Site icon சக்கரம்

ஊடகங்களும், பூடகங்களும்: மக்கள் மனதில் நிற்பவற்றை தீர்மானிப்பது எது?

-ராஜன் குறை

டகம் என்ற சொல் இன்று பிரம்மாண்டமான பரிமாணத்தை எட்டியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் செல்பேசிகள் வழியாக பரிமாறப்படும் செய்திகள். இதில் மக்கள் அனைவருமே செய்திகளை உருவாக்குபவர்களாகவும், நுகர்பவர்களாகவும் மாறுகிறார்கள். ஒருவர் உருவாக்கும் செய்தி அல்லது கருத்து ஏராளமானவர்களை சென்றடைந்தால் அது “வைரல்” ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

அதன் பொருள் என்னவென்றால், தொற்று நோயைப் பரப்பும் வைரஸ் என்னும் நுண்கிருமிகள் பரவுவது போல சில தகவல்கள், கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன என்பதுதான். சில செய்திகள் பல இலட்சம் பேரைச் சென்று சேர்கின்றன. சில புகைப்படங்கள், காட்சிகள் நாடு முழுவதும் பரவுகின்றன.

இப்படிப் பரவுவது மக்களாக விரும்பிப் பரப்புவது என்று மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இணைய வலைப்பின்னலில் இயங்கும் இந்த சமூக ஊடகங்களை அல்காரிதம் என்னும் கணணி மென்பொருள் நிரல்களால் கட்டுப்படுத்தி ஒரு செய்தியை அதிகம் பரப்பவோ, பரவாமல் தடுக்கவோ முடியும் என்பதும் முக்கியம்.

உதாரணமாக ஃபேஸ்புக் என்ற முக்கியமான சமூக ஊடகத் தளத்தில், அந்த தளமே பணம் கொடுத்தால் உங்கள் தகவலை அதிகம் பேருக்கு காண்பிக்கிறேன் என்று கூறுகிறது. இப்படி தொழில் முறையாக செய்தி பரப்புபவர்களை இன்ஃபுளூயன்ஸர்ஸ் என்று கூறுகிறார்கள். இவர்கள் குறிப்பாக யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலம் படங்கள், காணொலிகளை பரப்புகிறார்கள். தொடுதிரை செல்பேசிகள் கோடிக்கணக்கில் பரவிவிட்டதால், இன்று சமூக ஊடகங்கள் பாரம்பரிய ஊடகங்களைவிட முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

உதாரணமாக பத்து நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல பிரச்சினைகளை உருவாக்குவதாகச் சொன்னது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவிலுள்ள சாம்பாஜி நகரைச் சேர்ந்த  (அவுரங்காபாத்) அபிஜித் திப்கே என்பவர் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற வலைத்தளத்தைத் தொடங்கினார்.  

அதனை இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பரப்ப, அதில் பல இலட்சம் பேர் உறுப்பினர்கள் ஆனதுடன் பல்வேறு காணொலிகள், பாடல்கள் ஆகியவற்றையும் பரப்பத் தொடங்கிவிட்டனர். இப்போது இந்த தளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே இளைஞர்கள் இந்த கட்சியின் பெயரில் ஊர்வலமாகச் செல்கின்றனர். நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது குறித்த இளைஞர்கள் கோபம் இதில் தீவிரமாக வெளிப்படுகின்றது.

இந்த நேரத்தில் பல கேள்விகள் எழுகின்றன. தொலைகாட்சி ஊடகம், அச்சு ஊடகம் ஆகியவற்றிற்கும், சமூக ஊடகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன, இவற்றை யாரெல்லாம் எப்படியெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், எந்த செய்திகள் பரவுகின்றன, எவை பரவுவதில்லை; எந்த நிகழ்வுகள் குறித்து எவ்வாறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன, எவ்விதமான கருத்துக்கள் பரவுவதில்லை என்பதெல்லாமே தானாக நிகழ்கிறதா, அல்லது பல்வேறு ஆதிக்க நலன்களின் தூண்டுதல்களால் நடைபெறுகின்றதா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகளாக மாறுகின்றன.

சமூகப் பரப்பில் வெகுமக்கள் மன நிலையை கட்டமைப்பதில், சமூக நினைவுகளில் ஒரு சில நிகழ்வுகளை பதிப்பது அல்லது மறக்கடிப்பதில் ஊடகப் பரப்பினை கட்டுப்படுத்துபவர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள் எனலாம்.இவர்கள் முயற்சிகள் எல்லாமே எடுபடுகின்றனவா என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சில முயற்சிகள் நிச்சயம் எடுபடுகின்றன.

