Site icon சக்கரம்

இலங்கை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்பு ​சிறை​யில், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் கைதிகள் இரு குழுவினருக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக சிறைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

நேற்று (05.07.2026) பிற்பகல் சிறைக்கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 34 பேர் காயமடைந்திருந்தனர். இன்று (06.07.2026) அதிகாலை நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை அடுத்து, நீர்கொழும்பு உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்குவர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1800 வரையான சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகள் என இரண்டு தரப்பும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிக்கின்றது,

இவ்வாறு நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டமொன்றையும் நடாத்தியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்கவில்லை என தெரிவித்து, கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்தில் அமைதியற்ற முறையில் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது,

இவ்வாறான பின்னணியில் நேற்றைய தினம் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்திருந்தது.

இன்று மீண்டும் மோதல்

நேற்றைய தினம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மோதல் மீண்டும் இன்றைய தினம் வலுப்பெற்றிருந்தது.

சிறைச்சாலையிலிருந்த கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸாருக்கு மேலதிகமான விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸார் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்ட சத்தம், சிறைச்சாலைக்கு வெளியில் கேட்கக்கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சிறைச்சாலைக்குள் இருந்த காயமடைந்த நிலையிலும், மயக்கமடைந்த நிலையிலும் கைதிகள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பு பிரிவினர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் காட்சிகளை காண முடிந்தது,

சிறைச்சாலைக்குள் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருவதை காண முடிகின்றது,

Exit mobile version