Site icon சக்கரம்

அமெரிக்காவின் அடிமை விசுவாசியான மோடி அரசு!

-ச.அருணாசலம்

ந்திய அரசின் அழைப்பில் வந்த ஈரான் கடற்படை வீரர்களை நமது கடற்பகுதிக்குள் வந்து கொலை செய்த அமெரிக்காவை வேடிக்கை பார்த்த இந்தியா! இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி எந்தெந்த நாட்டுடன் இருக்கலாம், இருக்க கூடாது என்பதை தீர்மானிக்கும் அமெரிக்கா! சர்வதேச உறவுகளில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாஜக அரசு.

இந்தியாவின் அழைப்பில் விசாகபட்டணத்தின் சர்வதேச கடற்படை ஆய்வு மாநாட்டில் 18 நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாடு பெப்ரவரி 15 தொடங்கி 25 வரை பத்து நாட்கள் நடந்தன. கலந்து கொண்ட பதினெட்டு நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.

காலங்காலமாக இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிடையே நட்புறவும் , நல்லெண்ணமும், நயமிகு வர்த்தக உறவுகளும் நீடித்து வந்துள்ளன. இது கடற்படை மாநாடு என்பதால் ஈரானின் ஐரிஸ் தேனா (IRIS Dena) எனும் போர் கப்பலும் 180 கடற்படை வீரர்களுடன் கலந்து கொண்டது. இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியது இந்திய முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

மாநாட்டின் ஓர் அங்கமாக விசாகபட்டினத்தின் கடற்கரைச்சாலையில் நடைபெற்ற “சர்வதேச நகர்வலத்தில்“ கலந்து கொண்ட ஈரான் கடற்படைவீரர்கள் விசாக் நகர மக்களின் பேரன்பை பெற்றனர், அவர்களோடு “செல்பி” எடுத்துக் கொண்டனர். ஆனால் ‘விதி செய்த சதியால்‘ அவர்களில் பலர் இந்திய கடற்பகுதியில் அமெரிக்க படையினரால் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய மக்களை உலுக்கியுள்ளது, இது விதி செய்த சதியல்ல, அமெரிக்க அரசின் அத்துமீறிய , கோழைத்தனமான தாக்குதலாகும்.

இதற்கு இந்திய அரசின் எதிர்வினை என்ன? நமது விருந்தினர்களை காப்பது நமது கடமையல்லவா? போர் துவங்குவதற்கு முன்பாகவே நல்லெண்ண அடிப்படையில் நமது நாட்டிற்கு வந்த ஆயுதமில்லாத ஈரான் கடற்படையினரை மனிதாபிமானத்துடன் நடத்துவது நமது கடமையில்லையா? நமது விருந்தினர்களை நமது பகுதியில் வேறொரு நாட்டுப்படையினர் கோழைத்தனமாக தாக்கி கொல்லுவதை அனுமதிக்க முடியுமா..? என்ற பல கேள்விகள் நமது உள்ளத்தை துளைக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தது, ஈரானின் உயர் தலைவர் காமெனியையும் உயரதிகாரிகள் 40 பேரையும் குண்டுவீசிக் கொன்ற கொடுஞ்செயல் சர்வதேச விதிகளை மீறிய காட்டுமிராண்டித்தனமான வெறிச்செயல் என்பதில் இந்திய மக்களுக்கு (மோடி அரசைத் தவிர) எவருக்கும் ஐயமில்லை. ஆனால் இதை கண்டிக்க – குறைந்த பட்சம் கண்டனம் தெரிவிக்க –  கூட மோடி அரசினால் முடியவில்லை என்றால், அதன் பொருள் என்ன?

பெண் குழந்தைகள் பள்ளியின் மீது குண்டு வீசி 170 மாணவச் செல்வங்களை கூச்சநாச்சமின்றி கொன்றழித்த அமெரிக்காவின் குற்றச்செயலை கண்டிக்க கூட மோடி அரசிற்கு மனமில்லை.

இத்தகைய போர் குற்றத்தை இழைத்த அமெரிக்க அரசிற்கு வெண் சாமரம் வீசும் மோடி அரசு, அப்பாவி ஈரானிய கடற்படையினரை அமெரிக்க படைகள் கொன்றொழித்ததை கேள்வி கேட்க கூட திராணியற்ற முதுகெலும்பில்லாத மோடி அரசு யாரைக் காப்பாற்றும்?

