Site icon சக்கரம்

யார் இந்த கரப்பான் ஜனதா கட்சி?

-யோகேந்திர யாதவ் (Yogendra Yadav)

ழக்கமான அரசியல் பகுப்பாய்வின் கணக்குகளால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அது புத்திசாலித்தனமான, பயனற்ற கேள்விகளை எழுப்புகிறது: யார் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள்? இதன் நோக்கம் என்ன? அடுத்த கட்டம் என்ன? இப்படிக் கேள்வி கேட்பது நிழலை எடை போட முயற்சிப்பது போன்றது, அதில் கிடைப்பது அவர்களின் கற்பனைகள் அல்லது கொடுங்கனவுகள் மட்டுமே. அரசியல் மனப்பாங்குடையவர்கள் ஒரு கவிஞரிடமோ அல்லது உளவியலாளரிடமோ கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமிது.

யார் இந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி?

காக்ரோச் ஜனதா பார்ட்டி (Cockroach Janta Party) குறித்து எழும் பெரும்பாலான எதிர்வினைகள் ஒரு எளிய உண்மையைப் பார்க்கத் தவறுகின்றன. சி.ஜே.பி (CJP ) என்பது ஒரு கட்சி அல்ல. அது பொதுமக்களும் அல்ல; ஆனால் பொதுமக்களைவிட அதிகமோ அல்லது குறைந்ததோ அல்ல; அது ஒரு சமூகமல்ல; ஒரு கூட்டமும் அல்ல. அது உணர்வுகளின் ஒரு குவியல். அது ஒரு இயக்கமாக ஆவதற்கு மிகத் தூரத்தில் உள்ளது. அது ஒரு தருணம் மட்டுமே.

அரிதான தரிசனம்

அதனால்தான் அது முக்கியமானது. அதனால்தான் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இது ஒரு தருணம்; ஆனால் அது நமக்கு ஒரு தரிசனத்தை வழங்குகிறது. அரிதாகக் கிடைக்கும் ஒரு தரிசனம். அதிகாரவாதத் தாக்குதலிலிருந்து இந்திய குடியரசை மீட்டெடுக்கக்கூடிய ஒரு ஆற்றலின் தரிசனம் அது. இதை நாம் ஒரு அலை அல்ல, ஒரு அடிநீரோட்டம் என்று உணர்ந்தால் மட்டுமே; இதை கைப்பற்ற வேண்டும் என்ற முட்டாள்தனமான ஆசையை எதிர்த்து நிற்க முடிந்தால் மட்டுமே; அல்லது அதன் வழியில் நின்று மறிக்கும் பிடிவாதப் பழக்கத்தைத் தவிர்த்தால் மட்டுமே, அந்த தரிசனத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

எமர்ஜென்சிக்கு முந்தைய குஜராத், பீகார் இயக்கங்கள்

முதலில் பார்ப்பதற்கு இது, மிகப் பெரிய பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்யும் அரசுகளின் மத்தியில் உருவாகும் ஒரு பரவலான நெருக்கடியின் ஒரு கூறாகத் தோன்றுகிறது; அதிகாரத்தின் பலவீனமான உட்பகுதியை வெளிக்கொணர எங்கிருந்தோ திடீரென தோன்றும் போராட்ட இயக்கங்களின் வரிசையில் இதையும் சேர்த்துப் பார்க்கத் தோன்றுகிறது.

ஓங்கிய பாஜகவின் கைகள்

நரேந்திர மோடி அரசு இப்போது அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, கடந்த ஒரு தசாப்தமாக அது அனுபவித்துவந்த ஆதிக்கத்தையோ சட்டபூர்வத் தன்மையையோ அது மீண்டும் பெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக மேற்குவங்கத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய பின்னர், பாஜக அரசு மீண்டும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது; இருந்தாலும் அதன் சட்டபூர்வத் தன்மை இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளது. தேர்தல் முறையை நெரித்துக்கொல்ல முயன்ற ஆளும் கட்சியின் செயல்கள் குறித்து சந்தேகங்கள் பலமாக எழுந்த நேரத்தில்தான் சிஜேபி தோன்றியதென்பது தற்செயலானதல்ல. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் ஒரு சந்தர்ப்பம் மட்டுமே; காரணம் அல்ல.

