Site icon சக்கரம்

இவோ மொரேல்ஸை பாதுகாக்க மக்கள் போராட்டம்! விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்!!

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவோ மொரேல்ஸை (Evo Morales) கடத்த அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியுள்ள நிலையில் அவரை பாதுகாப்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். குறிப்பாக இராணுவ விமானங்கள் தரையிறங்குவதை தடுப்பதற்காக அவரது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு விமான நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக தனது இராணுவத்தை வெனிசுலாவிற்குள் அனுப்பி குண்டு வீசி அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கா கடத்திச் சென்றது. இதே போல தற்போது மற்றொரு தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியான இவோ மொரேல்ஸை கடத்துவதற்கு அந்நாட்டு இராணுவத்துடன் அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

சதித்திட்டம் அம்பலம்

பொலிவியாவில் பூர்வகுடி மக்களின் நில உரிமைகளைப் பறிக்கும் வகையில் அந்நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் கொண்டுவந்துள்ள புதிய “சட்டம் 1720”-க்கு (Law 1720) எதிராக அந்நாட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலைநிறுத்தமும், சாலை மறியல்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொலிவிய அரசு ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில் தான் இவோ மொரேல்ஸை கடத்துவதற்கு போடப்பட்ட சதித்திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் கசிந்தன. இந்த தகவல் அறிந்த ஆயிரக்கணக்கான பொலிவிய மக்கள் மொரேல்ஸ் பாதுகாப்புக்காக அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மேலும் சில ஆயிரம் மக்கள் போர் விமானங்கள் தரையிறங்குவதை தடுக்கும் வகையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு விமான நிலையத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கறுப்பு ஒக்ரோபர் தொடர்புடையவர்கள்

இந்த சதித்திட்டத்தில் தற்போதைய ஜனா திபதி, பொலிவிய இராணுவத்தின் ஒன்பதாவது பிரிவு கர்னல் ஃபிரான்ஸ் ஆண்ட்ரேட் லோசா உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்களுக்கும் நேரடித்தொடர்பு உள்ளது.

குறிப்பாக 2003 ஆம் ஆண்டு அந்நாட்டில் இருந்த இயற்கை எரிவாயு வளங்களை அமெரிக்காவின் கோர்ப்பரேட்டுகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கொன்சாலோ சான்செஸ் டி லொசாடா (Gonzalo Sánchez de Lozada) குறைந்த விலைக்கு தாரை வார்த்தார். இதற்கு எதிராக இவோ மொரேல்ஸ் தலைமையில் நாடுமுழுவதும் பழங்குடி மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போராட்டத்தை முடக்க இராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்தி மக்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்தார். இந்த படுகொலை கறுப்பு ஒக்ரோபர் (Black October) என கூறப்படுகிறது. இந்த கொலைகளில் தொடர்பு கொண்ட அன்றைய ஆட்சியாளர்களும் தற்போதைய சதித்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரி தலைவர்களுக்கு எதிராக சதித்திட்டங்களை அரங்கேற்றுவது, அவர்களது ஆட்சிகளை கவிழ்ப்பது தொடர்பாக ஹோண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி, ட்ரம்ப், ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி மிலெய் உள்ளிட்டவர்கள் பேசியது தொடர்பான இரகசிய ஓடியோக்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் மொரேல்ஸ்க்கு எதிரான சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

Exit mobile version