
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி 11.07.2026 அன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.
‘காற்றில் ஜானகியின் கீதம்…’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.
நினைவலைப் பகிர்வு – எஸ்.ஜானகி: உணர்வுகளைக் குரலில் வடித்த வித்தகர்
–ஜெ.செல்வராஜ்
‘மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி… டாடி… ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’ பாடலை, அந்த மழலைக் குரலில் கேட்கும்போது சந்தோஷம் பொங்கும். காரணம், காற்றை கௌரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, ‘பழைய நெனப்புடா பேராண்டி… பழைய நெனப்புடா…’ எனப் பாடும் கிழவியின் விசனமா? – இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ்.ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.
1957-ல் இருந்து தமிழ் மொழியில் பாடி வந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
தமிழில் பரவிய புகழ்
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா…’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.
எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார்.
இந்தத் திறமையினாலேயே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். எப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுவர். யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கீகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.
இளையராஜா இசையில்…
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார்.
சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா-வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா… சின்ன சின்ன வண்ணக்குயில்… (மெளன ராகம்), “லால லால ல… ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது… (கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா… எந்தப் பூவிலும் வாசம் உண்டு… (முரட்டுக்காளை)” என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.
“எனது இரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல இரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
குயிலின் குரலுக்கு ஏது ஓய்வு?
–கவின் மலர்
எந்தப் பாடகரும் தனக்கான ஓய்வை அறிவித்ததில்லை. எஸ். ஜானகி அவர்கள் மட்டுமே அப்படி ஓய்வை அறிவித்தவர். 2016 இல் அவர் அப்படி ஓய்வை அறிவித்தபோது எழுதப்பட்ட கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகின்றது.
அன்றாடம் நாம் இன்று கேட்கும் பல புதிய திரைப்படப் பாடல்களில் பெரும்பாலானவை நம் செவிகளில் நுழைந்தாலும் இதயத்திற்குள் நுழைவதில்லை. அனைத்துக் குரல்களும் ஒரே போல ஒலிக்கும் விந்தையை உணரலாம். அதிலும் குறிப்பாக பெண் குரல்களில் தனித்துவத்தோடு மிளிரும் குரல்கள் அரிதாகிவிட்டன. ஆனால், ஒரு குரல் உண்டு. அக்குரல் இப்போது பாடினாலும் ஆன்மாவைத் தொடும். 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடி வந்தாலும் தனித்துவத்தை இழக்காத குரல். ‘10 கல்பனகல்’ என்கிற மலையாளத் திரைப்படத்திற்காகத் தான் பாடிய ஒரு தாலாட்டுப் பாடலோடு ‘இனி பாடப்போவதில்லை’ என்று ஓய்வை அறிவித்திருக்கிறது இந்தக் குயில்.
‘ஜானகியம்மா’ என்று இன்றைய பாடகர்களால் மரியாதையோடு விளிக்கப்படும் ஜானகியின் குரல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். தமிழகத்தின் காற்று அவர் குரலை குத்தகைக்கு எடுத்திருந்த காலம் ஒன்று உண்டு. பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும் ஜானகியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது இளையராஜாவின் காலம்தான்.
இளையராஜா மக்களை தன்வசம் ஈர்த்தது ‘அன்னக்கிளி’ மூலமாய் இருந்தாலும் பாடியது ஜானகி என்கிற குயில் அல்லவா? ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’, ‘மச்சானப் பார்த்தீங்களா’ என்று இவர் குரல் மூலமாகவே இளையராஜா தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938, ஏப்ரல் 23ம்தேதி பிறந்த ஜானகி 60 ஆண்டுகால திரையிசை வாழ்வில் 48,000 பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, மராத்தி, வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம், குஜராத்தி, கொங்கனி, துளு, சௌராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
நான்கு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். தன் முதல் தேசிய விருதை ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில், இளம்பெண்ணின் முதற்காதல் சுகம் ஜானகியின் குரலில் பூத்த ‘செந்தூரப்பூவுக்காக’ பெற்றார். பின் ‘ஓப்போல்’ மலையாளத் திரைப்படத்துக்காக அடுத்த தேசிய விருது.
பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெறாத ‘தூரத்தில் நான் கண்ட உன்முகம்’ பாடலில் காதலின் பிரிவுத்துயர் ஜானகியின் குரலில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இப்பாடலின் மெட்டுகொண்ட ‘சிதாரா’ தெலுங்குப் படத்தின் பாடலுக்காக மீண்டும் தேசிய விருது வென்றார். படத்தில் இடம்பெறாத பாடல்கள் பிரபலம் ஆகாது. ஆனால், ‘அலைகள் ஓய்வதில்லை’யில் இடம்பெறாத ஜானகி பாடிய ‘புத்தம் புது காலை’ பாடல் அத்தனை பிரபலம்! 30 ஆண்டுகள் கழித்து அதே மெட்டு ‘மேகா’திரைப்படத்தில் இளையராஜாவால் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் ஜானகியின் குரலுக்கு ஈடாகவில்லை புதிய பாடகியின் குரல்.
‘தேவர் மகன்’ திரைப்படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’தேசிய விருது பெற்றுத் தந்தது. மேடைக் கச்சேரிகளில் அந்தப் பாடலை பிற பாடகிகள் பாடும்போதுதான் தெரியும் ஜானகியின் மாயம். கிராமத்து அப்பாவித்தனத்தை அந்த ‘மறக்க மனம் கூடுதில்லையே…’ வில் காட்டியிருப்பார். ‘குரு’ திரைப்படத்தில் மதுவருந்திய பெண்ணொருத்தியின் போதையை ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ பாடலில் கேட்கலாம்.
ஜானகியின் குரல் நவரசங்களையும் தரக்கூடிய வல்லமை மிகுந்தது. துயரம், காதல், கோபம், ஆவேசம், நகைச்சுவை என அனைத்துவிதமாகவும் பாடக்கூடியவர். விரகதாபம் தொனிக்கும் பாடல்களைப் பாடுபவர் என ஜானகி மீது குற்றச்சாட்டும் உண்டு.. பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்துவது தவறு என்று பார்க்கப்படும் சமூகத்தில், இத்தகைய பாடல்களைப் பாட முன்வந்த ஜானகியின் துணிச்சல் வியப்புக்குரியது.
எல்லாவிதமான பாடல்களும் பாடமுடியும் என நிரூபித்தவர் அவர். இப்படிப்பட்ட பாடல்களை பாடும் பாடகிகளைத் தமிழ் சினிமா ‘கிளப் டான்ஸ் பாடல்களுக்கென ஒதுக்கி வைத்த வரலாறு உண்டு. அத்தகைய விபத்து ஜானகிக்கு நடக்கவில்லை என்பதற்கு எவராலும் மறுக்க முடியாத அவருடைய திறமையே காரணம்.
குழந்தைகளுக்கான பாடல் என்றால் ஒரு காலத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரிதான். அவருக்குப் பின் ஜானகியே இதில் சிறந்து விளங்குபவர். ‘டாடி டாடி ஓ மை டாடி’, ‘கண்ணா நீ எங்கே’, ‘டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு’ என்று பல பாடல்களைக் குழந்தைக் குரலில் பாடியவர். ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் வரும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ மலேசியா வாசுதேவனின் முதற்பாடல். அதில் ‘பழைய நெனப்புடா பேராண்டி’ என்று சில வரிகளை கிழவியின் குரலில் பாடுவார் ஜானகி.
மகளிர் மட்டும்’ படத்தின் ‘காளை மாடு ஒண்ணு’ பாடலில் 3 நாயகிகளுக்கும் 3 வித குரலில் பாடி வேறுபாடு காட்டியது அவர் திறமைக்குப் பெரிய சான்று. தாய்மொழி தெலுங்கு எனினும், தமிழை அழகாக உச்சரிப்பவர். குறில், நெடில், ழகர, ளகர, றகர பிரச்னைகள் அவருக்குக் கிடையாது.
ஜானகிக்கு சிறிய வயதிலேயே இசையில் ஆர்வம். இப்போதுபோல அப்போது திறமையை வெளிக்காட்ட ஊடகங்கள் கிடையாது. அகில இந்திய வானொலி 1956ல் ஒரு பாட்டுப் போட்டியை நடத்தியது. அதில் 2ம் பரிசு பெற்று அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் கைகளால் பரிசு பெற்றார்.
பின்னாளில் பாடகி ஆனவுடன் இதே போல ஒரு பாட்டுப்போட்டியில் பரிசு வழங்கும் விழாவுக்கு ஜானகி சிறப்பு விருந்தினராகச் சென்றார். அங்கே ஓர் இளைஞர் ஜானகியிடம் பரிசு பெறுகிறார். அதைப் பெருமையாகக் கருதிய அந்த இளைஞர் சினிமாவுக்கு வந்து, ஜானகியின் குரலோடு இணைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார். அவர்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் மாயாஜாலம் செய்தன.
