Site icon சக்கரம்

நவீன தாராளவாதக் கல்விச் சூறையாடலும்; மாணவர்களின் வரலாற்று எழுச்சியும்

– டி.கே.ரங்கராஜன்

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி என்பது பொதுப் பட்டியலில் (Concurrent List) இடம்பெற்றுள்ள மிக முக்கியமான துறையாகும். இதன் மூலம் ஒன்றியமற்றும் மாநில அரசுகள் கல்வித்துறையில் சட்டமியற்றும் அதி காரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால், 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நவீன தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கத்திற்குப் பிறகு, இந்தக் கூட்டாட்சிக் கட்டமைப்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது. கல்வி என்பது அரசுப் பொறுப்பிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சந்தைச் சரக்காகவும், கொள்ளை லாபம் ஈட்டும் வணிகப் பொருளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் நேரடி நெருக்குதல்களுக்கு ஏற்ப இந்தியக் கல்வித்துறையைக் கோர்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் உச்சத்தை அடைந்துள்ளன. பொருளாதாரச் சர்வே 2024 இன் படி, ஒருங்கிணைந்த பொதுக் கல்விச் செலவினம் வெறும் 2.7% ஜிடிபி அளவிலேயே உள்ளது. இது 1964 இல் கோத்தாரி கமிஷன் பரிந்து ரைத்த 6% இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதற்கிடையே, ஒன்றியபட்ஜெட்டில் கல்விக்கான பங்கு 2013-14 இல் இருந்த 4.6% இல் இருந்து, 2025-26 இல் சுமார் 2.5% ஆகக் குறைந்துள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் தனியார் பயிற்சி மையங்களின் (Coaching Industry) வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது.

இதன் நேரடி விளைவாக, தேசியத் தேர்வு முகமையின் (NTA) கீழ் கொண்டுவரப்பட்ட உயர் கல்வித் தேர்வுகள் கடும் முறைகேடுகளையும், தொடர் வினாத்தாள் கசிவுகளையும் சந்தித்துத் தகர்ந்து போயின. 2026 மே 3 அன்று நடைபெற்ற நீட்-தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மே 12 அன்று இரத்து செய்யப்பட்டது. இத்தேர்வில் ஏறத்தாழ 22.79 இலட்சம் மாணவர்கள் 1.29 இலட்சம் எம்பிபிஎஸ் இடங்களுக்காகப் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதேபோல், சிபிஎஸ்இ ஆன்-லைன் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் கேள்விகுறியாக்கின.

இத்தகைய சூழலில், எதிர்காலம் கேள்விக்கு உள்ளான இலட்சக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ முன்னெடுத்த போராட்டம் இடதுசாரி மாணவர் இளைஞர் இயக்கங்களின் ஆவேசமிக்க பங்கேற்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் காரணமாக நாடு தழுவிய எழுச்சியாக மாறியது; டெல்லி ஜந்தர் மந்தரில் வீதிகளில் இறங்கி மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். காவல் துறையின் கடுமையான தடியடிகள் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாணவர்கள் போராடினர். இந்த எழுச்சியின் உச்சக் கட்டமாக, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஒட்டுமொத்தக் கல்வித்துறைச் சீரழிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றியகல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை 2026 ஜூலை 25 அன்று ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த மகத்தான தருணத்தில், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஆதிக்கம், நவீன தாராளவாதக் கல்விச் சந்தை, கோர்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உயர் கல்வி, ஒன்றிய- மாநில உரிமைகள் பறிப்பு மற்றும் மாணவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் எழுவதன் அவசியம் ஆகியவற்றை விரிவாக ஆராய்வோம்.

இந்தியக் கல்வித்துறையின் கட்டமைப்பு மற்றும் ஒன்றிய – மாநில அரசுகளின் முரண்பாடுகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் இருந்தது. மாநில அரசுகளே தங்கள் பிராந்திய மொழி, பண்பாடு, புவியியல் சூழல் மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப கல்வித்துறையைக் கட்டமைத்து நிர்வகித்து வந்தன. ஆனால், 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் கல்விப் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒன்றியஅரசு கல்வித்துறையில் தன் அதிகாரத்தை செலுத்தவும், இந்திமயமாக்கல் மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் தேசியக் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கவும் பெருமளவில் வழிவகுத்தது.

