-பாரதி ஆனந்த்
“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த ‘விருப்பம்’ இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையே போர் நிலவரங்கள் காட்டுகின்றன. அதன் பின்புலத்தை சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
ரஷ்யா – உக்ரைன் போர் வந்தது, இஸ்ரேல் – பலஸ்தீன் போர் வந்தது, இந்தியா – பாகிஸ்தான் மோதல் வந்தது. ஆனால் எதுவும் இத்தகைய பாதிப்பை உலகின் குறுக்கும் நெடுக்கும் ஏற்படுத்தவில்லை. ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதல் எல்லா போர் செய்திகளைப் போலவே அணுகப்பட்ட நிலையில், இது தற்போது இராணுவ பலத்தை நிரூபித்தைத் தாண்டி பொருளாதாரப் போராக அதுவும் உலகையே பீடிக்கும் பாதிப்பாக மாறிவருகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் உலகத் தலைவர்கள் பலரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்படி அழுத்தம் தரவதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் அக்சியாஸ் (Axios) ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்தப் பேட்டியில், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க இராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். போர் முடிவுக்கு வரும்.
இந்தப் போர் இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. விளைவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது. நாங்கள் 6 வார காலத்தில் எந்த அளவிலான அழிவை ஏற்படுத்த நினைத்தோமோ அதைவிட அதிகமாகவே நிகழ்த்திவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு என்று எதுவும் இல்லை. தேவைப்படும் வரை ஒபரேஷன் தொடரும். எங்களது இலக்குகளை எட்டும்வரை இது தொடரும்” என்று கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் ட்ரம்ப்பும், இஸ்ரேல் தரப்பும் இவ்வாறாக தங்களது கருத்துகளைச் சொல்லியிருந்தாலும், இத்தனை நாட்கள் என்பது போன்று எந்த காலவரையறையையும் சொல்லவில்லை. அதேபோல், போர் முடிந்துவிட்டது என்று அமெரிக்கா தன்னிச்சையாக அறிவித்தாலும்கூட ஈரான் அதை எவ்வாறு அணுகும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று (10.03.2026) சி.என்.பி.சி செய்தி ஊடகம் ட்ரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம், போர் எப்போது முடிவுக்கு வரும் என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியாது” என்று கூறிச் சென்றது கவனிக்கத்தக்கது.
அதேபோல் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கும் கூட்டு முடிவாக இருக்கும்” என்று சொல்லியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சூழலில், புதன்கிழமையன்றி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் போரை முடிவுக்குக் கொண்டுவர சில நிபந்தனைகளை விதித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். பிராந்திய அமைதியில் நாங்கள் உறுதியாக இருப்பதைத் தெரிவித்தோம். யூத ஆட்சியும், அமெரிக்காவும் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழிதான் இருக்கிறது.
போர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஈரானின் உரிமைகளை மதித்து அதன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற சர்வதேச உத்தரவாதம் வேண்டும்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எச்சரிக்கை:
ஈரான் அதிபரின் நிபந்தனைகள் ஒருபுறம் இருக்க மறுபுறம், ஈரானின் இலக்கு இனி அமெரிக்க ஆதரவு பொருளாதார மையங்கள் / அமைப்புகள், வங்கிகள் என்று எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீர்நிலை பதற்றம்:
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவற்ற சூழல் நீடிக்க, ஹோர்முஸ் நீர்நிலை பதற்றம் இன்னும் ஓயவில்லை. இதுவரையில், இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 1300 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுவதை நிறுத்தவில்லை. மத்திய கிழக்கு, வளைகுடாவில் உள்ள அமெரிக்க உடைமைகளுக்கு, இராணுவத் தளவாடங்களுக்கு சேதம் விளைவிப்பதும் தொடர்கிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறியும், ஈரான் ஹோர்முஸ் நீர்நிலையின் பெரும்பகுதியை வர்த்தக கப்பல்கள் செல்லாதவாறு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன்மூலம் எண்ணெய் விலை எகிறி உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை (11.03.2026) நிலவரப்படி ஹோர்மூஸ் நீர்நிலையில் 3 எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஹோர்மூஸ் நீர்நிலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற ட்ரம்ப் வாக்குறுதியால் தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணெய் விலை ஊசலாடத் தொடங்கியுள்ளது.
