-மோகன் கணபதி
அமெரிக்காவுடன் ஈரான் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28-ம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி, நாட்டின் ராணுவத் தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் மீதும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியது.
இதனையடுத்து, ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், உலகின் பல பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டது. இதன் காரணமாக ஈரான் கப்பல்கள் உள்ளே செல்லவும் வெளியே செல்லவும் முடியாத நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியது.
இரு தரப்புக்கும் இடையே சண்டைகள் நடந்தபோதிலும், சமரச பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வியாழக்கிழமை (11.06.2026) அறிவித்தார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் வரும் நாட்களில் கையெழுத்தாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA) வெளியிட்டுள்ள செய்தி:
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் வரைவில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.
ஈரானின் அடிப்படைக் கொள்கைளுக்கு உட்பட்டே அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான ஈரானின் உரிமை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்க வைத்துக்கொள்வது போன்ற விஷயங்கள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் நோக்கில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

