Site icon சக்கரம்

கல்வியைக் காக்கும் போராட்டத்தில் சோனம் வாங்சுக்!

-கோ.அரவிந்த்சாமி

Sonam Wangchuk

ந்தியாவில் கல்வி என்பது இன்று அறிவைப் பகிரும் பொதுச் சேவையாக அல்லாமல், அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஓர் அரசியல் துறையாக மாறியுள்ளது. தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து வெளியாகும் முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இச்சூழலில், லடாக்கின் கல்வியாளரும் சமூகப் போராளியுமான சோனம் வாங்சுக் (Sonam Wangchuk), “கல்வி முறையில் ஏற்பட்ட சீர்கேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மருத்துவர்களின் கண்காணிப்பில் படுத்தபடியே போராடி வரும் அவர், 20 நாட்களாக உணவு எடுக்காததால் உடல் எடை 8 கிலோ வரை குறைந்துள்ளது. இருப்பினும், அவரது கோரிக்கைகள் குறித்து ஒன்றிய மோடி அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

திரையைக் கடந்த ‘நிஜ நாயகன்’

2009 இல் இந்தி மொழியில் வெளியான ‘3-Idiots’ மற்றும் 2012-இல் தமிழில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த “பாரி” கதாபாத்திரம் பலருக்கும் நினைவிருக்க லாம். மனப்பாடக் கல்வியை எதிர்த்து, புரிந்துகொண்டு கற்கும் கல்வியை வலியுறுத்தி, மதிப்பெண்களை விட அறிவுக்கும், போட்டியை விட படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்தக் கதாபாத்திரம் இந்தியக் கல்வி அமைப்பின் குறைகளைக் கேள்விக்குள்ளாக்கியது. அந்த பாரி கதாபாத்திரத்திற்கு உத்வேகமாக இருந்த நிஜ மனிதர்தான் இந்தச் சோனம் வாங்சுக்.

திரைப்படக் கதாபாத்திரத்தை விடவும் நிஜ வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய சமூகச் செயற் பாட்டாளர். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை விடச் சிந்திக்க வேண்டும் என்ற கல்விக் கொள்கை யை நடைமுறையில் செயல்படுத்தியவர். தோல்வி யடைந்த மாணவர்களுக்குக் கூடப் புதிய வாழ்க்கை அளித்த கல்வி முறையை உருவாக்கியவர். அறிவியல் ஆய்வகத்தில் மட்டும் முடங்கிக் கிடக்கக் கூடாது; அது சமூகத்தின் அன்றாடத் தேவைகளைத் தீர்க்க வேண்டும் என்பதைத் தனது கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்தவர். லடாக்கில் மாற்றுக் கல்வி இயக்கத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியவர்.

லடாக்கிலிருந்து டெல்லி வரை: தொடரும் அரசியல் பயணம்

சோனம் வாங்சுக்கின் அரசியல் பயணம் ஒரே நாளில் தொடங்கியதல்ல. கல்வி என்பது தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கான கருவி அல்ல, அது சமூக மாற்றத்திற்கான சக்தி என்பதைத் தனது செயல்பாடு களால் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இந்தப் பின்னணியில்தான், இந்தியக் கல்வி அமைப் பின் மீது மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்த நீட் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான முறை கேடுகள் வெளிச்சத்துக்கு வந்தபோது, கல்வித் துறையில் அரசியல் பொறுப்புணர்வு தேவை என்ற குரலை அவர் வலுவாக எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விதம், தேர்வு வெளிப்படைத் தன்மை குறித்த கேள்விகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடது சாரி அமைப்புகளும், பல்வேறு குடிமக்கள் அமைப்புகளும் தேசியத் தேர்வு முகமை மீது விசாரணை நடத்த வேண்டும், இந்த குளறுபடிகளுக்குக் கல்வி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் தான், “கல்வியைப் பாதுகாக்கப் பொறுப்பற்ற அரசிற்கு அரசியல் பொறுப்பும் இருக்க வேண்டும்” என்று கூறி சோனம் வாங்சுக் போராட்டத்தில் இறங்கியுள்ளார். “என்னிடம் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லாதீர்கள்; அதற்குப் பதிலாக ஒன்றிய அரசுட னும் கல்வி அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்துங்கள்” என்று அவர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் இன்று ஜந்தர் மந்தரில்!

