Site icon சக்கரம்

அமெரிக்கா அடி பணிந்தது எப்படி? ஈரான் வெற்றியின் பின்னணி!

An Iranian man holds a portrait of supreme leader Ayatollah Ali Khamenei as people celebrate a ceasefire between Iran and Israel at Enghlab Square in the capital Tehran on June 24, 2025. A fragile ceasefire in the Iran-Israel war appeared to be holding on June 24, after 12 days of strikes that saw Israel and the United States pummel the Islamic republic's nuclear facilities. (Photo by ATTA KENARE / AFP)

-ச.அருணாசலம்

ந்த போர் நிறுத்தம்  என்பது ஈரானின் வெற்றியாகும், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் சட்டவிரோத தாக்குதலுக்கு கிடைத்த பேரிடியாகும். மேற்காசியாவின்  இந்த நிகழ்வு உலக அரசியலையே புரட்டி போட்டு, அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தை வீழ்த்த  சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரானிடையே நடக்கும் மேற்காசிய போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஒருவழியாக ஞாயிறன்று (14.06.2026) இணைய வழியில் கையெழுத்தாகி உள்ளது.

“ஈரானுடன் ஒப்பந்தம் ரெடி, அமெரிக்கா எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றது”

என 38 முறை ட்ரம்ப் அறிவித்து தோல்வியடைந்த பிறகு, 39 வது முறையாக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே இந்த ஆரம்ப கால புரிந்துணர்வு ஒப்பந்தம், MOU பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பெரு முயற்சியால் கையெழுத்தாகி உள்ளது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெறும்.

இதனடிப்படையில் (கையெழுத்தானவுடன் முதல் 30 நாட்களுக்குள்)

# முதலில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை Naval BLOCKADE உடனடியாக விலக்கப்படும்.

# ஹோர்மூஸ் நீரிணையத்தில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

# மேற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது படைகளை, இராணுவ வலிமையை பெருக்க கூடாது, புதிய பொருளாதார தடைகளை ஈரான் மீது அமெரிக்கா ஏற்படுத்த கூடாது.

# அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஈரான் சொத்துக்களில்- 24 பில்லியன் டொலர் பணத்தில் – பாதி 12 பில்லியன் டொலர்களை அமெரிக்கா 30 நாட்களுக்குள் விடுவிக்கும்.

# போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கிய அனைத்து முனைகளிலும் உடனடியாக அமல் செய்யப்படும்.

# ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் – ஐ.நா. சபையின் ஒப்புதலோடும், ஒப்புதல் இல்லாமலும் ஏற்படுத்திய பொருளாதார தடைகளை விலக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கும்.

# அமெரிக்க அரசு இஸ்ரேலுடன் கலந்து பேசி லெபனான் நாட்டிலிருந்து இஸ்ரேலிய படைகளை முற்றிலுமாக (2024 இஸ்ரேலிய – ஹிஸ்புல்லா ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து) விலக்கி கொள்ள ஒரு அட்டவணையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

இது நடந்த பிறகு அடுத்த 60 நாட்களுக்கு போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டு ஈரான் நாட்டின் அணு சக்தி முன்னேற்பாடு குறித்த பிரச்சினைகளில் பேச்சு வார்த்தைகள் தொடரும், ஏற்கனவே சுத்தீகரித்து வைத்துள்ள யுரேனியம்( HEU) குறித்தும், ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் இருந்து விலகுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்படும்.

ஈரான் அணு பரவல் தடை ஒப்பந்தத்தை கடைபிடித்து ஒழுக வேண்டும் .

இதை தொடர்ந்து ஈரான் மீதான அனைத்து தடைகளையும்  விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் எஞ்சிய சொத்துக்களை (12 பில்லியன் டொலர்) அமெரிக்கா விடுவிக்க வேண்டும், ஈரான் நாட்டின் புனரமைப்பிற்கு  300 பில்லியன் டொலர்கள் வளைகுடா நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போர்நிறுத்தம் உண்மையில் வெற்றி பெறுமா?, அல்லது இதை முறியடிக்க இஸ்ரேல் நாசகார வேலையில் ஈடுபடுமா? என உலகோர் வியக்கின்றனர். ஏனெனில், உலக மக்கள் அனைவரும் அமைதிக்காகவும், கச்சா எண்ணெய், உரம் மற்றும் அரியவகை இரசாயன பொருட்களின் தங்கு தடையற்ற போக்குவரத்திற்காகவும் ஏங்கி கொண்டுள்ள வேளையில் இஸ்ரேல் நாடு மட்டுந்தான் இந்த போரை நீடிப்பை விரும்புகிறது.  அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதே அதன் இலட்சியம்!

