Site icon சக்கரம்

ஆசியாவில் நகரமயமாக்கல்: கோர்ப்பரேட் இலாபமே குறிக்கோள்! 

 – என். குணசேகரன்

ந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆசிய-பசிபிக் பிராந்தியமாகக் கருதப்படுகிறது. இதில் 220 கோடிக்கும் அதிகமான நகர்ப்புற மக்கள் வாழ்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்டுள்ளது; இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விரைவான வளர்ச்சியானது போதிய குடியிருப்புகள் இல்லாதது, போக்குவரத்து நெரிசல், காற்று மாசு மற்றும் காலநிலை தொடர்பான பேரிடர் பாதிப்புகள் உள்ளிட்ட நகர்ப்புற சவால்களை உருவாக்கியுள்ளது. சமத்துவமின்மை, குடிசைகளின் விரிவாக்கம் மற்றும் திறனற்ற நிர்வாகம் ஆகிய பிரச்சனைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

2026-ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் எஸ்.டி.ஜி (நிலையான வளர்ச்சி இலக்குகள்) அறிக்கையானது, “தெற்கு, தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகளில் முறையே சுமார் 43 விழுக்காடு மற்றும் 25 விழுக்காடு நகர்ப்புற மக்கள் முறைசாரா குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இப்பிராந்தியத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான குடிசை வாழ் மக்கள் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

சமத்துவ சமூகக் கொள்கைகளைச் செயல்படுத்துமாறு அந்த அறிக்கை வலியுறுத்துகிறது; “தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் கடுமையான வளர்ச்சிப் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன, அங்கு விரைவான நகரமயமாக்கலானது நியாயமான வருமான விநியோகம், காலநிலைத் தாங்கும் திறன் மற்றும் உள்கட்டமைப்புப் பற்றாக்குறைகளை அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது. பெரும்பாலான பொருளாதார வளர்ச்சி மற்றும் இடம்பெயர்விற்கு உந்துசக்தியாக விளங்கும் பாங்காக், ஜகார்த்தா மற்றும் மணிலா போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களில் அடித்தட்டு மக்களுக்கான போதுமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் திறனற்ற நகர்ப்புற மேலாண்மையானது இந்தப் பிரச்சனையைத் தீவிரப்படுத்துகிறது. மக்கள் நலன் சார்ந்த நகர்ப்புற வளர்ச்சியே தற்போதைய அவசியத்தேவை.

மக்களுக்கு எதிரான மாடல் !

ஆசியாவில் நகரமயமாக்கல் என்பது பொருளாதார முன்னேற்றத்தின் உந்துசக்தி மாடல் எனப் பலர் கொண்டாடுகின்றனர். இது சிறிய நகரங்களை பெருநகரங்களாக மாற்றுவதுடன் பிராந்திய வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக பேசப்படுகிறது. ஆயினும், இந்த நகரமயமாக்கல் பெருநிறுவனங்களுக்கும் பெரிய வணிகங்களுக்கும் பயனளிக்கிறது என்ற உண்மை மறைக்கப்படுகிறது. அத்தகைய நகரமயமாக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பறிக்கிறது. சுகாதாரம், கல்வி தொடர்பான உள்கட்டமைப்புகள், வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு மெகா திட்டங்களை விட குறைவாகவே செலவிடப்படுகிறது. மக்கள் நகரத்திலிருந்து எல்லைப் பகுதிகளுக்கு குடியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இடம்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடிசைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் இலாபம் ஈட்டுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது; “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” போன்ற கவர்ச்சி வாசகங்கள் ஏட்டளவிலேயே உள்ளன.