குறிப்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டிய செய்திகளை பிற செய்திகளிடையே மூழ்கடிப்பது மிகவும் பரவலாக நடப்பதைக் காணலாம். உலகெங்குமே இந்த ஊடகப் பெருக்கத்தால், அவற்றின் மீதான கட்டுப்பட்டால், அவற்றை இயக்கும் ஆதிக்க சக்திகளால் அரசியல் இயக்கங்கள், கட்சிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. ஏனெனில் ஆதிக்க சக்திகளின் ஊடக வலைப்பின்னலை மீறி மக்களிடையே செய்திகளை, கருத்துக்களை எடுத்துச் செல்வது பெரும் சவாலாக மாறி வருகிறது. ஊடகங்கள் பெருகப் பெருக அவற்றை ஆதிக்க சக்திகளே ஆயுதங்களாக பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. எலன் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி எக்ஸ் என்று மாற்றியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் திரளுக்கு மதிப்பிருக்கிறதா?

இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம் பல முக்கியமான ஊடகக் காட்சிகளைக் கொண்டது. செப்டம்பர் 11, 2001-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்களில் மோதி அவற்றைத் தகர்ந்து விழச் செய்யும் காட்சி உலகெங்கும் பரவியது. அல் கொய்தா என்ற அரபு முஸ்லீம் தீவிரவாத அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நட த்தினர் என்று தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அல் கொய்தாவிற்கு நெருக்கமான தாலிபான்கள் ஆட்சி செய்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தலைமறைவானார். பத்தாண்டுகளுக்குப் பின் கராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் அடங்கியுள்ள சர்வதேச ஆதிக்கப் போட்டியின் விவரங்கள் ஊடகங்களால் கூறப்படுவதில்லை.

ஆப்கான் மீது போர் தொடுத்ததையே அமெரிக்காவில் கற்றறிந்த மக்கள், குடிமைச் சமூக சிந்தனையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் கூட இரட்டைக் கோபுர தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்பில் கணிசமானோர் ஆதரிக்கவும் செய்தனர். ஆப்கன் மீது படையெடுத்ததால் நீண்ட கால நோக்கில் என்ன பயன் என்று இன்றைக்கு சிந்தித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ஏனெனில் அங்கே மீண்டும் தாலிபான்தான் இப்போது ஆட்சி செய்கிறது.

ஆனால் ஆப்கன் போரைவிட முக்கியமான நிகழ்வு அதன் பிறகு நடந்ததுதான். போர் ருசி கண்ட அமெரிக்கா ஈராக்கின் சதாம் ஹுசைன் பயங்கர ஆயுதங்களை தயாரிக்கிறார் என்று கூறியது. அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு அவரை பெரும் தீய சக்தியாக ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் வர்ணித்தன. இதனைத் தொடர்ந்து ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஆயத்தமாயின.

அப்போதுதான் அமெரிக்காவிலும், பிற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெருமளவில் போருக்கு எதிரான இயக்கங்களைத் தொடங்கினார்கள். பிப்ரவரி 15, 2003 உலக வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஏனெனில் அன்றைய தினம் நியூயார்க், லண்டன், ரோம், பாரிஸ் என ஏராளமான மேற்கத்திய நாடுகளின் முக்கிய நகரங்களில் இலட்சக் கணக்கான மக்கள் போருக்கு எதிராக பிரம்மாண்டமான பேரணி நடத்தினார்கள். நியூயார்க்கில் கலந்து கொண்ட பல இலட்சம் மக்களுடன் நானும், நண்பர்களும் பேரணியில் பங்கேற்றோம். அதனைப் போன்ற மக்கள் வெள்ளத்தைக் கண்டதில்லை என்பதுடன் எத்தனையோ வண்ணப் பதாகைகளை போருக்கு எதிராக எழுதி, வரைந்து அனைவரும் ஏந்தி வந்தனர். உயரமான கட்டிடங்களிலிருந்து மக்கள் வண்ணக் காகித தூண்டுகளை மலர்கள் போல ஊர்வலத்தினர் மீது தூவினர்.

எல்லா வரலாற்று சிறப்பு மிக்க மேற்கத்திய தலைநகரங்களிலும் வரலாறு காணாத மக்கள் திரள்கள் போருக்கு எதிராக முழக்கமிட்டன. ஆனால் இவ்வளவு பெரிய நிகழ்வை ஊடகங்கள் முதன்மைப்படுத்தவில்லை. அரசாங்கம் சதாம் ஹூசைன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கே முக்கியத்துவம் அளித்தன. இத்தனை ஊர்வலங்களும் நடந்து ஒரு மாதத்தில் அமெரிக்கா பிற மேற்கத்திய நாடுகள் துணையுடன்  ஈராக் மீது போர் தொடுத்தது. கைப்பற்றியது. சதாம் ஹுசைனை தூக்கிலிட்டது.

