– பேராசிரியர் விஜய் பிரசாத்
1921 ஆம் ஆண்டு, சோவியத் பரிசோதனை தொடங்கி சில ஆண்டுகளே ஆகியிருந்த சூழலில், வி. இ. லெனின் ஒரு கட்டுரையை எழுதினார். அதற்கு ‘புதிய காலமும் பழைய தவறுகளும் ஒரு புதிய வேடத்தில்’ (New Times and Old Mistakes in a New Guise) என்று அவர் பெயரிட்டார். அந்தப் பகுப்பாய்வு அவர் மறைவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகள் வரை அவரிடம் நீடித்த ஒரு தத்துவார்த்தத் தேடலாகும். போரினால் பேரழிவிற்குள்ளான, மிகக் குறைந்த மூலதனமே கொண்ட, 70 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவின்மை நிலவிய, ஒரு விவசாயச் சமூகத்தில் சோசலிசத்தை எப்படிக் கட்டமைப்பது என்பதுதான் அவரைப் பெரிதும் ஆட்கொண்ட கேள்வியாகும். அந்த உன்னதமான கட்டுரையில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டார்: “நிகரற்ற மாபெரும் உழைப்பிற்குப் பிறகு, ஒரு சிறிய விவசாய, பேரழிவிற்குள்ளான நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கு, புதிய உழைப்புச் சக்திகள் வளர்வதற்கும் பழைய சக்திகள் தங்களை மீட்டெடுத்துக் கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தேவைப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் புதிய சக்திகளின் வளர்ச்சி வேகம் தற்காலிகமாகக் குறைவதை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.” ‘டிரைகான்டினென்டல்’ ஆய்வு நிறுவனத்தின் 100-வது ஆய்வறிக்கையான ‘எதிர்காலம்’ (The Future) என்பதை நான் மீண்டும் வாசித்தபோது இந்த ‘கால இடைவெளி’ (interval of time) பற்றிய சிந்தனை என் மனதில் ஆழமாகப் பதிந்தது. முதலாளித்துவ சமூகம் கடுமையான நெருக்கடியில் தள்ளாடும் போது, அதற்கு மாற்றான ஒரு சோசலிச செயல்முறை முதிர்ச்சியடைவதில் உள்ள அந்த ‘மெதுவான தன்மை’ (slow to mature) குறித்துத்தான் நாம் இங்கு விவாதிக்கப் போகிறோம்.
ஏழை நாடுகளின் புரட்சியும் முதிர்ச்சியின் மெதுவான தன்மையும்
நவீன உலகில் சோசலிசப் புரட்சிகள் அனைத்தும் ஏழை நாடுகளில்தான் நடந்துள்ளன. அங்கு விவசாயிகளே பெரும்பான்மையாக இருந்தனர், அவர்களின் செல்வங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய சக்திகளால் தூர தேசங்களுக்குக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் சோவியத் யூனியன் (1917), வியட்நாம் (1945), சீனா (1949), கியூபா (1959) போன்ற நாடுகளில் உருவான புதிய புரட்சிகர அரசாங்கங்கள், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையைக் கட்டமைப்பதற்கான அரசுத் திறனையும் மூலதனத்தையும் பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்க வேண்டியிருந்தது. ‘மெதுவாக முதிர்ச்சியடைதல்’ என்ற இந்த தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள ஆறு முக்கியப் புள்ளிகளை இங்கு முன்வைக்கிறோம்:
1. நம்பிக்கை மெதுவாகவே வளர்கிறது, பழைய பழக்கங்களை உடைப்பது கடினம்
புரட்சிகர அரசாங்கங்கள் மரபுவழியாகத் தங்களுக்குக் கிடைத்த சாதி, பழங்குடி படிநிலைகள் மற்றும் காலனித்துவச் சுரண்டலால் சிதைந்த சமூகக் கட்டமைப்புகளையே எடுத்துக் கொள்கின்றன. சோவியத் யூனியனில் அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் பழைய ஜார் மன்னராட்சியின் அதிகாரத்துவக் கலாச்சாரம் உடனடியாக மறைந்துவிடவில்லை. ஊழலும், கூட்டு நிறுவனங்கள் மீதான அவநம்பிக்கையும் பல ஆண்டுகள் நீடித்தன. 1949 புரட்சிக்குப் பிறகு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கன்பூசிய படிநிலைகளையும், பிராந்திய ஆதிக்க முறைகளையும் எதிர்கொண்டது. 1959-க்குப் பிறகு கியூபாவின் புரட்சிகரத் தலைமை ஒரு ‘புதிய மனிதரை’ (new human being), அதாவது பழைய சிந்தனைகளை விட்டொழித்த மனிதரை உருவாக்குவது பற்றிப் பேசியது; ஏனெனில் சோசலிச உணர்வை ஒரே இரவில் சட்டத்தின் மூலம் உருவாக்கிவிட முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மக்கள் கூட்டு அமைப்புகளை நம்பக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை நல்ல பள்ளிகள், மருத்துவமனைகள், உறைவிடங்கள் மூலம் மெதுவாகவே வளரும். ஒரு புரட்சியால் அரசை விரைவாகக் கைப்பற்ற முடியும், ஆனால் சமூக உளவியலை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
