Site icon சக்கரம்

தமிழ் நாடு முதல்வரின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்!

-அ.சையது அபுதாஹிர்

விஜய் – ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். 

இந்த நியமனம் பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்களுகே இதுவரை துறைகள் ஒதுக்கீடு நடக்கவில்லை, துறைக்கான அதிகாரிகள் நியமனமும் இன்னும் நடக்கவில்லை. ஆனால்,  இவ்வளவு முன்னுரிமை கொடுத்து எதற்காக இந்த நியமனம் நடந்தது என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது.

அதே நேரம் ‘விஜய் முதல்வராக வருவார், அவருக்கான ஜாதக அமைப்பு பலமாக உள்ளது’ கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சொல்லி வந்தவர் ராதன் பண்டிட். அதோடு, “விஜய் அவர்களுக்கு ஆன்மீக ரீதியான அனைத்து ஆலோசனைகளை கடந்த சில ஆண்டுகளாக சொல்லிவந்தவர் ராதன் பண்டிட். அவரின் ஆலோசனைபடியும் விஜய் ஒவ்வொரு மூவ்வையும் செய்துவந்தார். அது இப்போது ஒர்க் அவுட்டாகிவிட்டதால் அவருக்கு பிரதிபலனாக அரசு பதவி வழங்கியிருக்கிறார்” என்கிறார்கள் த.வெ.கவினர்.

சரி, அரசு பதவி வழங்கும் அளவுக்கு ராதன் பண்டிட் முக்கியதும் பெற்றது எப்படி? எங்கிருந்து இவரது பயணம் ஆரம்பித்தது என்கிற விசாரணையில் நாம் இறங்கினோம். பல சுவாரசியமான பக்கங்களை கொண்டதாக உள்ளது வெற்றிவேல் என்னும் ராதன் பண்டிட் கதை. 

“ரிக்கி ராதன் பண்டிட் என்று வட இந்திய பாணியில் இவருடைய பெயர் இருந்தாலும் இவரது உண்மையான பெயர் வெற்றிவேல் என்பதே. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான் இவருடைய சொந்த ஊர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சிறிய ஜோதிடராக இவருடைய பயணம் ஆரம்பித்துள்ளது.

ஜாதகம் பார்த்து அவர்களுக்கான பலனை நோட்டில் எழுதிக்கொடுத்து, இது நடக்கவில்லை என்றால் வந்து கேளுங்கள் என சவால் விடுவாராம். ஆரம்பத்தில் இவருடைய ஜோதிடம் பெரிய அளவில் எல்லாம் பேசு பொருளாக இல்லை. 1996-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படுதோல்வியடைந்து போது, அ.தி.மு.க வினர் பலரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.

அப்படி அ.தி.மு.க வில் இருந்த அந்த பகுதியை சேர்ந்த ஒரு வி.ஐ.பி-க்கு ஜோதிடம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது, அவருக்கு சொன்ன பலன்களும், அ.தி.மு.க-வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று அவர் சொன்னதை அந்த வி.ஐ.பி அப்போது அ.தி.மு.கவில் இருந்த ஈரோடு முத்துசாமியிடம் சொல்லியுள்ளார். அதன்பிறகு முத்துசாமி மேலும் சில அ.தி.மு.க பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த தொடர்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வெற்றிவேல் ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனுக்குள் கால் வைக்கும் வாய்ப்பு வந்தது. 

ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, சசிகலா இருவரின் ஜாதகத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார். 2001-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவே, போயஸ் கார்டனின் ஆஸ்தான ஜோதிடராக கார்டனில் வளம் வந்தார். இவர் மீதான அபார நம்பிக்கையால், இவரை நம்பி பல முதலீடுகளையும்,  அ.தி.மு.க தரப்பு செய்தது. அதனால் பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பும் இவருக்கு கிடைத்தது. 

இந்நிலையில் சசிகலா தரப்பு இவரிடம் சில விவரங்களை ஜோதிட ரீதியாக கேட்டுள்ளார். அ.தி.மு.க வின் அடுத்த தலைமை குறித்த இவர் சொன்ன சில தகவல்கள் சசிகலாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு வேறு சில புகார்களும் கார்டன் கதவை தட்டியது. சசிகலாவும் மீது இவர் கடும் டென்சனாக இவருக்கான கதவு கார்டனில் மூடப்பட்டது. 

அந்த வருத்ததில் தமிழ்நாடே வேண்டாம் என டெல்லிக்கு பயணப்பட்டார். அப்போது தான் இவர் தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றம் செய்தார். இவர் குடும்பத்தாருக்கும் பெயர் மாற்றங்கள் நடந்தது. புதிய பெயரில் பாஸ்போர்ட்  உள்ளிட்ட ஆவணங்களை எடுத்தார்.  ஏற்கனவே அ.தி.மு.க வில் இருந்த தொடர்பை வைத்து டெல்லி பா.ஜ.க பிரமுகர்களுக்கு ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அன்றைய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களாக இருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு ஜோதிடராக உருவானார். சரத் பவார் குடும்பத்திற்கும் இவரே ஆஸ்தான ஜோதிடராக இருந்தார். ஆனால், அங்கு உருவான சில சங்கடமான சூழ்நிலைகளால், அங்கும் அவரால் பணிகளை தொடர முடியவில்லை. 

அங்கிருந்து சிங்கப்பூர் பயணப்பட்டார். அங்கு, ஜோதிட நிறுவனத்தையும் துவங்கினார். அப்போது தனது பெயருடன் ரிக்கியை இணைத்துக்கொண்டார். சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் பலரது தொடர்பும் கிடைத்தது. பொருளாத ரீதியாகவும் பலம் பெற்றார். அங்கிருந்து தமிழகத்தில் இருந்த பல வி.ஐ.பிக்களுக்கு ஆன்லைன் வழியாக ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவை சந்திக்கவும் முயன்றார். அது முடியாமல் போகவே தமிழகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கும் வேகத்தில் இறங்கினார். 

அப்போதுதான் விஜய் அரசியலுக்கு வரும் யோசனையில் இருப்பதாக தெரியவே, அவரை சந்தித்தார். 2020-ம் ஆண்டு கால கட்டத்தில் விஜய்க்கு இவருக்கும் ஏற்பட்ட தொடர்பு இப்போது அரசியல் பதவி வரை கொண்டுவந்துள்ளது ” என்கிறார் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு நெருக்கமானவர்கள். 

இப்போது முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்கிற பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு வாகனம், தலைமை செயலகத்தில் அறை உள்ளிட்ட வசதிகளும் இவருக்கு செய்து தர உள்ளனர். அதோடு முதல்வருடன் முக்கியமான விவகாரங்களில் ஆலோசனை நடத்தும் குழுவிலும் இவரும் இருப்பார். முப்பது ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்!.

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு அரசுப் பதவி: காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கண்டனம்

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையில், ‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ‘அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.

அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். “ஜோதிடம் தனை இகழ்” என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல. இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் எம்.பி): ‘எனக்கே புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதிகாரி (OSD) பதவி வழங்கப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்னியரசு (விசிக சட்டப்பேரவைக்குழு தலைவர்): முதல்வருக்கு ஜோதிடர்: அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப் பெறுக. ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி ( காங்கிரஸ் எம்.பி): ‘பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க.வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை முதல்வர் ஜோசப் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்ப்பது நல்லது’ எனத் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் எம்.பி): ‘புதிய அரசாங்கமே. இதுவல்ல இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. ஜோதிடம் தீர்மானிக்குமா நல்ல நிர்வாகத்தையும் வளர்ச்சியையும். அரசியலை அறிவியல் பூர்வமாக அணுகுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version