Site icon சக்கரம்

அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் யூத ஆதரவு அரசியல்!

-ச.அருணாசலம்

லகிலேயே சக்தி வாய்ந்த யூதர்களின் தயவின்றி அமெரிக்காவில் யாரும் வெற்றிகரமான அரசியல்வாதியாகவோ, சக்சஸ்புல் தொழில் அதிபராகவோ, புகழ் பெற்ற கலைஞராகவோ வலம் வர முடியாது. பலஸ்தீனர்களுக்காக பரிதாபப்படுபவர்கள் அரசியல்வாதியோ, ஆசிரியரோ, மாணவரோ யாராக இருந்தாலும் யூத லாபி விட்டுவைக்காது; தொலைத்து விடும்;

ஆண்டு தோறும் சுமார் 3 பில்லியன் டொலர் (சுமார் 35,000 கோடி இந்திய ரூபா) பணத்தை அமெரிக்கா இஸ்ரேல் நாட்டிற்கு கொடுத்து உதவுகிறது. அதுவும் மொத்தமாக ஒவ்வொரு ஆண்டு துவக்கத்தில் பாசமுள்ள மகன் பெற்றோருக்கு மாதந்தவறாமல் பணம் அனுப்புவதை போன்று!

என்ன காரணம்? 1948 இல் தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரேல் பலவீனமாக இருக்கிறது, அந்த நாட்டை சுற்றிலும் எதிரிகள் உள்ளனர்.

ஜெர்மனிய ஹிட்லர் ஆட்சியிலும், நாஜிகளின் ஆதிக்கத்திலும் யூதர்கள் பயங்கர கொடுமைகளை சந்தித்ததால் அதற்கு வடிகாலாக யூதர்களின் இஸ்ரேலுக்கு நாகரீக உலகம் உதவ வேண்டும்.

யூதர்கள் விசேடமானவர்கள், தீய சக்திகளான அராபியர்கள் மத்தியில் வாழும் ஒழுக்க சீலர்கள் என்றெல்லாம் இதற்கு காரணங்களை ஊடகங்கள் கற்பிக்கின்றன.

ஆனால், இஸ்ரேல் நாட்டை தோற்றுவித்த போதும் (மே 14,1948) அதற்கு பிறகும் வன்முறை வெறியாட்டங்கள் ஆடுவதே, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதே இஸ்ரேல் படையினரின் வாடிக்கையாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவில், யூதர்கள் அதிகம் பேர் பலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்று அமெரிக்கன் ஜியோனிஸ்டு எமர்ஜன்சி கவுன்சில் (AZEC) கூறியது. இவ்வமைப்பு 1949 இல் – இஸ்ரேல் நாடு தோற்றுவிக்கப்பட்ட பிறகு- அமெரிக்க ஜியோனிச கவுன்சில் தனது பெயரை மாற்றிக்கொண்டு இளைய நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனக் கூறியது.

இந்த அமைப்பிலிருந்தே 1954 இல் பொது விவகாரங்களுக்கான அமெரிக்கன் ஜியோனிச கமிட்டி (AZCPA) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1953 இல் இஸ்ரேலில் – பாலத்தீன மேற்கு கரையில்- அங்கு புதிதாக குடிவந்த யூத பெண்மணி ஒரு சிறு மோதலில் இறந்து போனதால் கண்ணில் பட்ட அந்த கிராம, மக்களையெல்லாம் இஸ்ரேல் இராணுவம், ஏரியல் ஷரானின் ( பின்னாளில் இஸ்ரேலின் பிரதமரானவர்) உத்தரவின் பேரில் கொன்று குவித்தனர் .

