– சோனியா காந்தி
கடந்த சில வாரங்களாக, வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறையின் பொதுவான சீரழிவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள இளம் மாணவர்களின் அமைதியான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அவர்களின் கோரிக்கைகள் நேரடியானவை; தெளிவாக உள்ளன. இந்திய அரசாங்கத்திடம் இருந்து பொறுப்புக்கூறலும் கல்விச் சீர்திருத்தமும் வேண்டும் என்பதே அவை. நரேந்திர மோடி அரசாங்கம் அவர்களின் தைரியத்திற்கு முன்னால் அஞ்சிய தன்மையுடனும், வக்கிரம் நிறைந்த குரூரத்துடனும் பதிலளித்துள்ளதுடன், அவர்களை எதிர்காலத்தின் வாரிசுகளாகக் கருதாமல் நாட்டின் எதிரிகளாக நடத்தியுள்ளது.
ஜூலை 20, 2026 அன்று, இழிவான முறையில், டெல்லி காவல்துறையும் மத்திய ஆயுதப்படையினரும் தேவையில்லாத வன்முறையைக் கையாண்டு, கொடூரமான தடியடிகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தி அவர்களை அடக்க முயன்றனர். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் கூட தப்பவிடப்படவில்லை, அவர்களின் முதுகிலும் தலையிலும் தடிகளால் தாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சரே அனுமதித்திருக்கக் கூடிய பெல்லட் குண்டுகளால் (pellet guns) உடல் முழுவதும் வடுக்கள் நிறைந்த இளைஞர்களின் மிகவும் மனச்சோர்வூட்டும் காட்சிகளை நாடு கண்டுள்ளது. அன்றைய காணொலிகள் நமது நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ளன; நமது கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளன. அரசாங்கமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் மட்டுமே இந்த தன்னிச்சையான எழுச்சிப் போராட்டத்தைச் சுற்றி கட்டுக் கதைகளைப் பரப்பி வருகின்றன. உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல வேண்டிய நேரம் இது: நிறுத்துங்கள். இவர்கள் நமது மகன்களும் மகள்களும், நமது இளம் ஆண்களும் பெண்களுமாவர்.
மோடி அரசாங்கம் உரையாடலுக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து வழக்கம்போல வன்முறையைப் பயன்படுத்துகிறது. விவசாயிகள் முதல் செயற்பாட்டாளர்கள் வரை இந்த முறை தெளிவாக உள்ளது. ஆனால், சர்வாதிகார ஆட்சிக்கு புதிய தர நிலைகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம், தனது முந்தைய செயல்களை விட அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. நமது எதிர்கால மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தொழில்முனைவோர் மற்றும் நாட்டை உருவாக்குபவர்கள் மீது அடக்குமுறை பலத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. இதை மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.
எந்தவொரு மற்றும் அனைத்து மாறுபட்ட கருத்துக்களையும் தேசவிரோதமானது என்று முத்திரை குத்தும் பழைய உத்தி, மாணவர் போராட்டத்தைக் கறைப்படுத்துவதற்காக மீண்டும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. மோடி அரசாங்கம் போராட்டங்களை உந்தித்தள்ளிய அதன் கொள்கைகளைப் பற்றி உள்நோக்குடன் பரிசீலனை செய்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக அது அவதூறுகளைப் பரப்பவும் சதித்திட்டங்களை அரங்கேற்றவும் தனது தந்திரப் பையிலிருந்து ஆழமான வழிகளை நாடியுள்ளது.
பொதுக் கல்வியின் வீழ்ச்சி
முதல் அடிப்படைப் பிரச்சனை, மோடி அரசாங்கம் பொதுக் கல்வியில் இருந்து பின்வாங்குவதாகும். இது பள்ளிக் கல்விக்காக தனது மொத்த பட்ஜெட்டில் செலவிடப்படும் தொகையின் விகிதத்தை 50 சதவீதமாகவும், உயர்கல்விக்கான விகிதத்தை 33 சதவீதமாகவும் குறைத்துள்ளது. அத்தகைய அபத்தமான பின்வாங்கலில் உள்ள நியாயத்தை யாராவது பார்க்க முடியுமா? கடந்த 12 ஆண்டுகளில், மோடி அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அரசுப் பள்ளிகளை மூடியுள்ளது, அதே நேரத்தில் 43,000 தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதை மேற்பார்வையிட்டுள்ளது – அவற்றில் பெரும்பகுதி ராஷ்டிரிய சுயசேவக் சங்கத்தால் நடத்தப்படுகின்றன. இது அதன் துணை அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய தனியார் பள்ளி வலையமைப்பைக் கொண்டுள்ளது. உயர்கல்வியில், பல்கலைக்கழக மானியக் குழு தனது மானியங்களை பல்கலைக்கழகங்களுக்குக் குறைத்து, அவற்றை உயர் வட்டி விகிதங்களில் கடன் வாங்கத் தள்ளியுள்ளது. அவற்றைத் திருப்பிச் செலுத்த, அரசுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்துவதை நாடியுள்ளன.
