
சர்வதேச கடல்சார் சட்டங்களையும், அண்டை நாடுகளின் இறையாண்மையையும் கிஞ்சித்தும் மதிக்காமல், இலங்கை அருகே ஈரான் கடற்படைக் கப்பல் மீது அமெரிக்கா நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, இந்தியக் கடற்படையின் விருந்தினராகத் திரும்பிக்கொண்டிருந்த ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS DENA) போர்க்கப்பலை, காலி கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் திட்டமிட்டுத் தாக்கி மூழ்கடித்திருப்பது ஒட்டு மொத்த ஆசியாவிற்கே விடப்பட்ட சவாலாகும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவுடன் பல்லாண்டுகளாக பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்ட ஈரான் நாட்டின் உயர் மட்டத் தலைவர் அலி காமேனி படுகொலை செய் யப்பட்டபோது, நான்கு நாட்களாக மௌனம் காத்தது மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்குப் பிறகும், சர்வதேச அழுத்தம் அதிகரித்த பிறகும், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை ஈரான் தூதரகத்திற்கு அனுப்பி இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டது வெறும் கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போக்கை வெளிப்படையாகக் கண்டிக்க இந்திய அரசு அஞ்சுவது ஏன்? நமது நாட்டின் அழைப்பை ஏற்று வந்த ஒரு நட்பு நாட்டு வீரர்களின் இரத்தம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிந்தப்பட்ட பிறகும், இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் பெயரைக் கூடக் குறிப்பிடத் துணிவில்லாதது வேதனையானது. 130 மாலுமிகள் பயணித்த ஒரு கப்பல், இந்தியாவிற்கு மிக அருகில் பாதுகாப்பான கடல் எல்லையில் தாக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்புத் திறனையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
தன்னுடைய எல்லையிலேயே ஒரு நட்பு நாட்டு வீரர்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட பிறகும், குற்றவாளியின் பெயரைச் சொல்ல அஞ்சும் இந்த ‘வளைந்து கொடுக்கும்’ வெளியுறவுப் போக்கு, எதிர்காலத்தில் இந்தியாவிற்கே வினையாக முடியும். இனியும் மௌனம் காக்காமல், அமெரிக்காவின் இந்த அராஜகத்தை இந்தியா சர்வதேச மேடைகளில் உரக்கக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக அமெரிக்காவின் வேட்டைக் காடாக மாறிவிட்டது என்ற கறை அழியாமல் நிலைத்துவிடும்.
-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.03.06
மௌனம் சம்மதமா?
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் கொடூரமாகத் தாக்குதல் தொடுத்து அந்த நாட்டின் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா காமேனி உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர்ப்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் மக்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். மாறாக, கவலை தெரிவித்ததோடு, போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு பொத்தாம் பொதுவாக கூறியதோடு, தனது கடமை முடிந்துவிட்டதாக மோடி அரசு கருதுவது ஏற்கத்தக்கதல்ல. இது இந்தியா பின்பற்றி வந்துள்ள கூட்டுச் சேரா கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மறைமுகமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அத்துமீறிய கொடுங்கோன்மையை ஆதரிப்பதாகும்.
வெனிசுவேலா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர் மதுரோ மற்றும் அவரது இணையரை கடத்திச் சென்ற ட்ரம்ப் நிர்வாகத்தை இந்திய அரசு கண்டிக்கவில்லை. ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலிமையான வார்த்தைகளால் குறிப்பிடவில்லை. அதே போன்ற கவலையைத்தான் இப்போதும் ஈரான் மீதான அக்கிரமத் தாக்குதலின்போதும் மோடி அரசு வெளியிடுகிறது. மோடி அரசின் இந்தப் போக்குத்தான் கவலையளிப்பதாக உள்ளது.
இப்போது ஏற்பட்டுள்ள போர் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பிரச்சனை என்று இந்தியா ஒதுங்கிக் கொள்ள முடியாது. இந்த போர்ப்பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய போதும், அதன் பலனை இந்திய மக்களுக்கு மோடி அரசு தரவில்லை. இப்போது கச்சா எண்ணெய் விலை உயருமானால் அதன் சுமை முழுவதும் இந்திய குடிமக்கள் அனைவரின் மீது இடியென இறங்கும்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் ஓரளவு இந்திய அரசு இறங்கியிருந்தபோதும், அனைவரையும் அழைத்து வருவதோ, அவர்களது எதிர்கால வேலை வாய்ப்பு என்பதோ மிகவும் சிக்கலான ஒன்றேயாகும்.
வளைகுடா நாடுகளுக்கு நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முட்டை பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது உட்பட இந்திய ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வளைகுடா போர் இந்திய நலனையும் பெருமளவு பாதிக்கும். இந்த துயர நிலைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடாவடியேயாகும். இந்தச் சூழலில் மோடி அரசின் அணுகுமுறை இந்திய நலனுக்கும் எதிராக உள்ளது.
-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.03.04
‘எங்கள் கப்பலை இந்தியப் பெருங்கடலில் மூழ்கடித்தது போர்க்குற்றம்!’ – ஐ.நாவில் ஈரான் குற்றச்சாட்டு
இந்திய பெருங்கடலில் ஐ.ஆர்.ஐ.எஸ் தேனாவை மூழ்கடித்த அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது, போர்க்குற்றம் என்று ஈரான் ஐ.நா.வில் குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி, “ஈரானின் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 2,000 மைல்கள் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஓர் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயலை செய்தது. நல்லெண்ணப் பயணத்தில் இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் சுமார் 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற ஈரானிய போர்க்கப்பலான தேனா சர்வதேச நீரில் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ஒரு போர்க்குற்றத்தைச் செய்தது. இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோத தாக்குதல் சட்டம் மற்றும் கடல்வழி சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையின் கடுமையான மீறலாகும்.
மேலும், தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவ நடவடிக்கையை நிறுத்த உறுதியாகவும், தெளிவாகவும், தாமதமின்றியும் தலையிட வேண்டும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நமது மக்களுக்கு எதிராகச் செய்து வரும் ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைக் கண்டிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் செயலாளரை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஈரானுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் அனைத்து குற்றங்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்த வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் போர்க்குற்றங்களின் மீதான இந்த கடுமையான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