டைம்ஸ் நாளிதழ் அன்று வெளியிட்ட செய்தியின்படி மொத்தம் 66 பேரை இராணுவம் சுட்டு கொன்றது, 48 வீடுகளை வெடிவைத்து தகர்த்தது, பள்ளிகூடங்கள், பள்ளிவாசல் அனைத்தையும் தரைமட்டமாக்கியது. ஐ. நா சபையில் அமெரிக்க  அரசின் ஆதரவுடன் இந்தப்படுகொலையை கண்டித்து–இஸ்ரேல் படையினரின் அட்டூழியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அமெரிக்க ஊடகங்களில் இஸ்ரேல் இராணுவத்தின் வெறிச்செயலை கண்டித்து செய்திகள் பரபரப்பாக வெளியாயின. அமெரிக்க பொதுமக்களும் அரசும் கூட தங்களின் அதிருப்தியை காட்டினர். சர்வதேச ஊடகங்களிலும், அமெரிக்காவிலும் ஏற்பட்ட இத்தகைய மோசமான, எதிர்மறையான வெளிப்பாட்டை , பின்னடைவை எதிர்கொள்ளவே அமெரிக்க இஸ்ரேல் பொது விவகார குழு – American Israel Public Affairs Committee AIPAC- என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்றைய அமெரிக்க அதிபர் டிவிட் ஐசன்ஹோவர் இவ்வமைப்பை வெளிநாட்டு அரசின் அமைப்பாக பதிவு செய்ய வலியுறுத்தினார்.

1959 இல் பெயர் மாற்றத்தோடு தோன்றிய இவ்வமைப்பின் நோக்கம் இஸ்ரேல் நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்துவதும், மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் நலன்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுறவாகவும் கூறப்படுகிறது. மிகச்சிறிய பட்ஜெட்டுடன் , விரல்விட்டு எண்ணக கூடிய ஊழியர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு (AIPAC) அமெரிக்க சுவிசேஷ கிறிஸ்துவ சபையினரிடமிருந்து ஆக்கத்தையும் ஊக்கத்தையும் பெற்றது, இன்றும் பெறுகிறது.

நற்செய்தி கிறித்துவ சபையினர் பைபிளில் கூறப்பட்ட ‘இயேசுவின் இரண்டாவது வருகையை, கடவுளால் தேர்வு செய்யப்பட்ட யூதர்களின் ஆட்சியை எவரும் எதிர்க்க கூடாது என்றும் நம்புவதோடன்றி யூதர்களின் ஆதிக்கத்தின் முடிவில் பேரழிவு ஏற்பட்டு இயேசுவின் இரண்டாவது வருகை திகழும் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புகின்ற பாமரக் கூட்டமிது. இக்கூட்டம் அமெரிக்காவில் அதிகம். இதில் கிறிஸ்துவ ஜியோனிஸ்டுகள் என்று கூறிக் கொள்பவர்கள் சிறு பகுதியினரே ஆனாலும், இத்திருச்சபைகளின் தலைமை பொறுப்பில் அவர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் இஸ்ரேலின் ஆதிக்கத்தை, பலஸ்தீனர்களின் நிலங்களையும் உரிமைகளையும் பறிப்பதை, அவர்களை நாடற்றவர்களாக இஸ்ரேல் விரட்டியடிப்பதை, மனித படுகொலை நடத்துவதை, இன ஒழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று கூறுபவர்களாவர். அண்டை அரபு நாடுகளை தாக்கி ஆக்கிரமித்து, இஸ்ரேலை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் காட்டுமிராண்டி தனத்தை ஆதரிப்பது கிறிஸ்துவர்களின் கடமை, அமெரிக்க அரசின் அரசியல் கடமை எனக் கருதுபவர்கள் இவர்கள் . இத்தகைய ஆதரவுத் தளத்தை வைத்திருப்பதால் அமெரிக்க மக்கள் தொகையில் 3 % விழுக்காடே யூதர்கள் இருந்தாலும், அமெரிக்க அரசியலை இஸ்ரேல் நாட்டினரால் கட்டுப்படுத்த முடிவதன் சூட்சமம் இது தான்.

ஐபாக்கின் அரசியல் நோக்கம்;

இந்த “ஐபாக்“ (AIPAC) அமைப்பு 1974 இல் 4 இலட்சம் டொலர் பட்ஜெட்டை கொண்டதாக இருந்தது. இன்று 2023-2024 இல் நடந்த காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) தேர்தலில் 45 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது. இஸ்ரேலிய ஆதரவு அரசியல்வாதிகளை ‘காங்கிரஸ்’ தேர்தலில் வெற்றி பெற வைக்கவும், பலஸ்தீன ஆதரவு அல்லது இடதுசாரி கண்ணோட்டமுள்ள வேட்பாளர்களை தோற்கடிக்கவும் இவ்வளவு பெரிய தொகையை அந்த அமைப்பு செலவு செய்துள்ளது.