மலிவான செலவில் உயர்தரமான பொதுக் கல்வி கிடைக்காததால், இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க தங்களின் சொந்தப் பணத்தை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) பயிற்சிக்கு மட்டுமே குடும்பங்கள் செல விடும் மொத்தத் தொகை, மோடி அரசாங்கம் பொதுக் கல்வியில் மொத்தமாக முதலீடு செய்யும் அளவுக்கு உள்ளது. தனியார் கல்வியைத் தொடர்வதற்கான செலவு, ஏழ்மையான பின்னணியில் இருந்து வருகிற- அதே சமயம் அபரிமிதமான திறமையைக் கொண்ட இலட்சக்கணக்கான திறமையான மாணவர்களைத் தடுக்கிறது. இருப்பினும், சம அளவில் முக்கியமானது என்னவென்றால், இந்தச் செலவுகள் நமது மாணவர்கள் மீது அவர்கள் தங்கள் சொந்த உயர்ந்த எதிர்பார்ப்புகளை நசுக்கிக் கொள்ளும் சுமையையும் வைக்கின்றன. இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் முறை வெற்றியின் கனவில் தங்கள் குடும்பங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பதை நன்கு அறிவார்கள். நமது மாணவர்களின் கடுமையான அவ நம்பிக்கையானது, கல்வியின் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலின் நேரடி விளைவாகும்.
சீர்கெட்ட தேர்வு முறை, வெற்றியின் பிரச்சனை
இரண்டாவது பிரச்சனை இந்தியாவின் பொதுத் தேர்வு முறையைச் சிதைப்பதாகும், இது கல்வி அதிகாரங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல், தனியார்மயமாக்கல் மற்றும் அரசியல்மயமாக்கல் செயல்முறைகளுக்கு உட் பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலங்கள் தங்களது தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தங்களது சொந்தத் தேர்வுகளை நடத்தும் பாரம்பரிய நடைமுறை, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) போன்ற தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் மையப்படுத்தப்பட்ட தேர்வுகளால் மாற்றப்பட்டது. தேசிய தேர்வு முகமை ஒரு இயலாத, தொடர்ந்து ஊழியர்களின் பற்றாக்குறையைக் கொண்ட அமைப்பாகும், இது தனது தேர்வுகளை நடத்த முழுமையாக தனியார் ஒப்பந்தக்காரர்களின் பட்டாளத்தையே நம்பியுள்ளது. இந்த முகமையால் நியமிக்கப்பட்ட வினாத்தாள் அமைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வல்லுநர்கள் இந்தியாவின் முதன்மையான நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் அல்ல, மாறாக பெரும்பகுதி அரசியல் தொடர்புகளைக் கொண்ட நடுத்தர நபர்கள் என்பதும் நன்கு அறியப்பட்டதே. இந்தச் செயல்முறையின் இறுதி முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது – கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவ தும் 152 வினாத்தாள் கசிவுகள் ஏற்பட்டுள்ளன, இதில் 2017 இல் இந்த தேர்வு முகமை உருவாக்கப்பட்டதிலிருந்து அதனாலேயே உருவாக்கப் பட்ட ஒன்பது கசிவுகளும் அடங்கும். மிகத் திறமையான மற்றும் கடினமாக உழைக்கும் மாணவர்களும் கூட, எந்தத்தவறும் செய்யாமல் தாங்கள் தோல்வியடைவதைக் காண்கின்றனர்.
மூன்றாவது பிரச்சனை இந்தியாவின் கல்வி முறையில் வெற்றி பெறுவதில் உள்ள சிரமமாகும். பட்டப்படிப்புக்குப் பிறகு உயர்தரமான, நல்ல சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் இன்று அரிதாகி விட்டன, பொருளாதாரம் பெருகிய முறையில் ஒரே தன்மையின் கீழ் குவிகிறது என்பதே இதற்கு ஓரளவு காரணமாகும். நமது இளம் பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன, கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக சுமார் 40% ஆக உள்ளன. மீதமுள்ள சில வேலைகளுக்கான போட்டி தீவிரமானது, மேலும் அவற்றுக்காகப் போட்டியிட நமது மாணவர்கள் இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்குத் “தகுதியற்றவர்களாகவே” இருக்கிறார்கள்.
