Site icon சக்கரம்

ஈரான் மீதான தாக்குதலை இப்படியெல்லாம் நியாயப்படுத்துவதா?

-சாவித்திரி கண்ணன்

மேற்கத்திய ஊடகங்களும்,  இந்திய கோர்ப்பரேட் ஊடகங்களும் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் குண்டு மழை பொழிந்து, பேரழிவை உருவாக்கி வரும் நிலையில், தந்திரமாக ஒரு கருத்தாக்கத்தை கற்பித்து, நடைபெற்று வரும் கொடூர தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டுகிறார்கள்; கருங்காலிகளை அடையாளம் காண்போம்;

‘ஈரான்  இஸ்லாமிய பழமைவாத நாடு. அதன்  ஆட்சியாளர்கள் பெண்களை ஒடுக்குவது உள்ளிட்ட பிற்போக்கு கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தனிமனித சுதந்திரத்திற்கு ஆதரவான குரல்களை ஒடுக்கினர்…’ என்பதோடு ‘ஆயிரக்கணக்கில்  உள்நாட்டில் மனிதப் படுகொலைகளை நடத்தினர்…’ என்பதையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துச் சொல்லி, அங்கு பாதிக்கப்பட்ட சிலரது பேட்டிகளையும் போட்டு பல பிரபல ஊடகங்கள் பேசுகின்றன…, எழுதுகின்றன….!

அமெரிக்காவும்,  இஸ்ரேலும் ஈரான் மீது குண்டு மழை பொழியும் நேரத்தில் உள்நாட்டு அரசியல்  பிரச்சினைகளைக் கூறி, அன்னிய தாக்குதலை நியாயப்படுத்த முனைகிறார்கள்…!

ஈரானில் எந்தப் பாவமும் அறியாத பள்ளிக் கூடத்தின் மீது குண்டு மழை. வீடுகளின் மீதும், அரசு நிறுவனங்கள் மீதுக் குண்டுவீச்சு நடக்கின்றன. குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகிறார்கள். இதையே பலஸ்தீனத்திலும் இஸ்ரேல் நிகழ்த்தியது அமெரிக்க ஆதரவுடன். இவர்கள் உலக தாதாக்களாக – அணு ஆயுத ரவுடிகளாக – இயங்குவதற்கான உரிமையை எப்படிப் பெற்றனர்…? இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முடிவில்லையா…?

எல்லா நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கோபங்கள் இருக்கவே செய்யும். தற்போது கூட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவிலான பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத போக்குகளும், சிறுபான்மையினரை ஒடுக்கும் அணுகுமுறைகளும், தேர்தலில் கூட மக்கள் தீர்ப்பை தர வழியில்லாமல் தேர்தல் கமிஷனை கரப்ஷன் ஆக்கி வைத்திருக்கும் படுமோசமான நிலைமைகளும் உள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி அன்னிய நாடு  இங்கு தாக்குதல் நடத்தினாலோ,  நமது பிரதமர் மோடியைக் கொல்ல முயன்றாலோ நாம் அனுமதிக்க முடியுமா? நாம் வேற்றுமைகளை மறந்து ஒன்று திரளத் தான் செய்வோம்.

ஆயிரம் உண்டிங்கு பிரச்சினைகள் ! அதற்கு  அன்னிய படையெடுப்பு ஒரு போதும் தீர்வாகாது என்பது மட்டுமின்றி, நிலைமையை மேலும் அது மோசமாக்கவே செய்யும். எந்த ஒரு உள் நாட்டு அயோக்கிய ஆட்சியாளர்களையும் விட, அன்னிய நாட்டான் ஆபத்தானவன். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரித்திரம் முழுக்க இதற்கு சாட்சியாகத் திகழ்கின்றது.

இந்தியாவை பிரிட்டிஷார் அடிமைப்படுத்திய போது ஆங்கிலம் படித்து தேறி, இங்கு பிரிட்டிஷாருக்கு அடிமை உத்தியோகம் பார்த்த வர்க்கத்தினர், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் இந்தியாவை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது எனக் கருதி வேகமாக ஜெர்மன் மொழியை படித்து தங்களை தயார்படுத்திக் கொண்டனர் என்பதையும், அவர்களே இன்று பாசிஸ இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஆதரிக்கின்றனர் என்பதையும் கவனத்தில் வைப்போம்.

கொமேனி கொடூரமானவர் என்று சொல்லி அவரை கொல்ல அமெரிக்காவோ, இஸ்ரேலோ உரிமை கோர முடியாது.  கொமேனி நிச்சயம் அமெரிக்க ட்ரம்ப்பையும், இஸ்ரேல் நெதன்யாகுவையும் விட கொடூரமானவராக இருக்க வாய்ப்பே இல்லை. ட்ரம்பும், நெதன்யாகுவுமே தங்கள் சொந்த மண்ணின் மக்களால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எதிரான போராட்டங்கள் இரு நாடுகளிலும் மக்கள் பெரும் திரள் மக்களால் நடத்தப்பட்டு வருகின்றதே!

தி.மு.க ஆட்சியோ, அ.தி.மு.க ஆட்சியோ  ஆயிரம் ஊழல்கள் செய்தாலும் அவர்களது ஆட்சியை மத்திய ஆட்சியாளர்கள் களைக்க முயன்றால் தமிழகம் ஒன்றுபட்டு எதிர்க்கவே செய்யும். மக்கள் தீர்ப்பின் மூலமே ஒரு ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அதிகாரத்தினால் அல்ல.

மாநில கட்சிகளுக்குள் இருக்கும் சண்டைக்குள்ளேயே தேசிய கட்சிகளின் ஆதரவைக் கோருவது ஆரோக்கியமல்ல. மாநில கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக தேசிய கட்சிகளின் உதவியை பெற்று, இங்குள்ள அரசியல் சுயாதீனத்தையே அடகு வைப்பது கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.

எந்த அன்னிய நாடும் ஆதாயம் இல்லாமல் இன்னொரு நாட்டுக்கு உதவாது. ஏதாவது ஒரு கணக்கு வைத்துக் கொண்டே உதவுகிறார்கள்.

ரஷ்யா- உக்ரைன் சகோதரச் சண்டையில் தலையிட்டு அமெரிக்க எவ்வளவோ உதவிகள் செய்தது. தீடீரென ஒரு நாள் உக்ரைனில் உள்ள மிகப் பெரும் இயற்கை வளங்களை அதற்கு பிரதிபலான அள்ளிக் கொள்கிறோம் என அதிரடியாக அறித்து அனுமதி கேட்காமலே களம் கண்டது.

ஈரானில் உள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் உரிமை அந்த மக்களுக்கானது. அதற்கு நாம் தார்மீக ரீதியிலான ஆதரவைத் தான் வெளிப்படுத்த முடியும். தற்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் அத்துமீறித் தலையிட்டது என்பதே ஈரானின் எண்ணெய் வளத்தின் மீதான பேராசையில் தானே அன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கல்ல.

ஆகவே, ஈரானில் நடைபெற்று வரும் ஆட்சியைக் குறித்த விமர்சனங்கள் யாவுமே அமெரிக்க – இஸ்ரேலின் மனிதகுலப் பேரழிவை ஆதரிப்பதாகத் தான் அர்த்தப்படும்.

Exit mobile version