ஆனால் இந்தத் தருணம், மேலே கூறப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைவிட முக்கியத்துவத்தில் மிகவும் அதிகமானதோ குறைந்ததோ அல்ல. முதலில் இதில் ஈடுபடுகிறவர்களுக்கு, இது தரையில் வேரூன்றிய அரசியல் ஆற்றலின் உண்மையான வெளிப்பாடு அல்ல. சமூக ஊடகங்களில் ஒருங்கிணைந்த கோபத்தை உருவாக்குவது ஒரு விஷயம்; அதை வேர்க்கால் மட்டத்திலான இயக்கமாக மாற்றுவது முற்றிலும் வேறு விஷயம். அதைவிட, அதை ஒரு செயல்திறன் மிக்க மாற்று அரசியல் சக்தியாக உருவாக்குவது எல்லாவற்றையும்விடக் கடினமானது.

சி.ஜே.பி (CJP) எதிர்ப்பியக்கத்தின் அடையாள அம்சம்

தொடக்க நிலையில் இருக்கும் இந்த சி.ஜே.பி மேலே சொன்னவற்றில் எங்குமே இல்லை. இதற்கு ஒரு நிறுவனர் இருக்கிறார்; ஆனால் ஒரு தலைவர் இல்லை. அதன் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் வெறும் பார்வையாளர்களாகவோ, அல்லது நிஜ அரசியல் செயல்பாடுகளுக்கான மன உறுதி குறைவான ஆர்வலர்களாகவோ இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர், குறிப்பிட்ட எதிரியை நோக்கியதல்லாத, ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய குறைகளையும் வெறுப்புகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம். எர்னெஸ்டோ லக்லாவின் கூற்றுப்படி, இத்தகைய பிரபலமான மக்கள் எதிர்ப்பியக்கங்களின் அடையாள அம்சமே அதுதான். சக்திவாய்ந்த இயக்கங்கள் இதுபோன்ற மூல ஆற்றலைக் கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றன .

காக்ரோச் ஜனதா பார்ட்டி கரப்பான் பூச்சி சின்னத்தை ஏன் தேர்ந்தெடுத்தது?

அதிகாரவாதம் வளர்ந்து வரும் சூழலில், சி.ஜே.பி இதுபோன்ற “குழப்பமான செயலை” (dilemma action) தன்னுடைய சின்னமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இதனைச் சிறப்பானதாக்குகிறது. செர்பிய சிந்தனையாளர் ஸ்ர்தா போபோவிச் வலியுறுத்தியபடி, அமைப்பை கையகப்படுத்துவதற்காக அல்ல, அதை கிண்டலாக்குவதற்காக கரப்பான் பூச்சியை ஒரு சின்னமாக எடுத்துக்கொள்வது, நகைச்சுவையும் கணிக்க முடியாத விளையாட்டுத்தனமும் வன்முறையில்லாத எதிர்ப்பின் முக்கிய கருவிகள் என்பதற்கான உதாரணமாகும்.

கிண்டல் அரசியலும் எதிர்வினைகளும்

தனது Pranksters vs. Autocrats (கார்னெல் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2020) என்ற நூலில், போபோவிச்சும் சோபியா ஏ. மெக்லென்னனும் ஏன் இப்படிப்பட்ட கிண்டல் அரசியல், வழக்கமான எதிர்க்கட்சிகள் வெற்றியடையாத இடங்களில் வெற்றி பெறுகிறது என்பதை விளக்குகின்றனர். இத்தகைய போராட்டங்கள் அதிகாரவாத ஆட்சியாளர்களை ஒரு குழப்பத்தில் தள்ளுகின்றன. அந்தக் கிண்டல் அரசியலை அனுமதித்தால் அவர்கள் பலவீனமாகத் தோன்றுவார்கள்; அதை ஒடுக்கினால் அவர்கள் கொடூரமானவர்களாகவும் அபத்தமானவர்களாகவும் தோன்றுவார்கள். ஜனநாயக எதிர்ப்பியக்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முன்மாதிரியை சிஜேபி வழங்குகிறது.