பனிப்போர் காலம் தொடங்கி தொடர்ந்து 1979 ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின்னரும், அமெரிக்கா தன் செல்லப் பிள்ளையாகவும், பொக்கிஷமாகவும் இஸ்ரேலைக் கருதுகிறது.

இஸ்ரேலிய தலைவர்களும், ஐபாக் அமைப்பும் அமெரிக்காவை தங்களது  அகண்ட இஸ்ரேல் திட்டத்திற்கான அடியாளாக, ஆதரவு தளமாக, ஆயுதங்கள் கொடுக்கும் வியாபாரியாக கருதி காரியங்கள் சாதித்ததை வரலாறு நெடுக நாம் காணலாம். அதற்கான ஐபாக்கின் திட்டங்களும், முன்னேற்பாடுகளும், முயற்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கும்.

அமெரிக்க அரசியலில் ’லாபியிங்’ செய்வது வளமையான ஒன்றாகும். அமெரிக்க அரசு எடுக்கும் அரசியல்,பொருளாதார நடவடிக்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற, அழுத்தம் கொடுக்கும் மிக முக்கிய அமைப்பு ஐபாக் தான்.  இதை 1997 இல் பார்ச்சூன் பத்திரிக்கை அமெரிக்க செனட்டர்களிடம் நடத்திய கருத்துகணிப்பின் மூலம் உறுதிபடுத்தியது. இத்தகைய பலம் வாய்ந்த அமைப்பு அமெரிக்க அரசியல்வாதிகளை தேர்வு செய்தலில் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல், மட்டுமின்றி பிரைமரிகள் எனப்படும் கட்சி வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் தேர்தலில் இருந்தே தனது பணியை தொடங்குகிறது.

இஸ்ரேல் அரசை கேள்வி கேட்காமல், அவ்வரசு எது செய்தாலும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, இஸ்ரேலின் நலன்களே முக்கியம் (அமெரிக்க நலன்களல்ல) என்றெண்ணுபவர்களை அமெரிக்க அரசியலில் உள்ள இரண்டு கட்சிகளிலும் -குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி – வளர்த்து எடுத்து அவர்களை தலைமை பீடத்தில் அமர்த்துவது, அதைவிட முக்கியமாக அவ்வாறு அமர்த்தப்பட்டவர்கள் மூலமாக அமெரிக்க அரசின் போக்கை இஸ்ரேலுக்கு சாதகமாக மாற்றுவது, எதிர்ப்போரை காயடித்து பதவியில் இருந்து இறக்குவது, அரசியலில் இருந்து ஓரங்கட்டுவது ஆகியவற்றை ஐபாக் அமைப்பு செவ்வனே செய்து வருகிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான ஜமால் பௌமான், மிசௌரி மாகாணத்தை சார்ந்த கோரி புஷ் ஆகிய இருவரும் காசாவில் இஸ்ரேல் இழைத்த மனிதப் படுகொலையை எதிர்த்தனர் என்பதற்காக 24 மில்லியன் டொலர்கள் செலவிட்டு அவர்களை எதிர்ப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைத்து இவ்விருவரையும் தோற்கடித்தது.

இவ்வாறு அரசியல்வாதிகளை விலைகொடுத்து வாங்குவதடோன்றி, அதிகாரிகளையும் (Executive) பொறுப்பிலமர்பவர்களையும் வளைத்துப் போட, வேண்டியவர்களுக்கு பதவியை பெற்றுத்தர, வேண்டாதவர்களை பதவியிறக்க ஐபாக் நிறுவனம் பணத்தை வாரி இறைக்கிறது. இதன் மூலம் அமெரிக்க காங்கிரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐபாக் கண்காணிப்பதோடு, கட்டுப்படுத்தவும் செய்கிறது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்கா ஆப்கானித்தானத்தை தாக்காமல் ஈராக்கை தாக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியது, சதாம் ஹுசைனை அழிக்குமாறு வற்புறுத்தியது. அதை நிராகரித்த அதிபர் புஷ் ஆப்கானித்தான் மீது போர் தொடுத்தார். அதற்கு – பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்திற்கு மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உட்பட அனைத்து இஸ்லாமிய நாடுகளும் துணை நின்றன. பலஸ்தீன அமைப்பின் தலைவரான யாசீர் அராபத்தும் துணைநின்றார்.

