
ஈரான் மீது அமெரிக்காவும் அதன் மேற்கு ஆசியக் கூட்டாளியான இஸ்ரேலும் தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல்களின் தாக்கத்தை உலகம் உணர்ந்து வரும் வேளையில், அதே போன்ற மற்றொரு கொடூரமான ஏகாதிபத்தியச் செயல் கரீபியன் கடற் பகுதியில் எவ்வித கவனமும் ஈர்க்கப்படாமல் அரங்கேறி வருகிறது.
கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முடக்கியுள்ளது. கியூபாவை ஸ்தம்பிக்க வைக்கும் அமெரிக்காவின் தடைகள் வெனிசுவேலாவில் இருந்து கியூபாவுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவது, கியூபாவுக்கு எரிபொருள் வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் அபராத வரிகள் விதிக்கப்படும் என அச்சுறுத்துவது மற்றும் ரஷ்யாவின் டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தடுப்பது என டிசம்பர் 2025 முதல் அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒரு நாட்டின் கழுத்தை நெரிப்பதாக அமைந்துள்ளன. கியூபாவின் மின் உற்பத்தியில் 83% எண்ணெய்யைச் சார்ந்தே உள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடைகளால் பெட்ரோலியத்தைச் சார்ந்திருக்கும் கியூபா நிலைகுலைந்துள்ளது. இதன் விளைவுகள் பேரழிவைத் தந்துள்ளன. 2026 மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை அந்நாட்டின் மின் தொகுப்புக் கட்டமைப்பு (Grid) முழுமையாக முடங்கியுள்ளது. தலைநகர் ஹவானா உள்ளிட்ட நகரங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன, அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் வீணாகின்றன. தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை கள் சர்வதேச சட்டங்களின்படி கிரிமினல் குற்றமாகும். கியூபா “முடிவை எதிர்நோக்குகிறது” என்றும், கியூபாவைத் தன்பிடிக்குள் கொண்டு வரும் “கௌரவம்” தனக்குக் கிடைக்கும் என்றும் ட்ரம்ப் பெருமையாகக் கூறி வருகிறார். மேலும், எந்த நிபந்தனைகளையும் குறிப்பிடாமல் “காலம் கடந்து போவதற்குள் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று கியூப அரசை அவர் மிரட்டுகிறார். 60 ஆண்டு கால பொருளாதாரத் தடை 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க நிறுவனங்களை கியூப அரசு தேசியமயமாக்கியதில் இருந்தே, அமெரிக்கா அதன் மீது 60 ஆண்டு காலமாக பொருளாதாரத் தடையை (கியூப மக்கள் இதனை ‘முற்றுகை’ என்கின்றனர்) விதித்துள்ளது.
1962 இல் விதிக்கப்பட்ட இந்த வர்த்தகத் தடை, 1996 ஆம் ஆண்டின் ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டத்தின் மூலம் மேலும் தீவிரமாக்கப்பட்டு உலக வர்த்தகச் சமூகத்தையும் இதைப் பின்பற்றுமாறு அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. இதற்கிடையில், கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்தது. பாரக் ஒபாமா ஆட்சியில் நீக்கப்பட்ட இந்த அறிவிப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கொண்டு வந்தார். இதனால் கியூபா சர்வதேச வங்கிச் சேவைகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்வது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்காக அல்ல.
மாறாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான புளோரிடாவின் வலதுசாரி கியூப-அமெரிக்க சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஆகும். ஹவானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது மார்கோ ரூபியோவின் வாழ்நாள் இலட்சியமாகும். வெனிசுவேலாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவத் தலையீடு (அங்கு பதவியில் உள்ள ஜனாதிபதியைக் கைது செய்தது மற்றும் எண்ணெய்யைக் கைப்பற்றிய உட்பட), கியூபாவின் முதன்மை எரிபொருள் விநியோகத்தைத் துண்டிப்பதற்காகவே திட்டமிடப்பட்டது. வெனிசுவேலாவில் ட்ரம்ப் நடவடிக்கைக்கு உரிய தண்டனை கிடைக்காத நிலை, கியூபாவின் கழுத்தை நெரிக்க ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் துணிச்சலை அளித்துள்ளது.
ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் போருக்கு இணையாகவே கியூபாவில் நடக்கும் அடக்குமுறைகளும் அரங்கேறி வருகின்றன. உலக நாடுகளின் மௌனம் கலைய வேண்டும் எதிர்ப்புக்கு உட்படாத ஒவ்வொரு ஏகாதிபத்திய அத்துமீறலும், அடுத்தடுத்த அத்து மீறல்களை இயல்பாக்கி விடுகின்றன. இது அமெரிக்காவின் பிடியில் உள்ள பலவீனமான நாடுகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச ஒழுங்கமைப்பின் கட்டமைப்புக்கே அச்சுறுத்தலாக முடிகிறது. இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகமும் இதற்கு எதிராக மௌனமாக இருக்கக் கூடாது.
இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய துணிச்சல் உலக நாடுகளுக்குத் தேவை. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு கியூப மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.
–‘தி இந்து’ (ஆங்கிலம்) தலையங்கம், 26.3.2026
தமிழில் : ராஜூபாய்