எதிர்க்கட்சிகளுக்கான செய்தி என்ன?

அதைக் காட்டிலும் முக்கியமாக, இந்தப் போராட்ட முறை, இன்றைய இந்தியாவின் அரசியல் யதார்த்தத்தை தெளிவாகப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. முதலாவதாக: தேர்தல் வெற்றியைச் சுற்றி உருவாக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை எவ்வளவானாலும் அதைக்கொண்டு மக்களின் அதிருப்தியை மறைத்துவிட முடியாது. குறிப்பாக இளைஞர்களிடையே பரவலாகக் காணப்படும் அதிருப்தியை மறைத்துவிட முடியாது. இரண்டாவதாக: ஒரு சக்திவாய்ந்த ஆட்சியானது சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்படும் ஒரு கேலியைத் தடை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு என்னும் காரணத்தை முன்வைத்தால், சோஷியல் மீடியாவில் செயல்படும் தனது தாக்குதல் படையை ஏவி ஒரு சோஷியல் மீடியா ட்ரெண்டை அவதூறு செய்யுமானால் அந்த அரசு உள்ளுக்குள் மிகவும் பலவீனமானதாக இருக்கிறது என்று அர்த்தம். மூன்றாவதாக: நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற அளவில் செயல்படவில்லை. சிஜேபியின் சுமார் 2.3 கோடி பின்தொடர்பவர்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: “உங்கள் செயலை ஒருமுகப்படுத்துங்கள்.”


சிஜேபி-க்கு (CJP) எதிர்வினை என்ன?

எனவே, காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு எதிர்வினையாற்ற நாம் ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். வழக்கமான அரசியல் அவநம்பிக்கை, தந்திரமாக விலகி நிற்றல், அல்லது அரவணைத்துக்கொள்ளும் உத்தி ஆகியவற்றிலிருந்து மாற வேண்டும். வினோத் குமார் ஷுக்லாவின் மிகவும் பிரபலமான கவிதை நம்மைப் பரவலாக நிலவும் விரக்தியை எதிர்கொள்வதற்கு ஒரு புதிய அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கணத்தை உருவாக்குமாறு நிர்ப்பந்திக்கிறது #:

(“அவர் என்னை அறிந்திருக்கவில்லை; ஆனால் நான் நீட்டிய கையை அவர் அறிந்திருந்தார்… நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை; ஆனால் ஒன்றாக நடப்பதை அறிந்திருந்தோம்.”)

“காக்ரோச் ஜனதா பார்ட்டி (சி.ஜே.பி CJP) .. இது புரட்சியாளர்களின் தோழமை அல்ல; முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு இடையேயான பந்தம். பொதுவான அடையாளத்தில் பிறந்த பிணைப்பு அல்ல; பொதுவான பலவீனத்தில் உருவான இணைப்பு.

இந்த இளைஞர்கள் நம்மை அறியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை நோக்கி நாம் நீட்டும் கையை அடையாளம் காண்பார்கள். நாம் ஒருவரையொருவர் அறியாமல் இருக்கலாம். ஆனால் இந்த இருண்ட காலத்தில் நாம் ஒன்றாகச் சேர்ந்து நடக்கக் கற்றுக்கொள்வோம்.

மூலம்: Best of Both Sides: Cockroach Janta Party frames raw energy, undercurrent

தமிழாக்கம் : ரவிக்குமார்

Exit mobile version