ரம்பும் ஒரே புள்ளியில் இணைந்தனர். வெனிசுலா போன்று ஈரானையும் தீர்த்து கட்டிவிடலாம் என ட்ரம்பிற்கு ஆலோசனைகள் கூறிய நெத்தன்யாகு இறுதியில் ட்ரம்பை கொண்டே ஈரான் தலைவர்களை கொன்றார்.

இதனை எதிர்பார்த்து தனது கடல் எல்கை முழுவதையும் ‘பாதுகாப்பு அரணாக’ மாற்றியிருந்த ஈரான், ஹோர்மூஸ் நீரிணையை இழுத்து மூடியது, எதிரி நாடுகளின் கப்பல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியது. ஈரானின் அனுமதியின்றி எந்த கப்பலும் அங்கு பயணிக்க முடியாத சூழல் உள்ளது. அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுடன் கை கோர்த்து நிற்கும் வளைகுடா நாடுகளை ஈரான் எச்சரித்தது. அங்குள்ள அமெரிக்க தளங்களை தாக்கி அழித்தது. ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடக்கும் எண்ணெய் வணிகத்தை கட்டுப்படுத்த தொடங்கியது.

கடற்பாதை சுதந்திரம் (Freedom of Navigation) என்ற பெயரில் வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தையும், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகளையும் தன் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருப்பதாக மார் தட்டிய அமெரிக்கா, ஈரான் திருப்பியடித்த வேளையில் வளைகுடா நாடுகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காமல் ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக இடம் மாற்றியது வளைகுடா நாடுகளை சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.

ஈரான் தாக்க பட்டால், ஈரானின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தால் இந்த பகுதியில் யாருடைய (எந்த நாட்டு) பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்று ஈரான் கூறியது.

“எல்லா நாடுகளுக்கும் பாதுகாப்பும், வளமும் கிடைக்க வேண்டும் இல்லையெனில், யாருக்கும் பாதுகாப்பும் இல்லை, வளமான எதிர்காலமும் இல்லை” (Security and Prosperity for All or Security and Prosperity for None) என்று ஈரான் அடித்து கூற ஆரம்பித்தது.

இதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ள நாடுகள் வளைகுடா நாடுகள் மட்டுமல்ல, எண்ணெய், உரம்,எரிவாயு மற்றும் வேதிய பொருட்களை இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகள் அனைத்திற்கும் இது மிகப்பெரிய சவாலாகும்.

பொருளுற்பத்திக்கும், மக்களின் அன்றாட வாழ்விற்கும் தேவையான எண்ணெய் உரம் போன்றவைகளுக்கு தட்டுப்பாடு வந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கி விடும் அபாயம் உள்ளதால் மேற்காசியாவில் அமைதியும் குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்தும் ஆசிய நாடுகளின் அடிப்படை தேவைகள் ஆகும்.

ஈரானை தாக்குவதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுமானால் அதை தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு உள்ளது என்று ஈரான் சுட்டிக் காட்டுகிறது. எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு ஈரானை தாக்குவதற்கு துணை போனால் அந்த நாடுகளின் வளங்களும் , நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் தகர்க்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இத்தகைய அபாயம் நேர்ந்தால், பெட்ரோ டாலரின் பட்டொளியால் ஜொலிக்கும் வளைகுடா நாடுகள் குடிக்க தண்ணீரின்றி சுடுகாடாக மாறும் நிலை ஏற்படும்!

இதற்கு வளைகுடா நாடுகள் தயாரா?

ஈரான் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை, அணுகுண்டு தயாரிக்கவும் இல்லை. ஆனால், மின்சார உற்பத்திக்கும் ஏனைய இராணுவம் சம்பந்தப்படாத பணிகளுக்கும் அணுசக்தியை பயன்படுத்துவது ஒரு நாட்டின் உரிமை என்று ஈரான் கூறுவதை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்க மறுப்பதால் இந்த நிலை உள்ளது. இந்த காரணத்தை கூறி ஈரானை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் துடிக்கின்றன.

தலைக் கனம் மிகுந்த ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றது போர் வெறியன் நெத்தன்யாகுவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. இதுவரை எத்தனையோ அமெரிக்க அதிபர்களை ஈரான் மீது தாக்குதல் நடத்துமாறு நெத்தன்யாகு தூண்டினாலும், ஒருவரும் அந்த மாய வலையில் விழாது தப்பித்தனர். ஆனால் வீண் பெருமை பேசும் வம்பரான ட்ரம்ப். ‘’ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, தானே விழுமாம் கழனிப் பானையில் துள்ளி“ என்பதற்கிணங்க பல்லியை போல் நெத்தன்யாகுவின் பேச்சை கேட்டு போரில் குதித்து இன்று வெளியேற வகையின்றி திணறுகின்றார்.

