-சாவித்திரி கண்ணன்
உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகார மிரட்டல்களுக்கு அடங்க மறுக்கும் நாடாக ஈரான் இருக்கிறது. இதனால் ஈரானுக்கு பல பொருளாதாரத் தடைகளை உருவாக்கியதோடு, அங்கு அரசுக்கு எதிரானவர்களை உருவாக்கி பண உதவியும் தந்து குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது அமெரிக்கா – ஓர் அலசல்:
திட்டமிட்டு வெனிசுவேலாவிற்குள் நுழைந்து அதன் அதிபரை கைது செய்து அந்த நாட்டை அமெரிக்க இராணுவம் கொண்டு முற்றுகையிட்டதையடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை எடுக்க கோர்ப்பரேட் நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை அகில உலகமும் அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஈரானின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்காவின் கழுகு பார்வை தீவிரமடைந்துள்ளது.
ஈரானில் அமெரிக்காவின் சூழ்ச்சியால் அரங்கேறியுள்ள பணமதிப்பிழப்பு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் கோபத்தை அந்த அரசுக்கு எதிராக மடை மற்றம் செய்து வரும் அமெரிக்க ஆதரவாளர்கள் அங்கு கடந்த 3 வாரங்களாக அரசாங்கச் சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு அசாதாரண நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2,500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 150 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 18,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகிய செய்திகள் அங்குள்ள கொந்தளிப்பை நமக்கு உணர்த்துகின்றன.
ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ”வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு எதிராக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, விரைவாக மரண தண்டனை விதிக்கப்படும்” என்று அந்நாட்டின் நீதித் துறை தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை நிலைமையை மேலும் சிக்கலாக்கி வருகிறது. ஈரானில் தகவல் தொடர்பு, இணைய வசதிகள் தற்போது முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”ஈரானியர்களே துணிந்து போராடுங்கள் உங்களுக்கு தேவையான உதவிகள் தந்து கொண்டே இருப்போம் எனக் கூறியுள்ளார்…” என அறிவித்துள்ளார். மறுபுறம் இஸ்ரேலிய இராணுவமும் ஈரான் மீது பாய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாம்.
அமெரிக்காவின் தொடர் தடைகளால் ஈரான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் ரியால் எனப்படும் நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிட்டது. மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவேற்றுவதே சவால் ஆனதால் மக்களின் கோபம் அதிகரித்துள்ளது.
இதனை முடிந்தவரை சமாளித்து வரும் ஈரான் அமெரிக்க அச்சுறுத்தலுக்காக இராணுவத்திற்கும் கணிசமான நிதியை ஒதுக்குவதால் நாட்டில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது கூட சிரமம் ஆகிவிட்டது.
மேலும், அந்நாட்டு அரசின் காலத்திற்கு ஒவ்வாத தீவிர மதவாத அணுகுமுறையும் மக்கள் கொதிப்படைய மற்றொரு காரணமாகிவிட்டது. இதனால், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், சட்டம் – ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வீதிகளில் பிணக் குவியலோடு இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை சாக்காக்கி ஈரானில் தன் ஆதரவு பொம்மை அரசை நிறுவி ஆயில் வளங்களை அள்ள அமெரிக்கா துடிக்கிறது.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் உள் நாட்டு போரில் மூக்கை நுழைத்து ஆதாயம் தேட நினைப்பதை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ”ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய நட்பு நாடான ரஷ்யா, அந்த நாட்டில் வெளிநாட்டு தலையீட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ”ஈரானில் ஆட்சிமாற்றம் அல்லது இராணுவ அழுத்தம் ஏற்படுத்தும் முயற்சிகள், மத்திய கிழக்கு முழுவதையும் மேலும் நிலையற்றதாக்கும். அதன் விளைவுகள் உலக நாடுகளையே பாதிக்கும். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நாடுகள் தலையிடுவது மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். தற்போதைய போராட்டங்களை ஒரு காரணமாக கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்தும் எந்த முயற்சியும் மத்திய கிழக்கு மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்” என்று ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
”கடந்த 2025 ஜூன் மாதத்தில் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மீண்டும் தொடர இஸ்ரேலோ, அமெரிக்காவோ நினைக்குமானால், அதன் பேரழிவான விளைவுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பேராசையால் உலகத்தின் சிறிய நாடுகளில் அமைதியின்மையும், மனிதப் பேரழிவுகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. ஈரான் நாட்டோடு வர்த்தக தொடர்பில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்கபடும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியவிடம் இருந்து அதிக அளவில் பசுமதி அரிசியை கொள்முதல் செய்து வந்த ஈரானோடு இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்வது கேள்விக்குறியாகி உள்ளது. இது ஈரானில் உணவு பஞ்சத்தை உருவாக்க வழி செய்யும். அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கையால் ஈரானுக்கு பசுமதி அரிசி ஏற்றுமதி செய்து வந்த இந்திய விவசாயிகளும் கடுமையாக பாதிக்கபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக் காஷ்மீரிலும், லடாக்கிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகளும், போருக்கு எதிரானவர்களும் அமெரிக்காவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