ஒருவரோடொருவர் போட்டி போட்டுப் பாடும் தன்மை கொண்டவர்கள் அவர்கள். வித்யா சாகர் இசையில் ‘கருணா’ திரைப்படத்தின் ‘மலரே மௌனமா’ பாடல் குறித்து ஒரு முறை எஸ்.பி.பி, “முதலில் பதிவு செய்யப்பட்ட ஜானகியம்மா டிராக் கேட்ட எனக்கு அதற்கு ஈடாகப் பாடவேண்டுமே என்கிற கவலை வந்துவிட்டது. அத்தனை அற்புதமாகப் பாடிவிட்டுச் சென்றிருந்தார் அவர்” என்று சிலாகித்தார்.
வானொலிப் போட்டியில் சிறுவயதில் பரிசு பெற்ற மறுநாளே ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியானார். அப்போதெல்லாம் பாடலாசிரியர்கள், பாடகர்களை ஒவ்வொரு நிறுவனமும் ஊதியம் தந்து வைத்துக்கொள்வது வழக்கம். தமிழில், ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்துக்காக டி.சலபதி ராவ் இசையில் முதன்முதலாகப் பின்னணி பாடினார். மறுநாளே கண்டசாலாவுடன் தெலுங்குப் படத்திற்காகப் பாடினார். முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடியவர் ஜானகி.
ஜானகியின் திரையுலக வாழ்க்கையில் பெரும் மைல்கல் ‘சிங்கார வேலனே தேவா’தான். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற அப்பாடலில் நாதஸ்வரமும் ஜானகியின் குரலும் போட்டியிடும் அபூர்வத்தைக் காணலாம். அப்பாடலுக்கு நிகராகவே ‘குங்குமம்’ படத்தின் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பாடலைச் சொல்லலாம்.
டி.எம்.சௌந்தர்ராஜனின் ஓங்காரக் குரலுடன் குயிலின் மென்மையான குரலில் ஒலித்தாலும் ரசவாதத்தை நிகழ்த்தியிருப்பார் ஜானகி.
தொண்ணூறுகளின் துவக்கம் வரை ஜானகி தன் சாம்ராஜ்யத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு புதிய இசையமைப்பாளர்களுக்கு வழிகோலியது. அவர்கள் புதிய குரல்களை நாட, ஜானகி, சித்ரா போன்றோரின் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. என்றாலும் ரஹ்மான் போன்றவர்களால் ஜானகியை ஒதுக்கிவிட முடியவில்லை. ‘நெஞ்சினிலே’, ‘மார்கழித் திங்களல்லவா’ என்று ஜானகி ரஹ்மானுக்குப் பாடினார்.
கேரள அரசின் விருதை 13 முறையும் தமிழக அரசின் விருதை 5 முறையும், 7 முறை ஆந்திர அரசின் விருதையும், ஒரு முறை ஒடிசா அரசின் விருதையும் பெற்ற ஜானகி தமிழக அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். இத்தனை விருதுகளையும் பெற்ற ஜானகி இந்திய அரசு அளித்த பத்மபூஷன் விருதைப் பெற மறுத்துவிட்டார்.
இந்தியாவில் எப்போதும் இருக்கும் வடக்கு – தெற்கு பிரச்சினை ஜானகிக்கு பெரும் சவாலாக இருந்தது. ஜானகி மட்டும் வடஇந்தியாவில் பிறந்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரைக் கொண்டாடி இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தனக்கான அங்கீகாரம் மிகத் தாமதமாக வந்ததாகக் கருதி பத்ம பூஷனை மறுத்தார். அரசுக்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காதக் கலைஞர்களுக்கு மத்தியில் ஜானகியின் துணிச்சல் வியப்புக்குரியது.
ஜானகிக்கு முன்பே திரையுலகில் அறிமுகமாகி பெரும் புகழ் பெற்ற பாடகியாக இருந்த பி.சுசீலா தன் பெயரில் 2008ல் ஓர் அறக்கட்டளை தொடங்கினார். இசைத்துறையில் சிறந்த கலைஞர்களுக்கு அறக்கட்டளை சார்பாக ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன் முதல் விருதை ஹைதராபாத்தில் சிறப்பான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து யாருக்கு வழங்கினார் தெரியுமா? ஜானகிக்குத்தான். ஒரு காலத்தில் ஜானகியின் வருகை பி.சுசீலாவின் வாய்ப்புகளைக் குறைத்து விட்டது என்கிற பேச்சிருந்தது. அது உண்மையும் கூட. ஆனாலும் பி.சுசீலா ஜானகிக்கே முதல் விருதைத் தந்தார் என்பது ஜானகியின் மறுக்க முடியாத ஆளுமையையே காட்டுகிறது.