கட்சிச் சார்பு விசுவாசத்திற்காக தேர்ந்தெடுக் கப்பட்ட பலவீனமான துணைவேந்தர்களின் நியமனம் மற்றும் அதன் விளைவாக அரசியல் ரீதியாகத் தொடர்புடைய ஆனால் தகுதியற்ற ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது, நமது அரசுப் பல் கலைக்கழகங்களில் கற்பித்தலில் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பணியிடத்தில் திறன் தேவைகள் மிகவும் சவாலானதாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் உயர்கல்வி முறை வழக்கற்றுப் போன அமைப்புகள் மற்றும் அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட பாடத்திட்ட மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது, வளர்ந்து வரும் முறைகள் மற்றும் தரநிலைகளுடன் தொடர்பில்லாமல் உள்ளது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு இயக்கப்பட்ட உலகத்துடன் வேகத்தைத் தொடர முடியாமல் உள்ளது. இத்தகைய ஒரு அமைப்பில் வெற்றி பெற வேண்டிய சூழலை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள், அதற்காக அவர்கள் போதுமான வளங்களுடன் இல்லை.
எனவே கல்வி முறை ஊழலுக்கு ஆளாகக்கூடிய தாகவும், வெற்றிபெறுவது கடினமானதாகவும் மாறியுள்ளது. பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பது மற்றும் கல்வி குறித்து நல்லெண்ண உரையாடல்களைத் தவிர்ப்பது என்ற மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சி யான மற்றும் பிடிவாதமான கொள்கையே இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அது ஒருமித்த கருத்துக்களைப் பெறாமலோ அல்லது நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தாமலோ தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ வேண்டுமென்றே அனும தித்தது. தேசிய தேர்வு முகமை ஒருபோதும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படவில்லை, மேலும் அது எந்தவொரு பொறுப்புக்கூறல் வழிமுறைகளும் இல்லாமல் மத்திய அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகவே உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டிருந்த காரணத்திற்காக மட்டுமே இந்த முகமையை வலுப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை பகிரங்கமாக நிராகரிப்பதன் மூலம் கல்வித்துறை அமைச்சர் பொறுப்புக்கூறல் மீதான தனது சொந்த அவமதிப்பை வெளிப்படுத்தினார். இந்த பெரும் தோல்விகள் இருந்தபோதிலும் தனது பதவியிலிருந்து விலகத் தயங்குவது பொதுக் கருத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போராட்டங்களின் வேர்கள்
மாணவர் போராட்டங்கள் இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சக்திகளின் இயற்கையான விளைவாகும்: நம்பிக்கையின்மையை மட்டுமே வெளிப்படுத்தும் இன்றைய மந்தமான கல்விச் சூழல், மோடி அரசாங்கத்தின் அகம்பாவம் மற்றும் பொறுப்புக்கூற அல்லது ஆக்கப்பூர்வமாக இருக்கத் தயங்குவது ஆகியவையே அவை. மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் செயல்படும் காவல்துறையினர் மாணவர் போராட்டங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட குரூரமானது இந்த ஆட்சிக்கு புதியதல்ல. குடியுரிமை (திருத்தச் சட்டம்) – தேசிய குடி மக்கள் பதிவேட்டுப் போராட்டங்களின்போது ஆயுதம் ஏந்திய காவல்துறையினரும் துணை இராணுவப் படையினரும் பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு தாக்கினர் என்பதை நாம் அனைவரும் தெளி வாக அறிவோம். இந்தியாவின் பெண் மல்யுத்த வீரர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத வன்மங்கள் நமது நினைவுகளில் இருந்து எப்போ துமே அழிக்கப்பட முடியாது.
மோடி அரசாங்கம் இந்தியாவின் கல்வித்துறையைச் சிதைத்தது மட்டுமல்லாமல், முழுமையான தண்டனையின்மை, உச்சகட்ட சுய-ஏமாற்று மற்றும் பரிதாபமான உணர்வின்மையுடன் செயல்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மாணவர்கள் மோடி ஆட்சியின் ஏமாற்று வித்தையை அம்பலப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் நிற்பதும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் நமது தார்மீக, அரசியல் மற்றும் ஜனநாயகக் கடமையாகும்.
தமிழில்: ராகினி

