-பல்லப் சென்குப்தா (Pallab Sengupta)
உலக சமாதானக் குழுவின் (World Peace Council) தலைவராக செயல்படும் பல்லப் சென்குப்தா அமெரிக்காவின் சமீபத்திய அத்துமீறல்கள், இந்தியாவிற்கும், அமெரிக்காவுமான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச உறவுகளில் இந்தியாவிற்கு ஏற்பட்டு வரும் சரிவு ஆகியவை பற்றி பீட்டர் துரைராஜுக்கு தந்த நேர்காணல்:
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் பொருளாதார உறவு குறித்து என்ன சொல்கிறீர்கள்?
இந்தியாவின் நலன்களுக்கு அதி விரோதமாக அமெரிக்கா உள்ளது. ஆயினும் பா.ஜ.கவின் மோடி அரசு அமெரிக்காவிற்கு எல்லா விதங்களிலும் பணிந்து போய்க் கொண்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வரியே இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு நாம் அதிக வரி கட்ட வேண்டும். இதனால் இந்தியப் பொருட்களை இந்தியர்களே வாங்க மாட்டாத நிலை உருவாகலாம். இதனால் நம் நாட்டு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசாங்கத்திடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
இந்தியா அணி சேரா நாடுகளின் இயக்கத்திற்கு முன்னோடியாக செயல்பட்ட நாடு. உலகில் விடுதலைக்காக போராடும் நாடுகளுக்கு எல்லாம் நம்பிக்கை தரும் நாடாக இருந்த இந்தியா தற்போது அப்படி இல்லை. முன்பு வியத்நாம், வங்கதேசம், கியூபா, பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா போன்ற பல நாடுகளின் விடுதலைக்கு இந்தியா உதவி செய்திருக்கிறது.
2014 ல் ஒன்றியத்தில், பா.ஜ.கவின் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை கடைபிடித்து வந்த சுயேச்சையான வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கைவிட ஆரம்பித்து விட்டது. அமைதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஆக்கிரமிப்புப் கொள்கையை கடைபிடிக்கும் அமெரிக்காவை மோடி அரசு ஆதரிக்கிறது.
பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு நீண்டகாலமாக இந்தியா ஆதரவாக இருந்ததை நாம் அறிவோம். ஆனால் உலக அரங்கில் – ஐ.நா அவையில் முதல் மூன்று கூட்டங்களில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. நான்காவது முறை, உலக நாடுகள் அனைத்தும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிலை எடுத்த பிறகு, உலகின் தெற்கு நாடுகள் மத்தியில் தனிமைப்பட்டு விடுவோம் என்ற நிலை வந்த பிறகு பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்தது.
பலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான மேற்குக் கரைப் பகுதி நிலத்தை தமக்குச் சொந்தம் என்று இஸ்ரேல் கூறுவதை ஐ.நாவில் 83 நாடுகள் கண்டித்து உள்ளன. ஆனால், இந்தியா அமைதி காக்கிறது. இது அவமானமாகும்.
அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை மென்மேலும் அதிகரித்துச் செல்லும் என்று நினைக்கிறீர்களா ?
சோவியத் ஒன்றியம் இருந்த கடந்த காலங்களில், அமெரிக்கா இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொண்டதில்லை. சோவியத் சிதைந்த பிறகு தன்னை எதிர்க்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த நாடுமில்லை என்ற நினைப்பில் அமெரிக்கா ஆதிக்க மனோபாவம் கொண்டுள்ளது. ஆனால், உலகம் முழுவதும், மக்கள் அமெரிக்காவை எதிர்த்து,திரண்டு தெருவிற்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். சென்னையில் கூட பெரும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அமெரிக்காவால், தான் நினைப்பது போல ஒரு துருவ உலகை நிறுவ முடியவில்லை. அதன் செயல்பாடுகள் மற்ற நாடுகளிடம் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. உலக மக்கள் அமெரிக்காவை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா பலவீனமாகி வருகிறது என்பது தான் உண்மை.