2016 முதல் பல்வேறு இராணுவ உடன்படிக்கைகளை அமெரிக்க அரசுடன் செய்து கொண்ட மோடி அரசு, 2023 இல் அமெரிக்க இராணுவத்துடன் இந்திய இராணுவத்தை ஒருங்கிணைக்கும் 4 ஒப்பந்தங்களை செய்து கொண்ட இந்தியா, இந்தியப் பகுதியின் குவாட் கூட்டணியின் தலைவனாக தன்னை வரித்து கொண்டது. பிறகு அமெரிக்கா தனது போர் கப்பல்களை பழுது பார்க்க இந்தியத் துறைமுகங்களில் (சென்னை, மும்பை மற்றும் கொச்சி) வசதி ஏற்படுத்த ஒப்பந்தங்கள் செய்து கொண்டது. எனவே இந்திய அரசிற்கு தெரியாமல் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அமெரிக்க அரசின் ஐந்தாவது கடற்படை ஈரான் தாக்குதல் தொடங்கு முன்னரே மேற்காசிய போர் அரங்கிலிருந்து வெளியேறி இந்து மாக்கடல் பகுதிக்குள் நுழைந்தது உலகறிந்த உண்மை, இந்திய அரசும் இதை அறிந்திருக்கும்.

மேலும் போர் துவங்கிய அடுத்த நாளே, பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியதோடன்றி , ஐந்தாம் கடற்படை தலைமை போர்கப்பலான ஆப்ரஹாம் லிங்கன் பெயரைக் கொண்ட விமானந்தாக்கி  கப்பல்  மீது ஏவுகணைகளை வீசியது.

அதில் அக்கப்பல் சேதமடைந்ததாக ஈரான் தரப்பும், ஏவுகணைகள் கப்பலை நெருங்க முடியவில்லை என அமெரிக்க தரப்பும் கூறினாலும், ஆப்ரஹாம் லிங்கன் என்ற கப்பல் “இடத்தை காலி “ செய்து இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்தது என்னவோ உண்மை, இது பல சந்தேகங்களை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு.

போர் நடவடிக்கையில் ஈடுபடாத ஈரான் கப்பலை, இந்தியாவின் பகுதியில்- இந்திய கடல் பகுதியில் (Indian Ocean Region) நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணைகள் மூலம் மூழ்கடித்த அமெரிக்க படையினரின் அடாவடி செயல் அவர்களின் வன்மத்தை காட்டுகிறது.

இதற்கெல்லாம் இந்திய அரசு துணை போகவேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை என இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளும், இப்போதுள்ள அதிகாரிகளும் கூறுகிறார்கள். ஏன் இந்திய அரசு ஈரான் நாட்டை எச்சரிக்கவில்லை? ஐந்தாம் கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ள வேளையில் ஈரான் கப்பல் பயணிப்பது உசிதமான செயல் அல்ல என எச்சரிக்கை செய்யாதது ஏன்?

இன்று (08.03.2026) வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் கொச்சி துறைமுகத்தில் ஈரான் கப்பல் ஐரிஸ் லாவன் நிறுத்துவதற்கு இந்தியா அனுமதி கொடுத்துள்ளதானது மனிதாபிமான அடிப்படையில் தான் என திருவாய் மலர்ந்துள்ளார். அங்கனமாயின் ஐரிஸ் தீனா பிரச்சினையில் ஈரானை எச்சரிக்க, அல்லது தடுக்க இந்திய அரசு மறுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

மேற்காசியா பகுதியில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அப்பகுதியில் எஞ்சியுள்ள இறையாண்மையுள்ள ஈரானை வீழ்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும் தலைகீழாக நிற்கின்றனர். 1979 முதலே ஈரான் நாட்டை வீழ்த்தி ஈராக்கை போல், லிபியாவை போல்,சிறியாவை போல் ஈரானை பலவீனப்படுத்த, அங்கு அமெரிக்க ஆதரவு அரசை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது. அதற்கு தொடர்ந்து அமெரிக்கா உதவுகிறது.

இந்த விவகாரத்தில் இந்தியா 2014 வரை ஈரான் நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தது.

ஈரான் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் அளிப்பதோடன்றி , அந்த வர்த்தகத்தை டொலரில் அன்றி அதை இந்திய ரூபாய் மதிப்பில் நடத்தி நமது நாட்டிற்கு உதவியது. ஈரானில் உள்ள சப்பார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்ய ஈரான் அனுமதித்து, இந்தியா மத்திய ஆசியாவில் நுழைவதற்கு வழியும் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்தியாவிற்கெதிராக ஐநா சபையிலும்,இஸ்லாமிய கவுன்சிலிலும் பாக்கிஸ்தான் புகார் எழுப்பிய போதெல்லாம் ஈரான் இந்தியாவின் நிலைபாட்டை ஆதரித்து குரல் எழுப்பியது, இந்தியாவின் “சுதந்திரமான எரிசக்தி கொள்கை“ காலூன்றி வளர பெருமளவு ஈரான் உதவியது.

ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி மோடி அரசு 2017 ஆம் ஆண்டிலேயே டிரம்பின் உத்தரவிற்கு அடிபணிந்து, ஈரான் நாட்டில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயை முற்றிலுமாக நிறுத்தியது. இச்செயல் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் இந்திய நலன்களுக்கும் எதிரான செயல் என்பதை பலர் சுட்டிக்காட்டிய பின்னரும் மோடி அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

பலஸ்தீனர்களின் சுய நிர்ணய உரிமை, அரசுரிமை ஆகியவற்றை இந்தியா ஆரம்ப முதலே ஆதரித்து வந்தது, இது இந்தியாவின் கொள்கை நிலை.

ஆனால் இதை இஸ்லாமிய வெறுப்பு என்ற கண்ணாடி அணிந்து நோக்கும் பா.ஜ.க வினர் இஸ்ரேல் நடத்திய மனிதப்படுகொலையை, மேற்கு நதிக்கரையில்  வசிக்கும் பலஸ்தீனர்களின் உடமை மற்றும் உரிமைகளை பறிக்கும் ஜியோனிச கொள்கைகளை ஆதரிக்கும் நிலைக்கு இந்திய அரசை கொண்டு வந்துள்ளனர்.

புதிய இந்தியாவை கட்டி எழுப்புகிறோம் என கூறிக்கொண்டு உண்மையில் ட்ரம்ப்பின் கண்சாடைக்கு பயந்து கொள்கை வகுத்து செயலாற்றி கொண்டுள்ளது மோடி அரசு.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு, அமெரிக்கா கேட்கு முன்னரே அவர்களிடம் அடிமை சாசனமாக –

500 பில்லியன் டொலர் பெறுமான அமெரிக்க பொருள் இறக்குமதி செய்ய வாக்குறுதி தந்துள்ளது.,

இதன்படி சோயா மற்றும் மக்கா சோளம் வரியின்றி இறக்குமதியாம்.

அமெரிக்க பருத்தியை பயிர் செய்ய வாக்குறுதியாம்!

நாம் கச்சா எண்ணெய்யை யாரிடம் வாங்கலாம், கூடாது என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்யுமாம்!

இதன் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழிலதிபர்கள் ஆகிய ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன்களே பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்பாடுதான் போர் துவங்க 24 மணி நேரம் முன்னதாக இஸ்ரேலில் பிரதமர் மோடி நெத்தன்யாகுவிடம் கூடி குலவியதிலும், குண்டுகளை வீசி ஈரானின் தலைவர் காமெனியை கொன்றதை இந்தியா கண்டிக்காமல் இருந்ததிலும் தெரிகிறது.

இன்று இந்தியாவிற்கென்று தனித்த குரல் ஏதும் இருக்கிறதா? என்ற ஐயம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, உலகோருக்கும் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் –இந்தியவைத் தவிர- கண்டித்துள்ளன. இன்று இந்திய அரசை, அதன் வார்த்தைகளை நம்புவதற்கு எந்த நாடும் தயாராய் இல்லை!

இறையாண்மையை காவு கொடுத்து அடிமையாக செயல்பட மோடி முடிவு செய்துவிட்டார் போல தெரிகிறது. இதன் முடிவு இந்திய மக்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருத்த தலைகுனிவை மட்டுமின்றி பெருநட்டத்தையும் ஏற்படுத்தும் . ஒருமுறை இழந்த சுதந்திரத்தை பேச்சுவார்த்தைகளின் மூலம் மீண்டும் பெற முடியாது.

இத்தகைய சரணாகதி பாதையில் மோடி பயணிப்பதேன் ?

மோடி அரசின் குருட்டுதனமான நம்பிக்கைகளின் விளைவா. ?

அல்லது இஸ்லாமிய வெறுப்பு நிலைப்பாட்டின் தொடர்ச்சியால் வந்த வினையா ?

அல்லது மோடியின் குடுமி – மோடியின் பினாமி அதானி மீதான வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல்கள்- ட்ரம்பின் கையில் உள்ளதால் வந்த நடுக்கமா?

இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களின், மானமுள்ள மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன்களுக்கெதிராகவும் செயல்பட்டுவருகிறது எனலாம். அந்த நாடுகளில் எழுந்துள்ள இந்தியாவிற்கெதிரான உணர்வு இந்தியர்களுக்கெதிரான உணர்வாக வெடிக்க வெகு நேரமாகாது என்பதை சரண்டர் மோடி புரிந்து கொண்டாரா?

இந்துக்களின் தேசீயம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மையை, இந்திய நாட்டின் சுதந்திரத்தை, இந்திய மக்களின் கலாச்சார பெருமையை காவு கொடுக்கிறது மோடி அரசு.

இந்தியர்களின் தேசீய உணர்வு என்பது அறத்தின் அடிப்படையில் ஆனது , அகம்பாவத்தின் ஆணவத்தின் அடிப்படையிலானது அல்ல.

இவ்வாறு அனைத்து வகையிலும் இந்தியாவிற்கு துரோகமிழைக்கும் மோடியை மானமுள்ள பா.ஜ.க வினர் கூட மன்னிக்க மாட்டார்கள்.

Exit mobile version