-சாவித்திரி கண்ணன்
மெய் பொருள் காண்பது அறிவு!
கடல் கடந்து சென்ற இடத்தில் தனக்கு உணவு தந்து உபசரித்த பெண்ணிடம் வற்புறுத்தி சாதியைக் கேட்டுவிட்டு, அது வெளியே தெரிந்து, கடும் கண்டணங்கள் எழுந்தவுடன், சம்பந்தப்பட்ட குடும்பப் பெண்ணின் கணவரைத் தொடர்பு கொண்டு, மன்றாடி சமாதானப்படுத்திவிட்டு, தான் அப்படிப் பேசவில்லை எனப் பேசிக் கொள்வதற்கு அனுமதி பெற்று இருக்கிறார், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!
பேசாத ஒன்றைப் பேசியதாக தன் மீது குற்றசாட்டு வைக்கப்பட்ட ஒருவர் என்ன செய்திருப்பார்? எப்படி என் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கலாம்? இது அவதூறு அல்லவா? எனவே, நீங்கள் உண்மையைச் சொல்லி விளக்கம் அளியுங்கள்! என்றல்லவா அறச் சீற்றம் அடைந்திருக்க வேண்டும்.
ஏனென்றால், ராஜா நேற்றைய தினம் முழுவதும் வாங்கிய பல்லாயிரணக்கான செருப்படி என்பது சாதாரணமானதல்ல. இவ்வளவு செமத்தியான வசவுகளுக்கு பிறகும், அறச் சீற்றம் இல்லாமல் ஒருவன் நயந்தும் உருகியும் பேச முடியும் என்றால், அவன் கடைந்தெடுத்த தொழில் முறைப் பொய்யனே!
என்ன சாதி? என்று கேட்ட குற்றத்தை விடவும், கேட்டு அது வில்லங்கமான பிறகு அதை நேர்மையோடு எதிர்கொள்ளும் துணிவின்றி, பொய் பேசி, கடவுளை இழுத்து வைத்து சமாளிப்பதும், பெப்ரவரி 4 ஆம் திகதி நடந்த சம்பவத்தை ஒன்பதாம் தேதி வரை அமைதியாக இருந்துவிட்டு சொல்வது ஏன்? என தன்னை யோக்கியனாக வெளிப்படுத்திக் கொள்ள பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்குவதும் அதைவிட கொடிய குற்றம்.
விருந்தினராக அழைத்து உபசரித்தவர்கள் தங்கள் மனம் ஆழமாக புண்படாமல் இப்படி வெளிப்படமாட்டார்கள்! நான்கைந்து நாட்கள் மன உளைச்சலுக்கு பிறகே அந்த பெண் அண்ணனிடம் கூறியுள்ளார். பொதுவெளியில் இல்லை. அண்ணன் கார்த்திகேயன் தான் தங்கை பாதிக்கப்பட்டதை கூறியுள்ளார்.
இந்த நேர்மை இல்லாத கோழை ராஜா அமெரிக்காவிற்கு போன் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரோ, ’’ஐயா நீங்கள் பேசியது உண்மை. அது என் மனைவியின் மனதை வேதனைப்படுத்தியது நிஜம்’’ என்ற பிற்பாடும் கூட, நைச்சியமாகவும், உருக்கமாகவும் பேசி நான் இப்படி பேசி விளக்கமளித்துக் கொள்கிறேன். ”நீங்கள் என்னை அம்பலப்படுத்திவிடக் கூடாது” என முன்னேற்பாடு செய்துவிட்டு பேசுகிறார் பாருங்கள். அங்கிருக்கிறது அவரது சாமார்த்தியமும், சாதுரியமும்! ஆனால், அவரிடம் சத்தியம் தான் இல்லை.
ஒரு பிரபலமனிதர் நமக்கே போன் செய்து மன்றாடுகிறாரே என்பது ஒருபுறம் அங்கே அமெரிக்காவில் நிகழ்ச்சியை ஏற்பாடு அமைப்பினரின் பொல்லாப்புக்கு ஆளாகி தனிமைப்பட நேரிடுமோ என்ற அச்சம் மறுபுறமாக அவரும் சரி, தாரளமாக பேசிக் கொள்ளுங்க என்று சொல்லிவிட்டாராம். இதோடு யாரும் இது பற்றி உங்களிடம் பேசிவிடக் கூடாது உங்கள் மனைவியின் சகோதரரை தொடர்ந்து எழுதிவிடாமல் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது, என்று சொன்னாரோ என்னவோ?
ஆயினும் நடந்த விவகாரங்களை அண்ணன் கார்த்திகேயன் அழுத்தமாக வெளிப்படுத்திவிட்டு என் தங்கைக்கு பல ரூபங்களில் அழுத்தம் தரப்படுகிறது. மாதொரு பாதகன் எழுதிய பெருமாள் முருகனுக்கு தரப்பட்டது போல என்று சொல்லி என் தங்களை ஒரு கோழை என்றதோடு நிறுத்திக் கொண்டார். அவர் சொல்லாமல் தவிர்த்தது, தங்கையின் கணவரும் கோழை என்பதாகும். அப்படிச் சொன்னால் அது தங்கை வாழ்வை பாதிக்கும் என அண்ணனாக அவர் நினைப்பதை நாம் குற்றம் சொல்ல முடியாது.
இதில் அந்த தங்கையும், அவர் கணவரும் மட்டுமல்ல, சம்பவத்தின் போது அந்த தங்கையின் உடன் இருந்தவர்களும், இந்த உண்மை தெரிந்தும் ராஜவுக்கு சாதகமாக அமைதி காக்கும் கேட்ஸ் எனப்படும் அமெரிக்க தமிழ் அமைப்பினரும் கோழைகளே.
இப்படி தமிழகம் தழுவிய அளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களே உண்மையை மறைத்துக் கொண்டு அமைதியானதன் மூலம், தாங்கள் பொய்யர்களாக பார்க்கப்படும் பேரவல நிலைக்கு தங்களை தாழ்த்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவர்களை தாங்கிப் பிடிக்க ஓடோடி வந்த இலட்சோப இலட்சம் சாதி மனோபாவமற்ற நல்லோர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டனர்.
கோழைகளுக்கு ஒருபோதும் விடுதலை இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே சிறையில் பூட்டிக் கொள்வதே தற்காப்பு என்று நினைக்கும் வரை!
இந்தக் கோழைத்தனத்தில் இருந்து தமிழ்ச் சமூகம் விடுபடாத வரை, சாதிய மனோபாவத்தில் உழல்பவர்கள் தான் சாதித்துக் கொண்டே போவார்கள்!
அட்லாண்டாவில் ராஜா செய்த அசிங்கம்!
-கார்திகேயன் ஃபாஸ்ருரா
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது. எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார்.
சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார். ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர் , எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.
இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா ?!
ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா? வேறு மனிதர்கள் இல்லையா? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா?!
சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம்? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தால் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்.
இன்னொரு முறை பட்டிமன்றம் என்று எங்கும் சென்றுவிட வேண்டாம். அந்தத் தகுதி உமக்கு இல்லை. மீறி வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்.
(இந்தக் குறிப்பு Karthikeyan Fastura இன் முகநூல் பதிவு)

