
துருக்கி தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகிறது.
தடைகளை மீறிய போராட்டம்
நேட்டோ மாநாட்டையொட்டி, தலைநகர் அங்காராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் அரசு முழுமையான தடை விதித்துள்ளது. நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக தடைகளை மீறி துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. இது குறித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கெமால் ஒகுயான், எங்கள் நாட்டில் நேட்டோ மாநாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக நடத்த விடமாட்டோம். நேட்டோவின் கொள்கைகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் முன்னால் துருக்கி மக்கள் மௌனமாக இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் ஆதரவு
இந்த நேட்டோ எதிர்ப்பு போராட்டத்தில் துருக்கி நாட்டின் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். துருக்கி அரசின் தடை உத்தரவை கண்டித்து, கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) தலைவர் ஜியோர்ஜோஸ் மரினோஸ் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேட்டோ என்பது ஆரம்பத்திலிருந்தே உலக மக்களுக்கு எதிரான, முதலாளித்துவத்திற்கு ஆதரவான ஒரு கூட்டணி. அது ஒரு கம்யூனிச எதிர்ப்பு கூட்டணி, சோசலிச நாடுகளில் ஏற்பட்ட எதிர்-புரட்சிகளைத் தொடர்ந்து அது தனது ஆக்கிரமிப்பை மேலும் அதிகரித்து வருகிறது என அவர் கூறினார். துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அரசு கொண்டு வந்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் அனைத்தும், நேட்டோவிற்கு எதிரான மக்களின் குரலை ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

