Site icon சக்கரம்

டொலர் ஆதிக்கம் முடிவுக்கு வருகின்றது

-முகிந்தன் துரைராஜசிங்கம்

டொலர் என்பது வெறும் ஒரு கரன்சி அல்ல, அது அமெரிக்கா உலக நாடுகளின் மீது வீசியிருக்கும் ஒரு “கண்ணுக்குத் தெரியாத வலை”.

இந்த வலை அறுந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமெரிக்கா பல முனைகளில் போர்க்களங்களை திறக்கத் துடிக்கிறது.

நாம் காணும் பல இராணுவ மோதல்களும், அரசியல் மாற்றங்களும் உண்மையில் இந்த டொலர் மேலாதிக்கத்தை (Dollar Hegemony) தக்கவைக்க அமெரிக்கா நடத்தும் இறுதிப் போரே ஆகும்.

1970-களில் இருந்து அமெரிக்காவின் உலகளாவிய பலமே, கச்சா எண்ணெயை டொலரில் மட்டுமே வாங்க வேண்டும் என்ற ஒப்பந்தம்தான்.

ஆனால், தற்போது சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவுடன் தங்களது சொந்த கரன்சிகளில் (யுவான்/ரூபிள்) எண்ணெய் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

டொலருக்கான உலகளாவிய தேவை (Global Demand) வீழ்ச்சியடையும் போது, அமெரிக்காவால் முன்னரைப் போல பணத்தை அச்சிட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாது.

இது தொடர்ந்து நடைபெறுமானால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து, அந்நாட்டை ஒரு பாரிய பணவீக்கத்திற்குள் தள்ளும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அமைப்புகளான IMF, WEF போன்றவை டிஜிட்டல் கரன்சியை (CBDC) நோக்கி அவசரமாக நகர்வதன் நோக்கம் இதுதான்.

காகிதப் பணம் இருக்கும் வரை மக்களிடம் ஒரு சுதந்திரம் இருக்கும். ஆனால், முழுமையான டிஜிட்டல் கரன்சி முறை வந்தால், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச வங்கி கட்டமைப்பு (SWIFT) ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நொடியில் முடக்க முடியும்.

இன்று, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் இணைந்த BRICS அமைப்பு, டொலருக்கு மாற்றாக ‘The Unit’ என்ற புதிய கரன்சியை 2026 இல் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய கரன்சி 40% தங்கம் (Gold-backed) மற்றும் 60% உறுப்பு நாடுகளின் கரன்சிகளால் பிணைக்கப்பட்டுள்ளது.

இது வெறும் காகிதமான டொலரை விடவும் பாதுகாப்பானதாகப் பார்க்கப்படுவதால், அமெரிக்காவின் 80 ஆண்டுகால நிதி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரை அமெரிக்க டொலரைத் தங்கள் கருவூலங்களில் (Forex Reserves) நிரப்பி வைத்திருந்த நாடுகள், இப்போது அந்தப் பாதையை மாற்றி ‘தங்கத்தை’ நோக்கி ஓடுகின்றன.

குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்யாவின் இந்த ‘அவசர’ நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட ஒரு நிதியியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில தசாப்தங்களாக டொலரை நம்பியிருந்த மத்திய வங்கிகள், இன்று அதை ஆபத்தான ஒன்றாகக் கருதுகின்றன.

2022-ல் ரஷ்யா மீது உக்ரைன் போர் காரணமாக விதிக்கப்பட்ட தடைகளும், அதன்டொலர் இருப்பை அமெரிக்கா முடக்கியதும் மற்ற நாடுகளுக்குப் பாடமாக அமைந்தது.

“டொலரை வைத்து எப்போது வேண்டுமானாலும் எம்மை அடிமைப்படுத்தலாம்” என்பதை உணர்ந்த சீனா, தனது டொலர் இருப்பை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சுருக்கிவிட்டது.

டொலர் ஒரு காகிதம் ஆனால் தங்கம் ஒரு நிஜமான சொத்து. தங்கத்தின் விலை 2026 ஜனவரியில் ஒரு அவுன்ஸ் 5,100 டொலரைத் தாண்டி வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

சீனா தொடர்ந்து 14 மாதங்களுக்கு மேலாகத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவிடம் தற்போது 2,350 தொன்களுக்கும் (1 தொன்=1000 கிலோ) அதிகமான தங்கம் உள்ளது.

பொருளாதாரத் தடைகளால் முடக்க முடியாத ஒரு நிதிப் பாதுகாப்பை (Financial Sovereignty) உருவாக்குவதே இவர்களின் ஒரே இலக்கு.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிகளை (உதாரணமாக இந்தியாவின் Digital Rupee) ஒன்றிணைக்க முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம் டொலர் இல்லாமலேயே, அமெரிக்காவின் SWIFT வங்கி முறைக்கு வெளியே நின்று கொண்டு சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்ய முடியும்.

இந்தியா தனது வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்ளும், ஆனால் அதன் கணக்குகள் BRICS நாடுகளின் பொதுவான ஒரு ‘செட்டில்மென்ட் யூனிட்’ (Common Settlement Unit) மூலம் தீர்க்கப்படும். இது டொலருக்கான தேவையை முற்றாக ஒழிக்கும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், எந்த நாடு டொலரை விடுத்து மாற்று கரன்சியில் எண்ணெய் விற்க முயன்றதோ (உதாரணம்: ஈராக் – சதாம் ஹுசைன், லிபியா – கடாபி), அந்த நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இன்று சீனாவும் இந்தியாவும் ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதால், அமெரிக்காவால் நேரடியாகப் போர் தொடுக்க முடியாமல் பொருளாதாரத் தடைகள் (Sanctions), வரிகள் ( Tariff) மற்றும் Currency போர் மூலம் நெருக்குதல் கொடுக்கிறது. Proxy போர் மூலம் உக்ரைனால் ரஷ்யாவிற்கு நெருக்குதல் கொடுக்கிறது.

இந்த Currency யுத்தத்தில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் எண்ணை வழங்கும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் தோற்ற அமெரிக்கா தற்சமயம் நேரடி போரில் குதிக்கப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறது.

அமெரிக்கா தனது டொலர் ஆதிக்கத்தைப் பாதுகாக்க எடுக்கும் இந்த முயற்சிகள், உண்மையில் மற்ற நாடுகளை இன்னும் வேகமாக அமெரிக்காவை விட்டு விலகிச் செல்லவே வைக்கின்றன.

ஒரு சாம்ராஜ்யம் மறையும் போது, அதனுடன் பிணைக்கப்பட்டவர்களும் அழிவார்கள். எனவே, புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராக இருப்பதே புத்திசாலித்தனம்.

இலங்கை போன்ற நாடுகள் இந்த “கரன்சி போரில்” சிக்கிச் சின்னபின்னமாகாமல் இருக்க வேண்டுமானால், அமெரிக்கா/IMF-ன் பிடியில் இருந்து விடுபட்டு, வளர்ந்து வரும் புதிய பொருளாதாரக் கூட்டணிகளுடன் (BRICS) கைகோர்ப்பதே ஒரே தீர்வாகும்.

எதிர்கால உலகம் டொலரால் ஆளப்படாது, அது வளங்களைக் கொண்ட நாடுகளின் கரன்சிகளால் மட்டுமே ஆளப்படும்.

அமெரிக்க டொலரின் “World reserve Currency” எனும் ஆதிக்கம் தனது இறுதிக்கட்ட மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

Exit mobile version