நவீனமயமாக்கல், நகரமயமாக்கல் என்ற போர்வையில் ஆசியாவின் நகரங்கள் ரியல் எஸ்டேட், தொழில், உட்கட்டமைப்பால் அபரிமிதமான முதலீடுகளை ஈர்க்கின்றன. தொழில்துறை வழித்தடங்கள், அதிவேக ரயில் அமைப்புகள், துறைமுகங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் போன்ற மெகா திட்டங்கள் வெகுவேகமாக செயல்படுத்தப்படுகின்றன. இவை இலாபகரமான ஒப்பந்தங்களாக இருப்பதால் பெரும் கோர்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முக்கியமான இடங்களில் நிலத்தின் மதிப்பு உயர்வதால் ரியல் எஸ்டேட், தொழில் முதலாளிகள், பெரும் முதலீட்டாளர்களும் பயனடைகிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மலிவு விலை குடியிருப்புகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகளுக்குப் போதுமான நிதி வழங்கப்படாத நிலையில், பொது நிதியின் ஒரு பெரும்பகுதி இந்த உயர்மட்ட மெகா திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறது.

குடிசைகளில் வசிப்போருக்கான மலிவு விலையிலான வீடுகள் வழங்கும் திட்டங்கள் ஒரு சிறு பகுதியினருக்குத்தான் போய் சேருகின்றன. பெரும்பான்மையான ஏழைக் குடும்பங்களுக்கு இவை கிடைப்பதில்லை. இதனால் குடிசைகள் பெருகுகின்றன. இந்த முறைசாரா குடியிருப்புகளில் போதிய தண்ணீர், சுகாதாரம், மின்சாரம், மனித உரிமைகள் தொடர் பிரச்சனைகளாக உள்ளன.

குடியிருப்புகளின் அவலம்

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவுகளின்படி, ஆசியா முழுவதும் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் குடிசைகள் அல்லது முறைசாரா குடியிருப்புகளில் வாழ்கின்றனர். சுமார் 37 கோடி மக்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றனர். மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும், 23 கோடி மக்களுக்குப் பாதுகாப்பான மாசற்ற குடிநீர் கிடைப்பதில்லை. குழாய் நீர் கிடைக்காத பகுதிகளில், குடியிருப்பாளர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது; அல்லது தனியார் வியாபாரிகளிடம் இருந்து அதிக விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. ஆசியா முழுவதும் சுமார் 150 கோடி மக்கள், கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்படாத கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். திறந்த சாக்கடைகள் அடிக்கடி திடக்கழிவுகளால் அடைத்துக் கொள்கின்றன. மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில், தனியார் கழிப்பறைகள் இல்லாததால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பற்ற பொதுக் கழிப்பறைகளை நம்பியிருக்கிறார்கள் அல்லது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். முறைசாரா குடியிருப்புகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியார் கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் இல்லாததால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இதனால் அவர்கள் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.

முறைசாரா குடியிருப்புகள் நகரத்தின் சட்ட விதிகளால் அங்கீகரிக்கப்படாதவை. குடியிருப்பாளர்களுக்குச் சட்டப்பூர்வ நிலப்பட்டாக்கள், பத்திரங்கள் அல்லது குடியிருப்பு உரிமைகள் இல்லாததால், கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கும் இடிப்புகளுக்கும் அவர்கள் தொடர்ந்து ஆளாகிறார்கள். முறையான மின் இணைப்புகள் இன்றி ஆபத்தான சூழ்நிலைகளில் வாழ குடியிருப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இந்த கோர்ப்பரேட் நலனை மையப்படுத்திய நகரமய மாக்கலில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை பலிகடா ஆகிறது. இந்தோனேசியாவில், ஜகார்த்தாவின் விரைவான வளர்ச்சியானது வணிக மாவட்டங்களையும் கடலோரச் சுவர்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் போன்ற மெகா உள்கட்டமைப்புகளையும் உருவாக்கியது. இருப்பினும், நகரின் மூழ்கும் நிலம் மற்றும் மோசமாகி வரும் வெள்ளப் பெருக்கு ஆகியவற்றுக்கு எவ்விதத் தீர்வும் காணப்படவில்லை. நகர்ப்புற கிராமங்கள் மற்றும் குடிசைகளை மேம்படுத்தும் நோக்கிலான ‘கம்பங் மேம்பாட்டுத் திட்டம்’ (Kampung Improvement Program), கோர்ப்பரேட் திட்டங்களின் வளர்ச்சியை விட மிக மெதுவாகவே முன்னேறியுள்ளது. அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் மற்றும் மோசமான சேவைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு, அடிப்படை வசதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரு வணிகத் திட்டங்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. முறைசாரா குடியிருப்புகள் அதிக வெப்பத்தின் கடும் விளைவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதே வேளையில், ஜகார்த்தாவில் உள்ள கோர்ப்பரேட் கட்டமைப்புகள் மாபெரும் கடலோரச் சுவர்கள் போன்ற மேம்பட்ட வெள்ளப் பாதுகாப்பைப் பெற்றுள்ளன.