இதற்கு எதிராக, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களும் உருவாகி தீவிரமடைந்தன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் கிராமப்புறப் பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளிகள் முதல் நகர்ப்புற மாநகராட்சிப் பள்ளிகள் வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி வாயிலாக ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் தரமான பாடநூல்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கிடையேயான கல்வி இடைவெளியைக் குறைப்பதில் இந்தச் சமச்சீர் கல்வி முறை ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

மறுபுறம், தேசியக் கல்விக்கொள்கை (NEP 2020) மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் இந்த மாநில உரிமைகளையும் சமூகநீதிக் கல்வியையும் திட்டமிட்டுச் சிதைத்து வருகின்றன. தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கை போன்ற முன்னெடுப்புகள் மும்மொழித் திணிப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து வலுவான மாற்றுக் குரலாக ஒலித்தன.

மேலும், சமக்ரா சிக்சா அபியான் நிதியை விடுவிக்காமல் பிஎம்ஶ்ரீ திட்டத்தின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று ஒன்றியஅரசு நிதிப் பிளாக்மெயில் செய்வது உட்பட ஒற்றை மையக் கட்டுப்பாட்டின் கீழ் கல்வியைக் கொண்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.

கல்வி வணிகமயமாக்கலின் வேர்கள்

இந்தியாவின் கல்வித்துறையைத் தீர்மானிப்பதில் பன்னாட்டு நிதி நிறுவனங்களான உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் செலுத்தும் பங்கு மிகக் கேடானதும் திட்டமிட்டதுமாகும். இந்த நிறுவனங்கள் கல்வியை மக்களின் அடிப்படை உரிமையாக ஒருபோதும் கருதுவதில்லை; மாறாக, முதலாளித்துவச் சந்தைக்குத் தேவையான மலிவான மற்றும் கீழ்ப்படிந்த உழைப்புச் சக்தியை உருவாக்கும் ‘மனித மூலதனமாகவே’ (Human Capital) பார்க்கின்றன.

உலக வங்கியின் பங்கு: வளரும் நாடுகளில் பள்ளிக் கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறிக்கொண்டு, கல்வித்துறையில் தனியார் பங்கேற்பை (Private Participation) கட்டாயமாக்குகிறது. செலவுக் குறைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளைக் குறைப்பதையும், கல்வியைத் தனியாருக்குத் தீனி போடுவதையும் உலக வங்கி தனது கொள்கை ஆவணங்கள் மூலம் தீவிரமாக ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கம் கொண்ட வர்த்தக மையங்களாக உருவெடுக்கின்றன.

பன்னாட்டு நிதியத்தின் பங்கு: நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கண்காணிப்பது என்ற பெயரில், சமூக நலத்துறை மற்றும் கல்விக்கான பொதுச் செலவினங்களை கடுமையாக வெட்ட வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் நிர்ப்பந்திக்கிறது. நிதி நெருக்கடி காலங்களில் கல்வித்துறைக்கான மானியங்களையும் பட்ஜெட் ஒதுக்கீடுகளையும் குறைக்கச் செய்வதால், அரசுக் கல்வி நிறுவனங்கள் நிதி முடங்கிப் போய், ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டு எட்டாக்க கனியாகிறது.

நவீன தாராளவாத பொருளாதார அமைப்பில் கல்வி ஒரு சரக்காக மாற்றப்பட்ட பின்னணி

1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்குத் திறக்கப்பட்டதிலிருந்து, சமூகத்தின் அடிப்படை உரிமைகளான கல்வியும் சுகாதாரமும் சந்தைச் சரக்குகளாக மாற்றப்பட்டன. இலாப நோக்கமற்ற சமூக நலச் சேவை என்ற நிலையிலிருந்து கல்வி முற்றிலுமாக விடுவிக்கப்பட்டு, அதிக இலாபம் தரும் கோர்ப்பரேட் வணிகச் சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் பிர்லா, டாடா, அதானி மற்றும் அம்பானி போன்ற இந்தியப் பெருநிறுவனங்களும் பன்னாட்டு முதலாளித்துவப் பிரிவினரும் உயர் கல்வித்துறையைக் கட்டுப்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளனர். கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்களைப் போல பெரும் இலாபக் கணக்குடன் இயங்கத் தொடங்கியுள்ளன. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மற்றும் விளிம்புநிலை மாணவர்களிடமிருந்து உயர்கல்வி பறிக்கப்பட்டு, பணம் படைத்த உயர் வகுப்பினருக்கு மட்டுமே உயர்கல்வி என்ற கோர்ப்பரேட் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை (NEP 2020) மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை கல்வித்துறையில் துரிதமாக ஊக்குவிப்பது இந்த வர்க்க ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட கொள்கைகள் மாணவர்களைச் சுதந்திரமான சிந்தனையற்ற, சந்தைக்குத் தேவையான அடிபணிந்த உழைப்பாளர்களாக மாற்ற முயல்கின்றன. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிப் பண்பு பறிக்கப்பட்டு, பெருநிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கல்வி கொண்டுவரப்படுவது அறிவார்ந்த சமூகத்தின் அடித்தளத்தையே தகர்க்கிறது.