இந்த ஒற்றுமையை குலைக்க அமெரிக்கா விரும்பவில்லை, எதுரெதிராக நிற்கும் இஸ்லாமிய மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே சம நிலையைப் பேணவும், பலஸ்தீனர்களுக்கு சுய ஆட்சி கொடுக்க பலஸ்தீன அரசு ஏற்படுத்த அதிபர் புஷ் முயன்றார் . இம்முயற்சி காம்ப் டேவிட் ஒப்பந்தம், ஆஸ்லோ ஒப்பந்தம் ஆகியவற்றின் – இஸ்ரேல் நாடு ஒத்துக் கொண்ட அம்சங்களின் – அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான். ஆனாலும் இஸ்ரேல் நாடு, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மறுத்து மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்களின் மீது ஒபரேஷன் டிஃபென்ஸ் ஷீல்டு என்ற பெயரில் கொலைவெறி தாக்குதல் நடத்தி அங்குள்ள பலஸ்தீனர்களை கொன்றது. தப்பித்தவர்களை அகதிகளாக விரட்டியடித்தது.

இதை எதிர்த்து அமெரிக்க அரசின்-புஷ் நிர்வாகத்தின் – உள்துறை அமைச்சர் (Secretary of State) காலின் பவல் மற்றும் தேசீய பாதுகாப்பு ஆலோசகர்  திருமதி கண்டலீசா ரைஸ் ஆகியோரின் தாக்குதலை உடனடியாக திறுத்தக் கோரும் உத்தரவுகளை – இஸ்ரேல் காலில் போட்டு மிதித்தது. வேறுவழியின்றி அமெரிக்க அதிபர் சத்தமின்றி பின்வாங்கினார்.

அமெரிக்க காங்கிரசில் புஷ் நிர்வாகம் கொண்டுவந்த தீர்மானங்களை – பலஸ்தீன தலைவர் யாசீர் அராபத்தும், இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரானும் பலஸ்தீன அரசு நிறுவுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றமுன்மொழிவை – எதிர்த்து மே 2 ல் அமெரிக்க காங்கிரஸில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி  புஷ் முயற்சியை இஸ்ரேல் முறியடித்தது. இதன் மூலம் அமெரிக்க அரசியலில் யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை இஸ்ரேல் உலகிற்கு காட்டியது.

‘அமெரிக்கா,இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது, இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரணியில் போராடுகின்றனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் (?) பாலத்தீன தலைவர் யாசீர் அராபத்தை இத் தீர்மானம் கண்டிப்பதாக “ கூறப்பட்டது.

வாஷிங்டன் போஸ்டு பத்திரிக்கையோ “புஷ்ஷும் – ஷாரனும் மத்திய கிழக்கு பிரச்சினையில் ஒரே நிலையே எடுத்துள்ளனர்” என்று புகழாரம் சூட்டியது. காங்கிரஸ் தீர்மானமும் பத்திரிக்கையின் பாராட்டும் அதிபர் புஷ்ஷின் முயற்சிகளுக்கு கிடைத்த பாராட்டா? அல்லது அவை இஸ்ரேலால் முறியடிக்கப்பட்டதற்கு கிடைத்த பாராட்டா?. ஓம், அவை புஷ் மவுனமாக  தோல்வியை கடந்து சென்றதற்கான பாராட்டாக கூட இருக்கலாம் அல்லவா?

இத்தகைய சித்து விளையாட்டை அமெரிக்க அரசியலில் இஸ்ரேல் நாடு விளையாடுவதற்கு ‘ஐபாக் அமைப்பு ‘ மட்டுமே முழு முதல் காரணமாகும் .

அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதில், அதிகாரிகளை நியமிப்பதில் மட்டுமல்ல, இன்னபிற முக்கிய தளங்களிலும் ஐபாக் அமைப்பு புகுந்து தன்” கைவரிசையை “ காட்டி வருகிறது.

