Site icon சக்கரம்

இதெல்லாம் இவர்களுக்கு வேடிக்கையாக, பொழுது போக்காக ஆகிவிட்டது போலும்!

-சாவித்திரி கண்ணன்

ட்ரம்பும், நெதன்யாகும் ஆடுகிற அராஜக, அத்துமீறல் ஆட்டத்தால் என்னென்ன விளைவுகளை உலகம் எதிர்கொள்ள நேருமோ..?

தானுண்டு, தன் நாடுண்டு என்று இருக்கும் ஈரான் மீது வலிந்து குண்டு மழை பொழிய வேண்டிய அவசியமே இல்லை.

கொலைவெறித்தனமான இந்தக் கொடூர தாக்குதல்கள் உலகில் மனிதகுலம் நாதியற்று போய்க் கொண்டுள்ளதோ..என கலங்க வைக்கிறது…? பள்ளிக் கூடத்தின் மீதெல்லாம் குண்டு மழை பொழிவதையும், மழலைகள் சாவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருக்கத் தான் வேண்டுமா..?

உலகின் சிறிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டுமா..?

பைத்தியக்கார பயங்கரவாதிகளை நாட்டின் தலைவர்களாக்கினால் உலகம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு இன்றைய நிதர்சன உதாரணங்கள் ட்ரம்ப், நெதன்யாகு, மோடி!

2014 வரை இந்திய அரசு இஸ்ரேலின் போர்வெறியை ஆதரித்தது இல்லை. பலஸ்தீனர்களின் விடுதலையை அங்கீகரித்தவர்களே நாம்! அமெரிக்காவை எச்சரிக்கையோடு அணுகி கெளரவமாக உறவாடிய பிரதமர்களைத் தான் இது வரை இந்தியா கண்டுள்ளது.

மோடியின் தனிப்பட்ட பாலியல் பலவீனமும், ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய வெறுப்புமாக இணைந்து இன்று உலக அரங்கில் சர்வதேச சமரசமற்று பயணித்துக் கொண்டிருந்த இந்தியாவின் இமேஜ் சரிந்து வருகிறது. அதிகாரத் திமிர் பிடித்த அமெரிக்க ட்ரம்ப்பிடம் நமது பிரதமர் மோடி அடி பணிந்து போவது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கூனி குறுக வைக்கிறது.

சிறிய நாடாயினும் அடிபணிய மறுக்கும் ஈரானின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது. பலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஈரானிலும் மானுட அழித்தொழிப்புகள் அரங்கேறினால் உலகம் வேடிக்கை பார்க்காது.

சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் இன்னும் சில நாடுகளும் சிலிர்த்தெழுந்து களம் கண்டால் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகப் பெரிய அழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது உலகப் போராகவும் வடிவம் கொள்ள வாய்ப்பாகிவிடும்.

என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்!

ஈரான் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

-வெற்றி மயிலோன்

ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார். சமூக செயற்பாட்டாளர் மலாலாவும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய ராணுவத் தாக்குதல்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரில் பேரழிவை அதிகரிக்கும். நகரங்களில் குண்டுவீச்சு, பொதுமக்களைக் கொல்வது, ஒரு புதிய போர் அரங்கைத் திறப்பது போன்றவற்றை அமெரிக்கர்கள் விரும்பவில்லை. அவர்கள் மற்றொரு போரை விரும்பவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு நியூயார்க்கரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். எங்கள் போலீஸ் கமிஷனர் மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அரசின் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் மிகுந்த எச்சரிக்கை வாய்ந்த இடங்களில் ரோந்துகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

கூடுதலாக, நியூயார்க்கில் வசிக்கும் ஈரானியர்களிடம் நான் நேரடியாகப் பேச விரும்புகிறேன். நீங்கள் இந்த நகரத்தின் கட்டமைப்பின் ஒரு பகுதி. நீங்கள் எங்கள் அண்டை வீட்டார். சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள். நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார்.

இதற்கிடையில், நோபல் பரிசு பெற்ற சமூக செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாய், மினாபில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதல் உட்பட, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீதான தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டனர்.

மலாலாவின் எக்ஸ் பதிவில், “எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற பெண்கள் அவர்கள். இன்று, அவர்களின் வாழ்க்கை கொடூரமாக துண்டிக்கப்பட்டது. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் நான் மனம் உடைந்து திகைத்துப் போனேன்.

தெற்கு ஈரானில் ஒரு பெண்கள் பள்ளி தாக்கப்பட்டு, 100 இற்கும் மேற்பட்ட பெண் குழந்தைககள் இறந்ததாக வெளியான செய்திகள் உட்பட, பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் கொல்லப்படுவது மனசாட்சிக்கு புறம்பானது, அதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன்.

வன்முறையில் பள்ளிகள் மற்றும் பொதுமக்களை குறிவைப்பதை நான் உறுதியாக எதிர்க்கிறேன். பிராந்தியம் முழுவதும் வன்முறை அதிகரிப்பதை முடிவுக்குக் கொண்டுவர நான் அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version