-சாவித்திரி கண்ணன்
எதிர்பார்க்கவில்லை ட்ரம்ப், இத்தனை வீரியமாக ஈரான் திருப்பித் தாக்குமென! இது முதல் அதிர்ச்சியென்றால், இந்தப் போர் அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு அமெரிக்கா மீது பெரும் அவ நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ட்ரம்பை கைவிட்டுவிட்டன. சொந்த நாட்டிலும் எதிர்ப்புக்கு மேல் எதிர்ப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தன் சொந்த நாட்டில் ஈரான் மீதான போரால் பெரும் இக்கட்டிற்கு ஆளாகி வருகிறார். ஈரான் மீதான போரால் அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருவதால் அமெரிக்க மக்களின் கோபம் ட்ரம்ப் மீது திரும்பி உள்ளது ஒருபுறமென்றால், மறுபுறம் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு மிகுந்த கெட்ட பெயரையே இந்தப் போர் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
ஈரான் இவ்வளவு தீவிரமாக எதிர்தாக்குதல் நடத்துவது தனக்கு ஆச்சரியமளிப்பதாக ட்ரம்ப் அடிக்கடி தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஈரான் மீதான போரைத் தவிர்க்க வேண்டும். ஈரான் மீதான தாக்குதல் பிராந்தியப் போராக மாறும் அபாயம் உள்ளது. பிராந்திய போராக மாறினால், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் உள்ள இராணுவத் தளங்கள் சேதாரமாகும். அது நம் நட்பு நாடுகளுக்கு நம் மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதையும் மீறி ட்ரம்ப் எடுத்த முடிவால் ட்ரம்ப்பே ஆச்சரியப்படும்படி ஈரான் எதிர்தாக்குதல் நடத்துகிறது.
ஹோர்முஸ் நீரணையில் பயணிக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் ஏராளமான கப்பல்கள் ஈரானின் உக்கிரமான தாக்குதலுக்கு அஞ்சி பின் வாங்கியுள்ளன. இந்த சூழலில் அந்த கப்பல்களுக்கு பாதுகாப்பாக தங்கள் கடற்படைகளை அனுப்பி உதவ வேண்டும் என ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட எவையும் சட்டை செய்யவில்லை என்பதால் ட்ரம்ப் அதிர்ந்து போயுள்ளார்.
வெளிநாட்டு எதிர்ப்புகள் எதுவென்றாலும் இராணுவ பலத்தால் வெற்றி கொள்ளலாம். ஆனால், சொந்த நாட்டிலேயே, சொந்த மக்களே எதிர்த்தால் அதை எதிர் கொள்வது ரொம்ப சவாலாகும்.
யூதவெறி இஸ்ரேலுக்காக அமெரிக்கா பல நாடுகளை பகைத்து போரில் அமெரிக்க பொருளாதாரத்தையே அழித்து போர் அச்சுறுத்தல்களை உருவாக்கிக் கொள்வதற்கு அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பு உருவாகியுள்ளது. தனல் வீதிகளில் திரண்டு ஈரான் மீது போர் வேண்டாம் எனப் போராடுகிறார்கள்!
இதன் விளைவாக அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்டவர் தான் ஜோ கென்ட் (Joe Kent). ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேலின் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தமே இந்தப் போருக்கு காரணம் என்பது தெளிவாகத் தெரிந்த சூழலில் ஈரான் மீதான – அமெரிக்க நலன்களுக்கு எதிரான – இந்தப் போரை எனது மனசாட்சியின்படி என்னால் ஆதரிக்க முடியவில்லை என அவர் கூறியுள்ளது அமெரிக்காவில் அதிரலைகளை உருவாக்கி உள்ளது.
ட்ரம்பின் விசுவாசமான அதிகாரிகளில் ஒருவரான ஜோ கென்ட், ஈராக் போர் உள்ளிட்ட 11 போர்களில் 20 ஆண்டுகள் இராணுவத்தில் களம் கண்டவர். சி.ஐ.ஏ எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பின் முக்கிய அதிகாரியாகவும் இருந்தவர். 45 வயதாகும் ஜோசப் கென்ட் முன்னதாக இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு போரில் தன் மனைவி ஷானான் கென்ட்டையை (Shannon Kent) பறிகொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய போரில் அமெரிக்க வீரர்கள் 14 பேர் இறந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே சமயம் இந்தப் போரில் இதுவரை ஈரானில் சுமார் 1,400 பேர், லெபனானில் சுமார் 950 பேர், இஸ்ரேலில் 12 பேர் உயிரிழந்துள்ளதானது அமெரிக்காவிற்கு கெட்ட பெயரை உருவாக்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டின் ஈராக் போரைப் போலவே, இப்போதும் அதே மாதிரியான தவறான தகவல்களால் இந்தப் போர் தூண்டிவிடப்பட்டுள்ளது என்பதை ஆணித்தரமாக சொல்லி உள்ளார் கென்ட்.
தனது ராஜினாமா கடிதத்தில் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஜோ கென்ட் “அதிபர் ட்ரம்ப் அவர்களே, மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து விலகுகிறேன். தற்போது அதிபர் பொறுப்புக்கு வரும் வரை, மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் அமெரிக்க வீரர்களின் உயிரையும், செல்வத்தையும் வீணடிக்கும் ஒரு வலை என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். உங்கள் முதல் ஆட்சியில், ஒரு முடிவில்லாத போருக்குள் சிக்காமல் இராணுவ பலத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் சிறந்த அதிபராக இருந்தீர்கள்.
ஆனால் இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும், அமெரிக்க ஊடகங்களும் சேர்ந்து ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்ப வைத்து, போருக்குத் தூண்டினர். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தி நம்மை ஏமாற்றியுள்ளனர்.
போர்க்களத்திற்கு 11 முறை சென்ற ஒரு வீரனாகவும், இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போரில் தனது மனைவியைத் தொலைத்தவனாகவும், அமெரிக்க மக்களுக்குப் பயன் தராத இந்தப் போருக்கு அடுத்த தலைமுறையை அனுப்பி இழக்க என் மனசாட்சி இடம் தரவில்லை’’ என வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன்.
ஈரானில் நாம் யாருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தத் தவறான பாதையை இப்போதே மாற்றி நாட்டைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு ஜோ கென்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதானது இன்று சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பேரழிவுகளை உருவாக்கி வரும் போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியும், டிரம்பின் விசுவாசியுமே போரின் நியாயத் தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது அமெரிக்க மக்களை இன்னும் போருக்கு எதிராக போராடத் துண்டியுள்ளது.
இந்த உள்ளூர் நெருக்கடி காரணமாக அதிபர் ட்ரம்ப் இந்த போரில் பின்வாங்கி மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலை மீண்டும் தோன்ற வழிவகுப்பாரா? எனப் பார்க்க வேண்டும்.