திங் டாங்க்‘ (Think Tank) எனப்படும் சிந்தனையாளர் குழுக்களையும், ஆராய்ச்சி நிறுவன அமைப்புகளையும் தன் வசம் இழுத்து வைத்துள்ளதோடன்றி, தங்களது கருத்துக்களை- இஸ்ரேலின் நலன்களே முதன்மையானது, புனிதமானது – என்ற கருத்தை விதைத்து விருட்சமாக்க பல சிந்தனையாளர் குழுக்களையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஏற்படுத்தி இவ்வமைப்பு தன் வசம் வைத்துள்ளது.

அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட், பூரிங் இன்ஸ்டிடியூட், சென்டர் ஃபார் செக்யூரிட்டி பாலிசி, ஃபாரின் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மற்றும் ஹெரிட்டேஜ்  பவுண்டேஷன், ஹடசன் இன்ஸ்டிடியூட் என இன்னும் பல அமைப்புகளின் உதவியால் ஐபாக் அமைப்பின் வலைப் பின்னல் பரந்து விரிந்து உள்ளது. இதன் மூலம் தங்களுக்கு சாதகமான கொள்கைகளை, முன்னெடுப்புகளை நாட்டு நலனுக்கு, மக்கள் நலனுக்கு உகந்ததாக சித்தரிக்க, அங்கீகாரம் கொடுக்க இடைவிடாது செயல்படுகின்றனர்.

கல்வித் துறையை கட்டுக்குள் வைப்பது;

அமெரிக்க பல்கலைக்கழகங்களில், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பாலத்தீனர்களுக்கு இழைக்கப்டும் கொடுமையை,

பலஸ்தீன விடுதலையின் அவசியத்தை பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையூறு ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களை இழிவு படுத்தி, சேற்றைவாரி இறைத்தனர் ஐபாக் அமைப்பினர்.

இதற்கு அவர்கள் கையிலெடுத்த ஆயுதம்தான் ஆண்டி செமைட்டிசமாகும் . பலஸ்தீனர்களின் உரிமை பற்றி பேசினால் அதை இஸ்ரேல் அரசின் இன விரோத செயல்களை கண்டிக்கும் செயலாக கருதாமல் யூத வெறுப்பு பிரச்சாரமாக சித்தரித்து , அவ்வாறு பேசியவர்களை குற்றவாளிகளாக்கும் செயலை- நம் நாட்டில் தேச விரோதிகள் – என்று கூறுவது போல் – ஐபாக் அமைப்பும் அதன் உறுப்பினர்களும் செய்தனர்.

ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பலஸ்தீனர்களுக்காக பரிதாபப்பட்டு போராடும் மாணவர்களை  கைது செய்து நாடு கடத்துவேன், விசாவை இரத்து செய்வேன் என அச்சுறுத்தினர்.

ட்ரம்ப்பின் உத்தரவின் பெயரில் காவலர்கள் பல்கலைகழகங்களில் நுழைந்து போராடும் மாணவர்களை தாக்குவதும், போராட்டங்களை அனுமதித்த பல்கலை கழகங்களின் மீது அபராதம் விதிப்பதும், அவர்களின் அங்கீகாரத்தை இரத்து செய்வதும் நடைபெற்றது.

ஊடகங்களை ஊமையாக்குதல்

அமெரிக்க ஊடகங்கள் நியோ கன்சர்வேட்டிவ் என அழைக்கப்படும் பண முதலைகளின் பிடியில் இருக்கிறது. அதனுடைய குரலோ அமெரிக்க கிறிஸ்துவ ஜியோனிஸ்டுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உதாரணமாக காசாவில் நடக்கும் படுகொலையோ, சமீபத்தில் ஈரான் மினாப் பகுதியில் பள்ளிக் கூடத்தின்மீது அமெரிக்கா குண்டுவீசி 175 சிறுமிகளை கொன்ற கொடுமையோ ஊடகங்களில் முக்கியத்துவத்துவம் பெறுவதில்லை, ஆனால் யாரோ ஒரு இஸ்ரேலியர் தாக்கப்பட்டால், வானத்திற்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் செயலில் அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இதை மீறி ஊடகத்தார் யாரும் மனசாட்சியுடன் செயல்பட்டால் ஐபாக் அமைப்பு அவர்களை ட்ரோல் செய்கிறது, ஆண்டி செமைட்டிக் (Antisemitic) என்று முத்திரை குத்துகிறது. புகழ்பெற்ற ஊடகவியலாளரான டக்கர் கார்ல்சன் இப்பொழுது இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டிப்பதால் ஐபாக் அமைப்பினரால், ஆண்டி செமைட்டிக் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அதைப் போன்றே ஈரான் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் அமெரிக்க போரல்ல, இஸ்ரேலுக்கான போர் எனக் கூறி ட்ரம்ப் அரசின் எதிர் உளவுத்துறை தேசீய அதிகாரி என்ற பொறுப்பை துறந்த ஜோ கெண்ட்டையும் ஆண்டி செமிட்டிக் (யூத மத வெறுப்பாளர்) என்று முத்திரை குத்தி ஒதுக்க துணிகின்றனர்.

