-ஆர்.முத்துக்குமார்
எல் நினோ (El Niño) என்பது வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் ஏற்படும் இயற்கையான வெப்பமடைதல் நிகழ்வாகும். இது உலகம் முழுவதும் வானிலை அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இது பருவநிலை மாற்றத்துக்கான காரணம் அல்ல. இருப்பினும், புவி வெப்பமடைதல் நிகழ்வை உக்கிரமாக்கும் பசுமை இல்ல வாயுக்களால் (green house gases) ஏற்கெனவே வெப்பமடைந்துள்ள சூழலில், இது உருவாகும்போது உலகளாவிய வெப்பநிலை மற்றும் பிராந்திய அளவிலான தீவிர வானிலை நிகழ்வுகளை இது மேலும் உக்கிரமடையச் செய்யும்.
வெப்பம் ஏதோ எதிர்கால பருவநிலை நெருக்கடி அல்ல, அது ஏற்கெனவே இப்போது இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே கவனத்துக்குரிய எச்சரிக்கையாகும்.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல், மிக அதிக வெப்பமான பெருங்கடல்கள், வறண்ட நிலப்பரப்புகள், மெதுவாக நகரும் உயர் அழுத்த வானிலை அமைப்புகள் மற்றும் வெப்பமண்டல பசிபிக் பகுதியில் தற்போது உருவாகியுள்ள ‘எல் நினோ; சூழல் ஆகிய காரணிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்து இயங்குவதால் கண்டங்கள் முழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகிறது.
அறிவியல் சொல்வது என்ன?
பசுமை இல்ல வாயுக்கள் (Green house gases) அதிகரித்திருப்பதால், உலகின் அடிப்படை வெப்பநிலையே உயர்ந்துள்ளது. இதனால் வெப்ப அலைகள் (Heatwaves) இப்போது முன்பைவிட அதிக வெப்பமான நிலையை அடித்தளமாகக் கொண்டு வீசத் தொடங்குகின்றன.
கடல்களின் மேற்பரப்பு நீரின் வெப்ப அதிகரிப்பும் பருவநிலை அமைப்பில் கூடுதல் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மேலும், நிலம் வறண்டு இருந்தால் வெப்பம் இன்னும் தீவிரமடைகிறது. ஏனெனில், சூரியனின் ஆற்றலில் குறைவான பகுதி மட்டுமே மண்ணிலும் தாவரங்களிலும் உள்ள நீரை ஆவியாக்க பயன்படுத்தப்படுகிறது; மீதமுள்ள ஆற்றல் காற்றை மேலும் சூடேற்றுகிறது.
இந்த வெப்பம் எந்தப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வானிலைச் சுழற்சிகளே தீர்மானிக்கின்றன. ஓர் உயரழுத்த மண்டலம் (High-pressure system) ஒரு பகுதியில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்போது ‘வெப்பக் குவிமாடம்’ (Heat Dome) உருவாகிறது. அப்போது காற்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது; மேகங்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது; இதன் விளைவாக வெப்பநிலை பல நாட்கள் தொடர்ந்து உயர்கிறது.
இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் நீடித்தால் ஆபத்து மேலும் அதிகரிக்கிறது. மனித உடல், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குளிர்ச்சியடைய போதிய இடைவெளி கிடைக்காததால், வெப்பத்தின் தாக்கம் தீவிரமாகிறது.
நாடுகளின் நிலவரம் என்ன?
இங்கிலாந்தில், மே மாத இறுதியில் க்யூ கார்டன்ஸ் (Kew Gardens) பகுதியில் வெப்பநிலை 35.1°C-ஐ எட்டியது. இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது நாளாக மே மாதத்துக்கான தேசிய வெப்பநிலைச் சாதனை தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டின் இந்த வெப்ப அலைக்கு முன், மே மாதத்தின் முந்தைய அதிகபட்ச சாதனை 32.8°C ஆக இருந்தது; அது 1922 மற்றும் 1944 ஆண்டுகளில் பதிவாகியிருந்தது.
உலகின் பிற பகுதிகளிலும் இதே போக்கு தென்படுகிறது. பிரான்சில், 1900-ஆம் ஆண்டு முதல் பதிவுகள் தொடங்கியதில் இருந்து 2026-ஆம் ஆண்டின் வசந்த காலம், இதுவரை பதிவானவற்றில் மிக அதிக வெப்பமான வசந்த காலமாக அமைந்தது. அமெரிக்காவில், தொடர்ச்சியாக இணைந்துள்ள 48 மாநிலங்களிலும் (Contiguous US), 2026 மார்ச் மாதம், வரலாற்றில் பதிவான மிக அதிக வெப்பமான மார்ச் மாதமாக இருந்தது.