வெனிசுவேலா இப்போது என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்கா கடைபிடித்து வரும் வெளிநாட்டுக் கொள்கைகள் குண்டர் கொள்கை ( Goondas Foreign policy) போல உள்ளது. வெனிசுவேலா நாட்டிற்குள் புகுந்து, அதன் தலைவராக இருக்கும் நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்கா கடத்தி வைத்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைப் பகுதியில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் தன் போர்க் கப்பல்களை நிறுத்தி வெனிசுவேலா, மெக்சிகோ, கியூபா போன்ற நாடுகளையும் மிரட்டி வருகிறது. கிரீன்லாந்தின் மீது உரிமை கொண்டாடுகிறது. இந்நிலையில் வெனிசுவேலாவின் துணைத் தலைவர் என்ன செய்வது என்பது சிக்கலான ஒன்றுதான். ஒருபுறம் தனது நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயம் அமெரிக்காவை முழுமையாக எதிர்க்கவும் முடியாது. ஆகவே உலகில் அமைதியை விரும்பும் நாடுகள் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக ஒன்றுதிரள வேண்டும்.
வெனிசுவேலா பிரச்சினையினால் கியூபாவிற்கு பாதிப்பு வருமா ?
வெனிசுவேலா அமெரிக்காவின் பிடியில் இருப்பதால் கியூபா அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது. அவர்களுக்கு சோவியத் ஒன்றியம் இருந்த போது தடையின்றி எண்ணெய் கிடைத்து வந்தது. இப்பொழுது அது போல ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புதின் எண்ணெய் கொடுப்பாரா என்று சொல்ல முடியாது. எண்ணெய் இல்லாத கியூபா கடும் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும்.
வங்க தேசத்தில் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்றுள்ளது குறித்து?
இடைக்காலப் பிரதமராக இருந்த முகமது யூனூஸ் இந்தியாவிற்கு எதிராக அப்பட்டமாகச் செயல்பட்டார். வங்கதேசத்தில் கும்பல்கள் தான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அவர்கள் நீதிமன்றம், அரசாங்கம் என்ற எந்த அமைப்புகளையும் மதிப்பதில்லை. இப்போது தேர்தலில் வங்கதேச தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றாலும் பிரதமரான தாரிக் ரஹ்மான் கடும் சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
நடைபெற்ற வங்கதேச தேசியக் கட்சிக்கும், ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஒரு சிக்கலான சூழலில் நடந்த இரு துருவ தேர்தல் என்பதால் இதில் ஆச்சரியம் இல்லை. வங்கதேச விடுதலைக்கு பாடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயகம், மக்கள் உரிமைகளுக்கான மரபு இன்னமும் உள்ளது. இது வங்கத்திற்கு நெருக்கடியான காலம் தான். அரசாங்கம் மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் மீண்டும் பெறும் வகையில் செயல்பட வேண்டும். பார்ப்போம்.
நேபாளத்தில் உள்ள நிலைமைகள் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
தேர்தல் நடைபெற உள்ளது. அனேகமாக தேர்தலுக்குப் பிறகு, நேபாள காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏதோ ஒருவகையான உடன்பாட்டிற்கு வரும் என நினைக்கிறேன். கிராமப் புறங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு செல்வாக்கு உள்ளது. அதனால் தான் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஜென் Z குழுக்களால் கலகம் ஏற்பட்ட ஒரு வாரத்தில், கிராமப் புறங்களில் ஆயிரக்கணக்கான மக்களை கம்யூனிஸ்டுகள் திரட்டி தெருவுக்கு வந்தனர். எனவே அவர்கள் குறிப்பிட்ட இடங்களைப் பெறுவார்கள். தேர்தலுக்குப் பிறகு நிலைமை தெளிவாகத் தெரியும்.
‘மக்களாகிய நாம்‘ என்ற தலைப்பில் இஸ்கப் (ISCUF) மாநாட்டில் கருத்தரங்கம் நடந்துள்ளதே?
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் நடத்தி வருகிற மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்துள்ளேன். விடுதலைப் போராட்ட காலப் பாரம்பரியம் இந்த அமைப்பிற்கு உண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் சட்ட விழுமியங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாப்பது இஸ்கப்பின் நோக்கமாக உள்ளது. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதத்தினர் உள்ள நாடு. இதன் பன்முகத் தன்மையை காப்பாற்ற வேண்டும். இந்து ராஷ்டிரா என்ற பிம்பத்தை ஆர்எஸ்எஸ் கட்டமைக்கிறது. ஆனால், அவர்கள் பேசும் இந்து மதத்தில் ஆதிவாசிகளுக்கும், தலித்துகளுக்கும் இடமில்லை.அவர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டும். கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.
குறிப்பு; சென்னையில் பெப்ரவரி 19,20 தேதிகளில் நடைபெற்ற இஸ்கப் (Indian Society for Cultural Co-operation and Friendship – ISCUF) அகில இந்திய மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த பல்லப் சென்குப்தா எடுக்கப்பட்ட நேர்காணல் இது.
நேர்காணல்: பீட்டர் துரைராஜ்