இவ்வாறு அமெரிக்க அரசியலில் புற்றுநோய் போல புரையோடி வளர்ந்திருக்கும் ஐபாக் அமைப்பிற்கு யார் பண உதவி செய்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

ஐபாக் அமைப்பிற்கு பெரும்பாலான நிதி கொடுப்பவர்கள் ஆயுத வணிகர்களான லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ராப் கிரம்மன், போயிங் நிறுவனம், ரேதியான் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆர் டி எக்ஸ் ( Lockheed Martin, Northrop Grumman, Boeing, RTX formerly called Raytheon) ஆகிய நிறுவனங்களும் ஹெட்ஜ் பண்ட் எனப்படும் நிதி மூலதன மேலாளர்களும் (பெரும்பாலும் யூதர்கள்) ஐபாக் அமைப்பிற்கு நிதி உதவிகளை செய்கின்றனர்.

இவர்கள் உதவி செய்வது ஏதோ கைமாறு் கருதாத உதவி என யாரும் எண்ண வேண்டாம்.

உதவியின் பெயரால் அதிகரிக்கும் ஆயுத வியாபாரம்;

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுக்கும் நிபந்தனையற்ற ஆயுத உதவியால் பலனடைபவர்கள் ஆயுத உற்பத்தி நிறுவனங்களே ஆகும். இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட உதவியில் 80% அமெரிக்காவில் உற்பத்தியாகும் ஆயுதங்களின் மீது தான்

செலவு செய்ய வேண்டும் என்பது விதி. மேலே கூறப்பட்ட ஐந்து நிறுவனங்களும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இஸ்ரேலுக்கு அளித்த ஆயுதங்களின் மூலம் 200 பில்லியன் டொலர்கள் சம்பாதித்து உள்ளனர். இப்பொழுது தொடுக்கப்பட்டுள்ள இஸ்ரேல் யுத்தமும் மிகப் பெரிய இலாபங்களை ஈட்டும் என லாக்ஹீட் மார்ட்டின் தலைமை நிர்வாகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெட்ஜ் பண்ட மேலாளரான பால் சிங்கர், ஹோம் டிப்போ வின் பெர்னார்டு மார்க்கஸ்,அப்பல்லோ குளோபல் மேனேஜ்மெண்ட நிறுவனத்தின் மார்க் ரோவான் , சாம்சன் எனர்ஜி நிறுவன ஸ்டேசி ஷுஸ்டர்மேன் ஆகியோர் கோடிக் கணக்கில் ஐபாக் தொடர்பான அமெப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதை ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். இவர்கள் மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் ஜாம்பவான்கள், ஹெட்ஜ் பண்டு மேலாளர்கள், நிதிநிறுவனங்களின் தலைவர்கள் ஆகிய அனைவரும் ஐபாக் கில் முதலீடு செய்வதன் மூலம் அதிகார மையத்துடன் நெருங்கி காரியம் சாதிக்கின்றனர்.

அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி தம் சொந்தமாக்கி கொள்ளலாம் என்ற  சித்தாந்தத்தையே ஐபாக் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க ஜனநாயகத்தின் ஆகப் பெரிய பின்னடைவாகும்.

இப்பொழுது ஈரான் மீது போர் வேண்டுமென்று அமெரிக்க மக்களோ, அமெரிக்க காங்கிரசோ சொல்லவில்லை.