வகையின்றி மாட்டிக் கொண்ட ட்ரம்பினால், போரிலிருந்து வெளியேற முடியுமா? அதற்காக அவர் பேச்சுவார்த்தைகளை உபயோகிக்கிறாரா? அல்லது மீண்டும் போரை துவக்கி எச்சரித்தபடி அழித்து விட போகிறாரா? பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதை நெத்தன்யாகு விரும்ப மாட்டார், பேச்சுவார்த்தை தோல்வியடைய என்னவெல்லாம் செய்வார் நெத்தன்யாகு? எல்லோரும் நினைப்பது போல் எப்ஸ்டீன் கோப்பை காட்டி ட்ரம்ப்பை மிரட்டுவாரா?

அமெரிக்க யூத லாபி ட்ரம்ப் , போரிலிரிந்து பின் வாங்குவதை அனுமதிப்பார்களா? அல்லது அழுத்தம் கொடுப்பார்களா ?

ட்ரம்ப் மீண்டும் போரை விரிவு படுத்தினால், அவரது ஆதரவாளரகள் அவரை கழட்டி விடுவார்களா, வரவிருக்கும் செப்டம்பர் இடைத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவினால் ட்ரம்ப் பின் அரசியல் எதிர்காலம் சூன்யமாகிவிடாதா? என்று பல கேள்விகள் எழுந்தாலும், யாராலும் இதற்கு முடிவான பதிலை கூற முடியவில்லை.

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க முற்றுகை இடுவது போர் தொடுக்கும் செயல், இது போர் நிறுத்தத்தை மீறும் செயல் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறியுள்ளார்.

சற்று முன்னர் வந்த தகவலின்படி அமெரிக்க ஏவுகணை இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாக சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது. குறி பார்த்து தாக்கும் (Precision Strike Missiles) ஏவுகணைகளின் இருப்பு 55% மட்டுமே,

தாட் ஏவுகணைகள் இருப்பு 50% மட்டுமே டோமோஹாக் ஏவுகணைகளின் இருப்பு 70% மட்டுமே என்று அந்த செய்தி கூறுகிறது. இவைகளை வைத்துக்கொண்டு உக்ரைனிலும் மேற்காசியாவிலும் அமெரிக்கா தாக்கு பிடிக்க முடியுமா? எனவே, பேச்சு வார்த்தைகள் நடத்தி ட்ரம்ப் போரிலிருந்து வெளியேறுவார் என கணிப்பாரும் உண்டு.

ஆனால், வெற்றி என்ற சொல்லைத் தவிர வேறெதையும் ஏற்க தயங்கும் ட்ரம்ப் போரை நிறுத்த எந்த வெற்றிக்கனியை அமெரிக்க மக்களிடம் காட்டுவார் என பலரும் கேட்கின்றனர். நிலையற்ற மனிதனின் தலைமையில் அமெரிக்க நிருவாகம் தடுமாறுகிறது.

அமெரிக்க கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் ட்ரம்பிற்கு ஆதரவளிக்கவில்லை.

ஸ்பெயின் இந்த யுத்தத்தை எதிர்க்கிறது, இத்தாலியோ ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது, இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஒத்தி வைத்துள்ளது, பிரானசு நாடும் ஈரானுடன் பேச விரும்புகிறது.

வளைகுடாவில் ஓமனும் கத்தாரும் ஈரானுடன் சமரசமாக போக விரும்புகின்றன. யு.ஏ.இ எண்ணெயை டொலரில் இல்லாமல் யுவான் கரன்சியில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

ஈரானை அமெரிக்கா தாக்கி அந்நாட்டின் கட்டுமானங்களை தகர்த்தால், ஈரான் வளைகுடாவிலுள்ள OPEC நாடுகளையும் அதன் எண்ணெய் கிணறு உட்பட அனைத்து கட்டுமானங்களை தகர்த்து அழிக்கும். இதனால் உலகம் முழுவதும் இருளிலும், மந்தமான தொழில் உற்பத்தியிலும் மூழ்கி மெல்லச் சாகும். இப்படி மெல்லச் சாவதை உலக நாடுகள் சகித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்தி, உலகம் அழிவதை தடுக்க முன்வருமா? என்ற அடிப்படை சவால் உலக நாடுகளின் முன்னர் உள்ளது .

உலக நாடுகள் தங்கள் குரலை உறுதியாக உயர்த்த, சீனாவும் ரஷ்யாவும் உலக அமைதிக்காக, நாடுகளின் சுதந்திரம், இறையாண்மையை பேணுதல், உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை தவிர்த்தல் போன்ற கொள்கைகளை வலியுறுத்தி, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தலைமை தாங்க வேண்டும். வெறும் வார்த்தைகளும், நிழல் யுத்தமும் அமெரிக்காவை கட்டுப்படுத்தாது, ஏனெனில் அங்கு அதிபராக இருப்பது ட்ரம்ப் என்ற பைத்தியக்காரன்.

Exit mobile version