
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பங்களுக்குப் பயிற்சி அளிக்க மனிதர்களின் உண்மையான அறிவு (எழுத்துகள்) தேவைப்படுவதால், பழைய புத்தகங்களை மொத்தமாக வாங்கி ஸ்கேன் செய்து விட்டு அவற்றை அழிக்கும் நடைமுறை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், தங்கள் அதிநவீன ஏஐ (AI) மொடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக (Training data) பழைய புத்தகங்களை மொத்தமாக வாங்கி வருகின்றன. பல அரிய மற்றும் மறுபதிப்பில் இல்லாத பழைய புத்தகங்கள் என அனைத்தும் பழைய புத்தகக்கடைகள் மூலமாக வாங்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டு அந்த அறிவு செயற்கை நுண்ணறிவுக்கு கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அப்புத்தகங்களை மீண்டும் சரியான முறையில் பைண்டிங் செய்து பாதுகாப்பதற்கு பதிலாக உட னடியாக அழிக்கப்படுகின்றன.
இத்தகைய நடைமுறையின் காரணமாக எதிர்காலத்தில் இலட்சக்கணக்கான பழைய புத்தகங்கள் இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic), தனது புகழ்பெற்ற ‘கிளாட்’ (Claude) AI மொடல்களை உருவாக்கும் போது, சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கிய இலட்சக்கணக்கான புத்தகங்களை ஸ்கேன் செய்து விட்டு அழித்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
சர்வதேச தரப்படுத்தப்பட்ட புத்தக எண் தரவுத்தளம் (ISBNdb) உலகின் மிகப்பெரிய புத்தகத் தரவுத்தளமாக உள்ளது. இவர்கள் தான் தற்போது ஏஐ நிறுவனங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் திரட்டிக் கொடுக்கும் தொழிலை தீவிரமாகச் செய்து வருகின்றனர். இணையதளங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி முறைகளால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் மனித எழுத்துகளின் தரத்திற்கு இணையானதாக இல்லை.
அதே நேரத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் முற்றிலும் மனிதர்களால் எழுதப்பட்டு, தரமான அசல் மனித அறிவோடு இருப்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு புத்தகங்கள் தங்கச் சுரங்கமாக உள்ளன. ஒருபுறம் மொத்த விற்பனை மூலம் புத்தக கடைகளுக்கு தேவையற்ற பழைய புத்தகங்களை விற்று இலாபம் பார்க்க முடிந்தாலும், எந்தவித மதிப்பீடும் செய்யப்படாமல் அரிய மற்றும் மீண்டும் கொண்டுவர முடியாத பொக்கிஷங்களான பழைய புத்தகங்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவது மன்னிக்க முடியாத இழப்பு என்கின்றனர் ஐரோப்பிய புத்தக வர்த்தகர்கள்.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழைய புத்தக விற்பனையாளர்கள் சமீப காலமாக சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். எவ்வித தொடர்பும் இல்லாத, வெவ்வேறு தலைப்புகளில் சிறந்த மற்றும் நிபுணத்துவம் தொடர்பான புத்தகங்களைச் சிலர் மொத்தமாகக் கொள்முதல் செய்கிறார்கள். வாங்குபவர்கள் யாருக்காக வாங்குகிறார்கள் என்ற விவரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மேம்படுத்துகின்ற ஆய்வகங்களின் நேரடி அல்லது மறைமுக வேலைகளாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
பொதுவாக பழைய புத்தக்கடைகள் விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் மலிவு விலையில் அறிவை கடத்தும் இடமாக உள்ளன. அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்க முடியாதவர்கள் பழைய புத்தக்கடைகளில் தங்களுக்கு தேவையான புத்தகங்களைப் பெறுவார்கள். மறுபதிப்பு வராத அல்லது பதிப்பில் இல்லாத இலட்சக்கணக்கான புத்தகங்கள் இத்தகைய பழைய புத்தகக்கடைகளில் மட்டும் தான் கிடைக்கும். அவை கோர்ப்பரேட் நிறுவனங்களால் அழிக்கப்படும் போது புத்தகத்தின் தேவை உள்ள ஒருவரது உரிமை மறுக்கப்படுகிறது. அப்புத்தகங்களின் அறிவை செயற்கை நுண்ணறிவு நமக்கு வழங்கினாலும் மூலப்பிரதிகளில் இருந்து கிடைக்கும் அனுபவமும் உணர்வும் இந்த செயல்முறை காரணமாக துண்டிக்கப்படுகிறது என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.