போரைத் துவங்கு முன் அமெரிக்க அதிபர் அமெரிக்க காங்கிரசின் அனுமதியை பெற வேண்டும் என அமெரிக்க அரசியல் சட்டம் கூறுகிறது. அப்படி இந்த போரை எதிர்த்து தீர்மானத்தை ( War Power Resolution ) காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்டு வர முயற்சித்த போது  அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஐபாக் ஒரே பெயரில் இல்லாமல் பல்வேறு அனாமதேய அமைப்புகளை உருவாக்கி (shell organisations) நிதி உதவிகள் செய்கின்றன.

எதிர்கட்சிகள் எதிர்கட்சிகளாக அமெரிக்காவில் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. இதற்கு காரணம் என்ன? முதுகெலும்பற்றவர்களா எதிர்கட்சியினர்?

இதை பற்றி ஊடகங்களில் விவாதம் நடைபெறாத நிலை அங்குள்ளது. உண்மையில் ஐபாக் அமைப்பிற்கு நிதி உதவி தரும் அதே நிறுவனங்கள் தான் (ஆயுத வியாபாரிகள், ஹெடஜ் பண்ட் மேலாளர்கள், நிதிநிறுவனங்கள்…) ஜனநாயக கட்சிக்கும் நன்கொடை கொடுக்கின்றனர் என்ற விவரம் நமக்கு தெரிய வருகிறது.

ஐபாக் போன்ற அமைப்புகளிடமிருந்து நிதிஉதவியை பெறாத, அதை மறுதலித்த அமெரிக்க அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் . அவர்கள்:

பெர்னி சாண்டர்ஸ்

ரஷீதா டிலெய்ஃப்

அலெக்சாண்டரா அகேசியா கார்டெஸ்

சம்மர் லீ

டெலியா ராமிரெஸ்

பிரமிளா ஜெயபால்

மார்க் போகான்

இல்ஹான் ஓமர்

ஜாஸ்மின் க்ராகெட்

வெலாரி ஃபவுஷி

ஆகிய இவர்கள் தான் கொள்கையை முன்றிறுத்தி, ஐபாக் போன்ற லாபிகளிடமிருந்து பணம் கைநீட்டி வாங்க மாட்டேன் என்று கூறி அதில் உறுதியாக இருப்பவர்கள்.

ஆனால், இன்று அமெரிக்காவின் நலன்கள் டிரம்ப் அரசினால் புறக்கணிக்கப்பட்டு, இஸ்ரேலின் நலன்களுக்காக போர் தொடங்கப்பட்டுள்ளது, அமெரிக்க பல இன்னல்களையும், உயிர் சேதங்களையும் அடைந்துள்ளது என டிரம்ப் கட்சி ஆதரவாளர்களில் பெரும்பாலோர் வெளிப்படையாக கூறுகின்றனர்.

பிரபல பத்திரிக்கையாளரான டக்கர் கார்ல்சன்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெயலர் கிறீன்,

ஜோ ரோஜர்ஸ்,

அலெக்ஸ் ஜோன்ஸ்

கெல்லி

காண்டேஸ் ஓவன் 

போன்ற பிரபல ஊடகவியலாளர்களும், வலைப் பிரபலங்களும் ஈரான் போரை, இஸ்ரேலின் அடாவடியை எதிர்த்து கிளம்பியுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்காவின் சொத்தாக கருதப்பட்ட இஸ்ரேல் நாடு , 1990 களில் அமெரிக்க அதிபர்களால் வீண் சுமையாக கருதப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலை மாறிகாலைச் சுற்றிய பாம்பாக இஸ்ரேல் மாறியது. வால் நாயை ஏவிய கதை போல் அமெரிக்க தலைமையை ஆட்டி வைத்து இப்பொழுது ஈரான் சண்டையில் இழுத்து விட்டுள்ளது.

அமெரிக்க அரசியலை இஸ்ரேலின் பிடியிலிருந்து மீட்க அநேக இளைஞர்கள் , பிரபலங்கள், உறுதி பூண்டுள்ளனர். மக்களின் மனநிலையிலும் மாற்றங்கள் தோன்ற தொடங்கி உள்ளன. ஐபாக் போன்ற லாபிகளிடமிருந்து ஒரு டொலர் கூட பெற மாட்டோம் என்ற உறுதிமொழியை அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர் . அது ஒரு இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.

அது விரைவில் நிறைவேறுமா? பார்ப்போம்.

Exit mobile version