ஹோர்முஸ் நீர்நிலையில் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு வழங்கும் என்று ட்ரம்ப் அறிவித்தபோதே, “நாங்கள் இதை வரவேற்கிறோம். அமெரிக்க கப்பல்களை பதம் பார்ப்போம்” என்று ஈரான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் புதன்கிழமையன்று அமெரிக்கா ஓர் எச்சரிக்கை விடுத்தது. அதில், “ஈரானிய கப்பல் தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் வணிகக் கப்பல் குழுவினர் ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.
ஆனால், ஈரானிய கடற்படை வணிக போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் துறைமுகங்களுக்குள் இராணுவக் கப்பல்கள் மற்றும் உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளன.
இவ்வாறாக ஹோர்மூஸ் நீர்நிலை அச்சுறுத்தல் நீடிக்கும் வரை இந்தப் போர் முழுமையாக முடிவுக்கு வந்ததாகக் கூறவே முடியாது என்பது தான் சர்வதேச போர் அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஈரானின் எதிர்பார்ப்பு என்ன?
“அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தொடுத்துள்ள போரை வெல்ல வேண்டும் என்று ஈரான் நினைக்கவில்லை. ஈரானின் இலக்கே வேறு. ஈரான் இப்போது இராணுவ பலத்தைக் காட்டவில்லை அது நேர்த்தியாக ஒரு பொருளாதரப் போரை முன்னெடுத்துள்ளது. இந்தப் போரில் அவர்களின் இலக்கு கச்சா எண்ணெய் விலை. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைகள் (IRGC) இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டொலராக உயர வேண்டும் என்பதே அதன் இலக்கு. F-35 ஏவுகணையை வீழ்த்துவதைவிட இந்த எண்ணெய் விலை ஏற்றத்தைத் தான் ஈரான் வெற்றியாகக் கருதுகிறது.
இது உலகப் பொருளாதாரத்துக்கு சிக்கலைத் தரும். வேதனையுடன் நாடுகள் ட்ரம்ப்பை நச்சரிக்கும். உலகின் மொத்த எண்ணெய் வணிகத்தில் 20% -ஐ கையாளும் ஹோர்முஸ் நீர்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ஈரான்.
எண்ணெய் பைப்லைன்கள், கிடங்குகள், சரக்கு முனையங்கள் என மிகவும் துல்லியமாக திட்டமிட்டு ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது. அவர்கள் பல ஆண்டு காலமாக இதுமாதிரியான ஒரு போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எண்ணெய் வர்த்தகம் பாதித்தால் விலை எகிறும். விலை உயர்ந்தால் இந்த உலகம் அலறும்.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 அமெரிக்க டொலர் என்ற நிலை எட்டும்போது ஈரான் அதை தனது போர் வெற்றியாகக் கொள்ளும். ஈரானின் போர் உத்தி ஏவுகணை அல்ல, எண்ணெய் விலை” என்று கூறுகிறார் ‘Rich Dad Poor Dad’ என்ற உலகின் பெஸ்ட் செல்லர் நூலை எழுதிய ராபர்ட் கியோஸகி.
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? – ஈரான் போர் நிலவரப் பார்வை
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!”
– இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான் (Farah N. Jan) . அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து…
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.” – இதுதான் போரின் சாராம்சம். வரலாற்றில் அன்றும் இன்றும் போர்கள் நடக்கும்போது பலமான ராஜ்ஜியங்கள் / அரசாங்கங்கள் எதிரியை தோற்கடிக்க இயலாமல் இருந்ததில்லை. ஆனால் அழிவும், அரசு நிர்வாகமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதைக் குழுப்பிக் கொண்டுதான் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் சோர்ந்து போகின்றன.
அமெரிக்க இராணுவத்தால் ஈரான் அரசை அப்புறப்படுத்த முடியும். ஆனால், அதனால் உருவாக்கப்படும் அதிகார வெற்றிடத்தை எது நிரப்பும், எப்போது நிரப்பப்படும் என்பதே கேள்வி.
2003 இல் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் தான் நினைத்ததை எல்லாம் செய்தது. சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு தூக்கிலடப்பட்டார். அங்கிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. எல்லாமே வெறும் 21 நாட்களில் முடிந்தது. ஆனால், இராக் – அமெரிக்கா போர் முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இராக்கில் இன்றும் சர்வாதிகார அரசுதான் இருக்கிறது. அந்த அரசு இப்போது ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள், இராக் மண்ணில் வெளிப்படையாகவே இயங்குகின்றன.
புதிய ஈராக்கை தன் இஷ்டத்துக்கு உருவாக்க, கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள், 4,400+ அமெரிக்க இராணுவ வீரர்களை அமெரிக்கா இழந்தது. ஆனால், ஈராக் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள்தான் இருக்கிறது” என்று ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் ஃபரா.
இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குரல் என்னவாக இருக்கிறது, சர்வதேச நிபுணர்களின் பார்வை என்ன, உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? – இந்தக் கேள்விகளுக்கான விரைவுப் பார்வை இது.
மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இன்று (மார்ச் 11) பன்னிரெண்டாவது நாள். இந்த 12 நாட்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன.
இந்தச் சூழலில் ஈரான் இராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை.
உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்கள் போர்க் கப்பல்களை இங்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ட்ரம்ப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவரது படை வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஏற்கெனவே வெனிசுவேலா மிஷனில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘2 நாட்கள் தானே சொன்னீர்கள், விடுப்பில் அனுப்புங்கள்’ என்று நிர்பந்திக்கின்றனர்.
இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும்.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டொலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டொலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் இராணுவ மூத்த கமாண்டர்.
அவருடைய இந்தக் கருத்துகள், ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல் வீழ்ந்துவிட்டது என்பதுபோல இருக்கிறது அல்லவா? ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.
ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன.
“ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்தது போலவே ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக தெஹ்ரானிலும், தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ரஷ்ய எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி உள்ளிட்ட பல்வேறு கரிசனங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவும், வட கொரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. போரில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆகியனவையும் போரின் போக்கில் கவனிக்கத்தக்கது.
ஈரானுடன் எப்போதுமே நட்பில் இருந்துவரும் சீனாவும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் களத்தில் பல உதவிகளை செய்து கொடுத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிக்கல்களுக்கு இடையே அமெரிக்கா, இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் இந்தியா தங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் போரின் பக்கவாட்டு சேதாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வளைகுடா ஒதுழைப்பு நாடுகளோ புதின் உதவியை நாடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது உலகமும் முழுவதையும் இழுத்துவிடும் சூழலுக்கு வந்து நிற்கிறது.
காசா போர், லெபனான், யேமன் மீதான தாக்குதல் என அடுத்தடுத்து போரில் சிக்கியுள்ள இஸ்ரேல், இப்போது ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், “ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று நெதன்யாகு கூறியிருக்கிறார்.
இந்தப் பேச்சில் ஒருவித அயர்ச்சி தெரிவதாக சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர்.
எங்கே சறுக்கியது அமெரிக்கா?
ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவின் அந்தக் கணிப்பு தவறானது. இருக்கும் தலைமையை வீழ்த்தினால் அமெரிக்க விரும்பிய மாற்று களம் உருவாவதைவிட, ஈரானில் ஏற்கெனவே எந்தக் குழு / அமைப்பு / கட்சி வலுவாக இருக்கிறதோ, எதனிடம் ஆயுதக் குவியல் உள்ளதோ அதுவே அதிகாரத்துக்கு வரும். அப்படியாக ஈராக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈரான் நிரப்பிக் கொண்டது. இப்போது ஈரானில் ஏற்பட்டுள்ளதை யார் நிரப்புவார்கள் என்பதே கேள்வி.
இப்போதைக்கு அங்கு, பலம் பொருந்திய இஸ்லாமிய புரட்சிகர படைகள் அமைப்பு ரீதியாக வலுவாக, ஆயுத பலம் கொண்டதாக இருப்பதோடு, ஈரான் பொருளாதாஅரத்தின் 30 முதல் 40 சதவீதத்தின் மீது தனது அதிகாரித்தையும் கொண்டுள்ளது. அதனால்தான் புதிய உச்ச தலைவர் நியமனமும் சாத்தியமானது.
ஒருவேளை உச்ச தலைவரே அப்புறப்படுத்தப்பட்டாலும் ஐ.ஆர்.ஜி.சி அதிகாரத்தில் இருக்கும். இப்போது உச்ச தலைவராகியுள்ள மோஜ்தபா காமேனியும் இந்தப் படையுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவரே. எனவே, அயதுல்லா காமேனி உருவாக்கிய இந்தப் படையின் பேராதரவோடு மோஜ்தபா பதவிக்கு வந்துள்ளார். இன்றைய சூழலில் ஈரானில் ஏதும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஒருவகையில் மணி மகுடம் தலைமாறியுள்ளது.
பதில் கிடைக்குமா?
ஈராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், ஈராக் இராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இராணுவத்தில் இருந்த 4 இலட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்.
இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன?
அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை.
ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?
அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா?