எனவே, இந்த போர் நிறுத்தம் கையெழுத்தான நிகழ்வு என்பது ஈரான் நாட்டிற்கு கிடைத்த வியக்கத்தகும் வெற்றியே! அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கிடைத்த பேரிடியே!. மேற்காசியாவில் தொடங்கிய இந்த நிகழ்வு உலக அரசியலையே புரட்டி போட்டு, அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தை வீழ்த்தி பல்முனை ஆளுமைகள் ( அமெரிக்காவை தவிர்த்து சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்) நிறைந்த உலகமாக மாறி வருவதை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

ஆனால், மாறியுள்ள இந்த சூழலில் இந்தியாவின் இடம் என்ன? கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில் ‘ஆயிரம் பெருமைகள்’ இந்திய நாட்டிற்கு இருந்தாலும், இன்றைய இந்தியா  போர் நிறுத்த முயற்சியில் எந்த பங்கையும் வகிக்காமல் வழி போக்கனைப் போல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு மோடி அரசால் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று பேசும் இந்தியா,  ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் அரங்கேற்றிய போது வாய் மூடியிருந்தது. அமெரிக்க, இஸ்ரேலின் தாக்குதலை  கண்டிக்கவில்லை. ஈரானிய சமயத்தலைவர் காமெனி கொல்லப்பட்டதை கண்டிக்கவும் இல்லை, மறைவிற்கு அஞ்சலி செலுத்தவும் இல்லை. இதன் விளைவாக இன்று உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு சரிந்துள்ளது. பாகிஸ்தானோ  உலக அரங்கில் உயர்ந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் மனிதவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் வேளையில் மோடி அரசு மட்டுமே  இஸ்ரேலிடம் விசுவாசம்  காட்டுகிறது. இவர்களின் அடிமைச் சேவகம் இந்திய மக்களுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டு நலன்களுக்கும் எதிரான ஒன்றாக விடிந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டுடன் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கிறேன் என்று கூறிக் கொண்டு, அங்குள்ள மன்னர்களையும், ஷேக்குகளையும் அரவணைத்து அரசியல் செய்த மோடி, மேற்காசியாவில் உள்ள பாரம்பரியமிக்க , நமது நேச நாடான ஈரானுடன்  உறவுகளை சரியாக பேணி பாதுகாக்கவில்லை. அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்க ஈரானுடனான நல்லுறவுகளை சிதைத்தார் மோடி!

இஸ்ரேலின் ஆசைக்கு இணங்க ஈரானின் தலைமையை பகைத்தார். அதே வேளையில் அபுதாபி நாட்டின் ஷேக்கான முகம்மது பின் ஜயீதுடன் (MBZ)கொஞ்சி குலவினார். சவுதி அரேபியாவின் (MBS) இளைய கொடுங்கோலனான முகமது பின் சல்மான் உடன் கூடி மகிழ்ந்தார் . இந்தியாவில் இஸ்லாமியர்களை கருவறுக்கும் அரசியலை முன்னெடுத்துக் கொண்டே, இஸ்லாமிய கொடுங்கோல் ஷேக்குகளை அரவணைத்து மகிழ்ந்தார் மோடி ! இந்த ஆட்சியாளர்களால் அதானிக்கு கிடைக்கும் முதலீட்டு கடனே  மோடிக்கு முக்கியமாகும்.

மேற்காசியாவில் இஸ்ரேலை ஒரு “தாதாவாக” நிலைநிறுத்தி தனது பெட்ரோ டொலர் ஆதிக்கத்தை வளர்க்கவும் , எண்ணெய் வினியோகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயன்றது. இதற்காகவே அரபு அரசுகளை (யு.ஏ.இ ஷேக்குகள், மற்றும் சவுதி மன்னர், ஜோர்டான் மன்னர், பஃஹ்ரைன் மற்றும் குவைத் ஷேக்குகள் ) இஸ்ரேல் நாஇடுடன் ஆப்ரகாம் ஒப்பந்தத்தில்  இணைக்க இரம்ப் அரசு முயற்சித்தது!

இப்படி செய்தால் வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பை அமெரிக்கா அளிக்கும் என்று கூறி ஏராளமான இராணுவ தளங்களை மேற்காசியாவில் அமெரிக்கா நிலைநிறுத்தி வளர்தெடுத்தது.

இத்தகைய ஆதிக்க அரசியலை, எண்ணெய் வணிகத்தில் அமெரிக்காவின் ஏகபோக கட்டுப்பாட்டை எதிர்த்து நின்ற ஈரானை முறியடிக்க, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆப்ரகாம் ஒப்பந்தம் என்ற ஒரு புள்ளியில் இணைந்தது . இத்தகைய முயற்சி ஆரம்பத்தில் வளைகுடா அரசுகளை கவர்ந்தாலும், நாளடைவில் சவுதி மன்னர் MBS ஸிற்கும் யு.ஏ.இ (அபுதாபி ஷேக் MBZ) க்கும் இடையில் மோதல்கள் வெடித்தன, அவை ஏமனிலும் இன்றும் தொடர்கின்றன.