லடாக்கின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற மாற்றுக் கல்வி முறையை உருவாக்கியது, மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் SECMOL கல்வி இயக்கத்தை முன்னெடுத்தது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகப் புகழ்பெற்ற ‘ஐஸ் ஸ்தூபி’ (Ice Stupa) தொழில்நுட்பத்தை உருவாக்கியது போன்ற சமூகப் பங்களிப்புகளுக்காகச் சோனம் வாங்சுக் உலகளவில் கௌரவிக்கப்பட்டவர். இந்தப் பணிகளுக்காகவே அவருக்கு 2018 ஆம் ஆண்டு ஆசியாவின் உயரிய குடிமக்கள் விருதாகக் கருதப்படும் ‘ராமன் மகசேசே விருது’ வழங்கப்பட்டது. மேலும், ரோலக்ஸ் விருது, பசுமை ஆசிரியர் விருது (Rolex Award for Enterprise, Green Teacher Award) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் உலகம் அவரது கண்டு பிடிப்புகளையும் கல்விச் சீர்திருத்தங்களையும் பாராட்டி விருதுகளை வழங்கியது; இன்று அதே மனிதர் கல்வியைப் பாதுகாக்கத் தனது உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார். ஆனால், அவரது குரலைக் கேட்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு மட்டும் மௌனம் காக்கிறது.

மோடி அரசின் கள்ள மவுனம்

ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு கல்வியாளர் உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தால், ஆட்சியாளர்கள் அவரைச் சந்தித்துப் பேசுவது குறைந்தபட்ச ஜனநாயக மரபாகும். ஆனால், சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகளை விவாதிக்காமல், அவரது போராட்டத்தைப் புறக்கணிக்கும் மோசமான அணுகுமுறையையே ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது. கல்வி மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனில், எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். போராடுபவரை கள்ள மௌனத்தால் தோற்கடிக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல.

மறுபுறம், 10-ஆம் வகுப்பு முடிந்தவுடனே நீட் – ப்ரீ ஆயுர்வேதா (‘NEET-PA’) நுழைவுத் தேர்வு, ‘ஆயுர்வேத குருகுலம்’ உள்ளிட்ட பாதகமான சர்ச்சைக்குரிய புதிய கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்கள் மாணவர்களை இளம் வயதிலேயே தேர்வு அழுத்தத்திற்கும், கோச்சிங் மையங்களின் ஆதிக்கத்திற்கும் தள்ளுவதோடு, மாநில மொழி உரிமைகளையும் சமூக நீதியையும் பறிக்கும்.

குறிப்பாக, நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ் கல்வி படிப்படியாகச் சந்தைப் பொருளாக மாற்றப்படுகிறது. தேர்வுகள் திறமையை அளவிடும் கருவியாக இல்லாமல், வணிகமயமான கல்வி அமைப்பின் நுழைவாயிலாக மாறும்போது சமத்துவமும் சமூக நீதியும் பாதிக்கப்படுகின்றன. அதிகாரம் எப்போதும் போராடுபவர்களை முதலில் அலட்சியப்படுத்தும், பின்னர் விமர்சிக்கும், இறுதியில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நிற்கும். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. அத்தகைய வரலாற்றுப் போராட்டங்களில் ஒன்றாகத் திகழும் சோனம் வாங்சுக்கின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கைகோர்க்க அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இந்திய இளைஞர்களும் பேராதரவு தர வேண்டும்.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக வாலிபர்

Exit mobile version