
ஈரான் சளைக்காமல் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை படுகொலை செய்த பிறகு, ஈரான் தன்னிடம் சரணடைந்து விடும் என்று ட்ரம்ப் கணக்குப் போட்டார். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, இஸ்ரேலையும், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களையும் ஏவுகணைகளை வீசி ஈரான் சரமாரியாகத் தாக்கியது. இஸ்ரேலில், பிரதமர் நேதன்யாகு அலுவலகம் அருகிலேயே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி கொடுத்தது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியபோது, யாரும் பயப்பட வேண்டாம், நான் பாதுகாப்பு அளிக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார். ஆனால், அமெரிக்கா, ஜப்பான் கப்பல்கள் உட்பட 6 கப்பல்களை ஏவுகணைகளால் ஈரான் தாக்கிய போது, ட்ரம்ப்பால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது.
இதனால், ஹோர்முஸ் நீரிணையை மீட்க, நேட்டோ கூட்டணி நாடுகள் அனைத்தையும் ட்ரம்ப் துணைக்கு அழைத்தார். சீனாவின் உதவியை நாடவும் அவர் வெட்கப்படவில்லை. சீனாதான் ஈரானுக்கு எதிராக வராது என்றால், நேட்டோ நாடுகளும் அமெரிக்காவைக் கைவிட்டன. ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய கூட்டாளிகளும் கப்பல்களை அனுப்ப முடியாது என்று கூறிவிட்டன. இதனால், நேட்டோ கூட்டணி நாடுகளை கோழைகள் என்று வசைபாடி ஆத்திரமடைந்தார் ட்ரம்ப்.
மறுபுறத்தில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த கே.சி-135 ரகத்தைச் சேர்ந்த 5 எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. எப். 15 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்களையும் குவைத்தில் தாக்கி அழித்தது.
ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்கிய நிலையில், அமெரிக்கா ஆதரவு நாடான கத்தாரின் முக்கிய மற்றும் மிகப் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான ராஸ் லாபன் மீது ஈரான் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் இல்லங்களுக்கு மேலே பறக்கவிடப்பட்ட டிரோன்களாலும் வெள்ளை மாளிகை அரண்டு போனது.
அதிர்ச்சியடைந்த ட்ரம்ப், “இனி இஸ்ரேல் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தாது. ஈரானும் கத்தார் எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது” என்று சமாதானம் பேசினார்.
அப்படியும் ஈரான் விடுவதாக இல்லை. ரேடார்களில் சிக்காத அமெரிக்காவின் திறன் வாய்ந்த, அதிநவீன எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தி பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தரைப்படையை இறக்கப் போவதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படி தரைவழி தாக்குதலுக்கு முயன்றாலும் வழக்கம்போல அதிர்ச்சிகரமான பதிலடி உறுதி என்று ஈரான் எச்சரித்தது.
இதனிடையே கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா சலுகை காட்டியது.
அப்போதும், “சர்வதேச சந்தைகளுக்கு அனுப்ப எங்களிடம் புழக்கத்தில் உள்ள கச்சா எண்ணெய்யோ அல்லது உபரி எண்ணெய்யோ கையிருப்பில் இல்லை” என்று கூறி, அமெரிக்காவின் சலுகையை அமெரிக்காவே வைத்துக் கொள்ளட்டும் என்ற ரீதியில் ஈரான் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் தான், ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மாபெரும் இராணுவ முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, “அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் யோசனையில் இருந்தாலும், போர்நிறுத்தம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, பாரசீக புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு அனுப்பிய செய்தியில், மூன்று வாரங்களாக நீடித்து வரும் மேற்கு ஆசியப் போரில் எதிரிகளுக்கு ஒரு “தலைசுற்ற வைக்கும் அடியை” கொடுத்திருப்பதாகவும், தாங்கள் தொடர் மோதல்களுக்கு மத்தியில் ஏவுகணைகளைத் தயாரித்து வருவதுடன், ஏவுகணை மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்வதோடு, உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பாதுகாப்பற்றவை என்றும் எச்சரித்துள்ளார்.

