Site icon சக்கரம்

போரை நிறுத்து, ஏகாதிபத்தியமே!  

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதியைச் சீர்குலைத்து, உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கோரத் தாண்டவத்தைத் தொடர்கிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பாகும். “இராணுவ இலக்குகளை அழித்துவிட்டோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொக்கரித்தாலும், இது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு முடிவற்ற போருக்குள் தள்ளும் சதியாகும். 

கடந்த மூன்று வாரங்களாகத் தொடரும் இந்த வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 1,200 இற்கும் மேற்பட்ட ஈரான் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் முஜ்தபா காமேனி புதிய தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவரது தலைமையில், கடுமையான பதிலடிகளை ஈரான் தந்து வருகிறது. 

இதனிடையே இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்தப் போர் ஒரு “தீர்க்கமான கட்டத்தை” எட்டியிருப்பதாகக் கூறுவது, அவர்கள் ஒரு பெரிய இனப்படுகொலைக்குத் தயாராகி வருவதையே  காட்டுகிறது. ஏற்கனவே 15,000 இற்கும் மேற்பட்ட  இலக்குகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்  குண்டுகளைப் பொழிந்துள்ளன. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என நாடகமாடிக்  கொண்டே, மறுபுறம் போரைத் தீவிரப்படுத்து வது ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாகி விட்டது. 

இந்தப் போரின் விளைவாக முதல் ஆறு நாட்களில் மட்டும் அமெரிக்காவிற்கு 11.3 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, 13 இராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர். எண்ணெய் விநியோக மையங்களைக் குறிவைப்பதன் மூலம் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி, அதன் மூலம் இலாபம் ஈட்டத் துடிக்கும் அமெரிக்காவின் தந்திரத்தை உலகம் உணர வேண்டும். ஹோர்முஸ் ஜலசந்தியை  ஈரான் மூடியிருப்பது, சர்வதேச வர்த்தகத்தைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது. 

தனது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களுக்காக அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொடுக்கும் அமெரிக்கா, உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல், தனது நட்பு நாடான ஈரானுக்கு எதிரான இந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த இப்போதேனும் சர்வதேச அரங்கில் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் இரத்த வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.03.15

Exit mobile version