–வேட்டையன்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் உட்பட பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்தின்போது களத்தில் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 ஆம் திகதி போராட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி சி.ஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாண.வர்கள் பங்கேற்றனர். இதேபோல, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
‘ஆசாதி’ என உரத்த குரலில் முழக்கமிட்டு போராடி வரும் மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர். மேலும், மாணவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிலை நீடிக்கிறது.
இத்தகைய சூழலில் போராட்ட களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது காலத்துக்கும் இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் அந்த படங்கள் பயனர் பலரது ஸ்டேட்டஸ், ஸ்டோரிகளாக அணிவகுத்து நிற்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை மீட்ட இளம்பெண்
கடந்த புதன்கிழமை (22.07.2026) அன்று மும்பை நகரில், கொட்டும் மழைக்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் காவல் துறையின் வாகனத்தை ஒற்றை கையால் மறித்து, அதன் முன் நிற்கும் படம் சமூக வலைதளத்தில் அதிகளவில் கவனம் பெற்றுள்ளது.
மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து, வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த வாகனத்தை மறித்து, அவர்களை விடுவிக்க வேண்டுமென அந்த இளம்பெண் வலியுறுத்தி உள்ளார். அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் துணை நின்றனர். இறுதியில் காவல் துறையினர் வாகனத்தில் இருந்தவர்களை விடுவித்துள்ளது.
‘நான் காவல் துறை வாகனத்தை எதிர்கொண்டபோது எனக்குள் கொஞ்சம் நடுக்கம் இருந்தது. இருந்தாலும் நான் செய்வது சரிதான் என்று கருதினேன்’ என்று அந்த இளம்பெண் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவரது புகைப்படம் மட்டுமல்லாது வீடியோவும் வெளியாகி, அது வைரல் ஆகியுள்ளது.
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
சி.ஜே.பி ஒருங்கிணைத்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தடுக்கும் வகையில் டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இளம் பெண் ஒருவர், சக போராட்டக்காரர்களை காக்கும் வகையில், காவலரின் தடியடி குறித்து அச்சம் கொள்ளாமல், அதை தடுக்கும் வகையில் நின்ற புகைப்படமும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
-இந்து தமிழ்
2026.07.24

