Site icon சக்கரம்

ட்ரம்ப் மறையலாம்! கம்யூனிசம் மறையாது!

 – அ. அன்வர் உசேன்

மெரிக்காவின் 250-ஆவது விடுதலை நாள் விழாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கம்யூனிசத்தின் மீது நஞ்சை கக்கியுள்ளார். அமெரிக்கா எனும் தேசம் உருவானதிலிருந்து அது சந்திக்கும் மிகப் பெரிய ஆபத்து கம்யூனிசம்தான் எனவும்; இரு உலகப் போர்கள், பேர்ல் ஹார்பர் தாக்குதல், பின் லேடனின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் ஆகியவற்றை விடக் கம்யூனிசம் மோசமான ஆபத்து என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போர் விளைவித்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ட்ரம்ப் அமெரிக்க மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். நவம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் அவரது கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சிக்குள் உருவாகியுள்ள “ஜனநாயக சோசலிச” பிரிவு அவருக்குப் பீதியை உருவாக்கி வருகிறது. கம்யூனிசத்தை அழிக்கும் வல்லமை உலகில் எவருக்கும் இல்லை. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ட்ரம்ப் இதனை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்கெல்லாம் ட்ரம்ப்புக்குப் பொறுமை இல்லை. எனினும், வரலாறு அவருக்குப் பாடம் கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்க விடுதலையின் முரண்பாடுகள்

எந்தவொரு தேச விடுதலையின் 250-ஆவது ஆண்டும் பெருமைக்குரிய ஒன்றுதான்! ஆனால், அமெரிக்காவின் விடுதலை பல முரண்பாடுகளைக் கொண்டதாக இருந்தது. அமெரிக்கத் தேசமே முரண்பாடுகளைக் கொண்டதுதான்! பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த குடியேறிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளச் செவ்விந்தியர்கள் உட்பட பல உள்ளூர் இனக்குழுக்களைக் கொன்று குவித்தனர். அவர்களின் இரத்தச் சகதி மீது தான் அமெரிக்காவின் வரலாறு தொடங்கியது.

1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் நாள் பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாக அமெரிக்காவின் 13 மாகாணங்கள் அறிவித்தன. “அனைத்து ஆண்களும் பிறவியில் சமமானவர்களே” என்பதே அந்த விடுதலை அறிவிப்பின் மையமான அம்சம். இந்த விடுதலை அறிக்கை அந்த காலகட்டத்திற்குப் பல முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அதில் பல முரண்பாடுகளும் இருந்தன. அனைத்து ஆண்களும் சமமானவர்கள் எனில் கருப்பின ஆண்களுக்கு இது பொருந்துமா எனும் கேள்வி எழுந்த பொழுது “இல்லை” என வாதிட்டனர். அனைத்து வெள்ளை இன ஆண்கள் மட்டும் தான் சமமானவர்கள் என்ற வலுவான கருத்து அங்கு நிலவியது. இந்த வரைவு அறிக்கையைத் தயாரித்த தாமஸ் ஜெஃபர்சனே கூட 300-க்கும் அதிகமான அடிமைகளைத் தன் வசம் வைத்திருந்தார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பின்னர், 1865-ல்தான் ஆபிரகாம் லிங்கன் கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தை ஒழித்தார். ஆனால், அதற்காக அவர் தன் உயிரைப் பலியிட வேண்டி வந்தது. அதே காலகட்டத்தில், ஆண்கள் மட்டும்தான் சமமானவர்களா? பெண்கள் சமமில்லையா எனும் நியாயமான கேள்வி எழுந்தது. “அனைத்து ஆண்களும் அனைத்துப் பெண்களும் பிறவியில் சமமானவர்களே” என விடுதலை அறிக்கை மாற்றப்பட வேண்டும் எனப் பெண்கள் உரக்கக் குரல் எழுப்பினர். பெண்களுக்கான வாக்குரிமை 1920 ஆம் ஆண்டுதான் அமெரிக்காவில் அமுலானது. ஆனால், ட்ரம்ப் அழிக்கத் துடிக்கும் சித்தாந்தமான கம்யூனிசம், அதற்கு முன்பே சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமையை அளித்தது. அதுதான் கம்யூனிசத்தின் மகத்துவம்.

ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பீடமாக அமெரிக்கா

இதே காலகட்டத்தில் அமெரிக்கா தொழில் புரட்சியின் பல அம்சங்களைச் சுவீகரித்துக் கொண்டு வேகமாக முன்னேறியது. முதல் உலகப்போரின் பொழுது பிரிட்டன் பொருளாதார ரீதியாகப் பலவீனம் அடைந்தது. எனினும், சோவியத் புரட்சியை அழிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் கைகோர்த்தன. முதல் உலகப்போருக்குப் பின்னர் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிச சக்திகள் உருவாகவும், அதன் மூலம் சோசலிசத்தைச் சிதைக்கவும் இரு ஏகாதிபத்திய நாடுகளும் ஒரே நேர்க்கோட்டில் இயங்கின. எனினும், ஹிட்லரின் மூர்க்கத்தனம் சோசலிச சோவியத் யூனியனையும் முதலாளித்துவ நாடுகளையும் ஓர் அணியில் இணைத்தது. ஹிட்லரைத் தோற்கடிப்பதில் முதன்மையான பங்கு சோவியத் யூனியனுக்கு என்றாலும், இதர முதலாளித்துவ நாடுகளின் பங்கையும் நாம் மறுக்க இயலாது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பீடம் பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவிற்குச் சென்றது. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் சோவியத் யூனியனையும் சோசலிசத்தையும் தனிமைப்படுத்த அமெரிக்கா அனைத்துச் சூழ்ச்சி முயற்சிகளையும் எடுத்தது. சுமார் 45 ஆண்டுகள் இதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனினும், 1990-களில் தனது உள் பலவீனங்களால் சோசலிசம் தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்தது. அந்தச் சூழலை அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

புதிய முன்னுரையாக மாறிய முடிவுரை

இத்துடன் சோசலிசத்தின் கதை முடிந்தது என்றுதான் அமெரிக்கா நினைத்தது. “வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது” என முதலாளித்துவச் சித்தாந்தவாதிகள் முடிவுரை எழுதி கொக்கரித்தனர். ஆனால், 35 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்களின் எந்தவொரு அடிப்படைப் பிரச்சனையையும் முதலாளித்துவத்தால் தீர்க்க இயலவில்லை. கம்யூனிசக் கருத்துகள் தான் மீண்டும் புத்துயிர் பெற்று உலா வருகின்றன. அவர்கள் எழுதிய முடிவுரை இன்று புதிய முன்னுரையாக மீண்டெழுந்துள்ளது. சோசலிச சீனா அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக முன்வந்துள்ளது.

அதே சமயம், அமெரிக்காவிற்குள்ளும் சோசலிசக் கருத்துகள் கணிசமான ஆதரவைப் பெற முனைந்துள்ளன. தன்னை “ஜனநாயக சோசலிசவாதி” என அழைத்துக் கொள்ளும் பெர்னி சாண்டர்ஸ் பல முறை தொடர்ந்து செனட் சபைக்கு வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க் நகரின் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி அமெரிக்க முதலாளிகளுக்கும், இரு கட்சிகளில் உள்ள கம்யூனிச விரோதிகளுக்கும் பீதியை உருவாக்கியுள்ளது. மம்தானியின் வெற்றியைத் தொடர்ந்து பல “ஜனநாயக சோசலிசவாதிகள்” தேர்தல் அரசியலிலும், ஜனநாயகக் கட்சியின் உள் தேர்தல்களிலும் தொடர்ந்து வென்று வருகின்றனர். இதுதான் ட்ரம்ப்பைக் கோபம் கொள்ள வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் கம்யூனிசக் கருத்துகளை முழுமையாக ஏற்கின்றனர் எனச் சொல்ல இயலாது. உதாரணத்திற்கு, பெர்னி சாண்டர்சின் இஸ்ரேல் அணுகுமுறையை முற்றிலும் ஏற்க இயலாது. எனினும், இந்தப்பிரிவினர் ஒரு புதிய அரசியலை அமெரிக்காவில் முன்னெடுத்து வருகின்றனர். இதனை அமெரிக்க முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதன் வெளிப்பாடுதான் ட்ரம்பின் ஆத்திரம்.

ட்ரம்ப்பும் அவரைப் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளும் என்னதான் முயன்றாலும் கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க இயலாது. ஏனெனில், கடைசி உழைப்பாளியின் கடைசி மூச்சு இருக்கும் வரை, சுரண்டலின் கடைசி நிகழ்வு நீடிக்கும் வரை, கம்யூனிசம் மக்களின் சிந்தனையில் இருப்பதை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது. தற்காலிகப் பின்னடைவை கம்யூனிசம் சந்திக்கலாம்; ஆனால், ஒருபோதும் கம்யூனிசம் மறைவதே இல்லை. ட்ரம்ப்பின் பல முதலாளித்துவ முன்னோர்கள் கம்யூனிசத்தை அழிக்க முயன்று, இறுதியில் அவர்கள்தான் அழிந்து போயினர். ட்ரம்ப்புக்கும் அந்த கதிதான் ஏற்படும். ஏனெனில், பிடல் காஸ்ட்ரோ கூறியது போல, “சுரண்டப்படும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே விடுதலை சோசலிசம்தான்! சோசலிசம் ஒன்றே மாற்று”! ட்ரம்ப் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போய்விடுவார்; ஆனால், கம்யூனிசம் என்றும் நிலைத்து நிற்கும்.

Exit mobile version