Site icon சக்கரம்

போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா புகலிடமா?

காசாவில் அப்பாவி மக்களின் வீடுகளைத் தகர்த்து, மனிதநேயமற்ற முறையில் அழிவின் சுவடுகளைப் பதித்துவிட்டு, அந்தச் செயல்களைச் சமூக வலைதளங்களில் கொண்டாடிய ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணி போல உலாவிவிட்டுத் தப்பிச் சென்றிருப்பது ஒட்டு மொத்த மனித உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈதன் கில்போவா (Eitan Gilboa) எனும் அந்த நபர், இஸ்ரேலிய இராணுவத்தின் 271-வது போர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியவர். காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் இடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தும், அதை வீடியோக்களாகப் பதிவு செய்து வெளியிட்டும் தனது வன்மத்தைக் காட்டியவர். இத்தகைய கொடுஞ்செயல்கள் நான்காம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகவும், போர்க் குற்றங்கள் என்றும் சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக வரையறுத்துள்ளன.

ஆனால், இத்தகைய கொடிய குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், இந்தியாவில் தாராளமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது ஒருபுறம் இருக்க, அவர் மீது ‘ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை’ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் இந்திய அரசு காட்டிய மெத்தனப் போக்கு மிகுந்த கவலையளிக்கிறது. 1960 ஆம் ஆண்டின் இந்திய – ஜெனிவா ஒப்பந்தங்கள் சட்டத்தின்படி, தனது மண்ணில் நுழையும் போர்க் குற்றவாளிகளை விசாரிப்பதற்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தியாவுக்குப் பொறுப்பும் அதிகாரமும் உண்டு. ஆனால், புகார் அளிக்கப்பட்ட பிறகும் இந்திய அரசு எடுத்த “மெதுவான” நடவடிக்கை கள், குற்றவாளி தப்பிச் செல்வதற்கே வழி வகுத்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராஜதந்திர உறவுகளோ அல்லது வர்த்தக ஒப்பந்தங்களோ, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளை விட மேலானவை அல்ல. இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரை, தற்காலிகமாகப் புகலிடம் அளித்துத் தப்ப விடுவது, நீதியின் பார்வையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. “இந்தியா தனது மண்ணைச் சர்வதேசக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாற்ற அனுமதிக்கக்கூடாது” என்ற ஹிந்த் ரஜாப் அறக்கட்டளையின் கோரிக்கை, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரின் உணர்வும் ஆகும்.

சர்வதேச நீதிமன்றத்தில் காசா விவகாரம் குறித்த விசாரணைகள் வரும் வேளையில், இது போன்ற குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பது சர்வதேச நீதிக்கே சவால் விடுக்கிறது. இந்திய அரசு தனது கடந்தகால ஜனநாயகப் பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் வகையில், இத்தகைய போர்க் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் இதைக் கூர்ந்து கவனித்து வருகிறது. ஈதன் கில்போவா போன்ற போர்க் குற்றவாளிகள் எந்த நாட்டில் பதுங்கினாலும், அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.

-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.06.05

Exit mobile version