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள குடிசைகள் நகர் வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரில் கணிசமான பகுதியினருக்குத் தங்குமிடமாக உள்ளன. அரசாங்கத்தின் மாற்று இடமாற்ற நடவடிக்கைகள் பயனற்றவை, ஏனெனில் மக்களால் அதற்கான செலவை ஏற்க முடியவில்லை. மணிலா மற்றும் பிற பிலிப்பைன்ஸ் நகரங்களில், நகர்ப்புற மக்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முறைசாரா வீடுகளில் வாழ்கின்றனர். வீட்டுப் பற்றாக்குறையும் பேரிடர் அபாயங்களால் இடப்பெயர்வும் மேலும் மோசமடைகிறது.

ஆசியாவின் நூற்றாண்டு அல்ல!

உயர்தர உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தென் கொரியாவின் சாங்டோ (Songdo) போன்ற “ஸ்மார்ட் நகரங்கள்”, ஜகார்த்தாவில் உள்ள போக்குவரத்து சார்ந்த கோர்ப்பரேட் மையங்கள் போன்றவற்றில் பெருமளவிலான மூலதனம் குவிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண மக்களுக்கான அடிப்படை மனிதச் சேவைகள் பின்தங்கி உள்ளன.

கௌரவமான வேலையை (Decent Work) வழங்குவது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். தற்போதைய நகரமய மாக்கல் முறைகள் வேலை தேடுபவர்களுக்கு கௌரவமான வேலையை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளன. 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கு எவ்வித வேலைப் பாதுகாப்பும் இல்லை. இந்த நகரங்களைக் கட்டமைத்து பராமரிப்பதில் உழைப்பு செலுத்தும் தொழிலாளர்கள், நகரமயப் பொருளாதார வளர்ச்சியால் கிடைக்கும் பலன்களைப் பெறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள். 2026-ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் எஸ்டிஜி (SDG) அறிக்கை கூறுகிறது : “வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது; பாதுகாப்பற்ற முறைசாரா வேலைகளின் விரிவாக்கம் நடக்கிறது; ஆனால், அதிகரித்து வரும் நகர்ப்புறத் தொழிலாளர்களில் ஒரு பெரும் பகுதியினருக்கு அடிப்படையான தொழிலாளர் பாதுகாப்புகள் இல்லை. இது கோர்ப்பரேட் வளர்ச்சிக்கும் மனித நல்வாழ்வுக்கும் இடையிலான பிளவை மேலும் கூர்மையாக்குகிறது”.

21-ஆம் நூற்றாண்டு இனி “ஆசியாவின் நூற்றாண்டு” என்று பம்மாத்து செய்யப்படுகிறது. உண்மையில் இலாபத்தை நோக்கமாகக் கொண்ட நகர விரிவாக்கம்தான் 21-ஆம் நூற்றாண்டின் ஆசிய வளர்ச்சி. குடிசை மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், சுகாதாரம், கல்வி மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான பொதுச் செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும், மக்கள் பங்கேற்போடு கூடிய பங்கேற்புத் திட்டமிடலைப் பின்பற்றுவதன் மூலமும் நகரமயமாக்கலை மேலும் மனிதாபிமானமிக்கதாக மாற்றலாம். ஆசியாவின் நகரங்கள் செல்வந்தர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயனளிக்க வேண்டுமானால், அரசாங்கங்கள் கோர்ப்பரேட் சார்ந்த நகரமயமாக்கலை கைவிட வேண்டும். மக்கள் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு மாற வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டுவர, வலுவான நகர்ப்புற மக்கள் இயக்கம் தேவை.

Exit mobile version