இந்த நிலையில் தனது நாட்டு நலன்களை மனதில் கொள்ளாமல் , அமெரிக்காவுடன் சார்ந்து நின்ற மோடி அரசு , இஸ்ரேல் மற்றும் யு ஏ இ ஆகிய நாடுகளுடனான உறவை ஐமெக் India Middle East Economic Corridor, மற்றும் ஐ2 யு2 என்ற இந்தியா-இஸ்ரேல், அமெரிக்கா- அபுதாபி (India Israel USA UAE) கூட்டமைப்பில் – ஈரானுக்கு எதிரான கூட்டமைப்பில், மேற்காசியாவின் குவாட் கூட்டணி என்று கூறப்படும் கூட்டணியில் மோடி அரசு இந்தியாவை இரண்டறக் கலந்தது. இந்த முன்னேற்பாடுகள் இந்தியாவின் நலன்களுக்கு என கூறப்பட்டாலும், இவை இந்தியாவின் வர்த்தக சுதந்திரத்தையும், சுயாதீன உரிமையையும் பறி கொடுத்து இந்தியாவை நடுத்தெருவில் நிறுத்தும் முயற்சியாகும் .

இந்த போர் நடைபெறும் பொழுதே வளைகுடா நாடுகள்  அமெரிக்க பாதுகாப்பு என்ற பெயரில் , அமெரிக்க இராணுவ தளங்களை தங்கள் நாட்டு மண்ணில் அனுமதித்த முட்டாள்தனத்தை – உணர்ந்து தங்களையே நொந்து கொண்டனர். அமெரிக்காவின் நோக்கம் இஸ்ரேலை பாதுகாப்பதே ஒழிய, வளைகுடா தாடுகளை அல்ல என்பதை போரின்போது ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா மாற்றிய துரோகச்செயல்களின் மூலம் புரிந்து கொண்டனர். போர் நீடிப்பது தங்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்றும், ஈரானை பகைத்து கொண்டு வளைகுடா நாடுகள்(டுபாய, அபுதாபி, கத்தார்) செல்வ செழிப்புடன், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கேந்திரங்களாக வலம் வர முடியாது, தங்களது எண்ணெய் வணிகமும் சிறக்காது என்ற உண்மையினை உணர்ந்து கொண்டனர்.

இந்த புரிதல் ஏற்பட்டதால் தான் இந்த போர் நிறுத்தும் முயற்சிக்கு அனைத்து மேற்காசிய நாடுகளும் குறிப்பாக வளைகுடா நாடுகள் ஆதரவு தந்துள்ளன. அமெரிக்காவின் நலன்களும் இந்த போரை நீட்டிக்கொண்டு போவதில் இல்லை என்று அமெரிக்க மக்களும் உணரத் தலைப்பட்டனர்.

அமெரிக்காவின் ட்ரம்ப் அரசிற்கும் இந்த போர் நமக்கானதல்ல, இதை நீடிப்பதும் நல்லதல்ல என்று உணர்ந்தாலும் ட்ரம்பின் தலைக்கனம் இது வரை இந்த போர்நிறுத்தத்திற்கு தடை போட்டு வந்தது. ஆனால், இதற்கு மேலும் போர் நீடித்தால் உலகப்பொருளாதாரம் மட்டுமன்றி, ட்ரம்பின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற நிலையில், ட்ரம்ப் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறி போரை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேலோ தனது குணத்திற்கேற்ப, லெபனானின் மீதான இஸ்ரேலின் தாக்குதலும், ஆக்கிரமிப்பும் தொடரும், இந்த போர் நிறுத்தம் எங்களை கட்டுபடுத்தாது என்றும் குறுக்குசால் ஓட்டுகிறது. உலக அமைதி பற்றியோ, உலக மக்களின் நலன்கள் குறித்தோ இஸ்ரேலுக்கு எள்ளளவு கூட அக்கறை இல்லை என்பதையே இச்செயல் காட்டுகிறது.

இத்தகைய கொலைகார நாடான இஸ்ரேலுடன் கைகோர்க்க வளைகுடா நாடுகளே யோசனை செய்ய தொடங்கியுள்ளன. இந்நாடுகளின் பாதுகாப்பிற்கு இனி அமெரிக்கா உதவப்போவதில்லை!

தரைமட்டமான அமெரிக்க இராணுவ தளங்களை யாரும் புனரமைக்க போவதுமில்லை. சவுதியும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதை போன்று பிற நாடுகளும் முயற்சி செய்யலாம்.

