Site icon சக்கரம்

‘இந்தியா’ அணியின் ஒற்றுமையும் காங்கிரஸின் கடமையும்

தேச்சதிகார பா.ஜ.க அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், தேசத்தின் இறையாண்மையைச் சிதைக்கும் போக்கையும் வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ அணிச் சேர்க்கையின் ஒற்றுமையைக் காக்க வேண்டிய மிக முக்கியக் கடமை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், டெல்லியில் ஜூன் 8 அன்று நடைபெற்ற இந்தியா அணியின் தலைவர்கள் கூட்டத்தில் எழுந்துள்ள புயல், காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டணியைப் பலவீனப்படுத்துகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே இரகசிய உடன்பாடு இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்ற காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பியது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகும். நாடாளுமன்றத்தில் முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைவதற்கும், பா.ஜ.கவின் மதவாத அரசியலை நாடெங்கிலும் முறியடிப்பதற்கும் இடதுசாரிகள் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் மூலம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை ராகுல் காந்தி வசதியாக மூடிமறைக்கக் கூடாது. இடதுசாரிகளின் பா.ஜ.க எதிர்ப்புப் பாரம்பரியத்திற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவையில்லை. விழிஞ்ஞம் துறைமுக ஒப்பந்ததாரராக அதானியை கேரளாவுக்குள் கொண்டு வந்தது காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்ற வரலாற்று உண்மையை மறைத்து விட்டு, இடதுசாரிகள் மீது தொடர்ந்து பழிபோடுவதும் இந்தியா அணியின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும்.

காங்கிரசின் அணுகுமுறை காரணமாக தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி போன்ற வலுவான கட்சிகள் ஏற்கெனவே கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பது பெரும் பின்னடைவாக மாறியுள்ள சூழலில், அகிலேஷ் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் எழுப்பியுள்ள கேள்விகளும் மிகவும் ஆழமானவை. பீகாரில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே இருக்கும் இரகசியப் புரிந்துணர்வுகள் குறித்துப் புகார்கள் அளித்தும் தேசியத் தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்குக் காங்கிரஸ் பதில் சொல்லியாக வேண்டும்.

மாநிலக் கட்சிகளின் பலத்தை ஒடுக்க நினைப்பது பாசிச எதிர்ப்புக் கூட்டணிக்கே ஆபத்தாய் முடியும். மோடி அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தி முடக்க முயலும் இக்கட்டான காலகட்டத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘இந்தியா’ அணி ஒரே இலக்குடன் பயணிப்பது மட்டுமே பா.ஜ.கவை வீழ்த்துவதற்கான ஒரே வழியாகும். எனவே, காங்கிரஸ் கட்சி தனது தற்காலிகத் தேர்தல் இலாபங்களுக்கான குறுகிய அரசியலையும், மேலாதிக்கப் போக்கையும் கைவிட்டு, இந்தியா அணிக் கட்சிகளைச் சமமாக மதித்து, கூட்டணியின் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.06.10

Exit mobile version