இஸ்ரேல் காஸாவிலும், வெஸ்ட் பாங்கிலும் பாலஸ்தீனியர்களை தன்னிஷ்டத்திற்கு ஒடுக்கியதுடன், அவர்களை மானாவாரியாகக் கொன்று குவிக்கவும் தயங்கவில்லை. அமெரிக்கா இதற்கெல்லாம் ஆதரவாகவே இருந்தது. இப்போது ஈரானின் மீது போர் தொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் எவ்வளவு போராடினாலும் எடுபடுவதில்லை. அவர் மனம்போனபடி செயல்படுகிறார்; பேசுகிறார். அமெரிக்க மக்களாட்சி பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது. ஊடகங்கள் செயலற்றுள்ளன.

அச்சு ஊடகம் உருவாக்கியதே மக்களாட்சி

நவீன மக்களாட்சி உருவானதற்குக் காரணமே அச்சு ஊடகம்தான் எனலாம். அப்படியொன்று உருவாகியிராவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வசதி, பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்கும் வசதி போன்றவை தோன்றியிருக்காது. குடியரசு என்னும் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் அரசு உருவானதும், அப்படி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் ஒரு தேசத்தினராக வரையறுக்கப்பட்டதும் அச்சு ஊடகங்கள் அந்தந்த மக்கள் பேசும் மொழிகளில் தோன்றியிருக்காவிட்டால் சாத்தியமில்லை.

அப்படி ஊடகங்கள் உருவாக்கிய பொதுமன்றம் முதலில் பல்வேறு சிந்தனைகளுக்கும் இடமளிப்பதாக இருந்தது. உலகெங்கும் முற்போக்கு இயக்கங்கள், காலனீய எதிர்ப்பு தேசிய இயக்கங்கள் எல்லாமே அச்சு ஊடகத்தின் துணை கொண்டுதான் மக்களை அணிதிரட்டின. உதாரணமாக காந்தி இந்தியன் ஒப்பீனியன், யங் இந்தியா என்ற ஆங்கில ஏடுகளையும். நவஜீவன், ஹரிஜன் ஆகிய இந்தி மொழி ஏடுகளையும் நடத்தினார். அவர் கருத்துக்களை அந்த ஏடுகள் தாங்கி வந்தன. இது போல பல்வேறு தலைவர்களும் பத்திரிகைகளும், ஏடுகளும் நடத்தியே அரசியல் அணிதிரட்டலை மேற்கொண்டார்கள். பெரியாரின் குடி அரசு, பகுத்தறிவு, விடுதலை, அறிஞர் அண்ணா துவங்கிய திராவிட நாடு, கலைஞர் துவங்கிய முரசொலி ஆகியவை இல்லாமல் திராவிட இயக்கத்தை சிந்தித்துப் பார்க்க இயலாது.

செயற்கைக்கோள் தொலைகாட்சி வலைப்பின்னல்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த நிலை மாறத் துவங்கியது. காரணம் முதலீட்டிய திரட்சியின் வேகம் அனைத்து நடவடிக்கைகளையும் வணிக மயமாக்கியது. ஊடகங்களும் பெருமுதலீட்டிய வலைப் பின்னலுக்குள் வந்தன. அரசு அல்லது பெருமுதலீட்டிய நிறுவனங்களின் அதரவு இல்லாமல் ஊடகங்கள் செயல்பட முடியாது என்ற நிலை உருவாகியது. குறிப்பாக தொலைகாட்சி ஊடகம் பரவலான பிறகு மக்களின் கவனத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. எல்லா நேரமும் கேளிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக சமூகம் மாற்றப்பட்டுள்ளதால், கருத்துக்களுக்கு, சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பது கடினமாக இருக்கிறது.

மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் சுவாரசியமான செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் சுவாரசியம் என்பது அதீத கற்பனைகளை உள்ளடக்கிய திரைப்படங்கள், தொலைகாட்சித் தொடர்கள் ஆகியவற்றின் மேல்தான் உள்ளது. ஊடகங்கள் பணம் ஈட்ட நடிகர்களையே எப்போதும் மையப்படுத்துகின்றன. அச்சு ஊடகம், தொலைகாட்சி ஊடகம், சமூக ஊடகம் எல்லாமே மக்களின் ஈடுபாடு என்பதைக் கட்டமைப்பதிலேயே மையம் கொள்கின்றன. ஈடுபாடே வணிகம்; முதலீட்டிய திரட்சி, அதிகாரத் திரட்சி.  