இஸ்லாமிய வெறுப்புணர்வால் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்த விழைகின்றது, மோடி ஆட்சி. இத்தகைய மேம்படுத்துதலை இந்திய நலன்களுக்காக முன்னெடுக்கிறோம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை மட்டுமல்ல, கயமைத்தனமும் ஆகும். இஸ்ரேலுடனான நட்புறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு உகந்தது என்றும் இஸ்ரேலின் மேம்பட்ட இராணுவ பாதுகாப்பு (எலெக்ட்ரானிக் சர்வெலைன்ஸ் ) உபகரணங்கள் மற்றும் ஐயர்ன் டோம் போன்ற பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அவசியம் என பலர் இங்கு கூறுகின்றனர். ஆனால் இவை பிற நாடுகளில் கிடைக்காத ஒன்றல்ல என்பதும், இவற்றால் ஈரானின்  தாக்குதலை  இஸ்ரேலால் சமாளிக்க முடியவில்லை என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் 90 இலட்சம் இந்தியர்கள் இருப்பதும், அவர்கள் இந்தியாவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டி தருவதும் நடப்பதால் இந்த போர் வளைகுடா நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையேயான போர் என சித்தரிப்பது திசை திருப்பும் செயலாகும். இந்த போர் இஸ்ரேலினால் துவங்கப்பட்டது, ஈரான் நாட்டை நிர்மூலமாக்க , அதன் தலைவர்களை படுகொலை செய்து அந்நாட்டை சிதறடிக்க நடத்தப்பட்டது இந்தப் போர். இந்த போர் தாக்குதலின் விளைவாகவே ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது.  அதாவது ஈரானின் எதிரி நாடுகளுக்கு அவ்வசதி மறுக்கப்பட்டது.

அன்று ஏமாந்து தாக்குதலில் குதித்த அமெரிக்கா, இன்று சூடுபட்ட பூனையாக போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டது மட்டுமின்றி, அந்த முயற்சியை ஒப்பேற்றும் – சீர்குலைக்கும்- நெத்தன்யாகு மற்றும் இஸ்ரேல் அரசை கடுமையாக எச்சரிக்கவும் செய்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இஸ்ரேலால் ஈரானை எதிர்த்து தாக்குபிடிக்க முடியாது.

இந்த சூழலில் ஹோரமூஸ் நீரிணை மூலம் தங்குதடையற்ற எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் வேதியல் பொருட்களின் வர்த்தக போக்குவரத்து நிகழ்வதே இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது என்ற நிலையில்  நரேந்திர மோடி இஸ்ரேலை  இன்னும் ஆதரிப்பாரா? அல்லது நெதன்யாகுவிற்கு அறிவுரை வழங்குவாரா?

ஏனென்றால் இஸ்ரேல் நாடு மட்டுந்தான் 1948 முதல் அண்டை நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளின் மேல் படையெடுத்து அந்நாட்டு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.

இஸ்ரேல் நாடு மட்டுமே மேற்காசியாவில் தன்னை தாதா என எண்ணிக்கொண்டு அப்பகுதியின் பதட்டத்திற்கும், அமைதியின்மைக்கும் மூல காரணமாக விளங்குகிறது.

இஸ்ரேல் நாடு மட்டுமே நிறுவப்பட்ட 1948 முதல் இன்று வரை 78 இலட்சம் பலஸ்தீனர்களை நாட்டைவிட்டு விரட்டியும் , 74 இலட்சம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் – பலஸ்தீனத்தில் நாயை விட கேவலமான ஜந்துக்களாக பாவித்து அடிப்படை உரிமைகளை கூட பலஸ்தீன மக்களுக்கு மறுக்கின்ற அட்டூழியத்தை இஸ்ரேலின் பிடியில் உள்ள மேற்கு கரையில், ஜெருசலேத்தில் காசா பகுதியிலும் நடத்திக் கொண்டுள்ளது. ஒக்ரோபர் 2023 முதல் இன்று வரை காசா பகுதியில் 73,000 மக்களை, 32,000 குழந்தைகளை கொன்ற போர் குற்றத்தை இழைத்த ஒரே நாடு இஸ்ரேல் தான்.

லெபனான் நாட்டை ஆக்கிரமித்து இருப்பதும் இஸ்ரேல் நாடு தான். இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து கிளம்பிய இயக்கமே ஹிஸ்புல்லா (எதிர்ப்பு) இயக்கமாகும் .

இஸ்ரேல் நாடு மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளாக ஈரானை அழித்தொழிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஈராக், லிபியா மற்றும் சிறியா மீது அமெரிக்கா படையெடுத்தற்கும் மூல காரணம், இஸ்ரேல் நாடு தான் .

இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சியோனிச இஸ்ரேல் அரசை ஆதரிக்கும் கேவலமான செயலை, ”இந்திய நாட்டு நலன்களுக்காக செய்கிறேன்” என்று கூறி, இனி மேலும் மோடி நாடகமாட முடியாது.

Exit mobile version