இந்தியாவில் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஜூலை தொடக்கம் வரை வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நீட்டிக்கப்பட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சீனாவின் தேசிய காலநிலை மையம், குறிப்பாக தென் சீனா மற்றும் வடமேற்கிலுள்ள சின்ஜியாங் பகுதிகளில், இந்த கோடையில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று கணித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள், இதுவரை பதிவான 10 மிக அதிக வெப்பமான இலையுதிர் காலங்களில் ஒன்றை அண்மையில் அனுபவித்துள்ளன.
உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?
கடும் வெப்ப அலைகளினால் வெயிலினால் நிகழும் பல மரணங்கள் ‘வெயில்’ என்ற பெயரில் பதிவாகாமலே போகும். ஏற்கெனவே இருந்த நோய்களை அது தீவிரப்படுத்தி, மரணத்தின் மறைமுகக் காரணமாக மாறிவிடுகிறது. அதனால் வெப்பத்தின் உண்மையான பலி எண்ணிக்கை கணக்குகளில் தெரிவதை விட அதிகம்.
மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்புகின்றன; முதியோர் இல்லங்களும் சிகிச்சை மையங்களும் வெப்பத்தை சமாளிக்கப் போராடுகின்றன. ரயில் பாதைகள் இதனால் வளைந்து விடுகின்றன. சாலைகள் இளகி உள் வாங்குகின்றன. ஆறுகள் சூடேறி, நீரின் தரமும் அளவும் குறைகிறது. குளிர்ச்சியைத் தேடி மின்சாரத்தின் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. குடிநீர், போக்குவரத்து, மருத்துவச் சேவை, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் அனைத்தும் தடுமாறத் தொடங்கும்.
அளவுக்கு அதிகமான வெயில் என்பது வெறும் பருவநிலை கோளாறு மட்டும் அல்ல; அது மனித உடலையும், சமூகத்தின் உயிர்நாடிகளையும் மெதுவாகச் சோதிக்கும் ஓர் அமைதியான பேரிடர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் உடலில் நீர்ச்சத்து இழப்பு, கடுமையான சோர்வு, ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
வெப்பநிலை உயரும்போது, வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக வெப்பத்துடன் அதிக ஈரப்பதமும் இணையும் வெப்பமண்டலப் பகுதிகளில், உடல்நல பாதிப்புகள் இன்னும் தீவிரமாகின்றன. சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களின் நிலை மேலும் மோசமடையும் அபாயம் அதிகரிக்கிறது.
‘எல் நினோ’வின் தாக்கம் மழைப் பொழிவு முறைகளையும் மாற்றுகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் பிற நோய் பரப்பும் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. கனமழைக்குப் பிறகு தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு, மலேரியா, ஜிகா போன்ற வைரஸ்கள் வேகமாகப் பரவக்கூடும்.
அதேபோல், வறட்சி காலங்களில் மக்கள் தண்ணீரை திறந்த பாத்திரங்களில் சேமித்து வைப்பது வழக்கமாகிறது. இந்த நீர்த்தொட்டிகளும் கொசுக்கள் முட்டையிட ஏற்ற இடங்களாக மாறுகின்றன.
மேலும், வெப்பமான காலநிலை கொசுக்களின் உடலில் வைரஸ்கள் வேகமாக வளர உதவுகிறது. இதனால் கொசுக்கள் குறுகிய காலத்திலேயே நோயைப் பரப்பும் திறனைப் பெறுகின்றன. இதன் விளைவாக நோய்கள் மிக வேகமாகப் பரவி, இதற்கு முன்பு பாதிக்கப்படாத புதிய பகுதிகளுக்கும் பரவுகின்றன.
குறிப்பாக, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் எல் நினோ நிகழ்வுகளுக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகங்கள், நிபுணர்கள், அரசுகள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் முன்எச்சரிக்கை அமைப்புகளை மேலும் திறம்படச் செயல்படச் செய்யவும், பொதுச் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வை விரிவுபடுத்தவும் முடியும்.
வானிலை, காலநிலை மாற்றங்கள் மற்றும் மனித ஆரோக்கியம் ஒன்றோடொன்று எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வதே, எல் நினோவின் பல்வேறு பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முதல் முக்கியமான படியாகும்.