அண்மையில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷுடன் இணைந்து ‘அம்மா அம்மா’ என்கிற பாடலைப் பாடியிருந்தார். ‘திருநாள்’ திரைப்படத்தில் ‘தந்தையும் யாரோ’ பாடலை மிக அண்மையில் பாடியிருந்தார்.
ஜானகி திரையிசையில்நுழைந்து 43 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒருமுறை பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அந்த நிகழ்வுக்கு ஜானகியோடு பாடிய ஆண் பாடகர்கள் அத்தனை பேரும் வந்து அவரோடு பாடினர்.
அப்போதுதான் ‘மார்கழித் திங்களல்லவா’ பாடல் வெளியான சமயம். அப்பாடலை ஜானகியோடு இணைந்து பாடிய உன்னிகிருஷ்ணன் மேடையில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது. “ஜானகியம்மாவோடு இணைந்து பாடுவோர் பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவறவிடக் கூடாது என்பதற்காகவே நானாகவே விரும்பிக் கேட்டு இந்தப் பாடலை அவரோடு பாடுகிறேன்” என்றார்.
உன்னிகிருஷ்ணன் மட்டுமல்ல, நேற்று பாட வந்த ஆண் பாடகர்களுக்கும் ஜானகியோடு பாடுவதென்பது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு இனி நிறைவேற வழியில்லை. ஜானகி தன் ஓய்வை அறிவித்துவிட்டார். இனி மேடைகளிலும் பாடப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இனி புதிய பாடல்களை அவர் பாடப்போவதில்லை என்பதோ, அவர் பாடிய பழைய பாடல்களை அவர் மீண்டும் பாடி நாம் கேட்கப்போவதில்லை என்பதோ வருத்தத்திற்குரிய செய்திதான்.
ஆனாலும் என் மனக்கண்ணில் சில காட்சிகள் வந்துபோகின்றன. ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாடலை ஒவ்வொரு முறையும் கச்சேரியின் தொடக்கத்திலும் பாடும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு கட்டத்தில் அப்பாடலை சேர்ந்தாற்போல பாடமுடியாமல் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்துப் பாடத்தொடங்கினார். அவரை அந்நிலைக்கு ஆளாக்கிய முதுமை நம் கண்ணீரைக் கோரியது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரபலமான பாடலான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பாடலை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உச்ச ஸ்தாயிக்குச் செல்ல முடியாமல் தடுமாறியபோது மனம் விம்மியது.
கம்பீரமாக நாகூர் ஹனீஃபா பாடிய இஸ்லாமியப் பாடல்களையும் திராவிட இயக்கப் பாடல்களையும் முன்புபோல் பாட முடியாததை கச்சேரிகளில் கண்ணுற்றபோது ‘முதுமையே! ஏன் கலைஞர்களுக்கு வந்துத் தொலைக்கிறாய்’ என்று அரற்றத் தோன்றியது. இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்த கலைஞர்கள் ஓரளவிற்கு இச்சிக்கலிலிருந்து தப்பிக்கலாம். எம்.எஸ்.வி., பி.பி.சீனிவாஸ், நாகூர் ஹனீஃபா போல நீங்கள் எம்மை அப்படிப்பட்ட கவலையில் ஆழ்த்தவில்லை.
78 வயதானாலும் நன்கு பாடக்கூடிய திறன் உள்ள போதே ஓய்வை அறிவித்திருக்கிறீர்கள். வாய்ப்பு கிடைக்காமல் அல்லது அறிவிக்காமல் அப்படியே ஒதுங்கிக்கொண்ட கலைஞர்கள் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் ஓய்வு அறிவித்த முதல் பாடகர் நீங்கள்தான். ஓய்வை விரும்பிய சமயத்தில் உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான தாலாட்டுப் பாடலைப் பாட நேர்ந்தது யதேச்சையானது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள்.
‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…’ என உங்கள் குரல் எங்கோ தொலைவில் இதை எழுதும் நொடியில் சன்னமாய் செவிகளில் ஒலிக்கிறது. நீங்கள் எங்களுக்காகப் பாடினீர்கள்! பாடுகிறீர்கள்! எப்போதும் பாடுவீர்கள்! ஏதோவொரு வடிவில்! நாங்கள் செவிமடுத்திருப்போம்!