தேசியத் தேர்வு முகமையும் தேர்வு முறைகளின் வணிகமயமாக்கலும்

நவீன தாராளவாதக் கல்விச் சந்தையின் உச்சக்கட்ட வடிவமாகத்தான் தேசியத் தேர்வு முகமை போன்ற தன்னாட்சி அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. நீட், ஜே.இ.இ, கியூட் மற்றும் யு.ஜி.சி-நெட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்தும் இந்த அமைப்பு, பெயரளவுக்கு மட்டுமே தன்னாட்சி பெற்றது. சொற்ப எண்ணிக்கையிலான நிரந்தரப் பணியாளர்களையும், பெருமளவில் ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டு இயங்கும் தேர்வு முகமை, தனது நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகி தனியார் ஒப்பந்த நிறுவனங்களை நம்பியுள்ளது.

இந்த மையப்படுத்தப்பட்ட மற்றும் வணிக மயமாக்கப்பட்ட தேர்வு முறைகள் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் தனியார் பயிற்சி மையங் களின் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. பள்ளிக் கல்வி யின் அடிப்படையைத் தகர்த்துவிட்டு, இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கல்வி என்ற சூழல் உரு வாக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரான தாகவும், கிராமப்புற மற்றும் விளிம்புநிலை மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது.

ஏற்கெனவே, அனிதா போன்ற பல மாணவிகளின் தற்கொலைகளுக்கு வித்திட்ட நீட் தேர்வு முறை, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ராஜன் கமிட்டியின் அறிக்கையும் நீட் தேர்வு கிராமப்புற மற்றும் விளிம்புநிலை மாணவர்களைப் பின்தள்ளுவதை உறுதிப்படுத்தியுள்ளது. என்.டி.ஏ நடத்தும் தேர்வுகள் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு கள், ஊழல்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளில் சிக்குவது இந்த நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மாணவர்களின் மாபெரும் எழுச்சியும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும்

நவீன தாராளவாதக் கொள்கைகளாலும், தொடர் வினாத்தாள் கசிவுகளாலும் எதிர்காலம் கேள்விக்கு உள்ளான மாணவர்களும் இளைஞர்களும், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகச் சளைக்காமல் வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்திய மாணவர் சங்கம் போன்ற இடதுசாரி மாணவர் அமைப்புகள் இந்த இயக்கத்திற்குத் தத்துவார்த்த முதுகெலும்பாக நின்று நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன.

குறிப்பாக, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய இளம் தலை முறையினர் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தன. காவல் துறையின் கடுமையான அடக்கு முறைகளையும், தடியடிகளையும் மீறி மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம், நவீன தாராளவாதக் கல்வி முறைக்கு எதிரான நேரடிப் போராக உருவெடுத்தது.

இந்த மாபெரும் மக்கள் எழுச்சிக்கும், மாணவர்களின் கடும் கோபத்திற்கும் பணிந்து வேறு வழியின்றி, ஒன்றியகல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆளுங்கட்சியின் தலைவர்கள் இதனைத் தார்மீகப் பொறுப்பாகச் சித்தரிக்க முயன்றாலும், இது ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். இளைஞர்களின் இந்த எழுச்சி எத்தனை வலுவான எதேச்சதிகார அரசின் அதிகாரத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. எனினும், அமைச்சர் மாற்றம் என்பது தற்காலிகமானதே தவிர, ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்ற வேண்டியுள்ளது.

திசை காட்டிய எழுச்சி

இந்தியக் கல்வித்துறையை உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பெருநிறுவனங்களின் பிடியிலிருந்து மீட்பதும், கல்வியை மீண்டும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுவதும் இன்றைய வரலாற்றுத் தேவையாகும். நவீன தாராளவாதக் கல்விச் சந்தை மற்றும் வணிகமயமாக்கலை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்த மாபெரும் எழுச்சி, எதிர்கால மாற்றத்திற்கான திசையைக் காட்டுகிறது. மாநிலங்களின் கல்வி உரிமைகளை மீட்டெடுத்தல், நுழைவுத் தேர்வுகளை ஒழித்தல் மற்றும் அனைவருக்கும் சமமான, தரமான பொதுக் கல்வியை வழங்குவதற்கான திசையில் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் குரல் தொடர்ச்சியாக ஒலிக்க வேண்டும் என்பதை இந்த வரலாற்று நிகழ்வு நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான நீண்ட போராட்டத்தின் ஒரு மைல்கல்லாக இந்த மாணவர் எழுச்சி வரலாற்றில் நிலைபெறும்.

Exit mobile version