2. உலகளாவிய வர்த்தக மற்றும் நிதி வலைப்பின்னல்கள் முதலாளித்துவத்திற்குச் சாதகமானவை
முதலாளித்துவம் சித்தாந்தத்தால் மட்டுமல்லாமல்; வர்த்தகம், நிதி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களாலும் உலகை ஆதிக்கம் செய்கிறது. சோசலிச மாற்றத்தை நோக்கிய நாடுகள் முதலாளித்துவக் குவிப்பை மையமாகக் கொண்ட உலகிற்குள்ளேயே நுழைய வேண்டியுள்ளது. ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, தொழில்துறை விநியோகச் சங்கிலிகளும் வங்கி வலைப்பின்னல்களும் எதிரி நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சோவியத் யூனியன் கடுமையாகப் போராடியது. 1991-ல் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு கியூபா எதிர்கொண்ட எரிபொருள் மற்றும் கடன் நெருக்கடிகளும், அமெரிக்காவின் சட்டவிரோத பொருளாதாரத் தடைகளும் இதற்குச் சான்றாகும். 1975-ல் வியட்நாம் போரினால் சீரழிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முற்பட்டபோதும் இதே உலகளாவிய நிதித் தடைகளை எதிர்கொண்டது. மாற்று வலைப்பின்னல்களை உருவாக்கப் பல பத்தாண்டுகள் தேவைப்படும்.
3. காலனித்துவத்தால் ஏழ்மையாக்கப்பட்ட நாடுகளில் உள்கட்டமைப்புச் செலவுகள் பிரம்மாண்டமானவை
வியட்நாம் புரட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோற்கடித்தபோது, அவர்கள் பெற்றது அமெரிக்காவின் குண்டுவீச்சுகளாலும் ‘ஏஜென்ட் ஆரஞ்சு’ என்ற நச்சு இரசாயனத்தாலும் நஞ்சாக்கப்பட்ட ஒரு தேசத்தைத்தான். கியூபா அமெரிக்காவைச் சார்ந்திருந்த ஒற்றைப் பயிர் (கரும்பு) பொருளாதாரத்தைப் பெற்றது. சீனா நூறாண்டு கால ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் உள்நாட்டுப் போரின் விளைவாகக் குறைந்த ஆயுட்காலம், எழுத்தறிவின்மை மற்றும் பலவீனமான தொழில்துறையைப் பெற்றது. வட அட்லாண்டிக் முதலாளித்துவ நாடுகள் பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனம் மற்றும் காலனித்துவக் கொள்ளை மூலம் தங்களின் தொழில்துறையை வளர்த்தன. ஆனால் சோசலிச நாடுகளோ முற்றுகைகள் மற்றும் ராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சில பத்தாண்டுகளிலேயே இவற்றைச் சாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான பொருள்சார் சுமை அதன் மாற்றத்தை மெதுவாக்கியது.
4. பொருளாதாரத் தடைகள் மற்றும் போர்கள் போன்ற வெளிப்புற அழுத்தங்கள்
மூன்றாம் உலக நாடுகளின் ஒவ்வொரு புரட்சிகர அரசும் ராணுவ முற்றுகையை அல்லது பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொண்டுள்ளன. சோவியத் யூனியன் 1917-க்குப் பிறகு டஜனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ராணுவங்களின் படையெடுப்பை எதிர்கொண்டது, பின்னர் நாஜி படையெடுப்பால் 2.7 கோடி குடிமக்களை இழந்தது. கியூபா, தட்டுப்பாடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்கத் தடைகளை பல பத்தாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. சிலியின் ‘பாப்புலர் யூனிட்டி’ அரசாங்கமும், நிகரகுவாவின் சாண்டினிஸ்டா அரசாங்கமும் அமெரிக்காவின் நிதியுதவி பெற்ற உள்நாட்டுச் சதிகளையும் போர்களையும் எதிர்கொண்டன. இந்த அழுத்தங்கள் சமூக மேம்பாட்டிற்குச் செல்ல வேண்டிய வளங்களை ராணுவப் பாதுகாப்பிற்குத் திருப்பிவிட்டு, வளர்ச்சியை மெதுவாக்கின.