பெருமுதலீட்டிய சக்திகள் நிர்ணயிக்கும் ஊடக வெளி

பெருமுதலீட்டிய சக்திகள் தங்களுக்குச் சாதகமான அரசாங்கங்களை உருவாக்க நினைக்கின்றன. அரசியல் கட்சிகள் வெகுமக்களுக்கும், முதலீட்டிய சக்திகளுக்கும் இடையிலான பேரங்களின் வடிவமாக உள்ளன. மக்கள் வாழ்வை மேம்படுத்தினால்தான் அவர்களது ஆதரவை கட்சிகள் பெறமுடியும். தேர்தல்களில் வெல்ல முடியும். ஆனால் முதலீட்டிய சக்திகளுக்கு இசைவாக இருந்தால்தான் அவர்கள் ஆதரவைப் பெற முடியும்; பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் ஆட்சி நடத்த முடியும்.  

இந்த நிலையில் மக்கள் ஆதரவை அரசியல் கட்சிகளுக்கு ஊடகங்கள் வழியாக திரட்டிக் கொடுக்க முதலீட்டிய சக்திகள் களம் இறங்குகின்றன. அவையே விளம்பரங்கள் வழியாகவும், நேரடியாக ஊடகங்களை விலைக்கு வாங்கியும், அவர்களே ஊடக நிறுவனங்களைத் துவங்கியும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். என் டி டி வி நிறுவனத்தை அதானி கைப்பற்றியது போல.

இந்த நிலையில் எந்த அரசியல் கட்சியும், தலைவரும் முதலீட்டிய சக்திகள் ஆதரவு இருந்தால்தான் மக்களின் மனதில் இடம் பெற முடியும் என்ற நிலை எழுந்துள்ளது. மக்களிடம் நேரடியாகச் சென்று அணிதிரட்டலாம் என்ற சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்போது மக்களுக்கிடையே செல்பேசி நுழைந்துவிட்டதால் சமூகம் மேலும் ஊடக மயமாகிவிட்டது. எதிரெதிரே அமர்ந்துள்ள இளம் வயதினர் செல்பேசியில் வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாறிக் கொள்கின்றனர். வாயால் பேசுவதை மறந்துவிட்டார்களோ என்று வியப்பாக இருக்கிறது.

அனைத்தும் பிம்ப மயமான சமூகத்தை சிந்திப்பது சவாலாக இருக்கிறது. ஏனெனில் பிம்ப மயமாவது வணிக மயமாவதாக மாறிவிடுகிறது. நிறையப் பேர் யூடியூபில் என் பேச்சைக் கேட்க வேண்டுமென்றால் நான் சுவாரசியமாகப் பேச வேண்டும். அப்போது விளம்பரங்கள் கிடைக்கும். அதன் பிறகு அதற்குத் தகுந்தாற்போல என் கருத்துக்களையும் மாற்றிக் கொள்ளத் தோன்றலாம்.

இப்படியாகத்தான் மக்களாட்சி பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. ஊடகங்கள் நிகழ்வுகளை உருவாக்குகின்றன. நூறு பேர் கூடுவதை விளம்பரம் செய்து ஆயிரம் பேராக மாற்றுகின்றன. ஆயிரம் பேர் கூடுவதை விளம்பரம் செய்து பத்தாயிரம் பேராக மாற்றுகின்றன. காஞ்சீபுரத்தில் நீருக்கடியில் இருக்கும் அத்திவரதர் விக்கிரகத்தை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து தரிசனத்திற்கு வைப்பார்கள் என்ற உள்ளூர் நிகழ்வு, ஊடக நிகழ்வாக மாறியதில் இலட்சக் கணக்கானவர்கள் அங்கே கூடத் துவங்கினார்கள். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அது மேலும் முக்கியமான ஊடக நிகழ்வாக மாறியது. இறுதியில் கூட்டத்தில் நெறிபட்டு சிலர் மரணமடைந்தார்கள்.

ஈராக் போருக்கு எதிராக பல இலட்சம் பேர் கூடியதை சிறு நிகழ்வாக மாற்றின ஊடகங்கள். அதற்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு நடிகரைக் காண ஐயாயிரம் பேர் கூடுவதைக் கூட பெருநிகழ்வாக மாற்ற ஊடகங்களால் முடியும். எந்த நிகழ்வையும் சமூக ஊடகங்களில் வைரலாக்க முடியும். மறக்கச் செய்யவும் முடியும். வதந்திகளை மின்னல் வேகத்தில் பரப்ப முடியும்.

புராணங்களில் தேவாசுர யுத்தங்கள் மூவுலகிலும், அதாவது பூமியிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலும் நடப்பதாக கற்பனை செய்யப்பட்டிருக்கும். அது போல இன்று அரசியல் என்பது சமூகத்திலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் நடப்பதாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத மாயாவிகள் ஏவிவிடும் மாய பிம்பங்களை சமாளிக்க ஏகப்பட்ட பகுத்தறிவு பாணங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. பகுத்தறிவே வெல்லும் என்ற நம்பிக்கையை இறுகப் பற்ற வேண்டியுள்ளது.

Exit mobile version