5. ஆரம்பக் கட்டத்தில் ஒவ்வொரு செயல்முறையும் திறனற்றதாகவே இருக்கும்
புரட்சிகர அரசுகள் புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்கும் அதே வேளையில் கல்வி, சுகாதாரம், நிலச்சீர்திருத்தம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஒரே நேரத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. இதனால் தவறுகளும், அதிகாரத்துவக் குழப்பங்களும், தட்டுப்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் சோவியத் யூனியன் ஆரம்பத்தில் தடுமாறியது. கியூபாவில் புரட்சிக்குப் பிறகு பயிற்சி பெற்ற நிபுணர்கள் பலர் மியாமிக்கு தப்பி ஓடியதால் பற்றாக்குறை தீவிரமடைந்தது. நிறுவனங்கள் தங்களின் தவறுகளிலிருந்தே பாடம் கற்றுக் கொள்கின்றன. ஆரம்பக்காலத் திறனின்மை என்பது சித்தாந்தத் தவறு அல்ல, அது ஒரு மாபெரும் சமூக மாற்றத்தின் சிறப்பியல்பு.
6. குறுகிய தேர்தல் சுழற்சிகள் சமூக மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன
சமூக மாற்றத்திற்குப் பல பத்தாண்டு காலத் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகாலத் தேர்தல் சுழற்சிகள் நீண்டகால மறுசீரமைப்பிற்குப் பதிலாக உடனடி நுகர்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. புரட்சிகர அரசாங்கங்களின் பலன்கள் வெளியில் தெரிவதற்கே நீண்ட பொறுமை தேவைப்படுகிறது. நவதாராளவாத ஊடகச் சுழற்சிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் முறைகள் குறுகிய கால நிர்வாகத்தையே கோருகின்றன. இதனால், சமூகத்தை மாற்றுவதற்குத் தேவைப்படும் ‘வரலாற்றுக் காலம்’ (historical time) என்பதற்கும், நவீன அரசியலின் ‘தேர்தல் காலம்’ (electoral time) என்பதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை சோசலிசப் பரிசோதனைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நம்பிக்கையின் விதை
பெர்டோல்ட் பிரெக்ட்டின் ‘தி மதர்’ (The Mother – 1931) நாடகத்தில், அதன் முதன்மைக் கதாபாத்திரமான பெலகியா விளாசோவா (Pelagea Vlassova) கம்யூனிசம் குறித்துப் பாடும் ஒரு பாடல் மிகவும் பிரபலமானது: “அது விவேகமானது – எவரும் அதைப் புரிந்து கொள்ள முடியும். அது எளிதானது. நீங்கள் ஒரு சுரண்டல் பேர் வழியாக இல்லாவிட்டால், அதை உங்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும். அது உங்களுக்கு நல்லது. அதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். சுரண்டல் பேர் வழிகள் அதை ஒரு குற்றம் என்கிறார்கள். ஆனால் நமக்குத் தெரியும், அதுதான் குற்றங்களின் முடிவு. அது பைத்தியக்காரத்தனம் அல்ல, பைத்தியக் காரத்தனத்தின் முடிவு. அது குழப்பம் அல்ல, அதுதான் ஒழுங்கு. அது ஒரு எளிய விஷயம், ஆனால் சாதிப்பதுதான் மிகவும் கடினம்.” கம்யூனிசம் என்பது ஒரு ‘எளிய விஷயம்’ (simple thing), ஆனால் அதை நடைமுறைக்குக் ‘கொண்டு வருவது கடினம்’ (hard to bring about) என்பதை விளாசோவா அறிந்திருந்தார். முதலாளித்துவத்தின் உடனடி லாபச் சுழற்சிகளுக்கு மாறாக, ஒரு கண்ணியமான எதிர்காலத்தைக் கட்டமைப்பது என்பது ஒழுக்கமான உழைப்பும், நீண்டகாலப் போராட்டமும் தேவைப்படும் ஒரு மெதுவான பணியாகும். புதிய உலகிற்கான சமூகச் சக்திகளை உருவாக்குவதில் தான் அந்த நம்பிக்கையின் விதை அடங்கியுள்ளது.
தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.

